ஆகம விதிகள் குறித்து மறுபடியும் சர்ச்சை எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது ஆகம கோயில்களுக்குப் பொருந்தாது என்றும் சொல்கிறார்கள். இது குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப் படி, கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது பற்றி, இந்து சமய அறநிலையத் துறை பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நெல்லையில் (7.3.23) (இடம்: PPL திருமண மண்டபம், வஉசி மைதானம் அருகில், பாளையங்கோட்டை)நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், சைவ அடியார்கள், வைணவ அடியார்கள், சைவ அமைப்புகள், வைணவ அமைப்புகள், இந்து அமைப்புகள் கலந்து கொள்ளலாம் .
இந்தச் சர்ச்சையின் அடிப்படை என்ன?
தமிழில் குடமுழுக்கு நடத்துவது, தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்துவது, தமிழில் மட்டுமே எல்லா பூஜைகளையும் செய்வது என்று ஒரு பக்க வாதம்.
இன்னொரு பக்கத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் கோயில்களில்,, இதுவரை வந்த வழிபாட்டு முறையை நீடிக்க வேண்டும்.. வேத மந்திரங்கள் உச்சரித்துத் தான் குடமுழுக்கு முதலிய சடங்குகளை நடத்த வேண்டும். அதே நேரத்தில் தமிழ் மொழியும் ஏற்கனவே இருந்தவாறு இருக்க வேண்டும். இந்த மாற்றங்களை நம்முடைய இஷ்டத்துக்கு நாம் மாற்றிக் கொள்ளக் கூடாது என்று ஒரு சாரார் வாதிக்கிறார்கள்.
இரண்டு பக்கமும் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டால் தான் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். வடமொழி மந்திரங்களை நீக்கிவிட்டு முழுக்க முழுக்க தமிழ் மொழி மந்திரங்களால் மட்டுமே எல்லா சடங்குகளையும் ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்களில் நடத்தக் கூடாது என்று சொல்பவர்கள் கூறும் காரணங்களை இப்போது பார்ப்போம்.
- தமிழகத்தில் உள்ள சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் மற்றும் உள்ள ஆலயங்கள் அனைத்தும் சிவாகமங்களின்படியும், வைணவ ஆகமங்களின்படியும் அமைக்கப்பட்டவையே.
- ஆகமங்கள், வடமொழியில் அமைந்தவை. அவற்றில், அந்தந்த வட்டார மொழியில் பிரார்த்தனை செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஆனால், கோயில்களில் அன்றாட வழிபாடுகள், சிறப்பு வழிபாடுகள், திருவிழாக்கள் போன்றவை ஆகமங்களின்படியே செய்யப்பட வேண்டும்.
- ஆகம விதிகளின்படி கோயில்களைக் கட்டிய மன்னர்கள், அவ்விதிகளின்படியே தான் கோயில்களில் திருவிழாக்களையும் நடத்தியுள்ளனர் என்பதற்கு ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இலக்கியங்களும் சான்றுகளாக உள்ளன.
- இன்னும் பன்னிரு திருமுறைகளிலும் சித்தாந்த சாத்திரங்களிலும், நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும், வைணவ இலக்கியங்களிலும் இதற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.
- ஒரு கோயில் எந்த முறையில் நிறுவப்பட்டுள்ளதோ அந்த முறையில்தான் பூசைகள் செய்யப்பட வேண்டும் என்று ஆகம விதிகள் தெளிவாகக் கூறுகின்றன.
- மத வழிபாட்டுச் சட்டம் 1991 –ன்படி, 1947, ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பு கோயில்களில் என்ன வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டனவோ அவையே பின்பற்றப்பட வேண்டும். அவற்றில் மாற்றம் செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை. கோயிலின் ஆகமம் தெரியாவிட்டாலும் இந்த விதி பின்பற்றப்பட வேண்டும்.
- கோயில் நுழைவுச் சட்டம் – 1947 – விதி 9 ன் படி – ஒரு கோயிலின் பழக்க வழக்கங்களை கூட்டவோ குறைக்கவோ கூடாது.
- கோயில் வழிபாட்டு முறைகளை மாற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.
- இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 28ன்படி –ஒரு கோயிலின் தொன்மையான பழக்க வழக்கங்களின்படியே அக்கோயிலை அறங்காவலர் நிர்வகிக்க வேண்டும்.
- இந்து சமய அறநிலையத் துறை சட்டப் பிரிவு 105 அ ன்படி – கோயில்களில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்ட பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கு, இந்து சமய அறநிலையத் துறை சட்டமே பொருந்தாது. அதாவது இந்து சமய அறநிலையத் துறையால் கோயில்களின் பழக்க வழக்கங்களை மாற்ற முடியாது.
- இந்து சமய அறநிலையத் துறை சட்டப் பிரிவு 23 – ஆணையருக்கான அதிகாரங்களைச் சொல்லும் பிரிவு – அதன்படி, கோயில்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்தத் தேவைகள், வழிபாடுகள் முறையாக நடக்கின்றனவா என்பதைக் கண்காணிப்பது மட்டுமே அறநிலையத் துறை ஆணையரின் பணி. அதைத் தாண்டி கோயில்களின் பழக்க வழக்கங்கள், சடங்குகள், வழிபாட்டு நடைமுறைகளில் தலையிட அவருக்கு அதிகாரம் இல்லை. அதேபோல், பிரிவு 28ன் படி – அறங்காவலருக்கும் அவற்றை மாற்ற அதிகாரம் இல்லை.
- 1972 – சேஷம்மாள் வழக்கு, 2016 – அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது தொடர்பான அரசாணையை எதிர்த்து ஆதிசைவர்கள் தொடுத்த வழக்கு, 2021 – டிஆர் ரமேஷ் தொடுத்த வழக்கு உள்ளிட்ட வழக்குகளில், கோயில்களில் ஆகமப்படியே வழிபாடுகள் நடக்க வேண்டும்; கோயில்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தனவோ (ஆகமம்) அந்தப் பிரிவைச் சேர்ந்த அர்ச்சகர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும்; அர்ச்சகர் நியமனம் ஆகமப்படியே நடக்க வேண்டும்; கோயில் பணியிடங்களை நிரப்புவதற்கு அறங்காவலர் மற்றும் தக்காருக்கே உரிமை உள்ளது; இந்து சமய அறநிலையத் துறைக்கு அந்த உரிமை இல்லை என்று தெளிவாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
- இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் நோக்கமே, கோயில்களின் பழக்க வழக்கங்கள், வழிபாடுகள், சடங்குகள், நியமனங்கள் உள்ளிட்ட எவற்றையும் மாற்றக் கூடாது என்பதுதான்.
- தஞ்சை பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகியவற்றிற்கு – தி கிரேட் லிவிங் சோழாஸ் டெம்பிள்ஸ் – என்ற அடைமொழியுடன் உலக பாரம்பரி்யச் சின்னம் என்ற அந்தஸ்தை யுனெஸ்கோ கொடுத்துள்ளது. அதேபோல், ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு – கல்ச்சுரல் ெஹரிடேஜ் கன்சர்வேஷன் – என்று கூறி உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்து கொடுத்துள்ளது. இந்தக் கோயில்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வழிபாட்டு முறையும், (Traditional Practices) பாதுகாப்பு முறையும் பின்பற்றப்படுவதையும் கருத்தில் கொண்டே யுனெஸ்கோ அந்த விருதை அளித்துள்ளது. கோயில்களைப் பாதுாக்கும் முறைகளைப் பற்றி வடமொழி ஆகமங்கள் தான் கூறுகின்றன. நாளை தமிழில் வழிபாடுகள் திணிக்கப்பட்டால், இந்த பாரம்பரியம் என்ற அந்தஸ்து தானே நீங்கிவிடும் அபாயமும் உள்ளது. இதை இந்து சமய அறநிலையத் துறை கருத்தில் கொள்ள வேண்டும்.
- ஆகமங்கள் அனைத்தும் வடமொழியில் தான் உள்ளன. 28 சிவாகமங்களும், உப ஆகமங்களும், இரு வைணவ ஆகமங்களும் முழுமையாகக் கிடைத்திருக்கின்றன. அவற்றின் ஓலைச் சுவடிகள், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பிரெஞ்சு மொழியில் விரிவாக வெளியாகியிருக்கின்றன. இன்னும் பல ஆகமச் சுவடிகள் காஷ்மீரிலும், நேபாளத்திலும் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி தமிழக அரசு இதுவரை எவ்வித அக்கறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- ஆகமங்கள் தொடர்பான ஆய்வுகள் தமிழில் இதுவரை நடக்கவே இல்லை.
- ஆகமங்களில் உள்ள தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பற்றி ஆய்வுகளே நடக்கவில்லை.
- சைவ ஆகமங்களில், விழாக்களின் போது, திராவிட வேதம் பாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. திராவிட வேதம் என்பது பன்னிரு திருமுறைகள் தான். அப்படியானால் ஆகமங்கள் தமிழுக்கு எதிரானவை என்று எப்படி சொல்ல முடியும்?
- ஆகமங்களில் தான் கோயில்கள் கட்டுவதில் நிலம் தேர்வு செய்வதில் தொடங்கி, கும்பாபிேஷகம், அன்றாட வழிபாடுகள் பற்றி அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- மேலும் ஆகமங்களை இறைவன் வாக்காக சைவர்கள், வைணவர்கள் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை.
- தமிழில் ஆகமங்களோ மந்திரங்களோ இல்லை. இருப்பதாக சொல்வோர் அனைத்தும் பன்னிரு திருமுறைகளைத்தான் சொல்கின்றனர். ஆனால் அவற்றில் குறிப்பிடப்பட்ட ஆகமங்கள் எவை என்பதற்கு அவர்களிடம் விடை இல்லை.
- ஏற்கனவே உள்ள கோயில்களில் பன்னிரு திருமுறைகளை கிரியைகளுக்கான அதாவது சடங்குகளுக்கான மொழியாக பயன்படுத்தக் கூடாது; புதிதாகக் கட்டப்படும் கோயில்களில் வேண்டுமானால் அவ்வாறு செய்து கொள்ளலாம் என்று 2007 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21, 22 தேதிகளில் தருமையாதீனத்தில் நடந்த ஆகமக் கருத்தரங்க ஆலோசனைக் கூட்டத்தில், முடிவெடுக்கப்பட்டது. அதன் தீர்மானத்தில், இன்றைய ஆகம அறிஞர் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் சத்தியவேல் முருகனும் கையெழுத்திட்டுள்ளார். அதில் அனைத்து சைவ ஆதீனகர்த்தர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
- ஆனால், குருபக்தி, சிவபக்தி என எல்லாவற்றையும் கைகழுவி விட்ட சத்தியவேல்முருகன், இன்று தாம் கையெழுத்திட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
- அவர் ஆகம அறிஞரும் அல்ல; சைவரும் அல்ல; அவரை இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழுவில் இடம் பெறச் செய்தது, சைவ சமயத்தின் மாண்பையும் தொன்மையையும் அழிக்க நடக்கும் முயற்சியாக நாங்கள் கருதுகிறோம்.
- அதேபோல், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுக்கிறார். ஆன்மீகச் சொற்பொழிவு செய்வதுதான் தகுதி என்றால் தமிழகத்தில் உள்ள எத்தனையோ ஆன்மீகச் சொற்பொழிவாளர்களை இந்து சமய அறநிலையத் துறை தனது ஆலோசனைக் குழுவில் சேர்த்திருக்கலாம். சுகி சிவம் ஆகம வல்லுநரா? அவர் எந்தெந்த ஆகமங்களில் பயிற்சி பெற்றிருக்கிறார்? ஆகமங்களில் பயிற்சி பெற்றதற்கான சான்றுகள் வைத்துள்ளாரா? இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழுவில் இடம் பெற தமிழ் மொழி மீதான பற்று ஒன்றே போதும் என்றால், அவர் இருக்க வேண்டிய இடம் தமிழ் மொழிப் பாதுகாப்புத் துறை மட்டும் தான். அதனால் அவருக்கும் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று கருத்து சொல்ல எவ்விதத் தகுதியும் இல்லை என்று அடியார்களாகிய நாங்கள் கருதுகிறோம்.
- ஆதிசைவ சிவாச்சாரியாரால் தோற்றுவிக்கப்பட்ட பாரம்பரியம் மிக்க, தொன்மை வாய்ந்த குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், தனது பாரம்பரியத்திற்கு எதிராகவே கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிப்பதாகும். மதிப்பிற்குரிய அடிகளார் அவர்களும் ஆகமங்களில் வல்லுநர் அல்லர்; அவரும் எந்தெந்த ஆகமங்களில் பயிற்சி பெற்றார் என்பதற்கான சான்றுகள் கொடுக்கப்படவில்லை. அதனால் அவரும் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று கருத்து சொல்வதற்கான உரிமையை இழந்து விடுகிறார் என்று நாங்கள் கருதுகிறோம்.
- வீரசைவ ஆதீனம் என்று தங்களை அறிவித்துக் கொள்ளும் மருதாசல அடிகளாருக்கு சிவாலயங்கள் தொடர்பான எந்த ஒரு விஷயத்திலும் வழிகாட்டவோ, அறிவுறுத்தல்கள் சொல்லவோ தார்மீக ரீதியாக உரிமை இல்லை. ஏனெனில் அவர் சார்ந்த தத்துவப் பிரிவு, கோயில்களை இரண்டாம் பட்சமாகவே கருதுகிறது. கோயில்களின் நடைமுறைகளில் நுழைந்து கருத்து சொல்ல அவருக்கு அடிப்படையாகவே உரிமை இல்லை. அதனால் அவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று கருத்து சொல்வதற்கான உரிமையை இழந்து விடுகிறார் என்று நாங்கள் கருதுகிறோம்.
- சட்டப்படி, தார்மீகப்படி இந்து சமய அறநிலையத் துறை தனது ஆலோசனைக் குழுவில், ஆகமங்கள் கற்றறிந்த சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்களை நியமித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் பொதுவான இந்துக்களை நியமித்திருப்பது சட்ட விரோதமானது.
- அதேநேரம் திருப்பணிக் கமிட்டியில் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் சிலர் இடம் பெற்றுள்ளனர். எப்போதும் கோயில்களில் நடக்கும் திருப்பணிகள் ஆகம விரோதமா இல்லையா என்பதற்கு இவர்கள் தான் சான்றளிக்க வேண்டும். இவர்களோ வடமொழி ஆகமங்களில் வல்லுநர்கள். தமிழில் ஆகமங்களே இல்லை. அப்படியானால் இந்து சமய அறநிலையத் துறை, கோயில் வழிபாட்டை அரசியலாக்குகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.
- 19115 / 2020 என்ற வழக்கு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நடந்த வழக்கு. நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு, அந்த வழக்கில் 19 – 08 – 2021 ம் தேதி அன்று விரிவான தீர்ப்பளித்துள்ளது.
- தீர்ப்பில், தமிழின் தொன்மை, பெருமைகளை விளக்கிய நீதிபதிகள், கோயில்களில் திருமுறைகள், ஆழ்வார்களின் பாடல்கள் பாடப்பட்டதை சுட்டிக் காட்டுகின்றனவே அன்றி, அவற்றை சடங்குகளின் மொழியாக பயன்படுத்தியதாக எங்கும் சொல்லவில்லை.
- தீர்ப்பின் இறுதியில் முக்கியமான 2 உத்தரவுகளை வெளியிட்டுள்ளனர். அந்த உத்தரவுகள் பொதுவெளியில் திரித்து சொல்லப்பட்டு வருகின்றன.
- தீர்ப்பின் 15வது பாயின்ட்டில், Therefore a direction is necessary, to recite Tamil hymns/verses and Thirumurais during Kudamuzhuku primarily, alongwith Sanskrit/vedas during kudamuzuku. என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். அதாவது, குடமுழுக்கின் போது வடமொழியோடு, தமிழ்ப் பாடல்களையும் பயன்படுத்துவது குறித்து ஒரு வழிகாட்டல் அவசியம் தேவைப்படுகிறது – என்று கூறியுள்ளனர்.
- தீர்ப்பின் 16வது பாயின்ட்டில், நாயன்மார்கள், பட்டினத்தார், அருணகிரிநாதர், சித்தர்கள் மற்றும் ஆழ்வார்கள் பாடல்களில் தேர்ச்சி பெற்ற வல்லுநர் குழுவை அரசு அமைக்க வேண்டும். அக்குழுவினர், கோயில்களின் (கட்டுமானம், வழிபாடுகள் ஆகியவற்றில்) வல்லுநர்கள், தொடர்புடையவர்கள் ஆகியோரோடு ஆலோசனை மேற்கொண்டு, அரசிடம் ஓர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – என்று கூறியுள்ளனர்.
- தீர்ப்பின் 17 வது பாயின்ட்டில், தீர்ப்பு வெளியான நாளில் இருந்து இனிமேல் நடக்க உள்ள கும்பாபிேஷகங்களில் வடமொழியோடு தமிழையும் சேர்த்து பயன்படுத்துவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும். இதற்கான ஆலோசனைக் குழுவை (16வது பாயின்ட்) காலந்தோறும் மாற்றி அமைத்துக் கொண்டு, தேவைப்பட்டால் கூடுதல் தமிழ்ப் பாடல்களையும் மற்ற மந்திரங்களோடு சேர்த்துக் கொண்டு கும்பாபிேஷகம் நடத்தலாம் – என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.
- தீர்ப்பின் எந்தப் பகுதியிலும், கோயில்களில் எந்த மொழியில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது குறித்து, பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் சொல்லவே இல்லை.
- கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கோயில்களில் வழிபாடுகள் எந்த மொழியில் நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிப்பதில் தனது செல்வாக்கை செலுத்தி மத விவகாரங்களில் இந்து சமய அறநிலையத் துறை நுழையப் பார்க்கிறது என அடியார்களாகிய நாங்கள் கருதுகிறோம். மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அந்துலே தொடர்பான வழக்கில், 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின்படி, இந்து சமய அறநிலையத் துறையின் இந்த கருத்துக் கேட்புக் கூட்ட நடவடிக்கையே சட்ட விரோதமானது. அதனால், இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும், இந்துக் கோயில்களின் தொன்மையான நடவடிக்கைகளையோ, வழிபாடுகளையோ கட்டுப்படுத்தாது என்றும் அடியார்களாகிய நாங்கள் கருதுகிறோம்.
- அரசியல்சாசனம் இந்துக்களுக்கு அளித்த உரிமையின்படியும், இந்து சமய அறநிலையத் துறை தனது ஊழியர்களுக்கு வரையறுத்த ஆணையின்படியும், ஏற்கனவே வெளியான நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்களில் வடமொழியே கிரியை மொழியாக அதாவது சடங்கு மொழியாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும்; ஆகமங்களில் உத்தரவிட்டபடி தேவைப்படும் இடங்களில் நாயன்மார்கள், ஆழ்வார்களின் மிக உயர்ந்தத் தமிழ்ப் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதே எங்களின் நிறைவான, முடிவான கருத்து.
- இந்தக் கருத்தையே எங்கள் ஆசாரியர்களாகிய தருமையாதீன குருமகா சந்நிதானம், திருவாவடுதுறை குருமகா சந்நிதானம், திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள், பெருங்குளம் செங்கோல் ஆதீன குருமகா சந்நிதானம், வேளாக்குறிச்சி குருமகா சந்நிதானம், கூனம்பட்டி மாணிக்கவாசகர் மடாலய குருமகா சந்நிதானம், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன குருமகா சந்நிதானம் உள்ளிட்ட அனைத்து குருமகா சந்நிதானங்களும் தெரிவித்துள்ளனர் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பதிவைத் தயாரிக்க உதவிய RRamesh Tr மற்றும் என் ஆத்மார்த்த நண்பர், ஆவணங்கள் கொடுத்து உதவிய நண்பர்கள் ஆகியோருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
இது குறித்து சில விளக்கங்கள் இருக்கலாம்.மாற்றுக்கருத்துக்களும் இருக்கலாம்.அவை குறித்தும் விவாதிப்போம்.