இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள் -11
ஜாதகத்தில் ஒன்றாம் இடம் கணவனைக் குறித்தால், ஏழாமிடம் மனைவியைக் குறிக்கும்.
ஒன்றாம் இடம் மனைவியைக் குறித்தால், ஏழாமிடம் கணவனைக் குறிக்கும்.
ஜாதகத்தில் 1ஆம் இடமும், 7ஆம் இடமும் நேர் எதிர்பாவங்கள். இந்த நேருக்கு நேர் பாவத்தில் ஒன்றுக்கொன்று சமமாக, ஏற்ற இறக்க மின்றி இருந்தால் தான்(balanced) எதுவுமே சரியாக இருக்கும்.
7ம் பாவத்திற்கு முன்னால் உள்ள பாவங்களான தன் குடும்பம் (2), தன் தைரியம், வீர்யம் (3 )தன் படிப்பு (4) தன் சந்தோஷம்( 5) தன் வேலை (6) என்ற பாவங்களைக் கடந்து, ஒருவர் வாழ்க்கை, தனக்குரிய நட்பு, தொழில்(7) என அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது .
இங்கிருந்துதான் மறுபாதி வாழ்க்கை ஒருவருக்கு ஆரம்பிக்கிறது.
360 டிகிரியில், 180 டிகிரி பாகையில் இருந்து அடுத்த பகுதி ஆரம்பித்து விடுகிறது.
இந்த ஏழாம் பாவம் என்பது இரண்டு விதமான பங்குதாரர்களைக் குறிக்கும்.
- வணிக பங்குதாரர்கள், நண்பர்கள்(Business partners and friends)
- வாழ்க்கையைப் பங்குபோடும் மனைவி மற்றும் கணவன் உறவுகளையும் குறிப்பிடுகிறது .(Life Partner)
இந்த இரண்டும் சமமாக இருக்க வேண்டும் .
நட்பில் சரிசமம் இல்லாமையால் தான்,(unbalanced friendship) துரோண ருக்கும், பாஞ்சால நட்டு அரசன் துருபதனுக்கும் நட்பு விலகியது. பிரச் சனை வந்தது.அது அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, துரோணர் உயிர் துறக்க காரணமாகியது.
இதுவும் 7ம் இட விளையாட்டுதான்.
சமமாக இயல்பில் இல்லாமல் இருந்தாலும், அதைச் சமப் படுத்துவதின் மூலமாக,(balanced act) இந்த பாவத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணமாக அமைந்தது தான் கண்ணன் குசேலன் நட்பு.
துருபதன் 7ம் பாவத்தை சரியாகக் கையாளவில்லை.
கண்ணன் 7ம் பாவத்தை சரியாகக் கையாண்டான்.
இவை இரண்டும் ஏதோ இதிகாச புராணங்கள் அல்ல. ஜோதிட சாஸ்திர நுட்பத்தை,அது புகட்டும் வாழ்வியல் பாடங்களைத் தெரிவிக் கக்கூடிய சம்பவங்கள்.
சரி, கணவன் மனைவி விஷயத்துக்கு வருவோம்.
ஒரு அருமையான பாட்டு.கவிஞர் கண்ணதாசன் பாடியது.
“வண்டி ஓட,
சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்,
எந்த வண்டி ஓடும்?”
வண்டி ஓட வேண்டும் என்று சொன்னால், இரண்டு சக்கரங்கள் வேண்டும். இது ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும் பொழுதோ, அல்லது இணையாக ஆக்கிக் கொள்ளும் பொழுதோ, சிக்கல்கள் எழுவதில்லை.
அது தவறுகின்ற பொழுது, வண்டி ஓடுவதில்லை என்பது மட்டுமல்ல, கவிழ்ந்தும் விடுகிறது.
இதைக் கவனித்து சரி செய்து விட்டால், கொஞ்சம் முன் பின் இருந்தாலும், வண்டி ஓடி விடும்.
பெரும்பாலும், நூற்றுக்கு 90 பேர், இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வண்டி ஓட்ட முடியாதவர்கள் 7ல் சனி, ராகு, கேது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சுதா சந்திரன், உங்களுக்குத் தெரியும்.1984-ம் ஆண்டு வெளி வந்த மயூரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
1986-ம் ஆண்டு இந்த திரைப்படம் நாச்செ மயூரி என்ற பெயரில் இந்தி மொழியில் ரீ மேக் செய்யப்பட்டது.
மயூரி திரைப்படத்திற்காக 1986-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதை பெற்றுள்ளார்.
இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
1981-ம் ஆண்டு ,இவர் பயணம் செய்த வாகனம் திருச்சிராப்பள்ளி அருகே விபத்துக்குள்ளானது.
காயமடைந்த சுதா சந்திரனின் வலது காலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது.
காலினை இழந்த பின், ஜெய்பூர் செயற்கைக் காலை பொருத்திக்கொண்டு, இவர் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
ஐரோப்பா, கனடா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
காலைப் பதம் பார்த்த கிரகம், மனதை பதம் பார்க்கவில்லை.
முயற்சி ,புத்திசாலித்தனம் கொண்டு சமமில்லாத வாழ்க் கையை சமன் செய்தார்.
இதே தான் எல்லா விஷயத்திற்கும்.
எந்த விஷயத்திற்கும் ஒரு தீர்வு இருக்கும். ஆனால் அது வெளிப் படையாகச் சொல்லாது. ஊகிக்க வேண்டியிருக்கும்.
இந்த ஊகங்கள் தவறுகின்ற பொழுது, ஜோதிட பலன்கள் மாறிவிடும்.
இதைத் துல்லிய கணித சாஸ்திரத்தில் மட்டும் தெரிந்துகொள்ள முடியாது.
“உள்ளுணர்வுகள்” எந்த கடினமான கணிதத்திற்கும் கட்டுப்படாது.
நீங்கள் ராக்கெட் விடுவதைப் பார்த்து இருப்பீர்கள். அந்த ராக் கெட்டின் ஒவ்வொரு செயல்பாடும் நேனோ செகண்ட்ஸ்லில்(nano seconds) நிர்ணயிக்கப்பட்டு திட்டமிடப்பட்டிருக்கும்.
மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட கணக்குகள் என்பதால், அதனுடைய அடிப்படையை, மனித மனம் தீர்மானிக்கும்.
கணக்கின் துல்லியத்தை கணிப் பொறி தீர்மானிக்கும்.
அந்த கணிப்பொறிகள் முழுமையான திட்டத்தை இயக்கும்.
ஆனால், நீங்கள் கவனித்திருக்கலாம்.
இந்த நேனோ செகண்ட்ஸ் துல்லிய திட்டத்தில், ஒரே ஒரு நானோ செகண்ட்ஸ்(nano seconds) தவறுகின்ற போது, மொத்த ராக்கெட் ப்ராஜெக்ட்டும் காலியாகிவிடும்.
அது வானத்திலேயே இடிந்து தூள் தூளாக மாறிவிடும்.
இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டால்தான் ஜோதிட பலன் சொல்வதில் உள்ள சிரமம் வெளிப்படும்.
ஜோதிட பலன் குறித்து சொல்வதில் இறை உணர்வும் உள்ளு ணர்வும் மிக முக்கியம்.
அதுதான் அந்த நானோ செகண்ட் வித்தியாசத்தை வேறுபடுத்திக் காட்டும். அது கணக்கில் வராது.உள்ளேயிருந்து ஒரு சின்ன உள்ளுணர்வு பேசும்.
இன்னொன்றும் சொல்கிறேன்.
உங்கள் 9 ம் இடம் பலமாக இருந்தால்,இந்த உள்ளுணர்வு உங்க ளுக்கே வரும்.
எனவேதான் திரும்பத்திரும்பச் சொல்லுகின்றேன்.
1.வேத சாஸ்திரமான ஜோதிடம் உண்மை.
2.அதை நுட்பமாக உணரும் சக்தி , எந்த மனிதனுக்கும் முழுமை யாகக் கொடுக்கப்படவில்லை.
திருமண பொருத்தம் பார்ப்பதில் மிகவும் வல்ல ஒரு ஜமீன்தார் இருந்தார்.
எல்லோரும் அவரிடம் திருமண பொருத்தத்தைக் காட்டுவார்கள்.
அவர் காலையில் குளித்துவிட்டு பூஜை அறையில் இருந்து வந்தவுடன், பொருத்தத்தை மட்டும் காட்டுவதற்கு உட்கார்ந்து இருக்கக் கூடிய நபர்களிடம், ஜாதகத்தைப் வாங்கி பார்ப்பார்.
“செய்யலாம்,செய்யக் கூடாது” என்பதைச் சொல்லிவிடுவார்.
அனேகமாக அவர் சொல்லி எதுவும் பொய்த்ததில்லை.
ஒரு நாள் அவரைத்தேடி ஒருவர் வந்திருந்தார். இரண்டு ஜாதகத்தைக் காண்பித்தார்.
இரண்டையும் சேர்க்கலாம் என்று சொல்லி விட்டார். கல்யாணம் நடந்து முடிந்துவிட்டது.
ஆனால் சில நாட்களுக்குள்ளேயே அந்தக் கல்யாணம் விவகாரம் ஆகி விட்டது.
உடனே, அவர் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு மறுபடி ஜமீன்தாரைப் பார்ப்பதற்காகப் போனார்.
பூஜை அறையிலிருந்து வந்த ஜமீன்தார் இவரைப் பார்த்தவுடன் திடுக்கிட்டார்.
இவர் பையிலிருந்து ஜாதகங்களை எடுப்பதற்கு முன் அவர் சொல்லி விட்டார்.
“நீங்கள் ஜாதகங்களை எடுக்க வேண்டாம். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. எல்லா நேரங்களிலும் சரியாக சொல்லுகின்ற நான், அன்று உங்களுக்குச் சொல்லுகின்ற பொழுது ஏதோ ஒரு கிரகம் என்னுடைய கண்ணைக் கட்டிப்போட்டு விட்டது. என் பலம் தவறி விட்டது என்பது நன்றாகத் தெரிகிறது. இதுதான் இறைவன் திருவுள்ளம்.வேறு என்ன சொல்ல?” என்றாராம்.
இங்கு இதைச் சொல்வதற்குக் காரணம் ,நீங்கள் ஜோதிட பலனை ஒரு வழிகாட்டியாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.
விதி சமயத்தில் – (எல்லா நேரத்திலும் அல்ல) -வென்று விடும் வாய்ப்பும் உண்டு .
அப்போது, ஜோதிடக் கணிப்பு(ஜோதிடம் அல்ல) தவறும் வாய்ப்பும் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
பிரஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் எதிர் அசைவுகள் உண்டு.
அந்த அசைவுகள், நொடிகள் தோறும் அசைந்து, விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அவைகளை நம்மால் அளக்க முடியாது. ஆயினும் சில அடிப்படை விதிகளை வைத்துக்கொண்டு அவரவர்கள் உள் உணர்வுக்கும்,அனுபவ ஆராய்ச்சிக்கும் ஏற்றபடி பலன்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
ஆகையினால் தான் பெரும்பாலான ஜோதிட பலன்கள் நடக்கும் என்று அடித்துச் சொல்ல முடியாதபடி இருக் கின்றன.
“நடக்கலாம். அதற்கு ஏற்ற மாதிரி நீ உன்னைத் தயார் படுத்திக் கொள்” என்று தான் சொல்ல முடியும்.
கிரகங்களின் அசைவுகள் கடந்த காலத்தில் எப்படி இருந்ததோ, அதே விதமான அசைவுகளும் விளைவுகளும் எதிர்காலத்திலும் இருக்கும் என்பதே, ஜோதிட பலன் சொல்லும் முறையின் அடிப்படை.(logical base)
ஆனால், சில நேரங்களில் அவைகள் மாறிவிடுவது உண்டு.
அதைத் தீர்மானிப்பது அந்த கிரகங்கள் தானே தவிர, எந்த திட்டமிட்ட விதியும், அதைத் தீர்மானிப்பது கிடையாது.
இதை விதி விலக்குகள் (Exceptions) என்கிறோம்.விதி விலக்குகள் சிறிது காலத்தில் ஒரு விதியாக மாறி சேர்க்கப்படும்.
இதுவும் ,9 ஜாதகங்களுக்கு பலன் தரும் போது, 10 வது ஜாதகம் வேறு மாதிரி இருக்கும்.
அங்கே இன்னும் ஒரு விதி விலக்கு வரும்.
சிறப்பு அரசாணை(special G.O) என்று சொல்வது போல், அதை நீங்கள் மற்ற ஜாதகங்களுக்குப் பயன்படுத்தமுடியாது. இவை போன்று விசித்திரமான பலன் தரும் ஜாதகங்களும் உண்டு.
அதனால், இது விஞ்ஞானம் இல்லை என்று சொல்ல முடியாது.
ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.
சாட்டிலைட் படத்தின் மூலமாக, நாம் ஒரு மழை மேகத்தின் அடர்த்தியைப் பார்த்து விடுகிறோம்.
அதை வைத்துக்கொண்டு மழை பெய்யும் என்பதைச் சொல்லி விடலாம்.
ஆனால், பல நேரங்களில் அவைகள் திசைமாறிச் சென்று விடு வதையும் காணுகின்றோம்.
எல்லா நவீன விஞ்ஞானத்திலும் இது உண்டு.
எஸ்டிமேட்(proposed Estimate) என்று துல்லிய கணக்கு போடு வோம்.ஆனால் பல காரணிகளால் அது கொஞ்சம் கொஞ்சம் மாறும்.
நீங்கள் திட்டமிட்டதற்கும்,(planned) நடந்ததற்கும்(actual) உள்ள வேறுபாட்டை, வேறுபடுதல் (Deviation) என்று சொல்வார்கள்.
அதைப்போலவே இன்னொன்றும் சொல்லலாம்.
புயலின் திசை, வேகம், நுட்பமான கருவிகளால் அளக்கப்பட்டு ஒரு நிபுணர் குழுவால் சொல்லப்பட்டாலும் கூட பல சந்தர்ப் பங்களில்,அது வேறு பகுதிகளில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
அல்லது சமயங்களில், நாம் பல முன்னேற்பாடுகளை செய்து இருந்தாலும் கூட, அந்தப் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லாமல் நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கும்.
அதேதான் கிரகங்களின் மூலம் பாதிப்புகள் அல்லது நன்மைகளை அளவிடுவதிலும் இருக்கிறது.
நேற்று சொல்லப்பட்ட வானிலை அறிக்கையை விட, நாளைய வானிலை அறிக்கை இன்னும் துல்லியமாகலாம் .
ஆனால் 100% நடந்துவிடும் என்று சொல்லவே முடியாது.
அது பிரபஞ்ச ரகசியம்.
அந்த ரகசியத்திற்கு உட்பட்டுதான் நம்மைப் போன்ற ஜீவராசிகள் இருக்கின்றன.
காரணம், ஜோதிடத்தின் எல்லைகள்(limitations) என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல்,ஜோதிடர் நம் வாழ்க்கையை, தலை கீழாக மாற்றி விடுவார் என்று நினைப்பது தவறு.
ஜாதகக் கட்டங்கள் பிரச்சினையை மட்டும் காட்டாது.தீர்வையும் தீர்வையும் உள்ளடக்கியதாகவே இருக்கும்.
சாவியில்லாமல் எந்தப் பூட்டும் செய்யப்படுவதில்லை. பூட்டியி ருக்கிறதே என்று கவலைப் படாதீர்கள்.சாவியைத் தேடுங்கள்.சில நேரங் களில் மாற்றுச் சாவியும் தேவைப்படும்.பயன் படுத்துங்கள்.
அதனை இறை அருளோடு சிந்தித்தால், பிரச்சினைக்கான தீர்வுகளும் கிடைக்கும்.
தீர்வை நோக்கி மட்டுமே நகர வேண்டும் என்பதுதான் நான் நேயர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது.
இதை இவ்வளவு விரிவாக ஆராய்வதற்குக் காரணம், இதில் பல நுட்பமான கருத்துக்களும் இருக்கின்றன.
எப்படி ஜோதிட சாஸ்திரத்தை அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால்தான், அந்த விதிகளுக்குள் விளையாட முடியுமா என்று பார்க்க முடியும்.
எப்படி விளையாடுவது?
அதன் சக்தி என்ன?
நம் எல்லை என்னை?
கிரகங்கள் தரும் தீய பலனை சமாளிப்பது எப்படி?
அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆராய முடியும். ஆராய்வோம்.