சமூக ஊடகங்கள்/ ஸ்மார்ட் போன் – வரமா? சாபமா?
– பேராசிரியர். எஸ். கோகுலச்சாரி
Smartphones & Social Medias are Good or Bad ? – Prof. S. Gokulachari
காலையில் எழுந்தவுடன் காபியுடன் செய்தித்தாள்(Newspapers) படித்த காலம் ஒன்றுண்டு. பெரும்பாலோர்க்கு அப்படித்தான் பொழுது விடிந்தது. செய்தித்தாள் படிக்காவிட்டால் ,தலையே வெடித்து விடும் போலிருக்கும். தேனீர் கடைகளில் வியாபாரம் அதிகரிக்கவும், முடி திருத்தகங்களில் காத்திருக்கும் நேரத்தை கழிக்கவும் தினசரிகள் பயன்பட்டன. செய்தியின் தொடர்ச்சியைத் தெரிந்துகொள்ள அடுத்த நாள் காலை வரை காத்திருக்க வேண்டும். கையில் இன்றைக்கு உள்ள செல்போன் அக்காலத்தில் இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு என பதட்ட ஒலியோடு பிரேக்கிங் செய்தி வெளியிடும் தொலைக்காட்சிகள் இல்லை. அதனால் இன்று இருக்கக்கூடிய எந்தத் துன்பங்களும் அன்று இல்லை. அமைதி இருந்தது.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. நவீன செல்லிடைப் பேசிகள் வந்துவிட்டன. தலைமாட்டில் கைபேசியை வைத்துக்கொண்டுதான் தூங்குகின்றனர். காலையில் எழுந்தவுடன் கைபேசியில்தான், ஒருவரின் நாள் விடிகிறது. தூக்கத்திலிருந்து விழித்தவுடன் வாட்ஸ்அப் முகநூல் இவற்றில் என்ன செய்தி வந்திருக்கிறது என்பதைத்தான் பார்க்கின்றனர்.
நாளுக்கு நாள் புதுப்புது செயலிகள் வந்து கொண்டேயிருக்க, அதற்கு ஈடு செய்யும் அளவில் விலை அதிகமுள்ள புதுவகை ஸ்மார்ட்போன்களும் சந்தையில் விற்பனை ஆகிக்கொண்டே இருக்கின்றன.
இன்றைய இளைஞர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை விலை உள்ள போன்களை கையில் வைத்திருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்குக் கூட பயன்படுத்தாது அப்படியே தூக்கிப் போட்டு விட்டு புதிய நவீன போனை வாங்குகின்றார்கள். ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் குறைந்தது மூன்று பேர்களிடம் கைபேசிகள் இருக்கின்றன. அதுவும் இப்பொழுது ஆன்லைன் வகுப்புகள் வந்துவிட்ட பிறகு கூடுதல் ஸ்மார்ட் போன்கள் தேவைப்படுகின்றன.
அரிசி, பருப்பு, பெட்ரோல்(Petrol), டீசல்(Diesel), சமையல் எரிவாயு (LPG Gas Cylinders) முதலியவற்றின் விலைகள் ஏறிக் கொண்டே இருக்கின்றன என்று வருந்துபவர்கள். ஸ்மார்ட்போன்(Smart Phone Prices) விலையைப் பற்றியும், அதனை ரீச்சார்ஜ் செய்வதைப் பற்றியும் எங்கும் சண்டை போடுவதாகவும், கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
மாதம் பத்தாயிரம் ரூபாக்குக் குறைவாக சம்பாதிப்பவர்கள் கூட, விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களை வைத்துக்கொண்டு பேசுவதைக் காண முடிகின்றது. வெறுமனே பேசுகின்ற தகவல் தொடர்பு சாதனம் என்கின்ற நிலையிலிருந்து மாறி, எல்லாம் அதுவேதான் என்கின்ற நிலைக்கு இன்றைக்கு நவீன செல்போன்கள் வந்துவிட்டன.
தகவல் தொடர்பு, கருத்துப் பரிமாற்றம், கருத்துச் சுதந்திரம் என பலப்பல நன்மைகள் இதில் சொல்லப்பட்டாலும், அதன் பின்னால் இருக்கும் விபரீதங்களைப் பற்றியும் எதிர்விளைவுகள், தாக்கங்கள் பற்றியும் நாம் இன்னும் விழிப்புணர்வு பெறவில்லை என்றே தோன்றுகிறது.
நவீன சமூக ஊடகங்கள்(Social Media), சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி ஆராயும் அறிஞர்கள் இதனை பல்வேறு ஆய்வுத்தரவுகளின் மூலம் உறுதி செய்கின்றனர்.
அண்மையில் பி.பி.சி இதுகுறித்து ஆய்வை நடத்தியது. மக்கள் இதை எப்படி பயன்படுத்துகின்றார்கள், இதனை பயன்படுத்தும் விதம் ஆரோக்கியமாக இருக்கிறதா, எதிர் விளைவுகள் எப்படி இருக்கின்றன போன்ற கோணங்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. உலக மக்கள் தொகையில்(World Population) 40 சதவீதம் பேர் (சுமார் 3 பில்லியன் மக்கள்) சமூக வலைத்தளத்தில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணி நேரம் செய் திகளைப் பரிமாறிக் கொள்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடத்திற்கும் அரை மில்லியன் படங்களும், கருத்துக்களும் (ட்வீட்) பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
இதில் உள்ள சில பிரச்சினைகளை இன்றைய மனவியல் அறிஞர்கள் பட்டியலிட்டுக் காட்டி இருக்கின்றார்கள். அவைகளில் மிக முக்கியமானது மனதளவில் ஏற்படும் ஒருவிதமான பரபரப்பு மற்றும் மன அழுத்தம்.
உடனடி சமூக அங்கீகாரம் பெறச் செயப்படும் விபரீதமான செயல்களும் அடுத்தடுத்து செ ய்திகளை அறிந்து கொள்வதற்காகவும், கருத்து பரிமாறவும் காட்டப்படும் ஆர்வமும், பயன்பாட்டாளர்களின் மனநிலையை வெகுவாகப்பாதிக்கின்றன. பதட்டமான -ஆர்வமான செய்திகளை அறிவதிலும் பரப்புவதிலும் பெரும் ஈடுபாட்டை காட்டுகின்றனர்.
பொன்னான நேரத்தைத் தாறுமாறாகச் செலவிடுதல், மற்ற ஆக்கபூர்வமான செயல்களுக்கான நேரத்தைக் குறைத்துக் கொள்ளல், தூக்கமின்றித் தவித்தல், மனக் கவலைகளோடும், கற்பனை எண்ணங்களோடும் தனிமையில் இருத்தல், அச்சமும் பதட்டமும் அதிகரித்துக்கொண்டே போதல் என இதன் பல்வேறுவிதமான மறைமுகமான தாக்கங்களைப் பட்டியலிட்டு இருக்கிறார்கள்.
குறிப்பாக, குழந்தைகளும், பெண்களும் உடல் அளவிலும் மனதளவிலும் அதிகம் பாதிக்கப்படுவதாக ஓர் ஆய்வு சொல்லுகின்றது.
இதில் உள்ள பிரச்சனைகளை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கலாம்.
ஒன்று தனிப்பட்ட நபர்களிடம் ஏற்படும் பிரச்சனைகள்.
இரண்டாவது சமூகத்தில் ஏற்படும் விளைவுகள்.
தனி நபர்களுக்கான பிரச்சனைகளில் மிக முக்கியமானது, குடும்ப உறவுகளில் நேருக்கு நேர் பேசும் கலந்துரையாடல்கள், நாளாக நாளாக குறைவாகிக் கொண்டே போவது.
குறிப்பாக ஒரே வீட்டில் அல்லது ஒரே ஊரில் இருந்துகொண்டு கருத்துக்களையும், செய்திகளையும் கட்செவி மூலமும் குறுஞ்செய்தி மூலமும் பரிமாறிக் கொள்வது அதிகரித்திருக்கிறது. அனுப்பிய செய்திகள் சரியான கவனிப்பை நண்பர்கள் உறவினர்களிடம் பெற முடியாத போது கசப்புணர்வு அதிகரிக்கிறது. உடனுக்குடன் எதிர் விமர்சனங்களை வைத்து உறவைக் கெடுத்துக் கொள்வதும் அதிகரித்து இருக்கிறது.
நண்பர்களைச் சேர்த்துக் கொண்டே போகும் சில நபர்கள் மிக விரைவாகப் பகையையும் சேர்த்துக் கொண்டே போகிறார்கள். வதந்திகளைப்பரப்புவதும், பழிவாங்கலும் கூட நடக்கின்றன.
உதாரணமாக, நெய்வேலியில் தனக்கு கடனுக்கு கோழிக்கறி தராத நபர்மீது, அவர் கடைக்கோழிகளின் மூலம் கொரானோ வைரஸ் இருப்பதாக ஒரு செய்தி பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் அந்த இளைஞருக்கு பதினெட்டு வயது கூட ஆகவில்லை.
அமெரிக்கன் ஜர்னல்(American Journal) ஆஃப் மெடிசின், 19 முதல் 32 வயது உள்ளவர்களிடம் நடத்திய ஆய்வில், சமூக ஊடகங்கள், வலைதளங்கள் புதுச் செயலிகள் வரவினால், இரண்டு மடங்கு தனிநபர் தனிமை அதிகமாகி விட்டதாக ஓர் ஆய்வறிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள்.
நிஜ உலகத்திலிருந்து கற்பனை உலகுக்கு வாழ்வு மாற்றம் தவறான வலைத்தளங்களால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றவர்களுடன் பேசுவதை விட தங்கள் கையில் இருக்கின்ற கைபேசிகளே போதும் என விரும்புகின்ற இளைஞர் தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது. தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்களும் வேறு வழியின்றி இச்சமூக ஊடகத்தில் நேரத்தையும், மகிழ்ச்சியையும், மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் தொலைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். மருத்துவமனை போன்ற இடங்களிலும் கூட இப்போன்களில் மூழ்கிக் கிடப்பவர்களைக் காணலாம். அவரவர்க்குப்பிடித்த விஷயமோ விளையாட்டோ இதில் தானே கிடைக்கிறது. கிட்டத்தட்ட செல்போன்களுக்கு அடிமையாகி விட்டார்கள்.
உயிருள்ள ஒருவரோடு இணக்கம் காட்டுவதை விட உயிரற்ற பொருளோடு இணக்கம் காட்டி மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அமெரிக்காவில் நடைபெற்ற இன்னொரு ஆய்வு, சாதாரணமாகவே ஓரிரண்டு தளங்களைப் பயன்படுத்துவர்களைவிட ஏழு அல்லது எட்டு விதமான செயல் தளங்களை இயக்குபவர்கள் மூன்று மடங்கு மனச் சிதைவுக்கும், மனஅழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள் எனக் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஒரு செய்தியைத் தொடர்ந்து அடுத்து என்ன என்று தேடும் செயற்கைப்பரப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மற்ற அத்தியாவசிய வேலைகளை விட்டுவிட்டு, மாற்றி மாற்றிச் செல்போன்களை தள்ளிக்கொண்டே மூழ்கிப் போவிடும் நபர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்.
இதன் மூலமாக தங்கள் சுற்றுப்புறத்தையும் வேலைகளையும் மறந்துவிடுகிறார்கள்.
ஒரு மனிதனின் ஆரோக்கியம் என்பது நல்ல தூக்கத்தில் தான் இருக்கிறது. ஆனால் விலை மதிப்புமிக்க தூக்கம் இளைஞர்களிடம் பல்வேறு காரணங்களால் விடைபெற்று விட்டது. இன்றைக்கு ஒருவர் தன்னுடைய செல்பேசியை, கடைசியாக எப்பொழுது பயன்படுத்தினார் என்பதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.இரவு 2 மணி 3 மணிக்கு ஸ்டேட்டஸ் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். படுக்கையில் படுத்தபடி மணிக்கணக்காகக் தூங்காமல் முக நூல் (Facebook), வாட்ஸ்அப்(Whats app) தளங்களைத் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களின் கிடைக்கும் ஒரு போலியான அங்கீகாரமும் புகழும் பலரை இதில் தள்ளி பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.
தங்கள் அந்தரங்கமான செயல்களையும், குடும்ப விஷயங்களையும், குழந்தைகள், பெண்களின் படங்களையும், தாங்கள் இருக்கும் இடம் போன்ற பல தனிப்பட்ட செய்திகளையும், விபரீதம் அறியாது பொதுவெளியில் பகிர்வதும் சர்வ சாதாரணமாக இருக்கிறது.
சமீபத்தில் பெண் குரலில் பேசி ஆபாசப்படங்களை அனுப்புவதாகச் சொல்லி, ஒரு பட்டதாரி வாலிபர் அதிகம் பேரை ஏமாற்றி 70 லட்சம் வரை பணத்தைச்சுருட்டி அகப்பட்டுக் கொண்ட செய்தியைப் பார்க்கின்ற போது, நம் இளைஞர்கள் சரியான பாதையில் போவதாகத் தெரியவில்லை. பலருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடுவதற்குத் தனிச் செயலிகளை உருவாக்கி, சில மோசடிக் குழுக்கள் இயங்கிக் கொண்டிருப்பதையும் நாம் தினசரி செய்தித்தாள்களில் படித்துக் கொண்டிருக்கிறோம்.
குழந்தைகள் குறிப்பாக, பதின்ம வயதுப் பெண் குழந்தைகள் சைபர்புல்லிங் எனப்படும் குற்றச் சூழலுக்குப் பலியாகி விடுகின்றனர். திருமணமான பெண்களும் இளம் பெண்களும் முகம் தெரியாத முகநூல் உறவுகளோடு பழகி தங்கள் அகவாழ்வை இருட்டாக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
கலைத்து, வீட்டைவிட்டு வரச்செய்து, கடத்திச் சென்ற 35 வயது உள்ள ஒருவரின் கைது குறித்த செய்தியையும் பார்த்தோம். இது பரவலாக இப்பொழுது நடந்து வருகிறது.
தேனியில் இரண்டு சகோதரிகள் “டிக்டாக்” செயலியில் பேசி சமூக கவனத்தைக் கவர்வதற்காகவும் மிக எளிதில் திரைத் துறையில் நுழைந்து விட முயற்சித்தும் சில தவறான விஷயங்களைப் பதிவிட்டு கிராமத்தார்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த ஊரைப்பற்றி சில வாலிபர்களின் தவறான வார்த்தையால் பின்னூட்டமிட விவகாரம் பெரிதாகி காவல் துறைவரை போயிருக்கிறது.
வீட்டில் குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மையை தரும் காலம் போய் , ஸ்மார்ட்போனைத் தந்துவிட்டு தங்கள் வேலைகளைப் பார்க்கும் பெற்றோர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். இவர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளின் ஆரோக்கியத்தை, குறிப்பாக மனம் சார்ந்த ஆரோக்கியத் தையும் உடல் சார்ந்த ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்வது பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.
கை கால்களை விட முக்கியமான ஒரு அங்கமாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. இதிலிருந்து தப்பிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும். அதற்கு சில வழிகள் உண்டு.
ஸ்மார்ட் போன் & சமூக வலைத்தளங்களின் பிடியிலிருந்து தப்பிக்க வழிகள் :
10 Ways to Escape from Social Media & Smart Phone Addict :
1.முக்கியமான செய்தி தகவல் தொடர்பு தவிர வேறு எதற்கும் உபயோகிக்காமல் இருப்பது
2.நமக்கு சம்பந்தம் இல்லாத அல்லது சரியாக அறிந்து கொள்ள முடியாத தகவல்களைப் பகிராமல் இருப்பதும்
3. வாழ்த்துக்களை நேரடியாக அழைத்து தெரிவிப்பது.
4.நம்வீட்டுபடங்கள் போன்ற தனிப்பட்ட விபரங்களை எக்காரணம் முன்னிட்டும் பதிவிடாமல் இருப்பது.
5.வங்கிக் கணக்கு போன்ற தகவல்களையெல்லாம் இயன்ற அளவுக்கு பாதுகாப்பாக பயன்படுத்துவது.
6.அதிகபட்சம் அரை மணி நேரத்திற்கு மேல் ஒரு நாளைக்கு இதில் செலவிடாமல் இருப்பது.
7.சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் எல்லா செய்திகளையும் உண்மை என்று நம்பாமல் இருப்பது, அதுகுறித்து பதட்டம் அடையாமல் இருப்பது.
8.குழந்தைகளுக்கு எவ்விதமான போன்களையும் தராமல் இருப்பது. அவர்களுக்கு வேறுவிதமான விளையாட்டுப் பொருள்களைத் தருவது .
9.மறுபடியும் நல்ல புத்தகங்களை வாசிக்கத் தொடங்குவது.
10.நல்ல இசையை கேட்கத் தொடங்குவது.
ஸ்மார்ட் போன் இன்று சக்திமிக்க ஊடகம் ஆகிவிட்டது. உலகத் தகவல்கள் விரல் நுனிக்கு வந்து விட்டன. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லாத் தகவல்களும் நம்மைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன. இது வரமா சாபமா என்பது விவாதப் பொருளாகிக் கொண்டிருக்கிறது.
ஆனால், ஒரு விஷயத்தில் நாம் நிச்சயம் உறுதியோடு இருக்க வேண்டும். இது வரமாக இருப்பதோ சாபமாக மாறுவதோ நம் கையில்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் எதனால்? எப்படி தப்பிப்பது?
