எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi ?
வேதம், பரம புருஷனான ஸ்ரீ மந் நாராயணனை திருப்பள்ளி எழுச்சி பாடி மகிழ்கிறது. “உத்திஷ்ட புருஷ் ஹரீலோஹித பிங்களாக்ஷ” என்று வேதம்பாடும் திருப்பள்ளி எழுச்சி தைத்தீரிய நாராயணவல்லியில் வருகிறது. ராமாயணத்தில் விசுவாமித்திர மகரிஷி திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார். கெளசல்யா ஸுப்ரஜாராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே! உத்திஷ்ட நரஸார்தூல கர்த்தவ்யம் தைவ மாஹ்நிகம்! (ரா.பாலகாண்டம் 23/2)
திருப்பள்ளி எழுச்சி என்பது ஆராதனத்தின் ஒரு பகுதி. ஆகமத்தின் அழுத்தமான விதி! இது பெருமானை துயிலெழுப்புவதல்ல; தான் விழிப்புணர்வு பெற்று எழுந்ததை உணர்த்துவதற்காகத்தான் திருப்பள்ளி யெழுச்சி.
பெருமாள் தூங்குகிறாரா என்றால் இல்லை; தேகத்தை ஆத்மாவாகக் கருதி, கலியில் புரண்டழும் நாம் தாம் விழிக்க வில்லை. நாம் விழித்துக் கொண்டோம் என்பதை அறிவிக்கவே திருப்பள்ளியெழுச்சி பாடுகிறோம்.
மனதிற்குள்ளே பகவான் தன்னை உணர்த்துகிறான்; ஆன்மாவும் தான் யார் என்பதை உணர்கிறது. ஆன்ம விழிப்புணர்வின் வெளிப்பாடுதான் திருப்பள்ளி எழுச்சி!ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி பாடுவதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.இவருடைய முதல் பிரபந்தமான திருமாலையில் “உம்பராலறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி செம்புலாலுண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார் நம்பரமாயதுண்டே! நாய்களாம் சிறுமையோரா, எம்பிராற் காட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே”! என்று பாடி, தன்னுடைய கைங்கர்ய ஊற்றத்தை வெளிப்படுத்தினார். அந்த ஆர்வம் இவரை எம்பிரானுக்கு ஆட்படுதல் என ஆரம்பித்து, எம்பிரானடியார்க்கு ஆட்படுதல் வரை கொண்டு சேர்த்தது.
இதனையே தனது பெயராக தொண்டர்அடிப்பொடி ஆழ்வார் வைத்துக்கொண்டார். “இந்த விழிப்புணர்வை எனக்கு ஏற்படுத்திய இறைவா! மற்றவருக்கும் இதனை வெளிப்படுத்த எழுந்தருள்க!” என்று உலக நன்மைக்காக ஆழ்வார் பாடுவதே திருப்பள்ளியெழுச்சி எனும் பிரபந்தமாகும். அதுவும் இவர் அரங்கநாதனுக்குப் பாடிய காரணம், அவன் ராஜா; ரங்கராஜா! ராஜாக்களுக்கு உள்ள உபசாரங்களில் ஒன்று திருப்பள்ளி எழுச்சி பாடித் துயில் எழுப்புவது. கைங்கர்ய பரரான ஆழ்வார், தனக்கு (ஜீவன்களுக்கு) அரசனான பரமாத்மாவுக்கு (ரங்கநாதப்பெருமாளுக்கு) உபசாரமாகப் பாடுவதே திருப்பள்ளியெழுச்சி. இதனை அவரே வெளிப்படுத்துகிறார்.
“அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!”
அப்படிப்பட்ட திருப்பள்ளியெழுச்சியை நாமும் பாடி நலம் பெறுவோமாக!
-ஆசிரியரின் சொற்பொழிவிலிருந்து (ஆலய தரிசனம் ஜனவரி 2003)
——————————————————————————————————————————————————————————
பெரிய திரு மொழியில் ஒரு பாசுரம்
PERIYA THIRUMOZHI – a PASURAM
“கார்த்திகையில் கார்த்திகை நாளில் ” அவதரித்தவர் திருமங்கை மன்னராவார் (ThirumangaiAzhwar). அவர் ஆறு பிரபந்தங்களை அருந்தமிழில் அருளிச்செய்துள்ளார். அவற்றில் “ பெரிய திருமொழி ” மட்டும் 1084 பாசுரங்களைக் கொண்டதாகும். அவற்றுள் ஒரே ஒரு பாசுரத்தை மட்டும் நாம் இங்கு ஆராய்வது நலமாகும். அது வருமாறு;
” துளங்கு நீண்முடி அரசர்தம் குரிசில்
தொண்டை மன்னவன் திண்திறல் ஒருவற்கு
உளம்கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து
அங்கோடு நாழிகை ஏழுடனிருப்ப
வளம்கொள் மந்திரம் மற்றவற்கு அருளிச்
செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன்
அணி பொழித் திருவரங்கத் தம்மானே ”
ஐந்தாம்பத்து – எட்டாம் திருமொழி 9-ம் பாசுரம்.
” திருவரங்கத்து அம்மானே! விளங்குகின்ற நீண்ட முடியையுடைய அரசர்களுக்கு அரசராகிய மிக்க வலிமையை உடைய தொண்டை நாட்டு மன்னன் ஒருவனிடம், உன் திருவுள்ளத்தில் கொண்ட அன்புடனே, இனிய கருணையை மிகுதியாகச் செய்து அரசாளுதலாகிய இம்மைச் செல்வத்திலே வீணே கழிகின்ற அவனது நாழிகையானதும் (அங்ஙனம் கழியாது) ஏழு தத்துவம் பொருள்களுடனே கூடி இருக்கும்படி சிறப்புகொண்ட பெரிய திருமந்திரத்தையும், அதன் பொருளையும் அத்தொண்டைமான் சக்கரவர்த்திக்கு உபதேசித்து அருளிய வகையை அடியேன் தெரிந்துகொண்டு, உலகமளந்த உன் திருவடிகளையே சரணமாகப் பற்றி உய்ந்தேன் ” என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.
இப்பாசுரத்தில் ”தொண்டை மன்னவன்” என்று பொதுவாக இப்பாசுர அடிகளில் குறிப்பிடப் பெறுபவனும் பல்லவ மல்லனே என்பர்.
திரு.மு.இராகவ அய்யங்கார் அவர்கள். (ஆழ்வார்கள் காலநிலை.பக்.200)
கூரத்திலுள்ள கேசவப் பெருமாள் கோவிலைக் கட்டினான். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமான் ஆலயத்தை அமைத்தான். அங்கு வாவி, மதில், மாடமாளிகை, மண்டபம் முதலியனவற்றையும் புதியனவாக அமைத்துச் சிறப்பித்தான்.
மண்ணுதண் டொழிலும் வாவியும் மதிலும்
மாடமாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத்
திருவல்லிக் கேணி நின்றானன்”
– என்னும் ஆழ்வார் திருவாக்கால் இதனை அறியலாம்.
நந்திபுர விண்ணகரத்தைக் கட்டியவனும் இவனே!
நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே” (5:10:7)
என்று இவ்வாழ்வார் தம் மனத்தை ஆற்றுப்படுத்துகிறார். இவன் நந்திபுரத்தில் சில காலம் ஆண்டு கொண்டிருந்தபோது, திருவரங்கப் பெருமாள் இவனுக்கு திருவெட்டெழுத்து உபதேசம் செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு இம்மன்னன் பரமபாகவதனாக இருந்து பலதிருமால் திருப்பணிகளைச் செய்தான். காஞ்சி வைகுந்தப் பெருமாள் ஆலயம் பல்லவர் காலச்சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது. அட்டாங்க விமானம் அமைந்த தமிழகத்து ஆலயங்கள் ஐந்தனூர் முதலாவதாகும். (ஏனையவை: உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்ட லட்சுமி கோயில்; திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள திருவாட்டாறு திருக்கோயிலும் இவ்வமைப்புடையதே).
பார்மன் தொல்புகழ்ப் பல்லவர் கோன்
பணிந்த பரமேச்சுர விண்ணகர்” (2:9:10)
இம்மன்னனுக்குப் பரமேச்சுவரன் என்ற பெயரும் உண்டு.
(துளங்குநீண் முடியரசர்……).
உளம் கொள் அன்பு – அவனுக்கு உபதேசம் செய்ய வேண்டுமென்று குளிர்ந்த திருவுள்ளத்தில் கொண்ட அன்பு. “அங்கு குறிக்கப்பட்டு இருக்கிறது. ஆயின் இத்தொடர் எந்த அரசனைக் குறிக்கும்? அவனுடைய பெருமைகள் யாவை? என்ற வினாக்களுக்கு விடை காண்போம்.
பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்டு வந்தனர். (பல்லவர்கள் – தொண்டையர் தொண்டை வேந்தன் என்று கூறப்படுதல், நந்திக்கலம் பகத்தால் நன்கறியப்படும்).
பல்லவ மன்னன் பரமேசுரவர்மன் மறைவுக்குப்பின் வாரிசு இல்லாததால் பல்லவ நாட்டில் அரசன் இன்றி ஒரு நெருக்கடி உருவாயிற்று. எனவே பல்லவக்கிளை மரபு ஒன்றினைச் சார்ந்த இரணியவர்மன் என்பவனுடைய மகனான பல்லவ மல்லன் (இரண்டாம் நந்திவர்மன்) என்பவனை அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். (இது மிகவும் விரிவான செய்தி; சுருக்கிக் கூறப்பட்டது) . 12 வயதான பல்லவ மல்லன் ‘நந்திவர்மன்’ என்னும் அபிடேகம் பெயருடன் சுமார்
65 ஆண்டுகள் காஞ்சியில் அரசு புரிந்தான் (கி.பி.710-75)
இவன் சிறந்த வைணவன். இவனை ‘அரடிசரணபரன்’ எனவும் முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றிற்கும் தலை வணங்காதவன் எனவும் பட்டயங்கள் குறிப்பிடுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில்! நந்திபுர விண்ணகரப் பதிகத்திலும், ‘பரமேச்சுர விண்ணகரப் பதிகத்திலும் இவனது பெருமைகளைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
சமயப்பணி:
காஞ்சியிலுள்ள அட்டாங்க விமான அமைப்புள்ள அழகிய “வைகுந்தப் பெருமாள் (Vaikunta Perumal) ஆலயத்தை இவன் கட்டினான். காஞ்சி-அட்டபுயகரப் பெருமான் ஆலயத்தை நிர்மாணித்தான். தில்லைதிருச்சித்திர கூடத்திலுள்ள திருமாலுக்குப் பலதிருப்பணிகளைச் செய்தான். இதனை இவ் ஆழ்வார்,
“பைம் பொன்னும் முத்து மணியும் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்கின்ற தில்லைத்
திருச்சித்திர கூடம் சென்று சேர்மின்களே”
– (3:2:3) என்று குறிப்பிடுகிறார்”
ஓடு நாழிகை ஏழுடன் இருப்ப! அரசு செய்யும் காலத்தில் வீணாய் (ஓடுகின்ற) கழிகின்ற காலங்களிலே ஒருயாமப் பொழுது தன்னுடன் அத்தொண்டை மன்னவன் நெஞ்சில்பட ஏழு மெய்ப் பொருள்களைப் பெருமான் உபதேசித்தருளினாராம்.
ஏழுமெய்ப் பொருள்களாவன:
1.தேகமே ஆத்ம என்கிற மயக்கம் நீங்குதல்.
2.தான் சுதந்தரன் என்னும் கொள்கை நீங்குதல்.
3.சிறு தெய்வங்களுக்குத் தான் அடிமை ஆகாமை.
4.பேற்றின் பொருட்டுத் தன் முயற்சி தவிர்தல்.
5.உறவினர் அல்லாதாரை உறவினராகக் கொள்ளாமை.
6.ஐம்புல ஆசையை ஒழித்தல்.
7.அடியார்க்கு அடிமை (பாகவத க்ஷேத்துவம்)
இவ்வேழு பொருள்களும் திருமந்திரத்தில் அடங்கியுள்ளன. வளம்கொள் மந்திரம் – குலம்தரும் செல்வம் தந்திடும்... நாராயணா என்னும் நாமம் என்னும் எல்லாச் சிறப்புகளையும் அளிக்க வல்லது திருமந்திரம்.
– டாக்டர். இரா.வ. கமலக்கண்ணன், வந்தவாசி. ஆலய தரிசனம் ஜனவரி 2003
————————————————————————————————————————————————————-
“நம” என்பதன் பொருள் என்ன? Meaning of NAMA ?
நமஸ்ஸூ “ந” என்றும் “ம:” என்றும் இரண்டு பதம்; “ம:” என்று விரோதி கூறப்பட்டது; “ந” என்று அதன் நிவ்ருத்தி கூறப்பட்டது. ஆக “நம:” என்ற பதம் விரோதி நிவ்ருத்தி வாசகம் என்றதாயிற்று.
இனி அநிஷ்டமாவது எது என்பதனை அநுபவிப்போம். இஷ்டா நிஷ்டங்கள் பகவானைப் பற்றிப் பார்க்கப்பட வேண்டும். நம்மைக் குறித்துப் பார்த்தல் கூடாது. “தன்னால்வரும் நன்மை விலைப்பால் போலே. அவனால் வரும் நன்மை முலைப்பால் போலே” என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்துள்ளார்.ஆக இஷ்டா நிஷ்டங்கள் அவளையிட்டுப் பார்த்தல் வேண்டும். அவனுக்கு அநிஷ்டம் – விரோதி; அதன் நிவ்ருத்தி நம: என்று கூறப்படுவதாகக்கொள்க. தனக்குத்தான் தேடும் நன்மை உபாயதசையிலும் ஆகலாம்; உபேயாநுபவ தஸையிலும் ஆகலாம். ப்ராப்திதசையிலும் ஆகலாம். இவையித்தனையும் அவன் திருவுள்ளத்துக்குப் பொருந்தாவிடில் இவையித்தனையும் விரோதிகளே. ஏதந்நிவ்ருத்தி ப்ரார்த்தனை “நம:” என்று கூறப்படுகிறது. “ஸ்ரீபரதாழ்வானுக்கு நன்மைதானே தீமையாயிற்று” என்றும் “தனக்குத் தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காயிருக்கும்” என்றும் “குணம்போலே தோஷநிவ்ருத்தி” என்றும் ஸ்ரீவசநபூஷண திவ்ய ஸூத்ரங்கள் அமைந்துள்ளன. முந்தியது உபாயதசையில் விரோதியையும் இடையது உபேய தசையில் விரோதியையும் பிந்தியது ப்ராப்திதசையில் விரோதியையும் கூறும் என்று பூர்வர்கள் வ்யாக்யானித்துள்ளார்கள்.ப்ராப்தி தசையாவது – சரணாகதி செய்தபிறகு இவ்வுலகில் இருக்கும் நாளாகும். ஸகலவேதலங்க்ரஹம் திருமந்திரம் என்னும் இவ்வர்த்தம் “ரச: யஜூம்ஷி ஸாமாநி ததை வாத ர்வணாநி சஸர்வம் அஷ்டா க்ஷராந்தஸ்ஸ்த்தம் யச்சாந்யத பிவாங்மயம்॥!” என்கிற ப்ரமாண வாக்ய ஸித்தம்: திருமந்திரத்தில் சரமபதம் “நாராயணாய” என்பது. இதிலே கூறப்பட்டது பராநுபவம். ஜீவனைப் பரன் அநுபவிக்கிற அநுபவம்.
அவன் போக்தா; இவன் போக்யன்.ஈஸ்வரன் செய்யும் அநுபவத்துக்குத் தடையாக ஜீவன் எதையும் பற்றுவது கூடாது என்கிற இவ்வர்த்தம் ஸத்ஸம்ப்ரதாயஸித்தம். அவனுக்கு நாம் போக்யமாக நாம் கொள்வதோ கூடாது என்பது அப்பதத்தால் தேறிய பொருளாகும். இதையே நமப்தார்த்தமாக ஸ்ரீபராசரபட்டர் விவரித்தருளினார்.
ஓர் ஜ்ஞாநி, பரனிடத்தில், பெண்டு பிள்ளைகளையோ க்ருஹ க்ஷேத்ராதிகளையோ ப்ராப்த்திப்பது கூடாது; அது ஸ்ரீவைஷ்ண வத்வமான அநந்யப்ரயோஜநத்வத்துக்குப் பொருந்தாது என்று பெரியோர் கூற நாம் கேட்டிருக்கிறோம்.
ஆயினும் பரிபூர்ண ப்ரஹ்மாநுபவத்துக்குத் தடையான சரீரத்தி னுடைய நிவ்ருத்தியை ஜ்ஞாநி பகவானிடத்துப் பிரார்த்திப்பது தகுமா என்று விசாரிக்கிறார் ஸ்ரீவசநபூஷணத்தில் பிள்ளைலோகாசார்யர். அதுவும் கூடாது என்று ஸ்ரீவசநபூஷணத்தில் கூறப்பட்டுள்ளது- “குணம்போலே தோஷநிவ்ருத்தி” என்று பகவான் விரும்புகிறான் ஜ்ஞாநியை; ஜ்ஞாநி விரும்புகிறான் பகவானை. இந்தப் பரிமாற்றம்இருசேதநர்களுடையதாகும். அங்கும் பகவத் ஸ்வரூபம்வேறு பகவத் ரூபம் வேறு; இங்கும் ஜீவஸ்வரூபம் வேறு ஜீவசரீரம்வேறு; ஆயினும் ஜ்ஞாநிகளான ஆழ்வார்களும் பரமாத்மஸ் வரூபத்தைக் காட்டிலும் பகவத் விக்ரஹத்தையே ஆதரிப்பர்கள். பகவானும் ஆழ்வார்களுடைய ஆத்மஸ்வரூபத்தைக் காட்டிலும் அவர்கள் திருமேனியையே போர உகக்கும். இருவருமே தேஹாத்மாபிமாநிகள் என்பர் நம் பெரியோர். “பொய்கலவாது என்மெய்கலந் தானே” (1-8-5) என்று நம்மாழ்வார் அருளிச்செய்தார்.
“அவனும்என்னைவிட்டு என்னுடைய தேஹத்தை விரும்பா நின்றான் என்கிறார்” என்று ஈட்டு திவ்யஸூக்தி அமைந்தது. “ஈஸ்வரன் தனக்கும் போக்யதமமான நித்யவிக்ரஹாநுபவத்தில் ஊற்றத்தாலே திருமங்கையாழ்வார் தம்மை ஈஸ்வரவிஷயத்தில் தேஹாத் மவாதிகளாக அருளிச்செய்வர்” என்று தேசிகன் அருளிச்செய்கிறார். ஆக ஓர் ஜ்ஞாநியுடைய தேகம் (சரீரம்) பரமனுக்கு பரமாநுபாவ்யம் ஆகும். இப்படி அவன் அநுபவிக்கும் தேகத்தைவிட்டு விடலாமா…பகவானுடைய விருப்பத்துக்கு மாறான செயல் அல்லவா அது…இந்த அர்த்தமே ம. இதன் நிவ்ருத்தி நம…
