
சாஸ்திரங்களிலும் சகுன சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது.நாம் பெரும்பாலும் இந்த சகுன சாஸ்திரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது.நாம் ஜாதகங்களைப் பார்க்கிறோம் அதில் ஏதாவது தவறு இருக்கிறதா தோஷம் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்கின்றோம்.
ஆனால் அந்த ஜாதகத்தில் சின்னச்சின்ன குறைகள் நேரம் போன்றவை கணிப்பதில் நேர்ந்து விடுகின்ற பொழுது பலன்கள் சரிவர நடப்பதில்லை. அதனால்தான் அக்காலத்தில் சகுன சாஸ்திரத்தை மிக முக்கியமாக பின் பற்றினார்கள்.
ராமாயணத்தில் சீதைக்கும் இராமனுக்கும் திருமணம் முடிந்தது. மகிழ்ச்சியோடு தசரதன் ஊருக்கு புறப்படுகின்றான்.அப்பொழுது சில வேண்டத்தகாத சகுனங்கள் ஏற்பட்டதாக வான்மீகி ரிஷி குறிப்பிடுகின்றார். தசரதன்தேரில் ஏற வெளியே வந்தவுடன் காக்கை முதலிய பட்சிகள் கடுமையாக கத்தின.மிருகங்கள் பிரதட்சிணமாக சென்றன.இனம்புரியாத ஒரு நடுக்கம் தசரதனுக்கு ஏற்பட்டது. அவர் வசிஷ்டரிடம் கேட்கின்றார்.
மகரிஷியே! பட்சிகள் எல்லாம் கத்துகின்றன. மிருகங்களோ அப்பிரதட்சணமாகச் செல்கின்றன. என்னுடைய உடம்பு நடுங்குகிறது. மனதில் கவலை குடிகொண்டிருக்கிறது. இதன் காரணம் என்ன?
சகுன சாஸ்திரத்தில் நன்கு தேர்ந்த வசிஸ்டர் மன்னா இந்த சகுனங்கள் சமீபத்தில் நமக்கு ஒரு ஆபத்து நேரும் என்பதைத் தெரிவிக்கின்றன. ஆனால் அது நிவர்த்தி ஆகிவிடும் என்பதை மிருகங்கள் குறிப்பிடுகின்றன. ஆகையினால் நீங்கள் கவலைப்பட நியாயமில்லை.
இப்படி அவர்கள் பேசிக் கொண்டு இருக்கின்ற பொழுது பெரும் காற்று கிளம்பி பூமியை நடுங்கச் செய்கிறது. பெரிய மரங்கள் முறிந்து விழுந்தன. திடீரென்று சூரியனை இருள் மூடியது. சகல வஸ்துக்களும் புழுதியால் மறைந்தன.அப்பொழுது கோபமாக பரசுராமர் தோன்றினார் என்று வருகின்றது.
சகுனங்களை முறையாக பார்த்துப் பலன் சொல்வதற்கு என்று அப்பொழுதெல்லாம் ராஜ சபையிலே நிமித்தகர் என்று சிலரை நியமித்திருந்தார்கள் .
சகுனம் என்பது வெறும் மூட நம்பிக்கை என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் நம்முடைய முன்னோர்கள் இதனை மிகவும் ஆராய்ந்து பார்த்து சில விஷயங்களைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
முக்கியமாக பூனை குறுக்கே போனால் சகுனத் தடை என்கிறோம்.
இது பூனைக்கு மட்டும்தான். அதே சமயத்தில் குதிரையோ நாயோ குறுக்கே போனால் அது தடை அல்ல. நம் முன்னோர்கள் இதையெல்லாம் அனுபவத்தில் தொகுத்து, பின்னால் வருபவர்கள் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு வாழ வேண்டும் என்பதற்காகச் சொல்லியிருக்கின்றார்கள்.
இந்த சகுனத்தில் நல்ல பலன்களும் உண்டு. தீய பலன்களும் உண்டு. நல்ல பலன்களாக இருந்தால் உடனே நாம் காரியத்தைத் தொடரலாம். தீயபலன்களாக இருந்தால் நாம் தெய்வ சன்னதிக்குச் சென்று விளக்கேற்றி வைத்து சற்று தாமதித்தோ அல்லது நிதானித்தோ அந்த காரியத்தைச் செய்யலாம்.
உதாரணமாக கருடதரிசனம் மிகவும் நல்லது. வியாழக் கழமைகளில் கருட தரிசனம் செய்வதற்கென்றே ஊர்களிலே பலபேர் இருக்கின்றார்கள் .ஆனால் அந்த கருடன் வலமிருந்து இடது பக்கமாக பறந்துபோனால் அது அவ்வளவு நல்ல சகுனம் அல்ல.அதைப்போலவே இரட்டை வால் கருங்குருவி, கழுகு,ஆந்தை,காக்கை ஆகிய பறவைகளிடம் இடம் இருந்து வலது பக்கம் வரக்கூடாது.ஆனால் கோழி, நாரை, கொக்கு இவை இடமிருந்து வலம் போவது நல்ல சகுனம்.
நாம் ஒரு காரியத்துக்கு புறப்படும்போது குரங்கு வலது பக்கம் வந்தால் அது காரியத்தடை.பாம்பு குறுக்கே வந்தால் அதுவும் சகுனத் தடை.
நான் செல்லும் பொழுது எதிரே பொரி, அரிசி, கரும்பு இவைகளை யாராவது எடுத்துக்கொண்டு வந்தால், அது நல்ல சகுனம். செல்லும் காரியத்தில் ஆதாயமும் நன்மையும் வரும். அதைப்போலவே மாமிசம், தயிர், தேன் பழங்கள், அன்னம், தண்ணீர் குடம் இவைகளெல்லாம் தென்பட்டால் நல்ல சகுனம்.
தீப்பந்தம் அல்லது தீச்சட்டி ஏந்தி வருதல் இவையெல்லாம் நல்ல சகுனம்.
வாத்திய கோஷ்டி, புஷ்பங்கள், திருமண ஊர்வலம், யானை, குதிரை, பசு பார்ப்பது நல்ல சகுனம்.
அதைப்போலவே பரட்டை தலையுடன் வருபவர்கள், எண்ணெய் தலையுடன் வருபவர்கள், நோயாளிகள், தனி அந்தணன், பொற்கொல்லன், வேஷம் கட்டி வருபவர்கள் இவர்கள் எல்லாம் எதிரே வந்தால் அது சில காரிய தடைகளை ஏற்படுத்தும். அதனால் ஒரு பயனும் இல்லை, உடனடியாக அந்த காரியத்தை செய்யாமல் சற்று பொருத்து நிதானமாக அந்த காரியத்தைச் செய்ய வேண்டும்
ஈர ஆடையுடன் வருபவர்கள் உப்பு விற்பவர்கள் அல்லது பாத்திரத்தில் கொண்டு வருபவர்கள் அத்தனை நல்ல சகுனங்கள் அல்ல.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு காரியத்துக்காக புறப்படுகிறோம். எழுந்திருக்கும் பொழுது திடீரென்று கட்டியிருக்கிற வேட்டி அவிழ்ந்து நழுவுவது போல் இருக்கிறது. மறுபடியும் கட்டி கொள்ளுகிறோம் .இம்மாதிரி நிலை ஏற்பட்டால் அந்த காரியத்தை உடனடியாக செய்யக்கூடாது. சற்று பொறுத்து தான் செய்ய வேண்டும். இது செல்லுகின்ற காரியத்தில் வெற்றியை சற்று பாதிக்கும்.
இவையெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள். இவற்றை குறித்துக்கொண்டு செய்தால் மிக எளிதாக நம்முடைய காரியத்தில் வெற்றி அடையலாம். நாம் ஒன்றைச் செய்கின்ற பொழுது பல விஷயங்களையும் ஆலோசிக்காமல் வெறுமனே, விரைவாக ஒரு காரியத்தைச் செய்து விடுவதால் மட்டும் வெற்றி கிடைத்து விடுவது கிடையாது.வெற்றிக்கு செயல் திறன், திட்டமிடல் போலவே, சூழல்களில்,நேரம் இவையெல்லாம்தான் காரணம், அதனால்தான் பல பேருக்கு வெற்றி எளிதாக கிடைத்து விடுகிறது, பல பேருக்கு எவ்வளவு உழைத்தும் வெற்றி கிடைக்காமல் இருக்கிறது,