ஜோதிட ரகசியங்கள்
சந்திராஷ்டமம் என்ன செய்யும்?
நண்பர் ஒருவருடன் ஜோதிட விஷயங்களை ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் பொழுது கேட்டார்.
” அதென்ன சார், எல்லா ராசி பலன்களிலும் சந்திராஷ்டமம் என்று போட்டு இருக்கிறார்கள். அது என்ன அவ்வளவு கஷ்டமான காலமா?இப்படி பயமுறுத்துகிறார்கள்”
நான் சொன்னேன்.
” ராசி பலனில் மட்டுமல்ல, காலண்டரில் ஒவ்வொரு நாளுக்கு கீழே என்னென்ன நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டம தினம் என்று போட்டிருப்பார்கள்.”
“அது சரி, இதன் பலன் என்ன”
முதலில் சந்திராஷ்டமம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் – சந்திரன் + அஷ்டமம். அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள். உடலுக்கும் மனதிற்கும் காரணமான சந்திரன், ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் போது சந்திராஷ்டமம் ஏற்படுகின்றது. அல்லது நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் சந்திராஷ்டமம் ஆகும்.
நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றாரோ அதுவே நமது ஜென்ம ராசியாகும்.சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாள்கள் சஞ்சாரம் செய்வார். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்தில் இரண்டே கால் நாள்கள் சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும். இந்தக் காலத்தை சந்திராஷ்டம காலம் என்கிறோம்.
இது குறித்து என்ன பலன்கள் ஏற்படும் அல்ல ஏற்படலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
மனோ காரகனான சந்திரன் சந்திராஷ்டமம் ஏற்படும் போது பலவீனமாக இருப்பார். 6,8,12 ஆகிய மூன்று ராசிகளில் கடுமையானது அஷ்டம ராசி.அதாவது நமது ராசிக்கு எட்டாவது ராசி.
6,12 ம் ராசிகளில் பலன் தரும் சனி, ராகு ,கேது போன்ற சில அசுப கோள்கள் கூட அஷ்டம ராசியில் மட்டும் பெரும்பாலும் எதிர்மறை பலனை மட்டுமே செய்யும். (விதிவிலக்குகள் உண்டு) எனவே, அஷ்டம,சனி,அஷ்டம குரு,அஷ்டம ராகு அஷ்டம சூரியன் ,அஷ்டம செவ்வாய் எனச் சொல்லி எச்சரிக்கையோடு இருக்கச் சொல்கிறார்கள்.
இதில் சந்திரன் வேகமாக நகரும் கிரகம் என்பதால் ,தினப் பலன்,வார பலன் பார்க்கும் போது சந்திராஷ்டமம் குறிப்பிடு கிறார்கள்.
சந்திராஷ்டம தினங்களில் நமது மனமும், எண்ணங்களும் தெளிவானதாக இருக்காது. எனவே, சந்திராஷ்டம தினங்களில் முக்கிய பேச்சுவார்த்தைகளை தவிர்த்து விட வேண்டும் என்கிறார்கள். சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும்போது அவருடைய பார்வை நமது குடும்ப ராசியில் விழுவதால் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து மனக்கஷ்டத்தைத் தரலாம்.
திருமணம் போன்ற சுப காரியத் தேதிகளை நிர்ணயிக்கும்போது மணமகள், மணமகன் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம தினங்கள் இல்லாத நாட்களாக இருக்க வேண்டும். சந்திராஷ்டம தினங்களில் புதிய தொழில் துவங்குதல்,கிரக பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு போன்ற சுப செயல்களை சந்திராஷ்டம தினங்களில் தவிர்ப்பது உத்தமம்.
வாகனங்களில் செல்லும் போது கவனமாக இயக்க வேண்டும்.
ஒரே ராசியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் இரண்டே கால் நாள்கள் சந்திராஷ்டமம் என்று சொல்லிவிட முடியாது. ஒரு நட்சத்திரத்துக்குப் பதினேழாவது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது அந்த நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் என்ற கணக்கின் படி, அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது சந்திராஷ்டம நாளாகும். மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் அதே விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாள் சந்திராஷ்டம நாளாகும். மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்தில் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம காலமாகும். கிருத்திகை 2, 3, 4 ஆகிய பாதங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மூல நட்சத்திரம் தனுசு ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம நாளாகும்.
நடைமுறையில்,பெரிய அளவு இதைக் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. எப்படி ராகு காலம் எமகண்டத்திற்கு நாம் தினசரி மதிப்பு தருகிறோமா, அதாவது அந்த நேரத்திலே, ஒரு நல்ல செயலை இயன்றவரை துவங்காமல் இருக்கிறோமா ,அதைப்போலவே இந்த சந்திராஷ்டம தினத்தில் ஒரு காரியத்தைத் துவங்காமல் இருப்பது நல்லது. அதற்காகத்தான் இந்த சந்திராஷ்டம தினத்தைக் குறிக்கிறார்கள். இது ஒரு எச்சரிக்கை உணர்வுக்காகத்தான்.
அவசர வேலைகளுக்கு இதை குறித்து கருத வேண்டிய தில்லை. அன்று சுப ஹோரை பார்த்து முடிவு செய்து விடலாம்.
விதியைப் போலவே இந்த விஷயத்திலும் விதி விலக்குகள் உண்டு. கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள் கெடுதல் செய்யாது. காரணம் கடகம் சந்திரன் ஆட்சி பெறும் ராசி. ரிஷபம் சந்திரன் உச்சம் பெறும் ராசி. அந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையே செய்வார். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி – அஸ்தம் – திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் பாதிப்பு இருக்காது.
உங்களுக்குச் சந்திராஷ்டமம் எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒரு காரியத்தைச் செய்யுங்கள். உங்கள் டைரியில் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சந்திராஷ்டம தினத்தை முதலில் எழுதிக் கொள்ளுங்கள் அந்த நேரத்தில் என்ன காரியங்கள் நடந்தது? காரியத் தடைகள் இருந்ததா? அல்லது காரியம் வெற்றியடைந்ததா என்பதையும் குறித்து கொள்ளுங்கள் .ஏன் சொல்கிறேன் என்று சொன்னால் சிலருக்கு சந்திராஷ்டம தினம் அதிர்ஷ்டமாக கூட இருப்பதை நான் நடைமுறையில் பார்த்து இருக்கிறேன்.
சந்திராஷ்டம தினத்துக்கு பரிகாரமும் சொல்லியிருக்கிறார்கள்.என்ன பரிகாரம் தெரியுமா?
சந்திராஷ்டம நாளில் விநாயகரை வணங்கி காரியத்தைச் செய்வது நல்லது. அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாட்டு அதன் பின் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கலாம்.
குலதெய்வத்தையும், முன்னோர்களையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பதும் நன்மை தரும்.
சந்திராஷ்டம நாளில் பரிகாரமாக செல்பி எடுத்து பதிவிடுகின்றனர். செல்போன் வந்த பிறகு பலரும் சாதாரணமாகவே செல்பி எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அரசியல் தலைவர்களும், திரை நட்சத்திர பிரபலங்களும் கூட சந்திராஷ்டம நாளில் செல்பி எடுத்து முகநூல் பக்கத்திலும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்திலும் பதிவிட்டால் பாதிப்பு குறையும் என்பது சில ஜோதிடர்களின் கருத்தாகும்.இது நடைமுறையில் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்று தெரியவில்லை.
சந்திராஷ்டம தினத்தில் பூஜை முடித்துவிட்டு ,”கதாயுததரம் தேவம் ஸ்வேதவர்ணம் நீசாகாரம் த்யாயேத் அம்ருத ஸம்பூதம் ஸர்வகாம பலப்ரதம் – என்ற சந்திரன் பகவானுக்குரிய துதியை 27 முறை சொல்லிவிட்டு பின் நம் காரியங்களைச் செய்யலாம்.அன்று வெள்ளை சட்டை அணிவதும் பயன்தரும். வீண் மனக் கவலைகள், பயங்கள் நீங்கும்.தெளிவு பிறக்கும் காரியத்தடைகள் நீங்கும்.
ஒரே ஒரு விஷயம் நினைவில் கொள்ளுங்கள்..
ஒவ்வொரு மாதமும் சந்திராஷ்டமம் வருவதால் அன்று எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அன்றைக்கு எல்லாமே துன்பமாக இருக்கும், தடைகளோடு இருக்கும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. கவனத்தோடும்,மனத்தெளிவோடும்,நிதானமாகவும் செயல்படுபவர்க்கு சந்திராஷ்டமம் பாதிப்பு தருவதில்லை.