அத்தியாயம் 2: ஆத்ம உறவுகளின் கூடாரம்
S.Gokulachari,Editor,aalayadharisanam.com
வாசலில் ஸ்வாமியின் தங்கை மகன், ஆடிட்டர் பரணீதரன் நின்றிருந்தார். முகத்தில் படர்ந்திருந்த பதற்றமும் சோகமும் அவசரமும் அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டன.
என்னை உற்றுப் பார்த்தவர், “இந்தப் பகுதியில் உள்ள வைஷ்ணவ சபை பாகவதர்கள் மற்றும் சுவாமியைப் பற்றி நன்கு அறிந்த அன்பர்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு அத்துபடி. அதனால், தயவுசெய்து நீங்கள் உடனே எல்லோருக்கும் இந்தத் தகவலைச் சொல்லிவிடுங்கள். குறிப்பாக, காரைக்கால் வரிச்சுகுடி ஸ்வாமிக்கு தகவல் சொல்லுங்கள்” என்றார் படபடப்புடன்.
நான் அவரை அமைதிப்படுத்தும் விதமாக, “வரிச்சுகுடி ஸ்வாமிக்குத் தகவல் தெரிந்துவிட்டது, அவர் காரைக்காலில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்” என்றேன்.
மனதிற்குள் பழைய நினைவுகள் நிழலாடின. ஸ்வாமியின் சதாபிஷேகம் மற்றும் அவரது 90-வது அகவை விழாவை நாங்கள் நடத்திய விதம் அத்தகையது. அந்த விழாக்கள் மூலமாகத்தான் சுவாமியின் அன்பர்கள் வட்டத்தில் என்னை பலருக்கும் தெரியவந்தது.
அதேபோல், அவர் மூலமாக நானும் எண்ணற்ற பாகவதர்களையும் அபிமானிகளையும் அன்பர்களையும் தெரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றேன்.
அந்தப் பிணைப்பு தான் பலரையும் அடியேனிடம் வந்து அவரைப்பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வைத்தது.
நேரம் நகர நகர, சிதம்பரத்தில் உள்ள முக்கியமான பிரமுகர்கள் ஒவ்வொருவராக வந்து சுவாமியின் சரமத் திருமேனியைத் பார்த்துவிட்டு, கனத்த இதயத்தோடு சென்றவண்ணம் இருந்தனர்.
கோவிந்தன் குடிஅடியார்களான திரு ஜானகிராமனும்,திரு லட்சுமணனும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
தொடந்து செய்ய வேண்டிய பல்வேறு காரியங்களுக்காக அவர்கள் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு அலைந்தார்கள். இக்கட்டான தருணத்தில் அவர்களின் ஓட்டமும் உழைப்பும் மதிக்கத்தக்கவை. இவர்களைப் பற்றி எல்லாம் இந்த வாழ்வியல் பதிவில் நாம் பேசியே ஆக வேண்டும்.
மறுபுறம், முருகன் ஜுவல்லரி செட்டியார் (இரா.முத்து குமரேசன்), புவனகிரி மாறன் கோவிந்தசாமி போன்ற சுவாமியின் தீவிர அபிமானிகள் சோகமே வடிவமாக, சிலைகளைப் போல நின்று கொண்டிருந்தார்கள். “சுவாமியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும்; அவர் இன்னும் சில நாட்களாவது நம்முடன் இருந்து நம்மையெல்லாம் நல்வழிநடத்த வேண்டும்” என்று ஆத்மார்த்தமாக எண்ணி உருகியவர்கள் அவர்கள்.
சென்னை மருத்துவமனையிலிருந்து வந்த முதல் நாள் இரவு 11 மணி தொடங்கி, சுவாமியின் கடைசி மூச்சு நிற்கும் வரை, அவரது குடும்பத்தாரோடு தோளோடு தோள் நின்று, அந்த மரணப் போராட்டத்தோடு இவர்களும் போராடினார்கள்.
மரணப் படுக்கையில் ஒரு மனிதனுக்கு ரத்த உறவுகள் வந்து நிற்பது இயற்கை, அவர்கள் நின்றுதான் ஆக வேண்டும்.
ஆனால், சுவாமி தன் வாழ்நாளில் எத்தனை ஆத்ம உறவுகளைச் சம்பாதித்து வைத்திருந்தார் என்பதை அந்த இடமே பறைசாற்றியது.
சுவாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்பதால், அவரோடு பணிபுரிந்த சக பேராசிரியர்களும், அவரிடம் பாடம் கற்ற மாணவர்களும் மேல வீதி இல்லத்தை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்.
அங்கு வந்திருந்த ஒரு மூத்த பேராசிரியர், சுவாமியின் கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டபோது என் கண்கள் பனித்தன.
அவர் சொன்னார்: “சுவாமி மேல வீதியில் இருக்கும் தன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தன்னுடைய துறைக்கு (Department) தினமும் நடந்தேதான் செல்வார். (பின் நாளில் அவர் ஆட்டோ பயன்படுத்தினார்)
அவர் நடந்து வரும் அழகே தனி.
அவர் வீதியில் நடக்கத் தொடங்கினால், தெற்கு வீதியில் ஒரு மாணவர் அவரோடு இணைந்துகொள்வார். படித்துறை இறக்கத்தில் இன்னும் இருவர் சேர்ந்துகொள்வார்கள்.
பேருந்து நிலையத்தில் சில மாணவர்கள் காத்து நின்று இணைவார்கள்.
இப்படியாக, அவர் தன் துறையைச் சென்றடையும் போது, அவரோடு ஒரு பெரிய மாணவர் குழுவே பின்னாடியே போகும்.
அதற்குள், அந்தப் பயணத்திலேயே மாணவர்களுக்கு வேண்டிய பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துவிடுவார். எந்தப் பாடத்தை, எந்தப் புத்தகத்தில், எந்தப் பக்கத்தில் படிக்க வேண்டும், அந்தப் புத்தகங்கள் நூலகத்தில் எங்கே இருக்கும், அதற்கு எந்தெந்தத் துணைக் குறிப்புகளை (Reference notes) எடுத்துப் படிக்க வேண்டும் என்று காற்றில் அறிவை விதைத்துக் கொண்டே போவார்…”
இதைக் கேட்ட பொழுது எனக்கு வியப்பாகவும் பெருமையாகவும் இருந்தது. அவர் படித்து, மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது பொருளாதாரமாக (Economics) இருந்தாலும், தமிழ் இலக்கியங்கள், ஆழ்வார்களின் அருளிச்செயல்களான நாலாயிர திவ்ய பிரபந்தம், வேத மந்திரங்கள், திருமந்திரம், திருவாசகம் போன்ற சைவத் திருமுறைகள் என அனைத்திலுமே பண்டிதராக, ஆழமான ஞானம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
பொருளாதாரப் பேராசிரியரின் வசிப்பிடம், ஆன்மீகமும் தமிழும் தழைக்கும் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்ததை எண்ணி, (வேங்கடார்ய குருகுலம்) அந்த சோகத்திலும் என் மனம் சுவாமியின் பெருமையை வியந்து நோக்கியது.
ஆத்ம உறவுகளின் அந்தப் பெருங்கூட்டம், அவர் விட்டுச் சென்ற பேரறிவின் சாட்சியாக அஞ்சலி செலுத்த அங்கே நின்றிருந்தது.
