5.6.23 திங்கள் கிழமை
திருஞான சம்பந்தர் குரு பூஜை
வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
என்பது சேக்கிழாரின் பெரியபுரணம் ஞான சம்பந்தரின் பெருமை பேசும். தேவார மூவரில் ஒருவர்.திருஞானசம்பந்தர் சோழநாட்டில் சீர்காழிப் பதியில், சிவபாத இருதயர்க்கும் பகவதி அம்மையார்க்கும் மகவாக அவதரித்தார்.உமையம்மையார் கொடுத்த ஞானப்பால் அருந்தி தமிழ் பாடியவர்.தெய்வக் குழந்தையாகிய திருஞான சம்பந்தர், தமது குறுகிய வாழ்நாளில், பாரதத்தின் பல்வேறு சிவால யங்களுக்குத் தலயாத்திரை செய்தார். அவர் பாடிய முதல் தேவாரம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே
சம்பந்தருக்கு மணமுடித்து வைக்க அவரது தந்தையார் சிவபாத இருதயர் ஆசைப்பட்டார். தந்தையின் விருப்பப்படி மணம் செய்து கொள்ள சம்மதித்த திருஞானசம்பந்தருக்கும் திருநல்லூர் நம்பியாண்டார் நம்பியின் திருமகளாருக்கும் திருமணம் நடை பெற்றபோது, மணமக்களோடு கூடியிருந்த அனைவரும் இறை வனின் அருள் ஜோதியில் கலந்து மறைந்தனர். திருநீலக்க நாயனார் வாழ்வுக்கும் ஞானசம்பந்தர் வாழ்வுக்கும் தொடர்பு உண்டு.இருவரும் ஒரே நாளில் முக்தி அடைந்தனர்.அவருக்கு திருமண புரோகிதம் செய்து வைத்தவர் திருநீலக்க நாயனார்.ஞானசம்பந்தரின் குரு பூஜை தினம் இன்று (வைகாசி மூலம்)
5.6.23 திங்கள் கிழமை
திருநீலகண்ட யாழ்ப்பாணர் குரு பூஜை
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஒருவர் . இவர் திருவெருக்கத்தம்புலியூரில் (இராஜேந்திர பட்டினம் விருதாசலம் ஸ்ரீமுஷ்ணம் பாதையில் உள்ளது) பெரும் பாணர் குலத்தில் பிறந்தவர். இவர் சிவபெருமானுடைய திருப்புகழை யாழ்மூலம் இசைக்க, ஏழிசையிலும் வல்லவரான தம் மனைவியார் மதங்கசூளாமணியாருடன் பல தலங்களைப் பாடினார். மதுரையில் கோயிலின் வாயிலில் இறைவனது புகழ்மாலைகளை யாழிலிட்டு பாடினார்.ஆலவாய் இறைவர், அன்றிரவு தம் தொண்டர்கள் கனவில் தோன்றித் திருநீலகண்டப் பெரும்பாணரை தமது திருமுன் கொண்டு புகும்படி ஆணையிட்டார். இறைவரது விருப்பப்படி பாணர் திரு வாலவாய் திருக்கோயிலுள்ள இறைவன் திருமுன் இசைத்துப் போற்றினார். தரையினிற் குளிர்ச்சி தாக்கில் சந்த யாழ் நரம்பு தளர்ந்து நெகிழும்(சுருதி கலையும்) என்று பாணர்க்குப் பலகை இடும் படி இறைவர் ஆணையிட பாணருக்குப் பொற்பலகை இட்டனர். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து பாடினார்.திருஞானசம்பந்தப் பிள்ளையாருடன் சிவபெருமான் உறையும் திருத்தலங்களை வணங்கி இன்னிசைத் திருத்தொண்டு புரிந்தார். தமது மனைவி மதங்கசூளாமணியாருடன் திருநல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தைக் கண்டு அவருடனே கூட அடியார் திருக்கூட்டத்துடன் பெருஞ்சோதியினுட் புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்றார்.அவர் குரு பூஜை இன்று வைகாசி மூலம் .
5.6.23-திங்கள்கிழமை முருக நாயனார் குரு பூஜை
முருக நாயனார் நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார்.நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திரு மாலைகளாகத் தொடுப்பார். ஆறுகாலப் பூசைக்கும் அந்தந்த கால பூசைக்கேற்பத் மாலைகளைத் தயார் செய்து திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாற்றி வணங்குவார். திருஞானசம்பந்தர் எழுந்தருளிய போது அவரை எதிர்கொண்டழைத்து வந்தார். சிலநாட்கள் அவருடன் வர்த்த மானீசுவரப் பெருமானைவழிபட்டர்..
திருநாவுக்கரசு சுவாமிகள் திருப் புகலூருக்கு வந்த போழுது சம்பந்தருடன் அவரை வரவேற்றார். புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும் சில நாள் உறைந்தனர். திருநீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெரு மக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அள வளாவி மகிழ்ந்திருந்தார்.முருகநாயனார், திருநல்லூர்ப் பெரு மணத்தில் நிகழ்ந்த சம்பந்தரின் திருமணவிழாவிற் கலந்துகொண்டு அவரோடு ஜோதியில் கலந்தார்.அவர் குரு பூஜை இன்று வைகாசி மூலம் .
6.6.23-செவ்வாய்க்கிழமை குமர குருபரர் குரு பூஜை
ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் ஆவார். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாய்ப் பிறந்தவர். திருச்செந்தூர் செந்தில் வேலன் அருளால் பிறந்தவர் . குழந்தை 5 வயது ஆகியும் பேச்சுத் திறன் இல்லாமல் இருந்ததைப் பார்த்த பெற்றோர் செந்தில் வேலனிடமே வேண்டமுருகனின் அருளால் பேசும் திறனை அடைந்தவர்.முருகன் மீது கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர் மதுரைக்குச் சென்றார். அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இயற்றினார். குமரகுருபரர் காசிக்குச் சென்று காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவிச் சைவ சமயத்தை வளர்த்தார். காசிமடம் திருப்பனந்தாழிலும் உள்ளது .மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக் கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய நூல்களாகும்.அவர் குரு பூஜை இன்று.
