ஆலய தரிசனம் (Aalayadharisanam) இப்பொழுது மின் புதிய இதழாக இதழ் உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்த இதழ் எப்படியாவது வெளியாக வேண்டும் என்கிற முயற்சியின் பலனாக இப்பொழுது உங்கள் கைகளில் இருக்கிறது.
ஆலயதரிசனத்தை இணையத்தளத்தில் படித்து மகிழ இந்த வலைதள முகவரியை பயன்படுத்தவும். www.aalayadharisanam.com
சில ஆண்டுகளாகவே ஆலயதரிசனம் தொடர்ந்து வெளியிட முடியுமா என்கின்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. இதைப் பலமுறை நாம் இதழின் பல கட்டுரைகளில் வெளிப்படுத்தி இருக்கிறோம்.
அதற்கு ஏற்றவாறு சென்ற ஆண்டு மிகக்கடுமையாக உலகம் தழுவிய நோய்த் தொற்று ஏற்பட்டது. தொழில்கள் நின்று போயின. ஏன் எல்லாவித நடமாட்டமே சில மாதங்கள் நின்று போயிற்று. பொருளாதாரம் பலத்த அடி வாங்கியது. பலபேர் உயிரிழந்தார்கள். அதிலும் நம்முடைய ஆலய தரிசனத்தோடு தொடர்புடைய ஒரு சிலர் உயிர் இழந்த வேதனையையும் நாம் பதிவு செய்திருந்தோம்.
சென்ற ஆண்டு முதல் நான்கு மாதங்கள் சரியாக வந்த ஆலய தரிசனம் இதழ் அடுத்து வந்த எட்டு மாதங்களில் நான்கு இதழ்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.
ஜனவரி இதழ் மார்கழி மாத சிறப்பிதழாகத் தயார் செய்து வைத்திருந்தோம். அதற்கான அட்டைப்படம் அச்சடித்து வைத்திருந்தோம். ஆனால் தயாரித்து வெளியிட முடியவில்லை. அதற்குப் பிறகு இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்கள் போய்விட்டன. பல வாசகர்களும் இதழைப் பற்றி விசாரித்து விசாரித்து அலுத்து விட்டார்கள்.
இன்றைக்குப் பெரிய நிறுவனங்கள் வெளியிடும் வணிக இதழ்கள் கூட நின்று போயிருக்கின்றன. பொருளாதார ரீதியாகத் தாக்குப்பிடிக்கும் வணிக இதழ்கள் அச்சு இதழ்களிலிருந்து வலை தள இதழ்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. காலத்துக்கு ஏற்ற மாற்றம்தான். இப்படி அவர்களே வெளியிட முடியாமல் தயங்கும் நிலையில் ஆலய தரிசனம் தொடர்ந்து வெளியிடுவதில் எத்தனை சிரமம் இருக்கும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கான காரணங்கள் .
1.சந்தாதாரர்களின் ஈடுபாடு குறைந்து போனது.
2.வருடா வருடம் கூடிக் கொண்டே இருக்கும் நிதிச்சுமை.
இவைகளை ஓரளவு சமாளித்தாலும் தயாரிப்பில் ஏற்படும் வேலைச் சுமை, கட்டுரைகளை வாங்குவது, தட்டச்சு செய்வது, பிழை திருத்துவது, படங்கள் சேர்ப்பது என்கிற ஏராளமான வேலைகள்.
ஒரு லட்சம் விற்பனையாகும் இதழ்களுக்கு, எத்தனைப் பணியோ அதே அளவு பணிதான் ஒரே ஒரு இதழ் விற்பனையாகும் இதழுக்கும் என்பதைத் தெரிந்து கொண்டால் இதில் உள்ள பணிச் சுமையைப் புரிந்து கொள்ள முடியும்.
பல பேர் செய்ய வேண்டிய பணிகளை கடந்த 25 ஆண்டு காலமாக அடியேன் தனியாகவே செய்து வருகின்றேன். இந்தத் தயாரிப்புப் பணிக்கே பல நாட்கள் தேவைப்படுகின்றது.
இவ்வளவு செய்தாலும் இந்த இதழின் நிறைகுறைகளை விமர்சிப்பது – பகிர்ந்துகொள்வது – ஊக்கப்படுத்துவது போன்ற செயல்கள் எல்லாம் கடந்த ஒரு சில வருடங்களாகக் குறைந்து கொண்டே வருகின்ற அச்சமும் இருக்கிறது.
உங்கள் அன்போடும் ஆதரவோடும் 25 ஆண்டுகளாக, சென்னைக்கு வெளியே ஒரு இதழை வெற்றிகரமாக நடத்தி வெள்ளி விழா கொண்டாடிய திருப்தி இருக்கிறது.
எனவே, இந்த இதழ் தொடர்ந்து நடத்த வேண்டுமா என்கிற ஒரு கேள்வி எழுகிறது.
இதனோடு அன்பு கொண்ட பல வாசகர்கள், எப்படியாவது நடத்துங்கள். நாங்களும் ஏதோ ஒரு வகையில் உங்களுக்குத் தொடர்ந்து உதவி செய்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். நாமும் வேறு வழியில் எப்படி நடத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். இதனை வலைதள இதழாக உலகத்தில் உள்ள எல்லோரும் மாதாமாதம் படிப்பது போல் செய்வதற்கு ஆவன செய்து கொண்டிருக்கிறோம். அதற்கும் ஆள் பலமும் நேரமும் தேவைப்படுகிறது. இத்தனைச் சிரமங்களுக்கு நடுவில் ஆலய தரிசனம் ஏப்ரல் இதழை தயார் செய்து விட்டோம். எதிர்காலத்தில் இதன் நிதிச்சுமையை தடுக்க சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம்.
1.ஆயுள் சந்தாதாரர்கள் இனித் தொடர்ந்து இதழை எதிர் பார்க்க வேண்டாம். ஆண்டுச் சந்தாவாக மாற்றிக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை. 500 ரூபா கட்டியதற்கு 25 வருடங்கள் தொடர்ந்து அனுப்பியாகிவிட்டது. இனி அந்த நிதிச் சுமை தாங்க முடியாத அளவுக்கு இருப்பதால் ஆயுள் சந்தாதாரர்கள் உடனடியாக இரண்டு ஆண்டுகள் மூன்றாண்டுகளுக்குச் சேர்த்து சந்தா கட்டும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
இப்பொழுது பல பெரிய இதழ்கள் கூட ஆயுள் சந்தா திட்டத்தை நிறுத்தி விட்டன.
இரண்டாவதாக சந்தாதாரர்கள் தங்கள் சந்தாவை பெரும்பாலும் காலத்தில் புதுப்பிப்பது இல்லை. அவர்கள் புதுப்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாதவர்கள் அல்ல. வயதான அவர்களால் பிறர் உதவியின்றி நகரத்துக்குச் சென்று மணியார்டர் மூலம் அனுப்புவது முடிவதில்லை. வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்வதும் இயலவில்லை.
அதனாலேயே பல பேர் அனுப்பாமல் இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் சந்தா முடிந்துவிட்டதா என்று தெரிந்து கொண்டு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். சந்தா எப்பொழுது முடியும் என்பது நாங்கள் அனுப்பும் முகவரிக்கு மேலேயே இருக்கிறது.
அடுத்து உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு நீங்கள் ஒரு சில பிரதிகள் முன்கூட்டியே சொல்லி அச்சடித்து வழங்கலாம். உதாரணமாக நூறு பிரதிகள் வாங்கி வீட்டு விசேஷங்களில் நீங்கள் சுமங்கலிப் பொருள்கள் தருவது போல ஆலய தரிசனம் தரலாம். இதனை நீங்கள் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். ஒரு பத்து பேர் இப்படி முன்கூட்டியே சொன்னாலும் கூட ஆயிரம் பிரதிகள் நாங்கள் கூடுதலாக அச்சடிக்க முடியும்.
விசேஷம் இல்லாவிட்டாலும் நீங்களே அவ்வப்பொழுது ஒரு 100 அல்லது 200 பிரதிகளை மொத்தமாக வாங்கி பிறருக்குத் தரலாம். நீங்கள் ஒரு சிறு கடையோ வணிக நிறுவனமோ வைத்திருந்தால் அதிகமான பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த இதழை இலவசமாகத் தரலாம். நூலக நன்கொடையாக வாங்கி உங்கள் ஊர் நூலகங்களுக்குத் தரலாம். இதுதவிர அட்டைப் படத்திற்கு உதவுவது, நன்கொடைகள் அளிப்பது என இதனுடைய நிதிச் சுமையை நீங்கள் சற்று பகிர்ந்து கொள்ளலாம்.
Aalayadharisanam Silver Jubilee ஆலய தரிசனம் வெள்ளி விழா கொண்டாட்டம் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
இது தவிர சிலர் இதழின் செலவை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொள்ளுகின்ற உபயதாரர் ஆக இருக்கலாம். நம்முடைய ஆலயதரிசனம் அன்பர் வழக்கறிஞர் திரு. பாஸ்கரன் அவர்கள் கடந்த காலத்தில் மூன்று முறை ஆலய தரிசனத்தின் தயாரிப்புச் செலவை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் அப்பொழுது சொல்வார். வேறு யாராவது இதனைச் செய்வார்கள் என்பதற்காகவே அடியேன் இதனை ஒரு முன்மாதிரியாக செய்கிறேன் என்பார்.
எதிர்காலத்தில் அட்டைப்பட வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறோம். இவையெல்லாம் சிக்கனத்தை நோக்கிய மாற்றங்கள்.
எனவே மறுபடியும் ஆலய தரிசனத்தைத் தொடர்ந்து பொன் விழாவை நோக்கி நகர வைக்க சில முயற்சிகள் செய்து வருகின்றோம்.
பழைய சந்தா உள்ளவர்களுக்கு எட்டு இதழ்கள் வராமல் இருந்திருக்கும். எனவே அவர்கள் கணக்கில் ஓராண்டு சந்தாவுக்குப் பதிலாக 20 மாத சந்தா வரவு வைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்விதழில் சென்ற மாதம் நடந்த ஆசிரியரின் மணிவிழா மற்றும் ஆலய தரிசனத்தின் வெள்ளிவிழா குறித்த கட்டுரைகள் படங்களுடன் வெளியிடப்பட்டிருக்கின்றன.
வெள்ளி விழாவை(Silver Jubilee Function) ஆலய தரிசனத்தின் பல்லாயிரக் கணக்கான வாசகர்களோடும் எழுத்தாளர்களோடும் பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று அடியேன் திட்டமிட்டிருந்தேன்.
பொருளாதாரம் மற்றும் நோய்த்தொற்று காலத்தில் அதிகக் கூட்டம் சேர்ப்பதில் தயக்கம் ஆகிய இரண்டு காரணங்களால் அந்த ஆசை நிறைவேறவில்லை.
எல்லாவற்றையும் விட மறுபடியும் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் உண்டு. இதழ் தொய்வில்லாமல் வர ஆலோசனை வழங்கலாம். இதழின் கருத்துக்களைப் பற்றியும், ஆலோசனைகளையும் தயங்காமல் மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ அனுப்புங்கள். அது மிக மிக முக்கியமானது. மறுபடியும் அடுத்த இதழில் சந்திப்போம்.
Send your Feed backs, News Articles, Photos, Suggestions to this Email : aalayadharisanam@rediffmail.com
– ஆசிரியர்-
