பாம்பணை மேல் பள்ளி கொண்ட ரெங்கநாதர், நங்கநல்லூர் சுதர்சனம்.
Sri Ranganatha Perumal Sleeps on Snake(Aadhisesha) – Nangannalur Sudharsanam,
வேறு பலனை விரும்பி பகவானை அணுகுகின்றவர்கள் பலனைப் பெற்றவுடன் பகவானை விட்டு விலகுவர். ஆனால், பகவானின் திருவுள்ள உகப்பையே, பகவத் கைங்கர்யத்தையே பலன் என்று கருதுபவர்கள், ஒரு மனத்தோடு, பகவானுக்குத் தொண்டு செய்து, பகவானை விட்டு ஒரு போதும் அகலமாட்டார்கள். பகவான் மீது அன்பு மிகும்போது மனம் உருகும். உடல் உருகும். உண்மை. படிப்படியாக உணர்ச்சிகளைக் காவலில் வைத்து, பகவானின் அழகைப் பருகி மனதில் நிறுத்தி வைத்துக் கொண்டால், வேண்டும் போதெல்லாம் பகவானின் திருவுருவை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, அனுபவித்து ஆனந்தித்து மகிழலாம். (திருவாய்மொழி 2.4.1).
“ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும்
நாடி நாடி நரசிங்கா”
Adi Adi agam karaindhu
isai pAdip pAdik kaNNIr malgi
engum nAdi nAdi narasingA enRu
vAdi vAdum iv vAL nudhalE
என்று சொல்லி மகிழலாம்.
உடலில் உள்ள புலன்கள் – இந்திரியங்கள் – கருவிகள் கெடாமல் அவைகளைத் தன் வசப்படுத்திக் கைங்கர்யம் செய்து மகிழலாம்.
அதற்கும் திருவரங்கனின் கிருபையையே நாட வேண்டும். என் அஞ்ஞானத்தைப் போக்கி பகவானே உன் திருவடிகளை நாட உன் அருள் வேண்டும் என்று பகவானிடம் அடி பணிய வேண்டும் என்று உபதேசம் செய்கிறார் நம்மாழ்வார்(Namzhwar). (திருவாய்மொழி 5.1.4).
“என் கொள்வன்? உன்னை விட்டென்றும் வாசகங்கள் சொல்லியும்
வன்கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின்கண் நெருங்க வைத்தே எனதாவியை நீக்ககில்லேன்
என்கண் மலினமறுத்து என்னைக் கூவியருளாய் கண்ணனே!”
உணர்ச்சிகளைத் தடுத்து, என் பாபங்களைப் போக்கி, அடியேனை முழுமையாக உன்பால் அழைத்துக் கொள். உலக விஷயங்களிலிருந்து பிரகிருதி சம்பந்தத்திலிருந்து விடுவித்து, பகவானே என் மனம் உன் பக்கம் செல்ல நீயே அருள். என் விரோதிகளைப் போக்கி, உன் திருவடிகளில் கவனம் செல்ல நீயே அருள் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படி வேண்டும் மனநிலை வந்தால் “மாசுச:” என்று பகவான் நிச்சயமாகச் சொல்லி நம்மை நல்வழிப்படுத்துவான். மகா விஸ்வாசம் வேண்டும்.

எம்பெருமானோடு நமக்குள்ள உறவு ஒன்றே உண்மையான, மாறாத, அழியாத உறவு. இதை உணர்ந்தவர்களுக்கு பகவான் அகலாமல், விலகாமல் உடனிருந்து காப்பாற்றுகிறான். உறவு மற்றறியேன் என்று பகவான் ஒருவனே ஒப்பற்ற உறவு என்றிருக்க வேண்டும். அடியரோர்க்கு அகலாமே? என்று 20வது பாசுரமான நாம் ஆராயும் இப்பாசுரத்தில் கூறியது நமக்கும் பகவானுக்குமுள்ள அழியாத உறவை உணர்த்தவே. பகவானைப் பற்றிய ஞானமுடைய அடியவர்கள் இந்த உறவை இழத்தல் தகுமோ? தகாது என்கிறார் தொண்டரடிப்பொடி யாழ்வார்.
திருப்பாவை என்னும் திவ்யப் பிரபந்தத்தில் ஆண்டாள், உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்று பாடுகிறாள். பகவானாலும் இவ்வுறவை ஒழிக்க முடியாது. ஜீவாத்மாவான நம்மாலும் முடியாது. அப்படிப்பட்ட வலுவான உறவு. விலக்க முடியாத உறவு. நீயன்றி நான் இல்லை. நானின்றி நீ இல்லை என்று ஆண்டாள் வாதாடுகிறாள். பகவான் சர்வவித பந்து. மாதா பிதா அனைத்தும் பகவானே.“பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ, மற்றையார் ஆவாரம் நீ” (பெரிய திருவந்தாதி 5). சகல விதமான உறவும் பகவானே என்பது ஆழ்வார்களால் உறுதிப்படுத்தப்படுகிறது.
“இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்” (திருவாய்மொழி 10.8.2) என்கிறார் நம்மாழ்வார். ஒருமுறை ஒரே ஒருமுறை நாம் இடம் கொடுத்தால் போதும். மகாவிச்வாசத்துடன், நம்மைக் காப்பாற்றுவான் என்றெண்ணி இடம் கொடுத்தால் போதும் நம்மைவிட்டு அகலமாட்டான். நம்மை நல்வழிப்படுத்துவான்.”இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்” (திருவாய் மொழி 10.8.6) என்று பாடுகிறார். “உயிர் வேறின்றி ஒன்றாகவே கூசஞ் செய்யாது கொண்டாய்” என்கிறார். அவனோ பரமாத்மா. உயர்ந்தவன். நாமோ ஜீவாத்மா. அவனால் படைக்கப்பட்டவன். ஏற்றத் தாழ்வு பாராமல் வந்து நம்மிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவான் என்கிறார். நம் இதயம் புகுந்த பரமாத்மாவான புருஷோத்தமனான, பவித்ரனான, புனிதனான பகவான் கருணை எப்பேர்ப்பட்டது? பெரியாழ்வார் கூறுகிறார். உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன், என்னையும் உன்னில் இட்டேன், என் அப்பா! இருடீகேசா! என் உயிர்க்காவலனே என்கிறார். (பெரியாழ்வார் திருமொழி 5.4.5). ஆத்மாவை பகவான் திரு வடிகளில் காணிக்கையாக வைத்துவிட்டால், நமக்கும் பகவானுக்கு முள்ள உறவு வளருவது திண்ணம் என்கிறார். ஒழிக்க முடியாது உறவு.
அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்த கண்ணீர் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு நின் அருளே புரிந்திருந்தேன் என்று பகவானின் அருளையும் கருணையையும் வேண்டி நிற்க வேண்டும். உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேன் உனக்கு உரித்தாக்கினையே. பகவான் நாமா வைப் பாடிப்பாடி நாக்கு தழும்பேற வேண்டும். நமக்கும் பகவானுக்கும் உள்ள உறவுத் தொடர்பு வளர்ந்து வருகிறது என்பது தெரிந்தபிறகு முடிவு காலத்திற்காகத் தாமதிக்காமல், இப்போதே ஸ்ரீரங்கனிடம் சரணடைய வேண்டும். இது பெரியாழ்வாரின் உபதேசம். (பெரியாழ்வார் திருமொழி 4.9.1).
துப்புடையாரை அடைவது எல்லாம்
சோர்விடத்துத் துணை ஆவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது, அங்கு
ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே
thuppudaiyaarai adaivadhellaam* sOrvidaththu thuNaiyaavar enRE*
oppilEn aahilum n^innadaindhEn* aanaikku n^ee aruL seydhamaiyaal*
eyppu ennai vandhu n^aliyum pOdhu*angu Edhum n^aanunnai n^inaikka maattEn*
appOdhaikku ippOdhE solli vaiththEn*arangaththu aravaNaip paLLiyaanE!
கப, வாத, பித்தங்கள், நோய்கள் வருத்தும்போது, முடிவு காலத்தில் பகவானை நினைக்க முடியாது. ஆகையால், இப்போதே காலம் தாழ்த் தாமல் பகவான் திருநாமங்களைச் சொல்லி, பகவான் கல்யாண குணங் களை நினைத்து, அவனைத் துதிக்க வேண்டும். அப்படிச் செய்தால், மரண காலத்தில் அஞ்சாதே என்று பகவானே நமக்குச் சொல்கிறான்.
– தொடரும்.
