அருமையான ஜகன்மோகினி ராகத்தில் அமைந்த சோபில்லு சப்தஸ்வர என்கிற தியாகராஜ கீர்த்தனையை ஸ்வேதா பாடிக்கொண்டிருக்க, அதை நான் ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருந்த பொழுது, ஓரிரு இடங்களில் ஸ்ருதி கொஞ்சம் விலகினால் போல் தோன்றவும்,
” ஸ்வேதா, ஒரு நிமிஷம்” என்றேன்.
” என்ன பாட்டி?” என்று சுவேதா பாட்டை நிறுத்திவிட்டு கேட்க, நான் சொன்னேன்.
” ஸ்வேதா,ஸ்ருதி மாதா : லயம் பிதா” என்பார்கள்.
ஸ்ருதியைக் கொஞ்சம் காதில் வாங்கிக்கொண்டு பாடு நடுநடுவே சுருதி சுருதி சேராமல் போகிறது .மேலும் பாட்டை ஆரம்பிக்கும் பொழுது இருந்த நிதானமும் ஒரே சீராக இல்லை. ஓடியே போய்விட்டாய். எந்த ரயிலைப் பிடிக்க இந்த ஓட்டம்?”
நான் கேட்டு முடிப்பதற்குள், “ஆமாம் பாட்டி. இன்று ஸ்கூல் பாடங்கள் நிறைய இருந்ததால் என் கவனம் சிதறி விட்டது .இனிமேல் இந்தத் தவறு நேராது” என்று சொல்லி அடுத்த கீர்த்தனை, சித்தரஞ்சனி ராகத்தில் அமைந்த, தியாகராஜரின் நாததனு மனிசம்”பாடினாள் .

பாட்டின் சரணம் “ஸரிகமபதநீ -வர சப்தஸ்வர” என்ற இடம் வந்ததும் ஸ்வேதாவை நிறுத்தச் சொல்லி,
” ஸ்வேதா, இந்த இடத்தை ஆழ்ந்து பாடு” சங்கீதஞானமு- பத்தி வினா என்று தியாகராஜ சுவாமி சொன்னபடி, நல்ல சங்கீதத்திற்கு ராக தாள பாவ ஜதிகதி ஸ்ருதி யாவும் தேவை என்றேன். பிறகு ஒருவழியாகப் பாடி முடித்த சுவேதா,” பாட்டி, இப்போது திருப்தியா?” என்று என்னை ஆர்வமுடன் கேட்க, “மிகவும் நன்றாகப் பாடினாய், அம்மா” என்று சொல்ல, அவள் முகம் மலர்ந்தது.
” ஸ்வேதா, இன்று நீ பாடிய இரண்டு கீர்த்தனைகளும் சப்தஸ்வர விசேஷ ணத்தை ஒட்டி திருமங்கையாழ்வார் அருளிய பாசுரம்ஒன்றை நீயும் கேள்” என்று நான் சொல்லவும், ஸ்வேதாவும் தலையசைத்துக் கேட்க, அப்பாசுரத்தை நாமும் சற்று அனுபவிப்போம்.
திருக்காழிச்சீராம விண்ணகரம் என்பது சீர்காழி திவ்யதேசம்.சோழ நாட்டுத் திருப்பதி.

ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி என்ற நான்கு வகையான கவிதைகளில் மிக்க வல்லமை பெற்ற திருமங்கையாழ்வார் திவ்யதேச யாத்திரையாக ச பரிவாரராய் காழிச்சீராம விண்ணகரம் வந்து சேர்கிறார் .
அங்கு ஞானசம்பந்தரோடு விவாதம் நடக்கிறது .வெற்றி பெற்று வேல் பெறுகிறார்.
சரி.கோயிலைப் பார்ப்போம்.
மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரம்.
மூலவர் தாடாளன். நின்ற திருக்கோலம்.
தாயார் ஸ்ரீ லோகநாயகி. உற்சவர் திரிவிக்கிரமன்.
தாயார் மட்டவிழ் குழலி. இந்த அற்புதமான சேவையைக் காண ஓடி வந்த ஆழ்வார் அப்பெருமானை மங்களாசாசனம் செய்கிறார்.
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி
உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும்
காழிச் சீ ராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1-
இப்பாட்டில் ஒன்று ,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து ,ஆறு,ஏழு,என்னும் எண்கள் அழகாக அமைந்திருத்தல் நோக்கத்தக்கது .
உலகளந்த பெருமாளாதலால் ஒரு குறளாயென்று என்று தொடங்குகிறார். இரண்டாம் அடியில் என்னா என்னும் செய்யாவென்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம். எனா என்று தொக்கி இருக்கிறது. “என்று சொல்லி” என்பது பொருள். தாடாளன் -பெருமை பொருந்தியவன் . முயற்சி உள்ளவன்.
இத்தலம் தாடாளன் சன்னதி Sri Thrivikrama Perumal Temple (Kazhischeerama vinnagar) என்றும் வழங்கப்படுகிறது.
தக்க கீர்த்திஅருமறை திரள் நான்கும்- வேதங்கள் ஆதியும் அந்தமும் இல் லாவை என்றும், ஒரு புருஷனால் செய்யப்படாமல் ஸ்வயம் வ்யக்தம் என்றும், எவ்வகை குற்றமும் அற்றவை என்றும் சொல்லத்தக்க கீர்த்தியை உடையன.
மூலம் அதிகரிப்பதற்கும் ,அர்த்தம் அறிந்து கொள்வதற்கும் வெகு அருமை உள்ளது பற்றி அருமறை என்றது. ஒவ்வொரு வேதத்திலும் சாகா பேதங்கள் பல உள்ளதால் மறையின் திரள் என்றது.
வேள்வி ஐந்தும் – பிரம்ம யக்ஞம் ,தேவயக்ஞம், பூத யக்ஞம், பித்ரு யக்ஞம்,மனுஷ்ய யக்ஞம் என்பன பஞ்சமகா யக்ஞங்கள்.
பிரம்ம யக்ஞமாவது -ப்ரஹ்ம யக்ஞ ப்ரச்நம் என்று தினப்படியாக வேதத்தில் ஒவ்வொரு பிரச்நம் ஓதுவது.
தேவ யக்ஞமாவது -அக்னிஹோத்ரம் (ஹோமம்) செய்வது.
பூத யக்ஞமாவது – பிராணிகளுக்கு பலியிடுவது(உணவு)
பித்ரு யக்ஞம் என்பது பித்ருக்களை உத்தேசித்து தர்ப்பணம் விடுவது.
மனுஷ்ய யக்ஞம் என்பது விருந்தாளிகளுக்கு உணவு முதலியன கொடுப்பது.
ஆக இவை பஞ்சமகா யக்ஞம் எனப்படும்.
அங்கங்கள் அவை ஆறும் -சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என வேதாங்கங்கள் ஆறு.அச்சுக்கள்,ஹல்லுக்கள் என்னும் அட்சரங்களை உச்சரிக்க வேண்டிய முறைகளும் சிஷையில் சொல்லப்படும்.
ப்ரக்ருதி,ப்ரத்யங்கங்களின் பாகுபாடும் அவற்ற்றின் அர்த்த விவேகமும் வியாகரணத்திலும் நிருக்தத்திலும் நிர்ணயிக்கப்படும்.
காயத்ரீ , திருஷ்டுப் சந்தம் ஜகதீ இத்யாதியான சந்தோ பேதங்கள் சந்தஸ்ஸில் கூறப்படும். வேதோக்த கர்மங்களை காலமறிந்து அனுஷ்டிக்க வேண்டுகையாலே , அக்காலங்களை அறிவிக்கும் ஜோதிஷம் ஆச்வலாயநர் ,ஆபஸ்தம்பர் முதலிய மகரிஷிகளால் செய்யப்பட்ட கல்பங்களில் வைதிககருமங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைமைகள் விளக்கப்படும்.
இப்படிப்பட்ட ஆறு அங்கங்களின் பாட ப்ரவசனங்கள் சீர்காழியில் நிகழ்கின்றனவாம். காந்தர்வ சாஸ்திரத்தில் வல்லவர்களும் இத்தலத்தில் பலருண்டு என்றபடி ஏழிசை குறித்துச் சொல்லுகின்றார்.
ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம்,நிஷாதம் என்று சுரங்கள் ஏழு. அவற்றைக் கொஞ்சம் வர்ணிப்போம்.
மயிலின் கூவுதல்- ஷட்ஜமம் ,மாடுகளின் கூவுதல் ரிஷப ஸ்வரம், ஆடுகளின் கூவுதல் -காந்தாரம் .அன்றில் பறவையின் கூவுதல்- மத்யம ஸ்வரம், குயிலின் கூவல் -பஞ்சமம். குதிரையின் கனைத்தல்- தைவதம் யானையின் முழக்கமும்-நிஷாத ஸ்வரம் என்று நாரதர் சொல்லியிருக்கிறாரே.
மேற்சொன்ன பசு பக்ஷிகளின் இனிமையான ஒலிகள் சீர்காழியில் மலிந் திருக்கும் .எனவே காழிச்சீராம விண்ணகரே சேர்மின்கள் என்று நம்மையும் அத் திருப்பதிக்கு அழைக்கிறார் திருமங்கையாழ்வார்.
” பாட்டி, சங்கீதத்தின் ஏழு சுரங்களில் இத்தனை இருக்கிறதா?”
“ம்..அதுவும் ஒன்றிலிருந்து ஆரம்பித்து, கடைசி ஏழாவதில் சப்த ஸ்வரங்களை நமக்கு காட்டி, அதற்குமேல் எதுவும் இல்லை என்று மோக்ஷத்தையும் அடையும் மார்க்கம் -இசை -நாதோபாஸனை என்று உணர்த்தி இருக்கிறார் திருமங்கையாழ்வார்”
அவர் தாள்பணிந்து, இப்பாசுரத்தை அனுபவிக்கலாம். வாருங்கள்.
-திருமதி பிரேமா வரதன்
- ஹிந்து மதம் முரண்பாடுகள் உள்ள மதமா?

- ஸ்ரீமஹாவீர வைபவம் (vedantha Desikan’s Sri Raghuveera kathyam)

- ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் பிரதான சீடர் அய்யம்பேட்டை (வாலாஜாபேட்டை)ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர்

- ஜோதிடத்தின் பார்வையில் நவராத்திரி குறித்த சுவையான விஷயங்கள்

- வைணவத்தில் நாயகி பாவம் என்றால் என்ன?

- வேங்கடவனைப் பாடினால்…..(Thirupaanalvar on Thirumalaa)

