பாரதியைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் வருடம் இரண்டு முறை சிந்திக்கின்றோம். ஒன்று அவருடைய அவருடைய பிறந்த நாள் (11.12..1882) மற்றும் நினைவு நாள்(11.9.1921).
எது எப்படியாயினும் ஒரு தெய்வீகக் கலைஞனை, ஒரு ஆற்றல்மிக்க கலை ஞனை, ஒரு சீரிய படைப்பாளியை, ஒரு சிந்தனைச் செல்வனை, நாம் சிந் திப்பது என்பது, நம்முடைய ஆன்ம உணர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு வழி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
பாரதியின் கவிதைகளில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்த கவிமணி.
“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா – அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா ! – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா.”
என்ற பாடலைப் பாடியதன் மூலம், பாரதியை நம் கண் முன் நிறுத்துகிறார். அவருடைய பாட்டின் எழுச்சியைக் குறித்து அப்போதே பலரும் பாராட்டி இருக்கின்றார்கள்.
வாழ்க்கை முழுக்க கவிதை, பாட்டு என்று வாழ்ந்த பாரதியே ஒரு கவிதைதான்.
அவன் உண்ட சோற்றுப் பருக்கைகளை விட எழுதிய கவிதைகள் அதிகம்.
அது தான் அவனுக்குச் சோறு.
கவிஞர்களுக்கு அழகுணர்ச்சியும், இரக்க உணர்ச்சியும், புரட்சி உணர்ச்சியும், அன்பு உணர்ச்சியும், ஆன்மீக உணர்ச்சியும் இணைந்து இருக்க வேண்டும்.
அது பாரதியிடம் இருந்தது.
ஒரு கவிதை வெற்றி பெற வேண்டுமென்றால் அதே உணர்ச்சியோடு அதனை வாசிக்கும் வாசகனுக்கும் போய்ச்சேர வேண்டும். அப்படி சேர்ந்ததுதான் பாரதியின் கவிதைகள்.
அவரைப் பற்றி எத்தனையோ கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள், அனுபவங்கள் சொல்லப்படுகின்றன.
ஆனால் பாரதியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னால், 1941ஆம் ஆண்டு வெளி வந்த “பாரதியார் சரித்திரம்” நூலைத் தான் சொல்லவேண்டும் .
அந்த நூலை பாரதியின் மகளே, பாரதியின் மனைவி செல்லம்மா பாரதி சொல்வது போன்ற நடையில், எழுதி இருப்பார்.
பாரதியின் வரலாறு என்பது ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு புகழ்பெற்ற கவிஞனின் அல்லது காலம் முழுக்க வறுமையோடு போராடிய கவிஞரைப் பற்றிய கதை மட்டுமல்ல.
பாரதியின் கதையோடு நம்முடைய சுதந்திர போராட்ட வரலாறு, அப்பொழுது இருந்த மக்களின் சமூக நிலை, மொழி, சமயம், பல்வேறு வரலாற்று நிகழ்வுகள், குறிப்பாக அரசியல் நிகழ்வுகள் என அத்தனையும் பின்னிக் கிடக்கிறது.
பாரதியைப் பற்றி அகச்சான்றுகளாகவும், புறச்சான்றுகளாகும் ஆயிரம் விஷயங்கள் வந்திருக்கின்றன.
ஆனால் ஒருவரை பற்றி மிக அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் புறத்தில் இருக்கின்ற ஒருவர் அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது.
ஒன்று அந்த கவிஞரே தன்னைப் பற்றி சொல்ல வேண்டும்.
இல்லாவிட்டால் அவரோடு மிக நெருங்கிய மனைவியோ மகளோ மற்ற உறவுகளோ நண்பர்களோ சொல்ல வேண்டும்.
இதில் அவரே சொல்வது தான் மிகச் சிறப்பாக இருக்கும். அதற்கு அடுத்த நிலையில் அவரோடு ஊனும் உயிருமாகக் கலந்து வாழ்ந்த அவருடைய மனைவி சொல்வது சரியாக இருக்கும்.
அப்படித்தான் பாரதியின் மனைவி செல்லம்மாள் பாரதி, பாரதியைப் பற்றி ஒரு அழகான குறிப்பு கொடுக்கிறார்.
பாரதியார் ஓர் ஆத்ம ஞானி .உயிர்களிடத்தும் அன்பாய் இருப்பதை நடைமுறையில் நடத்திக் காட்டினார். பார்ப்பவர்களுக்கு அது பித்தன் செய்கையாகத் தோன்றலாம். வேதம் படித்த அந்தணனிடத்திலும்,மாமிசம் தின்னும் புலையனிடத்திலும் பசுவினிடத்திலும் நாயிடத்திலும் அறிஞர்கள் சமநோக்கு உடையவர்கள் என்னும் கீதையின் வாக்கியங்களுக்கு பாரதியாரை உதாரணமாகக் காட்டலாம் என்பது செல்லம்மாவின் வாக்குமூலம் .
அன்றைக்கு ஆணாதிக்கச் சமூகம் தான் இருந்தது. ஆண்டாண்டு காலமாக அது இயல்பாக அப்படித்தான் இருக்கிறது. பாரதியும் ஆரம்பத்தில் தன்னை ஓர் ஆணாதிக்கவாதியாகவே வெளிப்படுத்தினார்.அவர் அறியாமலேயே அது வெளிப்பட்டது. ஆனால் சுட்டிக்காட்டி அவரை நல்வழிப் படுத்தியவர் பாரதி.
அவருக்கு பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நிவேதிதா தேவி. இதையும் செல்லம்மாள் பாரதி தம்முடைய நூலில் விளக்குகின்றார்.
ஸ்ரீமதி நிவேதிதா தேவியின் தரிசனம் பாரதியின் அறிவையும் உணர்ச்சி களையும் ஒருமைப்படுத்தி அவரை புனித மனிதனாக்கியது. ஆணும் பெண் ணும் சரிநிகர் சமானம் என்ற உண்மையையும் சுதந்திரத்தின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி வலியுறுத்தியது.
காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்
என்ற பேருண்மையை தேவியின் தரிசனம் அவருக்கு அறிவுறுத்தியது என்று பதிவு செய்துள்ளார். இப்படி பாரதியைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் செல்லம்மாள் பாரதி எழுதிய பாரதியார் சரித்திரம் தான் நமக்குத் துணையாக இருக்கும்.
