ஆண்டாளின் அழகுத் தமிழுக்குச் சங்கத்தமிழ் என்றொரு பெயருண்டு.
கோதை ஆண்டாள்: தமிழை ஆண்டாள்: தமிழால் இறைவனை ஆண்டாள்.
ஆண்டாளின் பிரபந்தங்கள் இரண்டு. முதலாவது திருப்பாவை. இரண்டாவது நாச்சியார் திருமொழி.
திருப்பாவையிலே ஒருவிதமான கம்பீரம் தொனிக்கும் பாட்டு இருபத்து மூன்றாம்பாட்டு.
மாரிமலை முழைஞ்சில் என்ற அற்புதமான பிரயோகத்தோடு தொடங்கும் இப்பாட்டை அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் வர்ணமெட்டு அமைக்கும் போது பிலஹரி ராகத்திலே அமைத்தார்.
சங்கராபரண ஜன்ய ராகமாகிய பிலஹரிக்கு ஒருவித கம்பீரமும் சுகானுபவமும் உண்டு. அதுவும் எம்.எல். வசந்தகுமாரியின் மணிக்குரலில் பிலஹரிக்கு இருக்கக் கூடிய அத்தனை கார்வை கமகங்களையும் கொடுத்து, விடிகாலை வேளையில் இப்பாசுரம் காதில் விழும்போது இரத்த ஓட்டம் கூட ஒரு புத்துணர்ச்சி பெறும்.
அந்த அற்புதமான பாசுரவரிகளை இனி கீழே காண்போம்.
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்க மறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப்பூ வண்ணாவுன்
கோயில் நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரிய மாராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!
ஆயர்பெண்கள், “கண்ணா! நாங்கள் வந்திருக்கிறோம். ராஜாதி ராஜனான நீ, எங்களுக்கு அருள் புரிய வேண்டும். அதுவும் எப்படித் தெரியுமா? கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் இருந்து எங்களுக்கு அருளிச் செய்ய வேண்டும். கொடுக்க வேண்டியவன் நீ! வாங்க வேண்டியவர்கள் நாங்கள்! உன் இடம் அவ்வளவு பெருமையுடையதாக இருந்து அலங்கரிக்க, அதில் வீற்றிருந்து நீ எங்களை அருளிச் செய்ய வேண்டும்.
கண்ணனின் கம்பீரத்தை அனுபவிக்கின்ற போது பக்திச் சுவையும் இந்தப்பாட்டில் கொப்பளிப்பதை அனுபவிக்கின்றோம்.
இனி வார்த்தைக்கு வார்த்தை வர்ண மயமான விரிவுரைகளை வாரி வழங்கிய வைணவப் பேருரையாளர்களின் வாக்கினை அனுபவிப்போம்.
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
மழைக்காலத்தில் மலைக் குகையில் என்று இந்த வார்த்தைக்குப் பொருள்.
மழைக்காலத்திலே எந்த செயல்களும் நடக்காது. வெளியே மழைகொட்ட, எங்கும் வெள்ளப் பெருக்காடாய் இருக்க, யார் நடமாடப் போகிறார்கள்? எல்லோரும் வீட்டிலே அடைந்து கிடப்பார்கள். அரசர்களும் அரண்மனையை விட்டு வெளியே வர மாட்டாத காலம் மாரிக்காலம்.
சீதையைத் தேடிக் கண்டு பிடிக்க சுக்ரீவன் உதவியை நாடினான் இராமன். அதற்குள் மாரிக்காலம் வந்துவிட்டது. சுக்ரீவன் கொடுத்த வாக்கை மறந்து அரண்மனையின் உல்லாசத்தில் இருந்து விட்டான்.
காரணம் அவனல்ல அப்படி அவனைச் செய்து விட்ட காலம் மாரிக்காலம்.
இராமனே சொல்கிறான்.
“இது மழைக்காலம்.உன்னால் வெளியே சென்று தேட முடியாது. மனைவியை பிரிந்த நீ, மழைக் காலம் முடியும் வரை அரண்மனையில் மகிழ்ச்சியாக இரு.மாரிக்காலம் முடிந்த பிறகு வா”
மிருகங்கள் கூட வெளியே நடமாடுவதில்லை. மிருகங்களுக்கு ராஜா சிங்கம். அதுவும் ஒரு குகைக்குள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.
இப்படி இராமாயண நிகழ்ச்சியை சொல்லிவிட்டு, “சுக்கிரீவன் மகிழ்ச்சிக்காக அரண்மனைக்கு சென்று விட்டான். உன்னைப் பிரிந்த நாங்கள் உன்னைத் தேடி வந்திருக்கிறோம் . பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் அனுபவிப்பதுமான காலத்திலே, கண்ணா! நாங்கள் வந்து உன் தலைவாசலிலே படாதபாடு படுகிறோமே! பார்த்தாயா! “ என்ற பாவம் வெளிப்படுகிறது இந்த முதல் வாக்கியத்தில்.
பெண்ணீர்மை ஈடழிக்கும் காலம் என ஆண்டாளே நாச்சியார் திருமொழியிலே இந்த மாரிக்காலத்தைப் பேசுவாள்.
இந்த மாரிக்காலத்தில் கண்ணனோ உள்ளே நப்பின்னை பிராட்டியோடு கூடிக்கிடக்கிறான். எப்படி? மலைக்குகையில் மிருகராஜாவாகிய சிம்மம் கிடப்பது போலே. நப்பின்னை மார்பின் மீது தலைவைத்து மயங்கிக் கிடக்கிறான் கண்ணன்.
மன்னிக்கிடந்து என்ற வரியின் அழுத்தத்தைப் பாருங்கள். மலைக்குகையிலே எத்தனையோ பெரிய பாறைகள் இருக்கின்றன. அதிலே ஒரு கம்பீரமான பாறை குகையோடு, குகையின் தரையோடு பொருந்திக் கிடப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா.
என்று ஏற்கனவே ஆண்டாள் சொன்னதுதான். இங்கேயும் அதனைச் சொல்கிறாள்.
அறிதுயில் என்ற பொய்த் தூக்கமன்றோ அது! உறங்குவான் போல் யோகுசெய்யும் பெருமாள் அவன்! கிடந்ததோர் கிடக்கை அல்லவோ இந்த இருப்பு!
அவன் தூங்குவது தூக்கமல்ல.யோகநித்திரை என்றன்றோ இதனைச் சொல்கிறார்கள்.
சீரிய சிங்கம்
கண்ணனை சிங்கத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறாள் ஆண்டாள். மிருகராஜனான சிங்கத்துக்கு வந்தபெருமை இயற்கையிலேயே இருப்பது. கற்பிக்கப்பட்ட பெருமை அல்ல.
தேவர்களுக்கெல்லாம் தேவன் திருமால். திருமாலுக்கு உள்ள பெருமை வேதங்களாலும் ஆகமங்களாலும் கொட்டி முழக்கப்படுகிறது.
சங்ககாலம் தொட்டு இந்தக் காலம் வரை சகல சான்றோர்களாலும் போற்றக்கூடிய அவன் புகழ் இயற்கையானது.
யசோதை இளஞ்சிங்கம் என்று முதல் பாட்டிலேயே இந்த வார்த்தை (சீரிய சிங்கம்) முத்திரை குத்தப்பட்டு விட்டது.
நரஸிம்மம் போலே கலந்த கட்டியாய்ச் சீர்மை கெட்டிராதே சிற்றாயர் சிங்கத்துக்கு என்று ஆறாயிரப்படி வியாக்கியானம் இந்த நிலையை அற்புதமாகப் பேசும்.
சீரிய சிங்கம்
சிங்கம் தூங்குகிறதே என்று எதிரில் எந்த மிருகங்களும் துணிந்து போக முடியாது. கண்ணன் என்ற சிங்கத்தை நினைத்தாலே கம்சன் போன்ற அசுரர்கள் மனதில் எழும் அச்சத்தை அளவிட முடியாது.
அறிவுற்று
காலம் கனியும் போது அறிதுயில் கலைபவன். தன்னை எழுப்புவதற்கு யாதொன்று மில்லை யாதலால் தானாகவே தன் ஆதிக்கத்தை நடத்துபவன்.
திருப்பள்ளியெழுச்சியோ சுப்ரபாதமோ பாடித்தான் அவன் எழ வேண்டும் என்ற அவசியமில்லை. ஒன்று சொல்லித்தான் அவன் தெரிந்துகொள்ள வேண்டிய நிலை. சர்வ ஞானமும் குறைவறப் படைத்த அவனுக்கு இல்லை.
பக்தர்களின் ஆவலை அறிபவன்: காலம் கனிய அவர்களின் ஆவலைத் தீர்ப்பவன் அவன்.
ஆனால், நம்முடைய ஆசை அவன் பள்ளியெழும் அழகை அனுபவிப்பது அல்லவா?
தீவிழித்து
தீமை செய்யாத கோபமும் ஒரு புருஷலட்சணம் தான். சினம் கொண்டதுபோல் சிவக்கப்பார்ப்பதும் ஆடவர்களுக்கு ஒரு அழகு. ஆடவர்கெல்லாம் ஆடவன் என்று பேசப்படும் புருஷோத்தமனின் அந்த விழியழகின் சிவப்பினை என்ன சொல்லி வர்ணிப்பது?
அந்த சிவப்பு எழிலைக் காணப் பிரியப்படுகிறார்கள். சாமான்ய பலாபலன்கள் எதுவும் எதிர் பார்க்காத பக்தர்களுக்கு இறைவனின் எந்த நிலையும் மகிழ்ச்சிக்கு உரியதாகவே இருக்கும்.
இவையா பிலவா திறந்து எரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள் – இவையா
எரிபொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரிபொங்கிக் காட்டும் அழகு. என்று ஆழ்வாரும் இந்த அழகை அனுபவிக்கிறார்.
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
சிங்கத்துக்கு பிடறி மயிர் அழகாக இருக்கும். ஹிரண்ய கேச: என்று புகழப்படும் கேசவனும் பொன்மயமான முடியை அடர்த்தியாக உடையவனாக விளங்குகின்றான். அந்த முடியும் பரிமள வாசனையுடன் சுகந்தமாக இருக்கிறது.
சர்வ கந்தக: என்று வேதம் அவனைப் போற்றுகிறது. இந்த வாசனை இயற்கையாக உள்ளது. அடுத்து அதன் கம்பீரம். அரங்கன் நான்கு கதிகளைக் காண்பிக்கிறான். சிம்ம கதி, கஜகதி, வ்யாக்ர கதி, சர்ப்ப கதி இப்படிப்பல நடையழகுகள்.
தூங்கிய சிங்கம் நிமிர்ந்து அப்படி இப்படி என தலையை ஓர் ஆட்டு ஆட்டும்போது அந்த பிடறிமயிரும் பொங்கிச் சிலிர்த்து கலைந்து அசந்து எழும்.
அப்படிப்பட்ட ஓர் நிலையும் இங்கே பேசப்படுகிறது.
எப்பாடும் பேர்ந்து உதறி என்கிறாள் ஆண்டாள்.
அலுப்புதீர சிங்கம் எழுந்து, உடலைச் சிலிர்க்கிற பொழுது அதன் அசைவில் அந்த குகையே ஆடும்.
சர்வேஸ்வரனின் அசைவில் அகில உலகங்களும் அசையும். எந்தத் திசையும் சற்று நடுங்கவே செய்யும்.
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
பரப்பிரம்மம் அவன். உடல்மிசை உயிரெனக்கரந்து எங்கும் பரந்துள்ளவன். சுடர்மிகு சுருதியாக இருப்பவன். சேதன அசேதனங்களாகவும் இருப்பவன். ஈஸ்வரனுக்கு அவயங்களாக பிரகிருகியிலுள்ள அத்தனை பொருட்களும் இருக்கிறது. அவன் நிமிரும்போது அத்தனையும் நிமிர்கிறது.
பாஞ்சசன்னிய ஒலி கௌரவர்களின் நெஞ்சைப் பிளந்தது போலே இங்கே சிம்ம கர்ஜனையிலேயே எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினர்.
சிங்கம் எழுந்து, பிடறிமயிரைச் சிலிர்த்து, உடலைச் சோம்பல் முறித்து, கம்பீரமாக நின்று, தீவிழி விழித்து அந்த குகையே அதிரும்படியாக கர்ஜனை முழக்கி புறப்பட்டுவிட்டது. கண்ணனும் அப்படி எழுந்து புறப்பட்டு விட்டான். கண்ணுக்கும் காதுக்குமாக, ஒளியும் ஒலியும் போலே நாம் அனுபவிக்கும் பேறாக அல்லவா அவன் இருக்கிறான்.
போதருமா போலே
குகையிலிருந்து சிங்கம் பிடறி மயிர் சிலிர்த்து எழுந்தது போலே நாம் காண நீ எழுந்தருள வேண்டும். உன்னழகைக் கன்னியர்கள் கண்டதினாலே, உள்ளமெல்லாம் உன்வசமாய் ஆனதினாலே, என்றபடிக்கு எங்களின் உள்ளத்தை, நீ சிம்மம் போல் எழுந்து புறப்படும் கம்பீரம் ஆட்கொள்ள வேண்டும். சர்வ உலகங்களுக்கும் சுவாமி நீ என்பதைப் போலே கம்பீரமாக எழுந்தருள வேண்டும்.
பூவைப் பூவண்ணா
காயம்பூ மேனி வண்ணன் என்று கண்ணனின் நிற அழகை வர்ணிப்பார்கள். நீல வண்ணம் என்பது மனத் துயரை நீக்கி பாதுகாப்பை அளிக்கும் வண்ணம் என்று இன்றைய அறிவியலாளர்களும் கருதுகின்றனர். கரு வண்ணம் கருணைக்கு இருப்பிடமான மேகத்தை ஒத்திருக்கிறது. ஆழி மழைக் கண்ணா! என்று மழைக்கு இறைவனை அழைத்தாலும், அவனுக்கும் உள்ளே விளங்குபவன் அந்தர்யாமியான அச்சுதன் அல்லவோ!
முன்பு கம்பீரத்துக்குச் சிங்கத்தைச் சொன்னார்கள். அந்தக் கடுமைக்கு நேரான மென்மையை இங்கே சொல்கிறார்கள். எதிரிடையான இரண்டு பொருள்களுமாக அவன் இருக்கிறான். எப்பொருளுமாக இருப்பவன் இறைவனல்லவா? என்ற தத்துவமும் இங்கே உணரத்தகும்.
நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், இருக்கும் இடத்தில் மெல்லிய இதயமும் கருணைவிழிகளும் கலந்திருக்கின்ற புதுமை கண்ணனிடம் மட்டுமே காண முடியும் என்பது ஆண்டாள் நாச்சியாரின் நம்பிக்கை. உண்மையில், ஓர் உதாரணத்திற்கு சிங்கத்தையும் பூவையும் ஒப்பிட்டார்களே தவிர, ஒப்பு ஒன்று இல்லாத உயர்வான அவனைச் சொல்ல எந்த மொழியும் வார்த்தைகளும் இல்லை.
ஆண்டாளும் வேறொரு இடத்தில்
பைம்பொழில் வாழ் குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங் கனி காள்!
வண்ணப் பூவை நறுமலர்காள்!
என்று எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே என்று பேசுவாள்.
நம்மாழ்வாரும்,
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவைதான் மற்றுத்தான் கண்ட நாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருருவென்று எம்மைப் பிரிந்து
என்று கண்ணனின் வடிவழகை வண்டு துளைக்காத பூவிற்கு ஒப்பிடுவார்.
உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி
நந்த கோபனுடைய கோயில் என்று முன்னால் (முன் பாசுரத்தில்) நந்தகோபனின் அரண்மனையைச் சொன்னார்கள். இங்கு உன் கோயில் என்று நேரடியாக, இது உன் அரண்மனை என்று சொல்கிறார்கள்.
நந்தகோபன் அரண்மனை கண்ணனின் அரண்மனைதான். ப்ரணவத்திற்குள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கின்றன. நந்தகோபன் ஜீவாத்மா. கண்ணன் பரமாத்மா. அரண்மனை உண்மையில் ஜீவாத்மாவான நந்தகோபனுக்குச் சொந்தமானதல்ல. அப்படிச் சொல்லியது ஓர் உபசாரத்திற்காக. உண்மையில் அது பரமாத்மாவாகிய கண்ணனுக்குச் சொந்தமானது. இருவருக்கும் பொது என்பதால் உன்கோயில் என்று அழுத்தமாகச் சொல்வதில் குறை இல்லை.
நமக்கு பதம், பரமபதம்!
கண்ணனின் இடமும் பரமபதம் (அவன் எங்கிருந்தாலும் – ஆயர்பாடியில் இருந்தாலும்)! இரண்டுமே சரிதானே.
உன் கோயிலின் முன்னே நாங்கள் நிற்கிறோமே, எங்களுக்கு முன்னே நீ நடையழகு காண்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.
“அற்புதமான நால்வகை நடையழகையும் திருவரங்கத்திலே இன்றும் காண்பிக்கவில்லையா! உன் சிம்ம நடையை நாங்கள் பார்க்கப் பிரியப்பட்டு உன் கோயில்வாசல் வந்து காத்துக்கிடக்கிறோம். உள்ளே நப்பின்னை மார்பிலே பள்ளி கொண்டுள்ள நீ எழுந்து, கம்பீரமாக எங்கள் முன்னே வரவேண்டும்.”
வானவர்கள், வானவர் உலகத்து அழகிய மங்கைகளும் கண்டு நாணும் உன் நடையழகையும் வடிவழகையும் எங்களுக்குக் காட்ட வேண்டும். “
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து
“கண்ணா! நீ கிடக்கும் அழகையும், நடக்குமழகையும், நிற்குமழகையும் காட்டினால் மட்டும் போதாது. நிற்கும் போதும், நடக்கும் போதும் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்று சொன்னாலும் ஆகாது. நீ வீற்றிருக்கும் அழகையும் காணவேண்டும். அதன்பின் நாங்கள் வந்த காரியத்தை நீ கேட்டு ஆராய வேண்டும்.
கோப்புடைய சீரிய சிங்காதனம் என்ற வாக்கியத்தின் கோப்புடைய என்ற சொல்லினால், உபய விபூதி நிர்வாகத்தின் (விண்ணாடு மற்றும் மண்ணாடு ) பெருமை பேசப்படுகிறது.
சீரிய சிங்கம் அவன். அப்புறம் அவன் வீற்றிருக்க வேண்டிய இடம் மட்டும் சாதாரணமான இருக்கையாக இருக்கலாமா? அதுவும் சீரிய சிங்காதனம்.
கிருஷ்ணனுக்கு பொய் நம்பி என்ற பெயர் உண்டு. ஏதாவது ஒன்று கேட்பான். பின் சொல்லவில்லை என்று சாதித்து விடுவான். ஏலாப் பொய்கள் உரைக்கும் அவனே இந்த மாதிரி குறைகேட்கும் பொறுப்பில் இருக்கும்போது விளையாட்டாக எதுவும் செய்துவிட முடியாது அல்லவா!
அதுதான் சிங்காசனத்தின் சீர்மை. போர்க்களத்தில் தேர்த்தட்டில் கண்ணன் கீதையைச் சொன்னான்.
கடற்கரையில் இராமன் சரமசுலோகத்தைச் (வீடண அடைக்கலம்) சொன்னான்.
இங்கே கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் அமர்ந்து சொல்லும் போது எந்த வார்த்தையும் முக்கியத்துவம் பெறும்.
தடங்கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்துன் தாமரை மங்கையும் நீயும்
இடங்கொள் மூவுலகம் தொழ இருந்தருளாய்
என்ற நம்மாழ்வாரின் வாக்கையும் இங்கே நோக்க வேண்டும்.
யாம் வந்த காரியம் ஆராய்ந்தருள்
யாம் வந்த காரியம் என்று சொன்னார்களே தவிர, என்ன காரியம் என்பதைச் சொல்லவில்லை. நாளுக்கொரு பாட்டாக இருபத்தியிரண்டு பாடல் இதற்கு முன் இருந்திருக்கிறது.
அதில்தான், ஒருவரை ஒருவர் எழுப்பி, ஒன்றாக வந்து வாயிற்காப்பானை எழுப்பி, நந்தகோபரை எழுப்பி யசோதையை எழுப்பி, பலராமரை எழுப்பி, நப்பின்னையை எழுப்பி என எவ்வளவோ பாடுபட்டிருக்கிறார்கள்.
இப்போது கண்ணனைச் சந்திக்கும் நேரம். அவன் வந்து கோப்புடைய சீரிய சிங்தாதனத்தில் வீற்றிருக்கும் நேரம்.
அன்புடன் இவர்களை விசாரிக்கும் நேரம்.
சபாமண்டபத்தில் ஆசனத்தில் வீற்றிருந்து குறை கேட்கும் காலம்.
இப்படிப்பட்ட இனிய நேரமான இப்பொழுது அவன் வந்து விசாரித்து அருள வேண்டும் என்கிறார்கள்.
ஆற்றாது வந்த அடிபணிகிறார்கள் இவர்கள். அப்படி நம் அடியார்களை இருக்க வைத்து விட்டோமே என்று பரம கருணையை இயற்கையாகக் கொண்ட அவன் கவலைப்படுகிறான்.
உண்மையான பக்தன் இறைவனை எண்ணித் தவிக்கிறான். இறைவனோ உண்மையான பக்தனைத் தேடித் தவிக்கிறான்.
இவன் தவிப்பை அவன் உணர்வான்; அவன் தவிப்பை இவர்கள் உணர்வார்கள்.
இராமாநுஜருடைய சீடர் கிடாம்பியாச்சான்.
திருமாலிருஞ்சோலை அழகர் முன்பு அவர் நின்று கொண்டு கண்கலங்குகிறார்.
“ஆயிரக்கணக்கான பாபங்களுக்கு இருப்பிடமாக நான் இருக்கிறேன். பயங்கரமான சம்சார சாகரத்திலே விழுந்து தத்தளிக்கின்றேன்! யாரும் காப்பாற்றுவதற்கு முன்வராத கதியற்றவனாக இருக்கிறேன்!”. என்றெல்லாம் சொல்லி, ஆளவந்தாரின் ஒரு ஸ்லோகத்தாலே விண்ணப்பிக்கின்றார்.
திருமாலிருஞ்சோலை அழகருக்கு கோபம் வந்துவிட்டது.
“என்ன சொன்னாய் ? உயர்கதி கிடைக்காமல் போய் விடுமா? பகவானே கைவிட்டாலும் ஆசார்யன் கைவிடமாட்டாரே! பரம கருணாமூர்த்தியான இராமாநுசரை ஆசாரியராக அடைந்த நீரா கதியற்றவர்” என்று அழகர் அருளிச்செய்தாராம்.
இப்பாசுரத்தில் உயிர்ச் சொல் ஆராய்ந்து அருள் என்பது.
“இறைவா! நாங்கள் கேட்டு விடுகிறோம் என்பதற்காகவே எங்களுக்கு தகுதி இல்லாத ஒன்றை நீ தந்து விட வேண்டாம்.
எங்களுக்கு எது தேவை என்பது குறைந்த அறிவு படைத்த எங்களைவிட நிறைந்த நல் ஞான மூர்த்தியான உனக்கு விளங்கும்.
எனவே, எங்கள் ஆசைக்கு நீ அருளாது, எங்கள் தேவையை ஆராய்ந்து அருள்செய். “
குழந்தை அழத்தான் செய்யும். அது எதற்காக அழுகிறது என்பது யாருக்கும் தெரியாது. அந்த குழந்தையின் தாய்க்கு மட்டுமே தெரியும்.
அதைப்போல இவர்கள் இறைவனிடம் சென்று பலவாறு பலவற்றைக் கேட்கலாம்.
ஆனால் இவர்கள் கோரிக்கையை ஆராய்ந்து அருள் செய்ய வேண்டியது அவனுடைய பொறுப்பு. எத்தனை அழகான ஆன்மீகச் செய்தி இது.
நப்பின்னைப் பிராட்டியின் தகவுரை (புருஷகாரம்) பெற்று வந்திருக்கும் இவர்களுக்கு அருள, கண்ணன் காத்திருக்கிறான் என்பதை மிகவும் நயமாக இந்தப்பாசுரம் வெளிப்படுத்துகிறது.
