
ஒரு ஊரிலேஒருவன் இருந்தான் .அவனி டத்தில் ஒரு பழக்கம் இருந்தது.தான் கேள்விப்பட்ட கேள்விப்படாதஎந்தச் செய்தியாக இருந்தாலும் அதனை,ஒன்றுக்குப் பத்தாக்கி ஊரெங்கும் பரப்பி சுகம் காணுகின்ற ஒரு பழக்கம் இருந்தது. இதுகுறித்து அவன் வருத்தப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட பலர்.அவனிடத்தில் சண்டை போட்டாலும் அவன் அது குறித்து சட்டை செய்யவில்லை.
ஒரு முறை ஒரு பெண்ணைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக அபவாதம் பரப்பினான் . அந்தப் பெண்
மானத்திற்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டாள் .பின்னால் அந்தப் பெண் அப்படிப்பட்டவன் அல்ல என்று தெரிந்தும் அவன் வருத்தப்படவில்லை.
ஆனால் இந்த செயல்களுக்கான விளைவுகளை அவன் அனுபவிக்கக்கூடிய காலமும் வந்தது. எந்த விளைவுக்கும் ஒரு எதிர்விளைவு இல்லாமல் போய்விடுவதில்லை.
சில நேரங்களில் அது செயல்படுவதற்கு சற்று தாமதம் ஆகலாம். ஆனால் அது எப்பொழுதுமே தூங்குவது இல்லை.
இவன் செய்த இந்தக் கொடும் செயலுக்கு எதிர் விளைவுகள் வந்து சேரத் தொடங்கின. செல்வம் இழந்தான் .
வீடு வாசல் மனைவி மக்களை இழந்தான். உடலில் தீவினைகளின் விளைவாக நோய் பற்றிக் கொண்டது அவனை உண்ணவும் உறங்கவும் விடாமல் படாத பாடு படுத்தியது.
எத்தனையோ வைத்தியங்கள் பார்த்தும் நோய் தீரவில்லை. மனதில் நிம்மதியும் வரவில்லை.
அப்பொழுது அந்த ஊருக்கு ஒரு வயதான துறவி வந்திருந்தார்.அவர் அந்த ஊரில் பல ஏழை மக்களை சந்தித்தார்.அவர்களும் தங்கள் கஷ்டங்களை சொல்லி தீர்வு கேட்டனர்.விவரங்களைக் கேட்டுஇயன்றளவு அவர்களுக்கு ஆறுதல் சொல்லி பிராயச்சித்தமும் சொன்னார்.பலர் தங்களுடைய நோயை அவரிடத்திலே ஆலோசனை பெற்று தீர்த்துக் கொண்டனர். வறுமையிலிருந்து விடுபட்டனர்.
அவரிடத்தில் சென்றால் தன்னுடைய பிரச்சனைகள் தீரும் என்று நினைத்தவன் ,ஒரு நாள் காலையில் அவருடைய ஆசிரமத்திற்கு சென்று அவரை அடிபணிந்தான். தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் அவர் இடத்திலே சொன்னான் .
அப்பொழுது அவர்,” மகனே! நீ செய்த செயல்கள் பல பேருடைய வாழ்க்கையை சீரழித்து விட்டன. நீ வேடிக்கையாக விபரீதம் அறியாமல் சொன்ன வதந்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர். பலர் செல்வத்தை இழந்தனர். பலர் ஊர் அவமானத்திற்கு அஞ்சி வேறு ஊர்களுக்குச் சென்று வாழ்ந்தனர். இதனால் நீ அடைந்த லாபம் என்ன? அப்பொழுது ஒரு விபரீதமான மகிழ்ச்சியை நீ பெற்றிருக்கலாம். ஆனால் வதந்தி என்பது வதம் செய்கின்ற தீ. அது யார் சொன்னார்களோ அவர்களையும் வ தம் செய்துவிடும். நீ பரப்பிய நெருப்பானது இப்பொழுது பெரு நெருப்பாக வளர்ந்து உன்னையே அழித்துக் கொண்டிருக்கிறது.
அப்பொழுது அவன் கேட்டான்” ஐயா இதற்கு ஏதேனும் பிராயச்சித்தம் உள்ளதா?”
முனிவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.
ஒரு சின்ன ஐஸ் கட்டியை அவனிடத்தில் கொடுத்து அதோ அந்த வெயிலிலே இதனை ஒரு அரை மணி நேரம் வைத்து விட்டு வா சொல்கிறேன் என்றார். சரி என்று இவனும்அந்த ஐஸ் கட்டியை எடுத்துக்கொண்டு வெயிலடிக்கும் ஒரு இடத்திலே வைத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.அரைமணி நேரம் கழித்து முனி வரின் முகத்தையே பார்த்தான்.
முனிவர்,” சரி, நீ வைத்தாய் அல்லவா, அந்த ஐஸ்கட்டி.. அதை மறுபடியும் என்னிடத்தில் கொண்டுவா” என்றார் இவன் ஆவலோடு அங்கே சென்றான் அங்கே அவன் வைத்த ஐஸ் கட்டி இல்லை .அது எப்பொழுதோ வெயிலிலே கரைந்து ஆவியாக பல இடங்களிலும் பரவி இருந்தது.
முனிவர் சொன்னார்
“செய்த காரியத்தின் விளைவு இப்படிப்பட்டது தான். நீ சொன்ன வதந்திகள் ஒன்று பத்து நூறு ஆயிரம் என எல்லா இடங்களிலும் ஆவி பரவி பல பேருக்கு ஆபத்து செய்து விட்டது. அதை நீ அறியவில்லை.அதிலிருந்து மீளவும் முடியாதபடிக்கு அது இந்த பிரபஞ்சத்தின் கலந்துவிட்டது. எனவே மகனே, இதனைப் போக்கக்கூடிய சக்தி எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கு மட்டுமே உண்டு. நீ அவருடைய பாதாரவிந்தங்களில் விழுந்து அழு . நினைத்து நினைத்து அழு . அந்த அழுகையானது ஒருவேளை உன் பாவத்தை கரைத்து உன்னை காப்பாற்றலாம் என்று சொல்லி அனுப்பினார்.
அது அவனுக்கு மட்டும் சொன்ன செய்தி அல்ல. மக்களே இன்றைக்கும் நாம் நவீன விஞ்ஞான உலகத்தில் வாட்ஸ் அப் முகநூல் போன்ற பலவிதமான கருவிகளையும் வைத்திருக்கிறோம். நமக்கு பிடித்தமான செய்தி அது பிடிக்காதவர்களை அவமானப் படுத்துகின்ற செய்தியாக இருந்தால் நாம் உடனே அதை 10 பேருக்கு அனுப்புகின்றோம். அந்த செய்தி உண்மையா பொய்யா என்பது குறித்து கூட நாம் கவலைப்படுவது கிடையாது .ஒருவன் ஆஸ்பத்திரியில் இருக்கின்ற போதே அவன் இறந்து விட்டார் என்று ம கிழ்ச்சியோடு செய்தியைச் சொல்லுகின்ற வர்களையெல்லாம் இப்பொழுது பார்க்கிறோம். இது எத்தனை மோசமான செயல். நம்மை அறியாமலேயே நம்மை சுட்டு சாம்பலாக்கி விடுகின்ற சாபம் அல்லவா இந்த செயல்.
மக்களே பாவங்களுக்குப் பரிகாரம் உண்டு. சாபங்களுக்கு பரிகாரமே கிடையாது .அது அனுபவித்துத்தான் தீர வேண்டும். நீங்கள் செய்த வினை உங்களுக்கே வந்து சேருகின்ற பொழுது அது பெரும்பாலும் அதே அளவில் இருப்பது கிடையாது. வட்டியோடு வளர்ந்து தான் இருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதைத்தான் ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில் ஒவ்வொரு மனிதனும் இந்த வைராக்கியத்தை கொள்ள வேண்டும் என்பதற்காக தீக்குறளை சென்றோதோம் என்று பாடி இருக்கின்றார். இந்த ஒரு வைராக்கியம் இருந்தால் போதும் .வாழ்வில் நாம் வினைகளில் இருந்து தப்பித்து விடலாம்.