நாத பிரம்மம் என்றும், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும், இசை வல்லுனர்களுக்கு சத்குரு என்றும் போற்றப்படுகின்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பிரதம சீடராக விளங்கியவரும், அவருடைய கீர்த்தனைகளை முதன் முதலாக ஏட்டுச்சுவடிகளில் எழுதி, அகிலம் முழுவதும் பரப்பியவரும் யார் தெரியுமா?அவர்தான் அய்யம்பேட்டை வேங்கடரமண பாகவதர்.

அவர் நிறைவாக வாழ்ந்தது வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை என்பதால் வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் என்றும் அழைப்பதுண்டு. வாலாஜாபேட்டையில் அவர் வாழ்ந்த இல்லம் இன்றும் அவருடைய சந்ததி யினரால் காப்பாற்றப்பட்டு வருகின்றது.
பிறந்ததால் ஒரு ஊரும்(அய்யம் பேட்டை), வாழ்ந்ததால் ஒரு ஊரும் (வாலாஜாபேட்டை), பெருமை பெற்றது என்பது, இரண்டு ஊரின் பெயரோடு இவருடைய பெயர் வழங்கப்படுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இவருடைய வாழ்க்கை சரித்திரம் அதி அற்புதமானது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது.
இந்தியாவின் மேற்குப் பகுதியில், இன்றைய குஜராத் மாநிலத்தின் மேற்கே, சௌராஷ்டிர தேசம் என்று ஒரு தேசம் உண்டு. ஜென்ம கிருஷ்ண பக்தர்களாக விளங்கிய அத்தேச மக்களின் வாழ்க்கை, சோமநாதபுரம், துவாரகா மீது வந்த படையெடுப்புக்களால் சின்னாபின்னம் ஆகியது.
ஒரு நாட்டு மக்கள், அந்நாட்டை விட்டு வேறு இடங்களுக்குச் செல்வதற்கு இரண்டு காரணங்கள் தான் உண்டு.
1.அந்த நாடு, வாழத் தகுதி இல்லாதபடி கடல்கோள் (சுனாமி),பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களுக்கும், பஞ்சம், வியாதி முதலிய நிகழ்வுகளுக்கும் ஆட்படுகின்ற பொழுது, தேசத்தை விட்டு, மக்கள் வாழ்விடம் தேடி, வேறு இடங்களுக்குச் செல்லுகின்றனர்
2.அரசியல் ரீதியாக அன்னியர் படையெடுப்பு நடந்து, அவர்களால் வாழ்வும் கலாச்சாரமும் பண்பாடும் மொழியும் சிதைகின்ற பொழுது, வேறு இடத்தை நாட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது .
இதில் சௌராஷ்டிர தேசத்தவர்கள், இரண்டாவது காரணத்தினால், தங்கள் பக்தியையும்,கலாச்சாரத்தையும் விட முடியாமல், பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்து, தென்னகத்தை நோக்கி வந்தனர் .
அவர்கள் இயல்பிலேயே வேத விற்பனர்களாகவும் கிருஷ்ண பக்தர்களாகவும் திகழ்ந்தனர். அவர்கள் குலத்தை சௌராஷ்டிர விப்ர குலம் என்று அழைத்தனர்
மாந்திரீக, தாந்திரிக, ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவர்களாக விளங்கிய அவர்கள், ஆசு கவிகளாகவும், சங்கீத விற்பனர்களாகவும் விளங்கினர் .இது தவிர மக்களின் மானத்தைக் காக்கும் நெசவுத்தொழிலில் நிகரற்றவர்களாக விளங்கினர். அதுவும் பீதாம்பரம் எனப்படும் பட்டாடை வண்ண நெசவில் நிபுணத்துவம் பெற்று விளங்கினர். அதனால் இவர்களை பட்டு நூல்காரர்கள் என்றும் அழைப்பார்கள்.
இவர்களின் திறனை மிக நன்றாக உணர்ந்து கொண்ட விஜய நகரத்து அரசர்கள், தென்னகத்தை ஆட்சி செய்த பொழுது, பல குடும்பங்களை தென்னகத்திற்கு அனுப்பி வைத்தனர். மதுரை, ராமநாதபுரம், கும்பகோணம், அய்யம்பேட்டை, தஞ்சாவூர், முதலிய ஊர்களில் குடியேறினர். அப்படிப்பட்ட ஊர்களில் ஒன்று தஞ்சாவூருக்கு அருகே உள்ள இராமச்சந்திரபுரம் என்று அழைக்கப்படும் அய்யம்பேட்டை.
அங்கே ததிசி கோத்திரத்தில் குப்பையர் என்கின்ற பெருமகனார் ஜோதிட நிபுணராகவும், பரமபாகவதராகவும், கோயில் புரோகிதராகவும் விளங்கினார். அவருக்கும் காவேரி அம்மாளுக்கும் நன்னுசாமி பாகவதர் என்ற புதல்வர் பிறந்தார். தஞ்சை சங்கீத பூமி அல்லவா. அங்கே நாளும் சங்கீதம் கேட்டு வளர்ந்த குப்பையர், தனக்கு சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புதல்வன் பிறக்க வேண்டும் என்று, தன்னுடைய ஆராதனைப் பெருமாளான சத்திய பாமா ருக்மணி சமேத கிருஷ்ணனைப் பிரார்த்தித்து வந்தார்.
அவர் ஒரு முறை திருப்பதிக்குச் சென்ற பொழுது,”எனக்கு சங்கீதத்துக்காக ஒரு புத்திரன் பிறக்க வேண்டும். அப்படிப் பிறந்தால், உன்னுடைய பெயரான வேங்கடரமணன் என்ற பெயரை வைக்கிறேன்” என்று பிரார்த்தித்தார்.
அப்பொழுது இறைவன் அவருடைய கனவில் தோன்றி,” உமக்கு இனி குழந்தை இல்லை. ஆனால் உன்னுடைய குமாரனுக்கு, நீர் விரும்பிய சங்கீத நிபுணராக ஒரு குழந்தை பிறப்பான்” என்று வரம் தந்து மறைந்தார் .
அப்படிப் பிறந்தவர் தான் வேங்கடரமணன். அவர் பிறந்தது மாசி மாதம் தசமி திதி மூல நட்சத்திரம். ஆஞ்சநேயருடைய மூல நட்சத்திரத்தில் அவதரித்ததால் இயற்கையிலேயே கவி பாடும் ஆற்றலும் சங்கீதத்தில் ஆர்வமும் இருந்தது.
குலத்தொழிலான நெசவுத் தொழில் வயிற்று பசிக்கு உதவியது. நெய்யும் தொழிலில் பாடிய சங்கீதம் ஆன்ம பசியைக் கிளறியது.
நெசவுத்தொழில் சாதாரணமான தொழில் அல்ல. ஐம்புலன்களும் இணைந்து வேலை செய்தால் தான், அங்கே ஆடை வண்ணம் பெறும். கால்கள் கட்டையை மிதிக்க வேண்டும், கைகள் நாடாவை ஓட்ட வேண்டும். கண்கள் நூல் அறு படாமல் பார்க்க வேண்டும்.
வேங்கட்ரமண பாகவதருக்கு பட்டாடையின் நிற ஜாலங்கள் பரந் தாமனையே காட்டியது .நீலத்தில் அவன் நிறம் தெரிந்தது.மேக வண் ணத்தில் அவன் கருணை புரிந்தது.பச்சைவண்ணம் அவன் மேனியைப் படம் பிடித்தது.ஆரஞ்சும் சிவப்பும் அவன் இதழின் வர்ணத்தை அவ தானித்தது. மஞ்சள் வண்ணமோ அவன் மாயாஜாலத்தையே காட்டி மயக்கியது.இத்தனையும் சேர்ந்த உணர்வு கவிகளாகக் கொட்டியது.
கால்கள் கட்டையை மிதிக்கும் பொழுது தாள கதியை உணர்ந்தார். கைகள் நாடாவைப் போடுகின்ற பொழுது. ஸ்வர லயத்தை உணர்ந்தார்.. இழை கள் பின்னிப் பின்னி ஆடையை நெய்ய, ஸ்வரங்கள் பின்னிப் பின்னி ராகங்களை நெய்தது. இசையால் வசமாகாத இதயம் எது.?
ஆனாலும் அவருக்கு நிறைவில்லை. அப்பொழுது திருவையாறுக்கு குடி வந்த ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், பல சிஷ்யர்களுக்கு சங்கீதம் போதிப் பதை அறிந்தார். அய்யம்பேட்டையில் இருந்து திருவையாறுக்கு குறைந்த பட்சம் 15 கி.மீ.இருக்கும்.
தன்னுடைய வியாபார வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, சோர் வைக் கருதாது, அய்யம்பேட்டை பசுபதி கோயிலில் தொடங்கி, ஆற்றங் கரை ஓரமாகவே நடந்து, திருவையாற்றுக்குச் செல்வார். அங்கே சீடர் களுக்கு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் சங்கீத பாடம் நடத்திக் கொண்டி ருப்பார். வேங்கட்ரமன பாகவதர் தியாகராஜ ஸ்வாமிகளின் வீட்டை அடைந்ததும் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கி, ஒரு ஓரமாக நின்று கொள்வார். இவரைக் கவனித்த சுவாமிகள், கையால் சைகை செய்து “அமரலாமே” என்பார். ஆனால், வேங்கடரமண பாகவதர் கைகளைக் கட்டிக் கொண்டு, எத்தனை மணி நேரம் பாடம் நடத்தினாலும், நின்று கொண்டே தான் கேட்பார் இப்படியாக இரண்டு வருடங்கள் கழிந்தன.
இந்த இரண்டு வருடங்களும் குருவும் சிஷ்யனும் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் வைக்கவில்லை.
சித்திரை மாதம் வந்தது. உஷ்ணம் உள்ளே உட்கார விடாமல் செய்தது. வெளியில் ஒரு பந்தல் போட்டால், காற்றாட அமர்ந்து சங்கீத பாடம் நடத்த வசதியாக இருக்கும் என்று நினைத்தார் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள். இதை வேங்கடரமண பாகவதர் கேட்டார்.
இரண்டு நாட்களில் வசதியான பெரிய கொட்டகை வீட்டு முற்றத்தில் போடுவதற்கான அத்தனை பொருள்களுடன் திருவையாறுக்குச் சென்றார். தன் ஆட்களுடன் “விறு விறு” என்று மிக அழகான ஒரு கொட்டகையை போட்டு முடித்தார்.
அப்பொழுது ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஒரு வேலை நிமித்தமாக திரு வாரூர் சென்று இருந்தார். வீட்டிலிருந்த தியாகராஜ சுவாமிகளின் மனைவி யார் கூலிக்கும்,பொருள்களுக்கும் பணம் கொடுக்க வந்த பொழுது வேங்கட ரமண பாகவதர் மறுத்தார் .
“அம்மா ..வேண்டாம்.சாமான்கள் எல்லாம் அடியேனுடைய வீட்டில் இருந்த பொருள்கள். வேலை செய்ய வந்த ஆட்களும் நம் ஆட்கள். இது அடியேன் கடமை.”என்று சொல்லி, எந்தப் பணமும் வாங்காமல் , அம்மையாரை நமஸ்கரித்து விட்டு சென்று விட்டார்.
ஒரு வாரம் கழித்து ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் வந்து பார்த்த பொழுது ஒரு அபாரமான கொட்டகை போடப்பட்டிருந்ததை அறிந்து மகிழ்ந்தார். நடந்த நிகழ்வுகளை தன் மனைவியார் சொல்ல அறிந்தார்.
குரு சீட லட்சணத்தை நன்றாக உணர்ந்தவர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள். யார் ஒருவன் குருவினுடைய எண்ணத்தை அறிந்து கொண்டு செயலாற்று கின்றானோ அவனே சிறந்த சிஷ்யன் என்கிறது சாஸ்திரம்.
வழக்கம்போல் வேங்கட்ரமண பாகவதர் வந்து தியாகராஜ சுவாமிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். அவரை கனிவோடு தூக்கி நிறுத்திய தியாகராஜ ஸ்வாமிகள், பரவ கருணையுடன், அவருக்கு ஸ்ரீ ராம தாரக மந்திரத்தை உபதேசம் செய்தார் .
வழக்கப்படி சங்கீதம் பாடம் தொடங்கியது. வேங்கட்ரமண பாகவதர் தியா கராஜ சுவாமிகள், சொல்லித்தரும் சங்கீதத்தை உணர்ந்து தெளிவாகப் பாடி, அப்பியாசம் செய்வதையும் சுவாமிகள் அறிந்து கொண்டார்.
குருவையோ,தெய்வத்தையோ,குழந்தையையோ பார்க்கச் செல்லுகின்ற பொழுது, வெறும் கையோடு போகக்கூடாது என்பதும் ஒரு சாஸ்திரம். வேத, புரோகித, பௌராணிக குடும்பத்தில் வந்த வேங்கடரமணருக்கு இந்த விஷயங்கள் அத்துபடி என்பதால், எப்பொழுது குருவைச் சந்திக்க சென்றாலும், காய்கனிகள், பழங்கள்,நெய்,பால் ,சர்க்கரை முதலிய பட்சணங்கள் என்று பலவற்றையும் எடுத்துச் செல்வார். குருவுக்குச் சமர்ப்பிப்பார். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளும் உடனே அதை பகவதர்ப்பணம் செய்து, எல்லோருக்கும் விநியோகிப்பார்.
ஒரு நாள் ஒரு கூடை நிறைய பல விதமான புஷ்பங்களை நிரப்பி, மேலே நிறைய துளசி தளங்களைப் பரப்பி வைத்து, குருவிடம் சமர்ப்பித்தார். அப்பொழுது தியாகராஜர் ராமருக்கு பூஜை செய்து கொண்டி ருந்தார். நறுமண மலர்களாலும் துளசியாலும் நிரம்பிய பூக்கூடையைக் கண்டவுடன் தியாகராஜ ஸ்வாமிகளுக்கு ஆனந்தம் மேலிட்டது. தன்னுடைய கைகளால், மேலே இருந்த துளசியை எடுத்து, ராமபிரானின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்ற பொழுது மாயமாளவகௌளை ராகத்தில் பிறந்தது அற்புதமான கீர்த்தனை.
துளசி தள முலசி சந்தோஷமுக –பூஜிந்து(துளசி)
“ராமா, இன்றைக்கு என் மனம் எத்தனை சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? உன் பூஜா வேளையில், உனக்கு மிகவும் பிடித்த, இந்தத் துளசி தளங்களாலே பூஜை செய்யும் பொழுது எத்தனை சந்தோஷம் தெரியுமா? என் வாழ்நாள் எல்லாம் இதைச் செய்வதில் தானே எனக்கு மகிழ்ச்சி, சந்தோஷம்?
இதைச் சுவாமிகள் வேறு கீர்த்தனையிலும் பாடி இருக்கிறார் .தஞ்சாவூர் ராஜா, அவருக்கு நிறைய ஐஸ்வர்யங்களைக் கொடுத்தபொழுது,” இந்த ஐஸ்வர்யங்கள் எனக்கு சுகம் அல்ல. ராமா உன் சன்னதியில் சேவை செய்து பூஜிக்கின்ற சுகம் தான் சுகம் ” ((நிதி சால சுகமா) என்று சொன்னவர் தியாகராஜ ஸ்வாமிகள்.
“துளசி தள” என்ற அற்புதமான கீர்த்தனையை இன்றைக்கும் சங்கீத வித் வான்கள் உருகி உருகிப் பாடுவார்கள். அந்த கீர்த்தனை பிறப்பதற்கு காரணமாக அமைந்தது வேங்கடரமணரின் குரு பக்தி.
இந்தக் கீர்த்தனையில் ஒரு விசேஷம் உண்டு . சரணம் இப்படி வரும்.
ஸரஸிருக ,புன்னாக, சண்பக, பாடல குருவக,
கரவீர, மல்லிகா, சுகந்த ராஜசுமமுல
தர நீவி ஒக பர்யாயமு தர்மாத்முனி சாகேதபுர வாஸுநி
ஸ்ரீராமமுனி வர தியாகராஜ நுதனி (துளசி).
ஸ்ரீ தியாகராஜர் கண்ணை மூடிக்கொண்டு வெவ்வேறு புஷ்பங்களின் பெயரைச் சொல்லி, ராமருக்கு சமர்ப்பணம் செய்வார் .அவர் என்ன புஷ்பத்தைச் சொன்னாரோ அந்த புஷ்பம் கூடையில் கை வைக்கும் போது கைக்கு வரும். இதை தியாகராஜரே உணர்ந்து கொண்டு ஸ்ரீ வேங்கடாரமண பாகவதரிடம், ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருப்பதைத் தெரிந்து கொண்டு, அவரை அழைத்தார்.
“என்னிடம் சங்கீதம் பயில உனக்கு விருப்பமா?” என்று கேட்டார்.
ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் சாஷ்டாங்கமாக கண்ணீர் விட்டு, அவர் காலில் விழுந்தார்.
“அதற்காகத்தானே குருவே, இத்தனை நாள் காத்திருந்தேன்” என்றார்.
இதற்கு முன் அவர் பாடம் கேட்டாலும், நேரடியாக தியாகராஜ ஸ்வாமிகள் அவருக்குக் கற்றுத் தரவில்லை. இந்த துளசி தள கீர்த்தனை அப்படிப் பட்ட ஒரு குரு சிஷ்ய பிடிப்பைப் பெற்றுத் தந்தது.
இன்னும் இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். சுமார் 26 ஆண்டுகள் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் பிரதம சீடராக விளங்கினார் வேங்கட்ரமண பாகவதர் அவருடைய பல கீர்த்தனை களை ஏடுபடுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் மகள் திருமணத்திற்காக, ஒரு அற்புதமான ஸ்ரீராமரின் படத்தை, தன்னுடைய தலையில் எழுந்தருளச் செய்து கொண்டு கல்யாண பந்தலுக்கு வேங்கட்ரமண பாகவதர் வேக வேகமாக வந்த பொழுது .ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் வேங்கடரமண பாகவதரைப் பார்க்கவில்லை. அவர் தலைமேல் சீதனமாக கொண்டு வந்த ஸ்ரீராமர் படத்தையும் பார்க்கவில்லை.
தன்னுடைய மகளின் திருமணத்திற்கு சாட்சாத் ஸ்ரீ ராமபிரானே தன்னுடைய பத்தினி சீதாதேவியுடனும் லட்சுமணனுடனும்,இளவலுடனும், மாருதியுடனும் எழுந்தருளியது போலவே உணர்ந்தார். தன்னுடைய சுற்றுப்புறத்தை மறந்தார். அவருடைய குரல் தழுதழுத்தது. கண்களில் கண்ணீர் பெருகியது. தன்னுடைய மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஓடி வந்து நமஸ்கரித்துப் பாடினார்.
அப்பொழுது அவர் பாடிய பாடல் தான் மோகன ராகத்தில் அமைந்த” நநு பாலிம்ப நடஸிவ சிதிவோ“
“ஓ ராமா, என் மீது உனக்கு எத்தனை கருணை? என்னை ஆட்கொள் வதற்காக இப்படி நீண்ட தூரம்நடந்து வந்தாயோ” என்பது பல்லவியின் பொருள்.
வேங்கட்ரமண பாகவதரின் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி களின் பல கீர்த்தனைகளோடு இணைந்திருப்பதை இன்னொரு சந்தர்ப் பத்தில் நாம் பார்க்கலாம்.
பல ஆண்டு காலம் சுவாமிகள் திருமணம் செய்து கொள்ளவில்லை. 49 வது வயதில் ஸ்ரீ முத்துலட்சுமி அம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்
அதற்குள் ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினார் .அவருடைய குரு பக்தியும் கிருஷ்ண பக்தியும் அதி அற்புதமானது .சாரீரமும் சங்கீத ஞானமும் யாருக்கும் வாய்க்காதது.
அவர் புன்னாக வராளி பாடினால், பல நேரங்களில் நீண்ட நாகங்கள் வந்து நிற்கும். அமிர்தவர்ஷினி பாடினால், எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து மழையைப் பொழியும். தோடி பாடினால் நாடி நரம்புகள் அதிர்வுகள் அடங்கி நளினமாக நிற்கும். மோகனம் பாடினால், உள்ளத்தில் உற்சாகம் பிறக்கும். முகாரி பாடினால், உள்ளத்தின் விகாரங்கள் ஒழிந்து கண்களில் நீர் மல்கும் கைகள் தானாகக் கூப்பும். கரகரப்பிரியா பாடினால் புற உலகின் ஓசைகள் அடங்கி, மனம் மகேசனிடம் லயப்படும் சிந்து பைரவியில் சந்தங்கள் பெருகி, மனம் கண்ணனை சொந்தம் கொள்ளத் துள்ளும். பைரவி பாடும் போது மனம் உருகி உருகி மாசுகள் அகலும்.
அவர் தறியில் அமர்ந்து நெய்கின்ற பொழுது தன்னை மறந்து பாடுவார். பட்டு நெசவு செய்கின்ற பொழுது, பக்கத்திலே நாடாவை எடுத்துக் கொடுக்க சிறு பிள்ளைகள் அமர்ந்து உதவுவார்கள். சில நேரங்களில் அந்த கண்ணனே அமர்ந்து இவருக்கு நாடாவை எடுத்து கொடுத்த சந்தர்ப்பங் களும் உண்டு.
சம்சாரியாகி, பின்னால் அய்யம்பேட்டையிலிருந்து, வாலாஜாபேட்டைக்கு இடம் பெயர்ந்தார் அங்கேயும் ஒரு மடத்தை நிறுவி, பஜனைகள் பாடி, மற்றவர்களுக்கும் சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். (இப்போதும் அந்த மடம் உண்டு).
தமது குரு தியாகராஜரைப் போற்றி, ஸ்ரீ குரு ஸ்தோத்திர அஷ்டகம், குரு ஸ்தோத்திர பஞ்சரத்னம், ஸீஸ பத்யம், ஸ்ரீ குரு மங்களாஷ்டகம் முதலியவைகளை இயற்றி இருக்கிறார் .
ஸ்ரீ தியாகராஜ சம்பிரதாய உற்சவ காலங்களில் ஸ்ரீ வேங்கட்ரமணர் வட மொழியில் பாடி அருளிய ஸ்ரீ குரு மங்களாஷ்டகம் பாடி முடிப்பதுண்டு.
ஸ்ரீ வேங்கட்ரமண பாகவதர் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ், சௌராஷ் டிரம் முதலிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். தமது இஷ்ட தெய் வமாகிய ஸ்ரீ கிருஷ்ணன் பேரில் ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார் .
நாம நாராயணி ,ஜோதிஸ்வரூபிணி, நடன வேளாவளி, விஜய நாகரி போன்ற அபூர்வ ராகங்களில் கீர்த்தனைகளை இயற்றி இருக்கின்றார்.
அய்யம்பேட்டையில் அவருடைய ஆராதனை விழா ஒவ்வொரு வருடமும் சங்கீத மகாலில் நடைபெறுகிறது.பல புகழ் பெற்ற வித்துவான்கள் வந்து பாடி இசையஞ்சலி செலுத்துகிறார்ககள். அதைப் போலவே வாலாஜா பேட்டையிலும் கும்பகோணத்திலும் மதுரையிலும் சென்னையிலும் இந்த விழாக்கள், வெவ்வேறு தினங்களில் நடைபெறுகின்றன. மத்திய அரசு 2009ல் இவர் நினைவைப் போற்றும் வண்ணம் அஞ்சல் தலையை வெளி யிட்டிருக்கிறது.
இந்த ஆண்டு அய்யம்பேட்டை வேங்கட பாகவதரின் பெருமையை போற்றும் வண்ணம் ஒரு பாடசாலையை நிறுவி அதன் திறப்பு விழா அவருடைய ஜெயந்தி நாளில் நடைபெற இருக்கின்றது. சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் நினைவுக்கு வரும் போது,அவருடைய பிரதான சிஷ்யரான ஸ்ரீ வேங்கடரமண பாகவதரும் நினைவுக்கு வருவார்.

கட்டுரை ஆசிரியர் சில ஆண்டுகள், ஆலய தரிசனம் டிரஸ்ட் மூலமாக வாலாஜாபேட்டையில் வேங்கடரமண ஜெயந்தி விழாவை நடத்தியவர். இரண்டு வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி உற்சவத்தில், மகாகவி பாரதியாரின் பேரன் சங்கீத வித்வான் ராஜ்குமார் பாரதியின் கைகளால் விருது பெற்றவர் .அய்யம்பேட்டை, சென்னை, மதுரை முதலிய இடங்களில் நடைபெறும் ஸ்ரீ வேங்கடரமண பாகவதரின் விழாவில் அவரு டைய கீர்த்தனைகளைப் பாடி வருபவர். வேங்கடரமண பாகவதர் கீர்த்தனைகளை, சென்னை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர் சங்கீத சமாஜத்துக்காக ஒலித்தகடுகளாகவும் பாடி இருக்கிறார்.
