எஸ். கோகுலாச்சாரி, ஆலயதரிசனம்.
வைணவ மரபில் பக்தியின் படிநிலைகளாக மூன்று நிலைகளைச்சொல்வார்கள். பரபத்தி, பரஞானம், பரமபக்தி என்பதே அம்மூன்றுநிலைகள்.பூவாகி, காயாகி, கனியாகி என்கிறபடி இந்த மூன்று நிலைகளைபரபக்தி, பரஞானம், பரமபக்திக்கு உவமைகளாக ஓரளவுச் சொல்லலாம்.
பரபக்தி என்பது பரமனாகிய எம்பெருமான் மீது ஏற்படும் பக்தி.இந்த பரபக்தி, பரமனைப் பற்றிய ஞானத்தைத் தந்து அவனுடையகல்யாண குணங்களை அறிய வைத்து ஆழப்படுத்தும். இந்நிலைஅகத்தூண்டலாக மாறி, எம்பெருமானை அறிய வைக்கும்.இந்த பரமஞானம்பிறந்தவுடன், பரமபக்தி தலையெடுக்கும். இது பக்தியின் நிறைவு நிலைஎனலாம்.
இந்த பரமபக்தி தலையெடுத்துப் பேசுகின்றபோது ஆழ்வார்களுக்குஇரண்டு தன்மை ஏற்படுகிறது.ஒன்று ஞானம். இன்னொன்று பிரேமம்.ஞானத்தின் போது தன் பேச்சாகவும், ப்ரேமத்தின் போது பெண்பேச்சாகவும் பாசுரங்கள் வெளிப்படுகின்றன.
இதனைத்தான் நாயகி பாவம் என்கிறார்கள்.இந்த நாயகி பாவத்தில் பிறந்த பாசுரங்களை அகத்துறை பாசுரங்களாகஏற்றுக்கொள்கிறோம்.அகத்தினை (உள்ளத்தை) அல்லது – அகத்தின் உணர்வினை – உள்ளதுஉள்ளபடி விளக்கும் பாசுரங்கள் என்பதால் அகத்தினைப் பாசுரங்கள் என்பதுபொருத்தமே!
சங்ககால அகத்திணைப் பாடல்களின் தாக்கம் ஆழ்வார்களின்பாசுரங்களில் உண்டு என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
உலகியல் ஞானமும், அறிவும், தாக்கமும், மெய்யுணர்ந்த நிலையில்இணைந்து வெளிப்படுவது தவிர்க்கயியலாதது!பொதுவாகவே ஜீவன் எனப்படும் ஆன்மா – அல்லது – உயிர்நிலை – பெண்தன்மை என்கிற இயல்புடையது!
உயிர்நிலையின் உள் உறைந்து இயக்கும் இறைநிலை – ஈஸ்வர
ஸ்வரூபம் – அல்லது பரஸ்வரூபம் – ஆண் தன்மை உடையது!
எனவே ஆழ்வார்கள் ப்ரேம பாவத்தில் பெண்தன்மை சேரப்பேசுகிறார்கள்.
ஞானத்தில் தன் பேச்சு; ப்ரேமத்தில் பெண் பேச்சு என்றும், மணி வல்லிப்பேச்சு என்றும், இது வந்தேறி அல்ல – இயல்பானது என்றும் ஆசார்ய ஹ்ருதயஅழகிய மணவாளப்பெருமாள் நாயனார் அழுத்தமாகச் சொல்கிறார்.திருமங்கையாழ்வாருக்கு பரகாலன் என்று பெயர். நாயகி பாவத்தில்பரகாலநாயகி என்று கொண்டாடப்படுகிறார்.
ஆழ்வாரின் முதல் பிரபந்தமான பெரிய திருமொழித் தொடக்கமாக -நிறைவுப் பிரபந்தமான திருநெடுந்தாண்டகம் வரை இந்த நாயகி பாவம்விரவிக் கிடக்கிறது.மடல் – சிறிய திருமடல். பெரிய திருமடல் இரண்டுமே நாயகி பாவத்தில்பிறந்த முழுமையான பிரபந்தங்கள். திருநெடுந்தாண்டகமும் கிட்டத்தட்டஅப்படியே!
பெண் பாவத்தில் பிறக்கும் பேச்சுகளில் மூன்று நிலைகள் உண்டு. ஒன்றுதாயார் பேச்சு. இன்னொன்று மகள் அல்லது தலைவி பேச்சு – மூன்றாவதுதோழிப் பேச்சு.
இப்பேச்சுக்களுக்கு தத்துவ வர்ணமும் உண்டு.
பொதுவாக பெண் தன்மை – ஏறிடும் போது, தலைவிக்கு இருக்கக்கூடியஆறு குணங்களையும் நம் ஆசார்யர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
1) அவனுக்கே ஆட்பட்டிருத்தல்.
2) அவனைத்தவிர வேறு யாரும் புகலில்லை என்ற உறுதியோடுஇருத்தல்.
3) அவனைத் தவிர வேறு யாராலும் காப்பாற்ற முடியாது என்ற எண்ணம்கொண்டிருத்தல்.
4) அவன் சேர்க்கையில் மட்டுமே தரித்திருத்தல்.
5) அச்சேர்த்தி கிடைக்காதபோது தவித்தல்.
6) அவனுக்கே தான் இனிமையாதல்.
இது பராங்குச நாயகிக்கும் பொருந்தும்; பரகால நாயகிக்கும் பொருந்தும்.
