ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595–1671) 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் ஜீவா சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார்.
வேங்கடநாதர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வேங்கடாசலபதியின் அருளால் மூன்றாவதாக ஒரு பிள்ளை தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர்.
வேங்கடநாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் தன் அண்ணன் திரு குருராய பட்டரிடம் வளர்ந்தார். அவரது அடிப்படைக் கல்வியை அவர் மைத்துனர் திரு லட்சுமி நரசிம்மாசாரியாரிடம் மதுரையில் பயின்றார். அவர் மதுரையிலிருந்து திரும்பியவுடன் வேங்கடநாதர் சரசுவதி என்பவரை மணந்தார். அவரது திருமணத்திற்கு பிறகு அவர் கும்பகோணத்திற்கு குடியேறினார். அங்கே அவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் பயின்றார். சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவரான அவர் பல அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். அதற்கு அவர் தன் மாணவர்களிடம் எந்த தட்சணையும் எதிர்பார்க்காததால் வறுமையில் வாழ்ந்தார். இதனால் அவரும் அவர் குடும்பமும் வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். இவ்வாறு வறுமையில் வாடியும் அவர் கடவுள் மேல் மிக்க நம்பிக்கையுடன் இருந்தார்.
வேங்கடநாதருக்கு மனதிற்குள்ளே ஸ்தோத்திரம் சொல்லும் பழக்கம் இருந்தது. ஒரு முறை அவர் கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு அழைக்கபட்டார். அழைத்தவர் வேங்கடநாதரை சரியாக நடத்தவில்லை. அவர் தான் வழங்கும் விருந்திற்கு ஏதேனும் வேலை வாங்க வேண்டும் என்று வேங்கடநாதரை சந்தனம் அரைத்துதரச் சொன்னார். அந்த சந்தனம் மற்ற விருந்தினர்க்கு உடம்பில் பூசிக்கொள்ள கொடுக்கப்பட்டது. அவ்வாறு பூசிக்கொண்ட விருந்தினர்க்கு உடல் முழுக்க எரிச்சல் ஏற்பட்டது. வியப்படைந்த அழைத்தவர், வேங்கடநாதரை கேட்டபோது அவர் சந்தனம் அரைக்கும்போது ‘அக்னி சூக்தம்’ என்ற தோத்திரத்தை ஜபித்ததாகவும் அதன் காரணமாகவே அந்த எரிச்சல் ஏற்பட்டதாகவும் கூறினார். இவ்வாறு கூறிய வேங்கடநாதர் வருண மந்திரத்தை ஜபித்து விருந்திற்கு வந்தவர்களின் எரிச்சலை போக்கினார். அதன் பிறகு, அழைத்தவர் தான் தவறை உணர்ந்து அவரை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு நல்ல முறையில் கெளரவித்தும் அனுப்பினார்.
குரு ராகவேந்திரரின் 353 வது ஆராதனை வரும் புதன்கிழமை 21.8.24 நடைபெற இருக்கிறது. இது மூன்று நாட்கள் நடைபெறும். 19 ,20, 21 என்று எடுத்துக் கொள்ளலாம். 19ஆம் தேதி பூர்வ ஆராதனையும், 20ஆம் தேதி மத்திய ஆராதனையும், 21ஆம் தேதி உத்தர ஆராதனையும் நடைபெறும். இது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள எல்லா ராகவேந்திரமடாலயங்களிலும் கொண்டாடப்படும்
ஸ்ரீ ராகவேந்திரருடைய மடங்கள் மிர்த்திகா பிருந்தாவனம் அதாவது அந்த மண்ணை எடுத்து வந்து கட்டிய புனிதமான இடங்கள் என இந்த இடங்களில் ஆராதனை கோலாகலமாக நடக்கும். பக்தர்கள் ஆராதனையில் ஆர்வமாகக் கலந்து கொள்வார்கள் .
எப்படி எல்லாம் இந்த ஆராதனையைக் கொண்டாடலாம் என்றால் ஒரு ஆசனம் போட்டு அமர்ந்து தொடர்ச்சியாக ராகவேந்திரனுடைய ஸ்தோத்திரத்தை அல்லது அவருடைய எளிமையான மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவருஷாய நமதாம் காமதேனுவே
என்ற மந்திரத்தைச் சொல்லலாம். ராகவேந்திர பிருந்தாவனம் அல்லது மடாலயத்தில் நம்மால் இயன்ற சேவைகளைச் செய்யலாம்.
பிருந்தாவனத்தை அடிமேல் அடிவைத்து அடி பிரதஷணம் செய்யலாம். ஒவ்வொரு பிரதட்சணத்தின் முடிவிலும் குரு ராயருக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். அங்கப் பிரதட்சணமும் செய்யலாம். ஆனால் இது ஆடவர்களுக்கு மட்டும் தான் விதிக்கப்பட்டு இருக்கிறது.
அபிஷேக பொருள்களை கொடுத்து ஆராதனையில் கலந்து கொள்ளலாம் .
குரு ராகவேந்திரனுடைய இலக்கியங்கள் அவருடைய எழுத்துக்கள் ஸ்ரீ மத்வ விஜயம், ஸ்ரீ ராகவேந்திர விஜயம் இவற்றை வாசிக்கலாம் .இதன் மூலம் குரு ராயரின் பேரருளைப் பெறலாம்.
