Edited By S,Gokulachari
ஏன் இவர்கள் கல்வி பெற முடியவில்லை ?
ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து இருப்பது “புதாத்திய யோகம்” எனப்படும். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்துமா என்று யோசிக்க வேண்டும்.

புதனும் சூரியனும் சேர்ந்திருந்தால் மட்டுமே புத ஆதித்ய யோகம் வந்துவிடுமா என்றால் நிச்சயம் இல்லை.
காரணம் சூரியனும் புதனும் பெரும்பாலான ஜாதகங்களில் சேர்ந்துதான் இருக்கும்.
அதனால் புதனும் சூரியனும் யோகம் தரக்கூடிய அமைப்பில் இருக்கிறார்களா என்பதையும்,இருக்கும் இடம் ,பலம்,பார்வைகள்,வாங்கிய கிரக சாரம் போன்றவற்றையும் சிந்தித்துப் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும்.
அதற்கு முன்னால் புதனும் சூரியனும் சேர்ந்திருப்பதைக் குறித்து இத்தனை முக்கியத்துவம் ஏன் என்று நினைக்கலாம்.
சூரியன் கல்வி கேள்விகளில் சிறந்தவர் .கலைகளில் அவரை விட உயர்ந்தவர்கள் இல்லை. இராமாயணத்தில் ஆஞ்சநேயர் சூரியனிடம் கல்விகற்று “நவ வியாகரண பண்டிதர்” என்ற புகழ்பெற்றார்.
சூரியன் ஆத்மகாரகன். மூளைக்கு அதிபதி.
ஒருவனுக்கு அறிவு சுடர் விட்டுப் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று சொன்னால், மூளைத்திறன் அவசியம் அல்லவா. சிலர் பட்டம் வாங்கி இருப்பார்கள். ஆனால் அதற்கான அறிவோ சிந்திக்கும் ஆற்றலோ இருக்காது. ஆனால் ஏராளமான டிகிரி எல்லாம் வாங்கி பையில் வைத்திருப்பார்கள் .
புதன் வித்யாகாரகன். கல்விக்கு அதிபதி. கல்வி சிறக்க வேண்டும் என்று சொன்னால், குழந்தைக்கு நரம்பு பலம் வேண்டும்.
சில குழந்தைகள் என்ன தான் படித்தாலும், படிப்பில் ஆர்வம் இருந்தாலும், அவர்கள் மூளையில் அது சென்று படிவதில்லை.
மனப்பாடம் செய்வார்களே தவிர கிரகிக்கும் ஆற்றல் இருக்காது.
எனவே மூளையின் பலமும் புத்தி நரம்புகளின் பலமும் சிறப்பாக இருக்க, அவை இரண்டும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்பதால்தான் புத ஆதித்யா யோகம் பற்றி மிக விரிவாக நமது ஜோதிட நூல்கள் பேசுகின்றன .
இங்கே சில ஜாதகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.புதன் வலுவிழந்து நின்றதால் கல்வித்தடை ஏற்பட்டதை அலசும் ஜாதகங்கள்.
இவைகளில் சில ஜாதகங்கள், குடும்ப சூழலால் கல்வித்தடை ஆனவை.
இது போன்ற ஜாதகங்களில் அவர்களுக்கு சரியான ஆலோசனையும் உதவியும் கிடைத்திருந்தால் அவர்கள் தடையை மீறி படித்திருக்க முடியும்.
1.உதாரண ஜாதகம்
கன்னியா லக்கினம். லக்னத்தில் கேது. இரண்டில் சுக்கிரனும் சந்திரனும். நான்கில் சூரியன் புதன். ஐந்தில் செவ்வாய். ஏழில் ராகு, சனி. 12ல் குரு.
இது ஒரு பெண்ணின் ஜாதகம். இவர் ஐந்தாம் வகுப்பு கூட தாண்ட வில்லை. இளமையிலேயே திருமணம் நடந்து, குழந்தை கணவன் என சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
விதி:புதன் 6,8,12 ம் அதிபதிகள் சேர்க்கை,பார்வை பெறக்கூடாது.
அப்படி இருந்தால் கல்வி தடைபடும்.நான்காம் வீடும் பலமடைய வேண்டும்.இங்கு சூரியனும் புதனும் கேந்திரத்தில் இருந்தாலும், புத ஆதித்ய யோகம் செயல்படவில்லை. காரணம், புதன் 12 ஆம் அதிபதியான சூரியனோடு, படிப்புக்கான நான்காம் இடத்தில் இருக்கிறார். இதனால் 4-ஆம் இடமும் கெட்டு, புதனும் செயலிழந்தது. அடுத்து, அந்த இடத்துக் குரிய குருவும் விரயத்துக்குச் சென்று விட்டார். எனவே படிப்பு எட்டாக் கனியாகி விட்டது. போதாக்குறைக்கு சனியின் 10-ஆம் பார்வையும் அந்த இடத்துக்கு இருப்பதை கவனித்தால் கல்வித் தடையின் காரணம் புரியும்.
- உதாரண ஜாதகம்
ஜாதக அமைப்பு:கடக லக்கனம், இரண்டில் கேது, மூன்றில் சனி, ஐந்தில் சூரியன், ஆறில் சுக்கிரன், புதன். ஏழில் சந்திரன், செவ்வாய். எட்டில் குருவும் ராகுவும்.
ஜாதகர் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. ஒரு கடையை வைத்துப் பிழைத்துக் கொண்டார். மற்றபடி வாழ்க்கையில் பெரிய பிரச்சினைகள் எழவில்லை. ஆனால் இவரோடு பயின்றவர்கள் மேலும் மேலும் கல்வி கற்ற போது இவர் பள்ளியில் இருந்து நின்று விட்டார்.
விதி:புதன் 6,8,12 ல் மறையக்கூடாது.பொதுவாக 6ம் இடத்து புதன் கல்வியில் தடை தருவார்.
இங்கே 3 ,12 க்கு உரிய ஆதிபத்தியம் பெறுகின்றார் புதன். ஆறாமிடத்தில் இருப்பதும் குறை. அவர் சுக்கிரனோடு சேர்ந்து 12-ஆம் இடத்தை பார்வையிடுகிறார். லக்கினத்திற்கு நான்காம் இடத்துக்குரிய சுக்கிரனும் 3 , 12 க்கு உரிய புதனோடு அமைந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். சுபக்கிரகத்தின் பார்வையும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. நான்காம் இடத்தில் வித்யா அதிபதியான புதனும் வலுவிழந்ததால் படிப்பு தடைப்பட்டது.
ராசி வழியாக பார்த்தாலும் சந்திரனுக்குப் பன்னிரெண்டில் அவர் அமர்ந்திருக்கின்றார்.
உதாரண ஜாதகம்
மீன லக்னம். லக்னத்தில் கேது. நான்கில் சூரியன் புதன். ஐந்தில் சுக்கிரன். ஏழில் குரு சனி ராகு. பதினொன்றாம் இடத்தில் சந்திரன்.
இவர் படிக்கவில்லை.கடை வைத்து சிறு வியாபாரம் வாழ்நாள் முழுதும் செய்தார்.படிக்கும் குடும்ப சூழல் இல்லை.பள்ளிக்கூடம் செல்லவும் இல்லை.
விதி :6ம் இடது சம்பந்தமும் அஸ்தங்க தோஷமும் சனி பார்வையும் கல்வியில் தடை தரும்.
இங்கே நான்காம் இடத்தில் புதன் ஆட்சி பெற்று இருக்கிறார். ஆறாம் இடத்துக்குரிய சூரியனோடு இணைந்து இருக்கிறார். சனி யின் 10-ஆம் பார்வையும் அவருக்கு இருக்கிறது.
ராசி வழியாக பார்த்தாலும், சந்திரனுக்கு ஆறாமிடத்தில் சூரியனும், புதனும் இணைந்து இருக்கிறார்கள். சூரியன் சந்திர ராசிக்கு அஷ்டமா திபத்யம் பெற்றிருக்கிறார். சந்திரனுக்கு ஆறாம் ஆதி புதன் கல்வி முன்னேற்றத்தைத் தராது. மேலும் அந்த புதன் சந்திரனுக்கு விரைய ஸ்தானத்தைப் பார்க்கிறது.
உதாரண ஜாதகம்
லக்னம் விருச்சிகம். லக்னத்தில் கேது, சுக்கிரன், ஏழில் ராகு. 9ல் சனி. பதினோராம் இடத்தில் சந்திரன் பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய், புதன், சூரியன், குரு.
இந்த ஜாதகர் உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. வேலையும் இல்லாமல் தொடர்ந்து ஒரு சிறு வியாபாரம் நடத்தி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
விதி:புதன் விரயத்தில் இருந்தாலும் 6,8,12 அல்லது பாதக அதிபதிகள் சேர்க்கை சாரம் பெற்றாலும் கல்வியில் தடை ஏற்படும்.
இந்த ஜாதகத்தில் சூரியனும் புதனும் விரய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். கல்வி ஸ்தானமான நான்காம் இடத்துக்கு உரிய சனி, நான்காம் இடத்திற்கு எட்டாம் இடத்தில், பகை கொண்டு அமர்ந்திருப்பதை கவனித்தால், ஏன் இவருக்கு படிப்பு தடைபட்டது, கல்வி ஸ்தானம் ஏன் கெட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ராசி வழியே பார்த்தாலும், சந்திரனுக்கு 4 க்குரிய குரு, சந்திரனுக்கு 12 ம் இட சூரியனோடு இணைந்ததும், புதன் 12க்கு உரிய சூரியனோடு இணைந்ததும், கல்வி தடைபடுவதைக் காட்டுகிறது.
- உதாரண ஜாதகம்
துலா லக்கினம். லக்னத்தில் சந்திரனும் சுக்கிரனும். நான்கில் சனி, கேது. ஐந்தில் குரு. 10ல் செவ்வாய், ராகு.12 ல் சூரியன்.
இவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்.வியாபாரம் செய்கிறார்.நன்கு உழைத்து பொருளீட்டி வீடு வாசலோடு இருக்கிறார்.படிப்பு நின்று விட்டது.
விதி :நான்காம் இடம் கேது ராகுவால் பாதிக்கப்படக் கூடாது.புதன் பாதகாதிபதியோடு சேர்ந்து விரயம் புகுந்து எதிர் பலம் பெறக்கூடாது.
இங்கே வித்யா காரகனான புதன் விரையாதிபதித்துவம் பெற்றதும், துலா லக்னத்திற்கு பாதகாதிபதியான சூரியனோடு சேர்ந்ததும் குறை.
சந்திர ராசிக்கும் இதுவே. வித்யா இடமான நான்காம் இடத்தில் சனி கேதுவோடு இருக்கிறார். செவ்வாய், ராகு நான்காம் இடத்தைப் பார்க்கிறர்கள்.
- உதாரண ஜாதகம்
சிம்ம லக்னம். இரண்டில் செவ்வாய், சனி. மூன்றில் குரு. நான்கில் சூரியன். 5ல் புதன், கேது. 6ல் சுக்கிரன். பத்தில் சந்திரன். பதினொன்றில் ராகு.
இவரால் உயர்நிலைப் படிப்பைத் தாண்ட முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கல்வி தொடர்ந்து தடைபட்டது. படிப்பு தொடர முடியாமல் நின்று போய் விட்டது.
விதி: புதன், ராகு கேது போன்ற சர்ப்ப கிரகங்களோடு சம்பந்தப்படும் பொழுது பலவீனம் அடைகின்றார்.கல்வித் தடை ஏற்படுகிறது.
லக்னத்துக்கு 2, 11 க்கு உரிய புதன் ஐந்தாம் இடத்தில் குருவின் வீட்டில் இருக்கின்றார். அவரோடு கேது இருப்பதும், ராகு புதனைப் பார்ப்பதும் கல்வித் தடையை ஏற்படுத்தியது. நான்காம் பாவத்தில் சூரியன் நட்போடு இருந்தாலும், அந்த பாவத்தை 12ஆம் அதிபதியான சந்திரன் பார்க்கிறார் என்பதோடு, சனியும் அந்த பாவத்தைப் பார்க்கிறார். புதனுக்கு செவ்வாயின் நாலாம் பார்வையும் இருக்கிறது.
சந்திர ராசிப்படி பார்க்கும்பொழுது, நான்காம் பாவத்து வித்யா ஸ்தானாதிபதி சூரியன், ஏழாமிடத்தில் நட்போடு இருப்பது ஓரளவு நல்ல கல்வியைத் தந்தாலும் கூட, சனியின் பார்வை அவரைத் தொடர விடாமல் செய்கின்றது. வித்யாகாரகனான புதன் சந்திர ராசிக்கு அஷ்டமத்தில் கேதுவோடு இருப்பதும் ஒரு கல்வித்தடை விஷயமே ஆகும்.
- உதாரண ஜாதகம்
துலா லக்கினம். இரண்டில் கேது. நான்கில் சந்திரன். ஐந்தில் சனி .ஆறில் புதன். ஏழில் சூரியன், சுக்கிரன். எட்டில் குரு, ராகு. பதினொன்றில் செவ்வாய்.
இந்த ஜாதகர் ஆறாம் வகுப்பைக் கூடத் தாண்டவில்லை. ஒரு சாதாரண பெட்டிக் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்.
விதி: புதன் 6-ஆம் இடத்தில் இருந்தாலும், நீச்சம் அடைந்து நீச்ச பங்கம் பெறாமல் இருந்தாலும் கல்வித் தடையைக் காட்டும்.
இந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 ல் புதன் தனித்து நீசம் அடைந்திருக்கிறார். அவரை செவ்வாய் எட்டாம் பார்வையாகப் பார்க்கிறார். சந்திர ராசிப்படியும் வித்யா காரகனான புதன், ராசிக்கு 3 ல் நீச்சம் அடைந்து இருக்கிறார். ஆறாம் இடத்தில் புதன் பலஹீனமானால் கல்வித்தடை ஏற்படுவதோடு, வாழ்வில் விரக்தியும் ஏமாற்றமும் உற்சாகமின்மையும் ஏற்படும். இவர் வாழ்க்கையைத் தொடர்ந்து கவனிக்கும் போது நமக்கு கிடைக்கும் பாடம் இது.
இதற்கு மற்ற கிரகங்கள் துணை நின்றாலும் கூட புதனும் தன் பங்குக்கு வேலை செய்கின்றார். அதிக அளவில் பொருளாதார முன்னேற்றமோ மற்ற வசதிகளோ தரவில்லை.
முக்கியக் குறிப்பு
இதிலே கொடுக்கப்பட்டு இருக்கிற ஜாதகங்கள் கிட்டத்தட்ட 60 ஆண்டு காலமாகச் சேகரித்த ஜாதகங்கள். எனவே இதில் எதிர்கால பலன்கள் ஊகித்துச் சொல்லப்படவில்லை. நடந்த பலன்கள் ஜாதகத்தில் இருந்து எடுக்கப்பட்டு விதிகளோடு பொருத்தப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு இருக்கின்றன.
எனவே இப்போது சொல்லப்படும் பலன்கள் நடக்குமா நடக்காதா என்கின்ற கேள்விக்கு இடமில்லை. இன்றைய தேதிக்கு இந்த ஜாதகம் இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து நாம் சில நல்ல செய்திகளைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த ஜாதகங்களைக் கொடுத்திருக்கிறோம்.
இதில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இங்கே பொதுவாக கல்வித்தடை என்கின்ற விஷயம் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இதில் இன்னொரு வியப்பூட்டும் விஷயம் உண்டு .
பள்ளிக்குச் சென்று பயில்வது மட்டுமே கல்வி அல்ல.
இந்த ஜாதகத்தில் உள்ள ஒரு சிலர், படித்து பட்டம் வாங்க வில்லையே தவிர, அனுபவ அறிவு ஏராளமாக இருந்ததையும் கவனிக்க முடிந்தது.
சிலர் உலக விஷயங்களை நன்கு ஆராய்ந்து பேசக்கூடிய திறமையும், ஒரு பஞ்சாயத்து என்று வந்தால் ,இரு பக்க நியாயத்தையும் அலசி லௌகீகமாக முடிவெடுத்து ஏற்றுக்கொள்ளும்படி சொல்லும் திறனும் பார்க்க முடிந்தது.
ஒரு சிலர் படிக்கவில்லையே தவிர ,பிறரோடு இனிக்க பேசி நட்புறவு வளர்க்கக்கூடிய திறனும் இருந்ததைக் காண முடிந்தது.
ஆனால் புதன் அமைப்பு சரியாக இல்லாவிட்டால், “புத ஆதித்ய யோகம்” செயல்படுவது இல்லை.
புதனும் கல்வித் தடையை ஏற்படுத்துகிறது என்பதே நிறைவாக நாம் பார்க்க வேண்டிய விஷயம்.
