ஆவணி அவிட்டம் AAVANI AVTTAM & Hayagreeva Jeyanthi
தெய்வங்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பண்டிகை மாதம்தோறும் வருகின்றன என்றால், வேதத்துக்கு உண்டான பண்டிகை ஆவணி அவிட் டமே என்பார்கள் பெரியோர்கள். ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கினை உபநயனம் செய்து கொண்ட பிராமணர் விஸ்வகர்மா மற்றும் சில பிரிவினர்கள் அனுசரிக்கிறார்கள்.இது ஆவணி மாதம் அவிட்டம் (பெரும்பாலும் பௌர்ணமி) கடைபிடிக்கும் வழிபாடாகும். வடமொழியில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் என்பதாகும். கர்மா என்றால் கண்கள் என்று பொருள். உபகர்மா என்றால் நமக்கு இருக்கும் இரண்டு கண்களுடன் சேர்த்து, இறைவனை அறிவதற்கு மூன்றாவதாக ஞானம் என்ற கண் தேவை. அந்த கண்ணை வேதங்களை கற்பதின் மூலமே பெற முடியும். இறைவனும் மனிதனுக்கும் இடையே ஒரு பந்தத்தை ஏற்படுத்தவும், அதற்கு வழிகாட்டுவதற்கும் செய்யப்படும் சடங்கே உபகர்மா என்று சொல்கிறோம்.இன்றைய தினம் வேதங்களைப் படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம். இன்று ரட்ஷாபந்தனம் செய்யும் நாளாகும் .
ஆவணி மாதத்தில் பெளர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வர நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடுகிறோம். இது வேதங்கள் அவதரித்த நாளாகவும், இந்த நாளில் தான் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. அதனால் இதை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுவது உண்டு. ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று வேதங்களையும் வழிபட வேண்டும். பிரம்ம தேவர் இந்த நாளில் தான் வேதங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதாக ஐதீகம்.ஆவணி அவிட்டம் அன்று ஏதாவது கோவிலோ அல்லது நீர் நிலைகளுக்கு அருகிலோ புரோகிதர்கள் ஒரு குழுவாக அமர்ந்த மந்திரம் சொல்லி பூணூலை மாற்றிக் கொள்வார்கள்.
ரிக்,யஜூர், சாம, அதர்வணம் என்று நான்கு வகையான வேதங்கள் உண்டு. இவற்றில் ரிக், யஜூர் ஆகிய இரண்டு வேதங்களும் மேஷம் துவங்கி துலாம் வரையிலான ராசிகளுக்கு உரியவை. சூரிய பகவான், சிம்ம ராசியில் பயணிக்கும் ஆவணி மாதத்தில் ரிக், யஜூர் வேதங்கள் தோன்றியதாக சொல்லப்படுகிறது. இந்த வேதங்களை கற்றவர்கள் தங்களை புதுபித்துக் கொள்ளும் நாளாக ஆவணி அவிட்டம் சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 19ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 03.07 மணி துவங்கி, ஆகஸ்ட் 20ம் தேதி அதிகாலை 01.09 வரை பெளர்ணமி திதி உள்ளது. அதே சமயம், அன்று காலை 09.09 மணிக்கு பிறகு தான் அவிட்டம் நட்சத்திரம் துவங்குகிறது. ஆகஸ்ட் 20ம் தேதி காலை 07.50 வரை அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. இருந்தாலும் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யும் காரியங்களுக்கு நாள், நட்சத்திரம், கிழமை என எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பார்கள். இதன் அடிப்படையில் அன்றைய தினம் அதிகாலை 04.32 மணி துவங்கி, 05.20 வரை பிரம்ம முகூர்த்தம் நன்றாக உள்ளதால் அந்த நேரத்தில் பூணூல் மாற்றிக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.
அதற்கு பிறகு பகல் 12 முதல் 01 மணி வரை நல்ல நேரம் இருப்பதால் இந்த நேரத்திலும் பூணூல் மாற்றிக் கொள்ளலாம். பகல் 01 மணி வரையிலான அனைத்து நேரங்களும் சாதகமாகன நல்ல நேரமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பூணூல் மாற்றிக் கொள்பவர்கள் பகல் 1 மணிக்கு முன்பாக மாற்றிக் கொள்வது சிறந்தது.கல்வி செல்வம் அருளும் ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. மாணவர்களின் கல்வி தடை நீங்கவும், நல்ல மதிப்பெண் பெறவும் ஹயக்ரீவரை வணங்கலாம்.
மது, கைடபர் என்ற அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். படைக்கும் தொழிலை வேதத்தின் துணை கொண்டு நடத்திவந்தார் பிரம்மா. இந்நிலையில் வேதத்தைத் திருடிக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டனர் அசுரர்கள். தேவர்களால் மீட்க இயலாத வேதத்தை மகாவிஷ்ணு, ஹயக்ரீவ குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி, அசுரர்களுடன் போரிட்டு மீட்டார். அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.
ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. அவர் ‘வித்யாகாரகன்’ என அழைக்கப்படுகிறார். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9ஆம் அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபட ஞானமும் அறிவும் மேம்படும்,ஞாபக சக்தி அதிகரிக்கும்.ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் திருமாலின் 18வது அவதாரம். வெண்மை நிறமுள்ள குதிரை முகத்துடன் காட்சி தரும் பெருமாள் ஞானமே வடிவானவர். பின் வலக்கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையும், இடக்கரத்தில் சங்கத்தையும், முன்வலக்கரத்தில் ஏட்டையும் ஏந்தி மக்களுக்கு ஞானத்தைப் போதிக்கும் ஞான சொரூபியாக ஹயக்ரீவர் திகழ்கிறார்.
காலம் பொன் போன்றது கல்வி கண் போன்றது என்று சொல்வார்கள். இந்த உலகத்தில் அழியாத ஒரு செல்வம் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக கல்வி செல்வம் தான். கடைசி வரை நம்மோடு வருவது இந்த செல்வம் ஒன்று தான். யாராலும் ஒருவரிடமிருந்து ஒருவர் தட்டிப் பறிக்கவோ, திருடவோ முடியாத மகத்தான செல்வம் கல்வி. அத்தகைய பெருமை வாய்ந்த கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது அன்னை சரஸ்வதியைத் தான். ஆனால் அந்த சரஸ்வதிக்கே ஒரு குரு உண்டென்றால் அது ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவரே. அந்த சரஸ்வதிக்கே கல்வியறிவைக் கொடுத்தவர் ஹயக்ரீவர். ஒருவரது வாழ்க்கையில் கல்வியிலும், கலைகளிலும் சிறந்த விளங்க வேண்டும் என்றால் ஹயக்ரீவரை வழிபட்டால் போதும்.
ஜ்ஞானானந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே 1
விஶுத்தவிஜ்ஞானகனஸ்வரூபம் விஜ்ஞானவிஶ்ராணனபத்ததீக்ஷம்
தயானிதிம் தேஹப்ருதாம் ஶரண்யம் தேவம் ஹயக்ரீவமஹம் ப்ரபத்யே 5
மனோகதம் பஶ்யதி யஸ்ஸதா த்வாம் மனீஷிணாம் மானஸராஜஹம்ஸம்
ஸ்வயம்புரோபாவவிவாதபாஜ꞉ கிங்குர்வதே தஸ்ய கிரோ யதார்ஹம் 14
