1.திருவாய் மொழியின் மூன்றாவது திருவாய்மொழி ஏழாவது பத்து பயிலும் சுடரொளி .
2.பகவானுக்கு தொண்டு செய்வது ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலே அடிமை இருப்பது மிகவும் ஏற்றம். ஆனால் அது முதல் நிலைதான்.
3.அவன் அடியார்களுக்கு தொண்டு செய்வது என்பது தான் நிறைவு நிலை. அதில்தான் ஒரு வைணவன் நிறைவை அடைகின்றான். பூரணத்துவத்தை அடைகின்றான்.
4.அதுதான் பரம புருஷார்த்தம் .
5.இதனை வைணவத்தில் பாகவத சேசத்துவம் என்று சொல்வார்கள்.
6. இறையடியார்களின் திருவடிகளை விழுந்து வணங்கும் நம்மாழ்வாரின் திருவடிகளே நமக்குச் சரண்
7.அப்படி நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து வணங்காதவர்களுக்கு ஜென்மம் முடிவு பெறாது என்று திருவாய்மொழி நூற்றந்தாதியில் மணவாள மாமுனிகள் சொல்லுகின்றார்.
8. இந்த அடியார்க்கு அடிமை குறித்து 11 பாசுரங்களில் நம்மாழ்வார் பாடியிருக்கிறார்.
முதல் பாசுரத்தில் கண்ணனுடைய அடியார்களே எம்மை ஆள்பவர்கள் என்றும், அந்த கண்ணனை யார் பணிகிறார்களோ, அவர்கள் என்னுடைய நாதன் என்றும் சொல்கின்றார்.
9. இதனை மேலும் மேலும் அவர் வலியுறுத்தி நாராயணனின் தொண்டர்கள்தான் பெருமக்கள். அந்த தொண்டர்கள் தான் நம்முடைய சுவாமிகள். அவர்கள்தான் நம்மை காப்பவர்கள். அவர்கள் தான் நம்மை உய்விப்பவர்கள். அவர்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் கூட அவர்களைத் தொழ வேண்டும். அவர்கள் இந்த வருணத்தில் பிறந்தவர்கள் என்றெல்லாம் கருதக்கூடாது.
10.ஏழு தலைமுறை கண்ணனுக்கு அடியார்கள் யாரோ அவர்களே நமக்குத் தலைவர்கள். அந்தக் கண்ணன் அடியார்களுடைய அடிமைகள் நாங்கள், என்று சொல்லி, பல சூழ்நிலையில் இவற்றைப் படித்தவர்களுக்கு நிச்சயம் மறுபிறவி கிடையாது என்று முடிக்கிறார். இனி அந்த பத்து பாசுரங்கள்…………..
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,
பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,
பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே. 7.1
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,
தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,
நாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே. 7.2
நாதனை ஞாலமும் வானமும்
ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனை, பொன்னெடுஞ் சக்கரத்
தெந்தை பிரான்தன்னை
பாதம் பணியவல் லாரைப்
பணியும் அவர்க்கண்டீர்,
ஓதும் பிறப்பிடை தோறெம்மை
யாளுடை யார்களே. 7.3
உடையார்ந்த வாடையன் கண்டிகை
யன்உ டை நாணினன்
புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி
யன்மற்றும் பல்கலன்,
நடையா வுடைத்திரு நாரணன்
தொண்டர்தொண் டர்க்கண்டீர்,
இடையார் பிறப்பிடை தோறெமக்
கெம்பெரு மக்களே. 7.4
பெருமக்க ளுள்ளவர் தம்பெரு
மானை, அமரர்கட்
கருமை யொழியஅ ன் றாரமு
தூட்டிய அப்பனை,
பெருமை பிதற்றவல் லாரைப்
பிதற்றும் அவர்க்கண்டீர்,
வருமையு மிம்மையும் நம்மை
யளிக்கும் பிராக்களே. 7.5
அளிக்கும் பரமனை கண்ணனை
ஆழிப் பிரான்தன்னை,
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி
வண்ணனெம் மான்தன்னை,
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக்
கொள்ளும் அவர்க்கண்டீர்,
சலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன்
மாந்தரங் காப்பரே. 7.6
சன்மசன் மாந்தரங் காத்தடி
யார்களைக் கொண்டுபோய்,
தன்மை பொறுத்தித்தன் தாளிணைக்
கீழ்க்கொள்ளும் அப்பனை,
தொன்மை பிதற்றவல் லாறைப்
பிதற்றும் அவர்கண்டீர்,
நம்மை பெறுத்தெம்மை நாளுய்யக்
கொள்கின்ற நம்பரே. 7.7
நம்பனை ஞாலம் படைத்தவ
னைதிரு மார்பனை,
உம்பர் உலகினில் யார்க்கும்
உணர்வரி யான்தன்னைக்,
கும்பி நரகர்கள் ஏத்துவ
ரேலும் அவர்கண்டீர்,
எம்பல் பிறப்பிடை தோறெம்
தொழுகுலம் தாங்களே. 7.8
குவலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண்
டாளர்க ளாகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல்
மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி
யாரெம் மடிகளே. 7.9
அடியார்ந்த வையமுண் டாலிலை
யன்ன சஞ்செய்யும்,
படியாது மில்குழ விப்படி
யெந்தைபி ரான்றனக்கு,
அடியார் அடியார் தமடி
யார்அ டி யார்தமக்
கடியார் அடியார் தம்,அடி
யாரடி யோங்களே. 7.10
அடியோங்கு நூற்றவர் வீயஅ ன்
றைவருக் கருள்செய்த
நெடியோனை, தென்குரு கூர்ச்சட
கோபன்குற் றேவல்கள்,
அடியார்ந்த ஆயிரத் துள்ளிவை
பத்தவன் தொண்டர்மேல்
முடிவு,ஆரக் கற்கில் சன்மம்செய்
யாமை முடியுமே.