சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஒரு செய்தியைச் சொன்னார் .
“ஜோதிட உலகம் போகின்ற போக்கைப் பார்த்தீர்களா?”
“என்ன?”.
“பொதுவாக ஏதேனும் கிரக தோஷங்கள் இருந்தால், பரிகாரமாக கோவிலுக்கு சென்று விளக்கேற்றி ,அர்ச்சனை செய், அபிஷேகம் செய், அங்கேயே ஒரு முகூர்த்த காலம் இருந்து தியானம் செய் என்று சொல் வார்கள் ”
” உண்மைதான். அதற்கு என்ன இப்பொழுது?”
“இப்பொழுது சிலர் ஜோதிடர்கள், நீங்கள் இந்த கோயிலுக்குப் போகக் கூடாது .இன்ன இன்ன நட்சத்திரக்காரர்கள் இன்னின்ன கிரக தசை நடக்கின்றவர்கள் இன்ன இன்ன கோயிலுக்குப் போகக்கூடாது என்று சொல்கிறார்களே”
” அப்படியா?”
“ஆமாம் சில நட்சத்திரக்காரர்கள் திருப்பதிக்கு போனால் அவர்களுக்கு துன் பங்கள் வரும். இன்னும் சில கோயில்களுக்கு போனால் எதிர்மறையாக நடக்கும் என்கிறார்கள் . இதெல்லாம் உண்மையா?” என்றார் .
நான் சிரித்தேன்.
“நான் இவ்வளவு சீரியசாக உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் சிரிக் கிறீர்களே?”
“சிரிக்காமல் என்ன செய்வது? ஒரு விஷயத்தை திடகாத்திரமாக ,அழுத் தமாகச் சொல்லுகின்ற பொழுது, அதைச் சாதாரண மக்கள் நம்பி விடு வார்கள். இதுவரை திருப்பதி போனவர்கள் கூட, நாம் இனிமேல் திருப்பதி போகக்கூடாது என்று முடிவெடுத்து விடுவார்கள். ஒரு வேளை திருப் பதியில் கூட்டம் அதிகமாகப் போய்க்கொண்டிருக்கிறது .அதைக் குறைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் கூட, சில ஜோதிடர்கள் சொல்லி இருக்கலாமோ, என்னவோ?”
“நீங்கள் சொல்வது விளங்கவில்லை”
“ம். எனக்கும் சில ஜோதிடர்கள் சொல்வது விளங்கவில்லை”
நிதானமாக அவரிடம் சொன்னேன்
“இப்பொழுது பெரும்பாலும் ஜோதிடர்கள், ஆராய்ச்சி என்கிற பெயரில், புதிய புதிய விஷயங்களைச் சொல்லி, என் அனுபவத்தில் இது நடக்கிறது, அதனால் உங்களுக்கும் நடக்கும் என்று சொல்லுகிறார்கள். ஒரு கலை சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் இருந்தாலோ , அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாலோ நடைபெறும் வித்தியா சமான விபரீதங்களில் இதுவும் ஒன்று. இப்பொழுது ஜோதிட ஆராய்ச்சி என்கின்ற பெயரில் நம்முடைய பழைய மரபுகளையும் ஜோதிடத்தின் அடிப்படைகளையும் கூடக் கடந்து, நவீன ஆராய்ச்சி என்று புதிது புதிதாகச் சொல்லுகின்றார்கள். ஏதோ கொஞ்ச காலம், ஜாதக விசேஷத்தாலும், வாக்கு பலிதத்தாலும், பத்துக்கு நான்கு நடைபெற்று வருவதால் அவர்கள் பரம புகழை அடைந்து விடுகிறார்கள்.அப்படி வெற்றி பெற்று உலா வருவதால், கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, “வென்றவன் சொன்னதெல்லாம் வேதம்” என்று ஆகிவிடுகிறது. இதைத் தவிர இந்த விஷயத்தில் சொல்வதற்கு எதுவும் இல்லை”
” அப்படியானால் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது ?”
” நான் சொல்லி நீங்கள் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அவர்கள் “இவருக்குச் சொன்னேன், இப்படி நடந்தது; அவருக்குச் சொன்னேன் அப்படி நடந்தது” என்று சொல்லுகின்ற பொழுது, கஷ்டப்படுகின்ற நீங்கள், உங்களுக்கும் அப்படி நடக்க வேண்டும் என்று தானே நினைப்பீர்கள். அந்த நேரத்தில் அதற்கு எதிரான ஒரு கருத்து, எத்தனை லாஜிக்காகச் சொன்னாலும் அது ஏறாது. நான் திரும்பத் திரும்ப ஜோதிடத்தினுடைய எல்லைகளைப்(limitaions) பற்றி சொல்லி வருகின்றேன். ஒரு நாளைக்கு திருப்பதிக்கு 60 ஆயிரம் பேர். ஒரு மாதத்திற்கு 18 லட்சம் பேர். ஒரு வருடத்திற்கு ஒன்றரை கோடி பேர் போகின்றார்கள். ஒருவர் என்னதான் முக்கி முக்கி ஜாதகம் பார்த்தாலும், மாதத்திற்கு சில நூறு ஜாதகங்கள் மேல் பார்த்துவிட முடியாது. வருடத்திற்கு ஒரு 3000 ஜாதகங்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட ஒரு 20 வருடம் கடும் பாடுபட்டாலும் எத்தனை பார்த்துவிட முடியும்? வருடம் ஒன்றரை கோடி பேருக்கு மேல் திருப்பதி செல்லுகின்ற மக்களின் அரை சதவீதம் கூட இது கிடையாது என்று சொல்லுகின்ற பொழுது, இந்த நட்சத்திரக்காரர்கள் திருப்பதிக்கு போனால் வீணாகி விடுவார்கள் என்று எதை வைத்து கொண்டு சொல்லுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்களை பெருமாள் கைவிட்டு விடுவார் என்பதை விட அபத்தம் உலகத்தில் வேறு ஏதாவது இருக்க முடியுமா? அதற்கு சாஸ்திர ரீதியாக ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?”
மேலும் சொன்னேன்.

நம்மாழ்வார் பெரிய தவ சீலர்.முனி.பிறக்கும் போது ஜடத்தையே விரட் டியவர்.ஆசு கவி.அவர் ஒரு பாசுரத்தில் சொல்கின்றார்..
“நீ திருப்பதி கூட செல்ல வேண்டாம். இருந்த இடத்தில் இருந்து அந்த மலையைத் தொழுதால் கூட உன்னுடைய வினைகள் ஓய்ந்துவிடும்” என்று பாடி இருக்கின்றார்.
“அப்படியா?” என்றார்.
.நான் “பாடலையே சொல்லுகின்றேனே” என்று பாடலைச் சொன்னேன்.
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை,
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.
இதற்கு என்ன பொருள்? இதைப் பாடிய நம்மாழ்வார் பெருமை தெரியுமா? ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்து கொண்டார். எல்லாப் பெருமாள்களும் இவரிடத்திலே வந்து தமிழைக் கேட்டுச் சென்றார்கள் .
மனசாட்சியோடு சொல்லுங்கள்.இன்றுள்ள ஜோதிடர்களை விட, எத்தனை மடங்கு மேலானவர். சித்த புருஷர் .இறைவனே நேரில் பேசக்கூடிய இந்த நம்மாழ்வார் சொல்லை விடவா,மிகச் சாதாரண மனிதர்களாக விளங்கு கின்ற சில ஜோதிடர்கள் சொல்லுகின்ற கதைகளை நாம் நம்புவது?
எல்லா தோஷங்களும் தீர வேண்டும் என்பதற்காக, நவகிரகங்களும் படிகட்டி கைகட்டி நிற்கக்கூடிய திருப்பதியில் சென்று விழ வேண்டும் என்று பல மகனீயர்கள் சொல்லுகின்றார்கள்.
அப்படி சரண் அடைந்தால், “விதியும் தீரும்; உன் வினையும் மாறும்” என்று பல அருளாளர்கள் தங்கள் அனுபவத்தை சாறு பிழிந்து கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் காசுக்காக பாடியவர்கள் அல்ல. புகழுக்காகப் பாடியவர்கள் அல்ல. நம்முடைய மனம் மாசு நீங்க வேண்டும்,வாழ்வு சிறக்க வேண்டும் என்பதற்காகப் பாடியவர்கள்.
“நாம் அந்த வாக்கை நம்புவதா? இன்றைக்கு வினைகளால் வருகின்ற சில்லறை பிரச்சினைகளுக்காக, திருப்பதிக்குச் செல்ல வேண்டாம், திருச் செந்தூருக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்லுகின்ற வாக்கை நம்புவதா?”
“நான் அந்த ஜோதிடர்களை குறை கூறவில்லை.காரணம்”எத்தை தின்றால் பித்தம் தெளியும்” என்கிற தவிப்பு மனநிலையில் உள்ளவர்களுக்கு, ஒரு பாம்பு கடித்து குணமாகும் என்று சொன்னால் கூட, பாம்பு கடிக்கட்டும் என்று காட்டிக் கொண்டு நிற்பார்கள். அப்படித்தான் ஒரு ஊரில் நாக தோஷம் நீங்குவதற்காக புற்றுக்குள் கையை விடு, என்று ஒருவர் சொல்லி, அந்த புற்றுக்குள் இருந்த பாம்பு கடித்து, அவர் ஆஸ்பத்திரியில் கிடக்கிறார் என்கிற செய்தியும் வந்தது.
பராசரர்,வராஹிமிகிரர்,அகத்தியர்,காளிதாசர் போன்றவர்கள் கொடுத்த அற் புதமான சாஸ்திரம். கருட புராணத்திலும், விஷ்ணு புராணத்திலும், சாணக் கியரின் அர்த்த சாஸ்திரத்திலும் ,ஜோதிடத்தினுடைய நுட்பங்கள் குறித்து பல பலத் தகவல்கள் இருக்கின்றன. மறுபடியும் சொல்லுகின்றேன்.
ஜோதிடம் நாளை என்ன நடக்கும் என்பதை தோராயமாக சுட்டிக் காட்டும் கலை தானே தவிர, ஆணி அடித்தது போல் அப்படித்தான் நடக்கும் என்று முடிவுக்கு முடிவாகச் சொல்ல முடியாத சாஸ்திரம். காரணம், எதிர்காலம் என்பது மிக மிகச் சூட்சுமமானது .அது அவ்வளவு எளிதில் தன்னைக் காட்டிக் கொடுத்து விடாது .அது மட்டுமல்ல. அது நம் மனம் போல மாற்றங்களும் உடையது. நம் மனம் மாறினால் அந்த மாற்றங்கள் நிகழும். மனம் மாறுவதற்கு நல்ல வழிகளைச் சொல்ல வேண்டும். நல்ல பாடல்களைப் படிக்கச் சொல்ல வேண்டும். அருளாளர் களைப் போற்றச் சொல்ல வேண்டும் . அவர்கள் பாடிய கோயில்களுக்குப் படி ஏறிச் சென்று ,அந்த இறைவனைப் போற்றச் சொல்ல வேண்டும். என் னுடைய கருத்து இதுதான். இதற்கு மேல் ஜோதிடர்கள் ஆயிற்று. வாசகர்கள் ஆயிற்று.
