தலையங்கம் ஏப்ரல் 2020

மனித குலத்தை எத்தனையோ விஷயங்கள் புரட்டிப்போட்டிருக்கின்றன. அதில் இன்று உலகம் எதிர்கொண்டிருக்கும் விஷயம் மிக பயங்கரமானதாக இருக்கிறது. புயல், காற்று, பூகம்பம் இவையெல்லாம் உலகில் ஒரு சில பகுதிகளை அச்சுறுத்தும். ஆனால் ஒட்டு மொத்த உலகத்தை அச்சுறுத்தும் விஷயமாக இன்று கொரானோ வைரஸ் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமுதாய விலகியிருத்தல் ஒன்றே இதற்கு வழி என்று ஒரே குரலில் விஞ்ஞானிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் கூட, பல விபரீதங்கள் நடந்து விடுகிறது என்பதை இத்தாலி போன்ற நாடுகள் மற்ற நாடுகளுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. உயிர் இழப்பு கூட இருக்கட்டும். இறந்தவர்களை பாதுகாப்பாக அடக்கம் செய்யக்கூட முடியவில்லையே என்று இத்தாலியின் அரசு நிர்வாகம் கவலையோடு உலகுக்குத் தெரிவிக்கின்ற காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன .
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.இந்த வைரஸ் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரி. அது காற்றில் இருக்கிறதா; ஏதேனும் ஒரு பொருளின் மீது படிந்து இருக்கிறதா என்பதெல்லாம் நம்மால் கண்டுபிடிக்க முடியாது.
இதை ஒரு அரசாங்கத்தால் மட்டும் அல்லது விஞ்ஞானத்தால் மட்டும் அல்லது மருத்துவர்களால் மட்டும் நேரடியாக நடவடிக்கை எடுத்து ஒழித்து விட முடியுமா என்றால் முடியாது.
காரணம், இன்றைய தேதி வரை இதன் அடையாளங்கள் எப்படி இருக்கும் என்று தான் மருத்துவ உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறதே தவிர, இதற்கு மருந்து இருக்கிறது என்பதை முழுமையாகச் சொல்லவில்லை.
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா – என்கிற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
அதற்கான ஆய்வுகள் கவனமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று செய்திகள் வருகின்றன. ஆனால் எத்தனை விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்றாலும், அதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படும். விரைவில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா, சீனா என ஏதேனும் ஒரு நாடு, மருந்து கண்டு
பிடித்து விடலாம்.
ஆனால், அதற்குள் என்னென்ன விபரீதங்கள் நடந்து விடும்?
இதில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது, இந்த வைரஸை அச்சத்தால் மட்டும் விரட்டிவிட முடியாது. அவசரப்பட்டும் விரட்டிவிட முடியாது.
ஆனால், அதே சமயம், இது நம்மை என்ன செய்துவிடும் என்று அலட்சியப்படுத்தினால், நிலைமை விபரீதமாகிவிடும்.
இதற்குத்தான் அரசாங்கம் முழுமூச்சோடு செயலில் இறங்கி இருக்கிறது. மக்கள் நினைத்தால் மட்டுமே இதனை வெல்ல முடியும். காரணம் வைரஸ்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டு அதுவும் முதல் நிலையில் கண்டுபிடிப்பது சவாலான விஷயமாக இருக்கிறது. குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டு அறிகுறி தெரியாமலேயே இருக்கிறார்கள். பல பேர் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் (காய்ச்சல்) இல்லாமல் இருக்கிறார்கள். கொஞ்சநாள் கழித்துத்தான் அவர்களுக்கு அந்த வைரஸ் தொற்று இருக்கிறது என்பது தெரியவருகிறது. அதற்குள் அவர்கள் ஒரு நூறு நூறு பேருடன் தொடர்பு கொண்டிருந்தால், அவர்களுக்கு அது பரவி, ஒவ்வொருவரும் 100 பேரை தொடர்பு கொண்டிருந்தால், நூறு ஆயிரமாகி அத்தனைப் பேருக்கும் பரவி விடுகிறது. இதிலுள்ள சிக்கல் இதுதான்.
இவ்வளவு விரைவாகப் பரவும் நோய் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள்.சீக்கிரம் பரவுகிறது. ரகசியமாக ஊடுருவுகிறது. விரைவில் உயிர்க்கொல்லி ஆகிவிடுகிறது.
ஆனால், நோய்ப்பரவலை கட்டுப்படுத்த முடியவில்லையே தவிர, நோய்த்தொற்றை சமாளித்து விட முடியும் என்பது சற்று ஆறுதலான விஷயம்.
இதனை ஒரே வழியில் மட்டும்தான் தவிர்க்க முடியும். அதுதான் சமுதாயத்தில் தனித்து இருத்தல். வள்ளலார் சொன்னது போல தனித்திரு விழித்திரு என்று சொன்னதன் பொருள் நமக்கு இப்போது விளங்குகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இந்த வைரஸ் கிருமிகள் பற்றி பலரும், அதிகாரப்பூர்வமற்ற, நம்பத்தகாத, பயனில்லாத, எதிர்மறை விளைவுகளைச் செயக்கூடிய பல தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்று சொன்னால், அது குறித்து நாம் பேசாமல் இருப்பது நல்லது. அதைப்போலவே நம்மிடம் வரக்கூடிய தகவல்கள், சரியான நபர்களிடம் இருந்து வந்த தகவல்களாக இல்லை என்று சொன்னால், குறைந்தபட்சம் கொஞ்சம் காத்திருந்து அதை மற்றவர்களுக்குச் சொல்வது நல்லது.
ஆனால் ஆர்வக்கோளாறு யாரை விட்டு வைத்தது. பட்பட்டென்று பரவிவிட்டு விடுகிறோம்.
இதில் சில தகவல்கள் அச்சுறுத்துவதாக இருக்கின்றன. சில தகவல்கள் எந்தவிதமான ஒரு விஞ்ஞான பின்னணியும் இல்லாத அதிகாரப்பூர்வமற்ற தகவல்களாக இருக்கின்றன.
அநேகமாக பலரும், அவரவர் விருப்பத்துக்கு – மருத்துவ குறிப்புகளைக் கொடுத்து வருகின்றார்கள்.
அவைகள் சரியான மருந்துகள் அல்ல என்று தினம் தினம் ஆதாரப்பூர்வமாக விஞ்ஞானிகள் சொல்லி வருகின்றார்கள்.
அதைப்போலவே இவ்வளவு பேருக்கு பரவிவிட்டது- அவ்வளவு பேருக்கு பரவிவிட்டது -என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைப் பலர் பரப்பி வருகின்றார்கள்.
அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், இது திட்டமிட்டு பரப்பி விடப்பட்ட செயற்கையான ஒரு நிகழ்வு, என்று சொல்வதும் வருகிறது.இவர்களில் பலர், தங்கள் என்ன நினைக்கிறோமோ அதையெல்லாம் சொல்கிறார்கள்.கொரானோவைத் தடுப்பது போலவே வதந்திகளையும் தடுக்கவேண்டிய ஒரு கட்டாயம் அரசாங்கத்திற்கு இருக்கிறது.
பொதுவாகவே, இதில் அரசாங்கம் விழித்துக்கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு என்று தனியாக ஒரு இணையசேவையை அல்லது பிரத்யேகச் செயலியை ஏற்படுத்தி, மக்களுக்கு அறிவுபூர்வமான தகவல்களை, தகுந்த அறிஞர்களைக் கொண்டு வெளியிட்டு வருகின்றார்கள்.
அமெரிக்காவில், இந்த கொரானோ வைரஸ் குறித்து, ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்ற ஒரு அம்மையாரின் (திருமதி பவித்ரா) பேட்டியும், இன்னும் சில மருத்துவர்களும் நமக்கு கொடுக்கின்ற ஆலோசனைகள் பயனுள்ளவையாக இருக்கின்றன.
நாளிதழ்களிலும், அவ்வப்பொழுது இது குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள் மிகத் துல்லியமான, அதிகாரப்பூர்வ தகவல்களாக வெளிவருகின்றன.
இதையும் மீறி, நமக்குப் பல சந்தேகங்கள் வரத்தான் செகின்றன.
சுடு நீரில் குளித்தால் வைரஸ் வராதா?
எலுமிச்சம் சாறு குடித்தால் வராதா?
குளிர்பானங்களை பிரிட்ஜில் வைத்து குடிக்கலாமா?
இப்படி நமக்கு சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இப்படிப்பட்ட சந்தேகங்கள் இப்பொழுது வரவேண்டுமா?
பொதுவாகவே, குளிர்பானம் நம் உடம்புக்குத் தீமை தருவது. இப்பொழுது ஏன் அதன் பக்கம் நாம் போகவேண்டும்?
அதைப்போலவே, சுடுநீரில் குளிப்பதும்… தேவைப்பட்டால், அது நல்லதுதான். அதில், மஞ்சள், மூலிகைகள், நொச்சியிலை, வேப்பிலை போன்ற இலைகளைக் காய்ச்சி குளிப்பதும் நல்லது தான். நல்ல கிருமிநாசினி.
பெரிய கெடுதல் இல்லை என்ற அளவிற்கு, வீட்டு வைத்தியமாக பின் பற்றலாம். ஆனால், இதுவே எல்லாம் என்று பிரசாரம் செய்வதும், டாக்டர்களை குறை சொல்வதும் சரியல்லவே…

எல்லாவற்றையும் விட முக்கியம் தனிமைப்படுத்திக் கொள்வதும், கொஞ்சம் விலகி இருத்தலும். ஒருவர் மூச்சுக்காற்று ஒருவர் மீது படாமல் இருத்தலும், கை, கால், வாய், முகம் சுத்தமாக வைத்திருத்தலும், வெளியே போய்விட்டு வீட்டுக்குள் நுழையும்போதே கால் கை கழுவி வாய் கொப்பளித்து உள்ளே நுழைவதும், உன்னத பழக்கம்…என்று கொரோனாவுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் பழக்கங்கள், நாம் காலம் காலமாகப் பின்பற்றி வரும் பழக்கங்கள் தான்.
இப்போது, மறுபடி நமக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது . அதிக பயணம்,அலைச்சல், ஓய்வின்மை, சரிவர உணவு சாப்பிடாதது என நாம் அலட்சியப்படுத்திய விஷயங்களைத் தாம் மறுபடியும் நம்மைக் குணப்படுத்த மருந்தை விட முக்கியமாகச் சொல்லப்படுகின்றன.
தடுப்பு முறைகளாக, இதில் சொல்லப்படும் பல விஷயங்கள், மிக எளிமையானது.சென்ற வாரம் ஒரு திருமணம். வெறும் 50 பேருடன் அற்புதமாக நடந்தது. எத்தனை செலவு மிச்சம்!
அடுத்த சில நாட்களுக்கு, ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடக்க வேண்டிய நிகழ்வுகள் மிகுந்த ஆடம்பரம் இல்லாமல் குறைந்த நபர்களோடு வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.
வீட்டிலேயே கல்யாணத்தை நடத்திக்கொள்ளலாம் என்கிறார்கள்.
இவை இப்போது புதிய அனுபவங்கள்.
ஒரு காலத்திலே பல திருமணங்கள் இப்படித்தான் நடைபெற்றன என்பதை இப்போதும் நம்மோடு இருக்கக்கூடிய 70 வயதை கடந்தவர்களைக் கேட்டால் தெரியும்.
உலகமே இதிலிருந்து ஒரு விழிப்புணர்வு பெறவே செய்கிறது. அவரவர் மதம் தான் உயர்ந்தது என்பதை மறந்து, எல்லோரும் உலக மக்களின் உயிருக்காக ஒருங்கிணைந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
மக்களாகிய நாம், அரசாங்கம், என எல்லோரும் இணைந்து, அற்புதமான இயற்கை ஆற்றலின் துணை கொண்டு, கொரானோ எனும் கொடிய வைரஸை ஒழிக்கும் முயற்சியில் இறங்கி விட்டோம்.
நல்ல பழக்கங்கள் நமக்கு இப்பொழுது மறுபடியும் வந்து விட்டன. இந்த வைரஸை நிச்சயமாக நாம் இன்னும் சில நாட்கள் போராடி ஒழித்துவிடலாம்.
ஆனால், அது தந்த பாடத்தை நாம் மறக்காமல் இருந்தால், அந்த விழிப்புணர்வு, நம்மை நம் வருங்கால சந்ததிகளை நிச்சயமாகக் காப்பாற்றும்.
சரி; முடிக்கு முன், ஒரே ஒரு விஷயம்.
இந்த வைரஸ் என்கிறோமே. இது எங்கேயிருந்து வந்தது?விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்…இது இங்கேயே இருப்பதுதான்.நாம் ஏமாந்த போது நம்மைத்தாக்குவது.
இந்த வைரஸ், நோயைத் தருவதால், கண்ணுக்குத் தெரியாமல் நம்மைச்சுற்றி இருக்கும் நோய்கள் என்றே கூறலாம்.நெய்க்குடத்தை பற்றி எறும்புகள் ஏறுவது போல, நம் உடம்பின் செல்களில் புகுந்து, நம்மை அழிப்பது என்கிறார் பெரியாழ்வார்.
அவர் பாட்டு இது.
நெய்க்குடத்தை பற்றி ஏறும் எறுப்புகள் போல நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கும் நோய்காள் காலம் பெற உய்யப்போமின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார்
பைக்கொண்ட பாம்பணையோடும் பண்டன்று பட்டினங்காப்பே..(பெரியாழ்வார் 5.2.1)
