திருமலை ஒழுகு (திருமலை திருப்பதி ஆலய வரலாறு) முதல் பதிப்பாசிரியர் அமரர் கோ.பாலசுந்தர நாயக்கர் மறு பதிப்பாசிரியர். கலைமாமணி. முனைவர். இரா.வ.கமலக்கண்ணன்

திருமலை(Tirumalai temple) ஒழுகு என்னும் தலைப்பில் இந்நூல் நூலாசிரியரால் மிகச் சிறப்பான முறையில் மறுபதிப்பு செய் யப்பட்டிருக்கிறது. திருமலை ஆலயத்தினுடைய வரலாற்றையும் அங்கு நடைபெறுகின்ற பல்வேறு விழாக்கள் பற்றிய செய்திகளையும் நிரல் நிறையாக பல்வேறு ஆதாரங்களோடு எடுத்து சொல்கின்றது.
உண்மையில் இது ஒரு தகவல் களஞ்சிய நூலாக மட்டும் இல்லாமல், ஆய்வு நூலாகவும் அமைந் திருக்கிறது. இதனுடைய முதல் பதிப்பாசிரியர் கோ.பாலசுந்தர நாயக்கர் அவர்கள். திருப்பதி திரு வேங்கடவன் கீழ்க்கலை ஆராய்ச்சிக் கழகத்தின் தமிழ் துறைத் தலைவராக இருந்தவர். பல்வேறு சுவடி களை ஆராய்ந்து, பல அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் குறிப்புகளையும், மேற்பார்வைகளையும் கொண்டு, திருமலை தேவஸ்தான அச்சகத்தின் மூலமாக 1953ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
இப்பொழுது அந்த நூல் கிடைப்பது இல்லை. எனவே, மறுபதிப்பாக இந்நூலை சீரிய வகையில் செப்பம் செய்து ஆழ்வார்களின் பாசுரங்களை எல்லாம் குறிப்பிட்டு, பல வடமொழி வார்த்தைகளை தமிழ்ப் படுத்தி, எளிமையான, சிக்கல் இல்லாத நிலையில், வரலாற்றுக் குறிப்புகளோடு, தமது 81 ஆம் அகவை நிறைவு வெளியீடாக, கலைமாமணி முனைவர். இரா. கமலக்கண்ணன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.
இந்நூல், திருப்பதி ஆலய நடை முறைகள், ராமானுஜரின் கைங்கரியங்கள், விழாக்கள், அரசர்கள் அளித்த கொடைகள், ஜீயர்களின் தொண்டுகள் ஆகியவைப் பற்றிய விவரங்களைத் தருகிறது .
மூல பதிப்புக்கும் இந்த நூலுக்கும் உள்ள வேறுபாடு – இதில் பல தகவல்களை டாக்டர் கமலக்கண்ணன் அவர்கள் செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறார். சில புதிய செய்திகளைச் சேர்த்திருக்கிறார். எளிய நடையில் நூலை அமைத்திருக்கிறார்.மிக முக்கியமாக, முதல்நூல் எழுதும்பொழுது, தி.வை. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்கால சோழர் வரலாறு வெளிவரவில்லை. 1974-ல் தான் வந்தது. எனவே இந்நூலில் குலோத்துங் கன் பற்றிய குழப்பங்களை டாக்டர். கமலக்கண்ணன் அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்.
இந்நூலில் சுமார் 51 தலைப்புகளில் பல பல செய்திகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். திருமலையில் நடைபெறும் விழாக்கள் பற்றிய செய்திகளையும், அது எப்போது முதல் முறையாக நடந்தது, எந்தப் பின் னணியில் செய்யப்படுகின்றன, என்னென்ன முறையில் செய்யப்படுகின்றன என்கிற பல்வேறு செய்தி களையும் இந்நூலில் அவர் கொடுத்திருக்கிறார்.
மற்ற ஆலயங்களில் நடைபெறும் அத்யயன உற்சவத்திற்கும், திருமலையில் நடைபெறுகின்ற திரு அத்யயன உற்சவத்திற்கும் என்ன வேறுபாடு? திருமலை பிரம்மோற்சவம் எப்படி நடைபெறுகிறது? துவக்க காலத்தில் அது எப்படி நடந்தது?
(ஒரு காலத்தில் பிரம்மோற்சவம் திருச்சுகனூர் என்று சொல்லப்படும் திருச்சானூரில் நடைபெற்ற செய்தி பலர் அறியாதது) இவற்றை எல்லாம் மிக அழகாக இந்நூலில் அவர் கொடுத்திருக்கிறார்.
இந்த நூலில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செய்தி-ராமானுஜர் அப்பனுக்கு சங்காழி அளித்து அருளினார் என்று வாழித்திருநாமம் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரத்தில் மற்றும் சங்ககாலத்தில் வடவேங்கடம் என்று சொல்லப்பட்ட இத்தலம் திருமாலுக்குரியது. இராமானுஜர் காலத்திலும் அது அப்படித் தான் இருந்தது.
ஆனால், அவருடைய வாழ்விலேயே – அவர் இரண்டாம் முறை திருமலைக்குச் சென்ற பொழுது – சிக்கல் எழுகிறது. திருமலையப்பன் திருமால் அல்ல; அவன் முருகக் கடவுளே என்று ஒரு வழக்கு. (இன்றளவும் ஒரு சிலர் அதனைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.)
ஏன் திடீரென்று பதினோராம் நூற்றாண்டில் இப்படி ஒரு வழக்கு வந்தது- அதனுடைய அரசியல் பின்னணி என்ன? -எதனால் இப்படிப்பட்ட ஒரு பிரச்சனை?- எப்பொழுது எழுந்தது? -அதனை எப்படி இராமானுஜர் எதிர் கொண்டார் ?- என்கிற தகவல்கள் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கின்றன.
அருணகிரிநாதர் உட்பட பலரும் திருமலை அப்பனை திருமாலாகவே கொண்ட செய்தியையும் இதிலே இணைத்திருக்கிறார். குறிப்பாக திருவாஞ்சியம் திருப்புகழில் (திருப்புகழ் 175) அருணகிரிநாதர் திருமலை யப்பனை முருகனுடைய மாமன் என்று ஏற்றுக்கொண்டு பாடிய விதத்தையும் இணைத்திருக்கிறார்.
திருமலையில் இராமாநுசர் என்னென்ன சீர்திருத்தங்களை எல்லாம் மேற்கொண்டார் என்கிற செய் தியையும், அவரைத் தொடர்ந்து பல மன்னர்கள் திருமலை அப்பனுக்குக் கொடுத்த அருட்கொடைகளைப் பற்றிய செய்திகளையும், மற்றும் பல பல்வேறு கல்வெட்டு செய்திகளையும், இந்நூலில் ஆசிரியர் கொடுத் திருக்கிறார். பிற்கால ஆசாரியர்கள் அங்கு செய்த பல சீர்திருத்தங்களைப் பற்றியும் பட்டியலிட்டிருக்கிறார். ஜீயர்களுடைய பணி திருமலையில் எப்படி இருக்கின்றது, எப்படி வகுத்துக் கொடுக்கப்பட்டது என்பதைப் பற்றியும் விளக்கியிருக்கிறார்.
இப்பொழுது, தெலுங்கு தேசத்தில் திருமலை திருத்தலம் சேர்ந்துவிட்டது. ஆனால், இராமானுஜர் காலத்தி லேயே அங்கே ஈரத்தமிழ் மிக அழுத்தமாக நடை ஆடியது என்பதற்கு ஒரு சில சான்றுகளைக் கொடுத் திருக்கிறார்.
திருமலை கோயிலிலுள்ள முன் மண்டப வாயிற்படிக்கு வைத்த பெயர் அவாவறச் சூழ்ந்தான் வாயில்… பெருமாளுக்கு வேங்கடத்து உறைவார் என்றும், மாலையிட்டான் திருமண்டபம் என்றும், மலை குனிய நின்ற பெருமான் என்றெல்லாம் அழகானத் தமிழ்ப் பெயர்கள் சூட்டியிருக்கிறார்கள்.
இப்படிப் பலப்பல செய்திகள் இந்நூலில் மிக அழகாகவும் தெளிவாகவும் கமலக்கண்ணன் அவர்கள் விளக்கி இருக்கும் அருமை போற்றத்தக்கது.
நூலாசிரியர் 81 அகவையில் தன்னுடைய உடல் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் வைணவ உலகுக்கு விடாமல் அருந்தொண்டு ஆற்றி வருகின்றார்.
ஆலய தரிசனத்திலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து பல கட்டுரைகளை அனுப்பி வைணவ உலகத்தையும் தமிழ் உலகத்தையும் நெஞ்சாரப் போற்றுகின்றார்.
இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்வலிமையோடும், உள்ள உறுதியோடும் இதைப் போன்ற பல ஆய்வு நூல்களை தொடர்ந்து அவர் வழங்க வேண்டும் என்று நாம் அவருடைய பெரும் பணிக்குப் பல்லாண்டு பாடுகின்றோம்.
வாசகர்கள் இந்நூலை அவரிடமிருந்து பெற்றுப் பயன் பெறலாம்.
திருவேங்கடவன் பதிப்பகம்,
நெ 8, கபிலர் தெரு, அழகானந்தம் நகர்,
செவிலிமேடு, காஞ்சிபுரம் – 631 502
கைபேசி எண்: 99 76 36 67 81.
————————————————————————————————————————————————-
உஜ்ஜ்வல வேங்கடநாத ஸ்தோத்திரம் – ஸ்ரீமான்.உ.வே. ஜடப்ரோல் ராஜகுரு கோ.க.அண்ணன் ரங்கராஜன்
ஆசிரியர் மற்றும் முகவரி: ஸ்ரீமான்.உ.வே. ஜடப்ரோல் ராஜகுரு கோ.க.அண்ணன் ரங்கராஜன், கீதாச்சாரிய பப்ளிகேஷன், 19-9-7 ஆ, கென்னடி நகர் திருச்சானூர் ரோடு, திருப்பதி -517 501. போன்: 0877 – 2250432. செல்: 09985599669
மகாவித்துவான் புரிசைஸ்ரீரங்கநாதாச்சார்யர் சுவாமி அருளிச்செத உஜ்ஜ்வல வேங்கடநாத ஸ்தோத்திரம் வியாக்கியானத்தின் தமிழாக்கம் சுமார் 56 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தெலுங்கு வடிவத்தை பண்டித ரத்னா ஸ்ரீமான். சிங்கராச்சாரியார் சுவாமி வெளியிட்டிருக்கிறார்.
வியாக்யானத்தின் தமிழாக்கத்தை கே.கே.ஏ ரங்கராஜன் சுவாமி செய்திருக்கிறார். இந்த ஸ்தோத்திரமானது திருவேங்கடமுடையான் விஷயமான ஸ்தோத்திரம். இதை இயற்றிய மகாவித்வான் திருமலை அனந்தன் பிள்ளை புரிசை ஸ்ரீரங்கசுவாமி. இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆசாரிய புருஷராக விளங்கி யவர்.
திருப்பதி பெருமாளைக் குறித்து அந்தாதித் தொடையில் புனையப்பட்ட இந்நூலின் ஒவ்வொரு சுலோகமும் ஆழ்ந்த பொருள் விளக்கம் உடையது .
பத்து சுலோகங்களும் ஒரு பலச் சுருதியும் அடங்கிய இந்தத் தொகுப்பில் முதலில் சுலோகங்களை அழகாக கொடுத்துப் பின் பத உரையை கொடுத்து விளக்கங்களை அளித்திருக்கிறார். மிகவும் நயமான பல விசேஷ விளக்கங்கள் இதில் இருக்கின்றன. மூலச் சுலோகங்களோடு விளக்க உரையையும் இணைத்துப் படிக்கின்ற பொழுது, திருவேங்கடமுடையான் பெருமையும், அப்பெருமானைப் போற்றி கவி இயற்றிய ஆசிரியரின் பெருமையும், அதை தமிழாக்கம் செய்த ஆசிரியரின் புலமையும் நன்கு தெரியவரும்.
The Eighteen Day Debate Between Ramanuja and Yagnamoorthi – Dr. Venkatesh புத்தகம் பற்றிய விபரங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
——————————————————————————————————————————————–
விசதவாக்சிகமணிகள் – டாக்டர். மாடபூசி வரதராஜன்,
ஆசிரியர்: டாக்டர். மாடபூசி வரதராஜன், பக்கங்கள் 52. (நம்பர் 3, முதல் மாடி, 27, தெற்கு மாடவீதி திருவல்லிக்கேணி, சென்னை-600005. செல்: 9841884972
ஸ்வாமி மணவாள மாமுனிகளின் 650 வது அவதார உற்சவம் வெளியீடாக வெளியிடப்பட்ட இந்த நூலானது இரண்டு பகுதிகளாக உள்ளது.
முதல் பதினைந்து பக்கங்களில் மணவாள மாமுனிகள் வாழ்க்கையில் பாவத்தைப் பற்றிய சிறப்புகளும் இரண்டாவது பகுதியில் அவர் விளக்கவுரை அருளிய சுமார் 15 நூல்களின் விபரங்களையும் விளக்கமாகத் தந்திருக்கிறார்.
“விசதவாக் சிகாமணி” என்ற பட்டம் ஆச்சாரிய சம்பிரதாயத்தின் கடைசி ஆச்சாரியரான மணவாள மாமுனிகளுக்கு எப்படிப் பொருந்தும் என்பதை அவருடைய வியாக்கியான நுட்பத் திறமையைக் கொண்டு நிறுவுவதே இந்நூலின் நோக்கம்.அந்த நோக்கத்தை மிக அருமையாகவே நூலாசிரியர் நிறைவேற்றியிருக்கிறார்.
மூலநூலின் கருத்தை விரித்து விளக்குவது ஒரு சிறந்த கலை. அதில் தலை சிறந்தவர் மாமுனிகள். விளக்கங்கள் தருவதில் புதுமையும், தர்க்கரீதியான அணுகு முறையும், விரிவான சாஸ்திர ஞானமும், ஒரு விஷயத்தின் பொருளையும் நிறுவுவதற்காக அவர் காட்டுகின்ற பிரமாணமும், அவருக்கு மட்டுமே உரிய விசதவாக் சிகாமணி என்கிற பட்டத்தின் பொருத்தத்தைக் காட்டும். அதை அற்புதமாக நிறுவுகிறது இந்நூல். சொற்பொழிவாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் தேவையான செய்திகள் பிரமாணங்கள் இந்நூல் முழுதும் விரவிக்கிடக்கின்றன.
——————————————————————————————————————————-
இராமாநுச நூற்றந்தாதி – விளக்க உரை – முனைவர். வித்வான் கட்சி கடாம்பி வேங்கடாச்சாரியார் சுவாமி
இந்நூலாசிரியர் முனைவர் வித்வான் கட்சி கடாம்பி வேங்கடாச்சாரியார் சுவாமி, வைணவத்தில் சிறந்த பேரறிஞர். வடகலையும் தமிழ் மொழியும் நன்கு கற்றவர். அவருடைய .Ph.D., பட்டத்திற்கான ஆய்வேடு இப்பொழுது ஒரு நூலாக வெளியிடப் பட்டிருக்கிறது.
பொதுவாக இராமாநுச நூற்றந்தாதிக்கு பல விளக்க உரைகள் இருக்கின்றன. பதவுரை தொகுப்புரை தெளிவுரை விரிவுரை என்று அந்நூலுக்கு பலரும் விளக்கங்கள் எழுதி இருக்கிறார்கள்.
ஆனால், ஆய்வுக் கண்ணோட்டத்தோடு இராமாநுச நூற்றந்தாதியை நூலாகத் தந்திருப்பது மிகவும் சிறப்பானது. சுமார் 182 பக்கங்கள் உள்ள இந்நூல் ஆறு இயல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இயலிலும் பல அரிய செய்திகள் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. வைணவ சமய நூல்களில் இராமாநுச நூற்றந்தாதி எந்த இடத்தில் இருக்கிறது? அதனுடைய இலக்கிய வரலாறு குறிப்புகள் என்னென்ன? அந்தாதி வழியில் பாடப்பட்ட இந்நூலில் ஆழ்வார்களின் குறிப்புகள் எப்படி எடுத்தாளப் பட்டுள்ளன? சீடனாகிய அமுதனார் குருவாகிய ராமானுஜரைப் பற்றி எழுதிய நூல் என்பதால் குரு சீடர் உறவுநிலைப் பற்றிய குறிப்புகள் அற்புதமாக எடுத்தாளப்பட்டுள்ளன. வைணவ உலகில் பல அந்தாதி நூல்கள் முதலாழ்வார்கள் காலத்திலிருந்தே இருக்கின்றன. இந்நூலில் அந்த அந்தாதி செல்வாக்கு எந்த அளவில் விஞ்சி நிற்கிறது என்பதை புதிய கோணத்தில் பதிவு செய்திருக்கிறார். முடிவுரையாக ஒவ்வொரு இயலிலும் தாம் கண்ட செய்திகளை நிரல் நிறையாக ஓரிரு வரிகளில் தொகுத்து அளித்திருக்கிறார். இதுதவிர இன்னும் பல சிறப்பான தகவல்கள் அடங்கிய பின் இணைப்புக்களாகக் கொடுக்கப் பட்டிருக்கின்றன.
அதில் நாலாயிரத்திவ்யபிரபந்த முறை தென்கலை மரபிலும், வடகலை மரபிலும் எப்படி இருக்கிறது? என்ற விளக்கம் உள்ளது.இது தவிர பாடபேதங்கள் பற்றிய ஆய்வு.
சுவாமி மணவாள மாமுனிகள் இதற்கு வியாக்கியானம் அருளிச் செய்திருக்கிறார். அவர் அருளிய உரையில் கண்டுள்ளபடி இந் நூலில் என்ன பாட பேதங்கள் இருக்கின்றன.
மற்ற பதிப்புகளில் இந்த பாடபேதங்கள் எப்படி இருக்கின்றன எனப் பல தகவல்கள் அழகாக ஆராய்ந்து தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன.ஆசிரியரின் உழைப்பும் அறிவுத்திறனும் ஆர்வமும் இதற்கெல்லாம் மேலான பக்தியும் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப் படுவது இந்நூலின் சிறப்பு.
