7.11.2022 -திங்கள் – திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம்
தமிழகம் முழுவதும் ஆன்மீகத்தையும், சைவத்தையும், தமிழையும் பரப்பியவர் திருமுருக கிருபானந்த வாரியார்.தமிழ் இலக்கியங்களை மிக எளிதாக எடுத்துச் சொன்னவர். திருப்புகழுக்கு மிக விரிவான விரிவுரை செய்தவர். மகாபாரதம், இராமாயணம் முதலிய இதிகாசங்களை பட்டி தொட்டியெல்லாம் பரப்பியவர், அவருடைய நினைவு தினம் இன்று, அவருடைய ஆன்மீக சிந்தனைகளை இன்று நினைவு கொள்வோம்.
பசை வேண்டும்
இரண்டு பலகைகளை ஒட்ட வைக்க வேண்டுமானால் பசை வேண்டும். அதுபோல் மக்களாகிய நாமும் பரமாத்மாவான சுவாமியும் சேர்ந்து ஒன்றாக வேண்டுமானால் பக்தி என்னும் பசை வேண்டும்.
பேராசை வேண்டாம்
ஒரு மனிதனுக்கு பற்று அவா ஆசை பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள் உள்ளன.
– நம்மிடம் உள்ள பொருளில் வைத்திருக்கும் பிடிப்புக்கு பற்று என்று பொருள்
– அது வேண்டும் இது வேண்டும் என்கின்ற நினைவுக்கு அவா என்று பொருள்
– பிறர் பொருளை விரும்புவது ஆசை எனப்படும்
– எத்தனை வந்தாலும் திருப்தி இல்லாமல் நெய்யை ஊற்ற ஊற்ற எரிகின்ற தீயின் தன்மையைப் போல எல்லையில்லாத ஆசைக்கு பேராசை என்று பெயர்
இந்த பேராசைக்கு உதாரணமாக தாயுமானவரின் பாடலை மேற்கோளாகச் சொல்வார்.
ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம்
கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்.
மரணத்தை யாரும் விரும்புவதில்லை
எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் மனிதன் எப்படியாவது இந்த உலகத்தில் வாழ்ந்து விட வேண்டும் என்றுதான் நினைக்கிறான் என்பதற்கு ஒரு அழகான உதாரணம் சொல்வார்.
ஒரு எண்பது வயதுத் கிழவன் தலையில் விறகு சுமந்து கொண்டு வந்தார். ஒரு சுமைதாங்கி மீது வைத்துவிட்டு “ எப்பொழுது எமன் வந்து அழைத்துக் கொண்டு போவான்?” என்று முணுமுணுத்தார். எமன் நேரே வந்து விட்டான்.” பெரியவரே, நீங்கள் கூப்பிட்டதால் வந்தேன். புறப் படுங்கள். உங்களை நான் அழைத்துச் செல்கிறேன்” என்று சொன்ன போது கிழவன் சொன்னாராம்.
“நான் என்னை அழைத்துச் செல்ல உன்னைக் கூப்பிடவில்லை. இந்த சுமை தாங்கி மேல இருக்கக்கூடிய விறகு கட்டையை எடுத்து என் தலை மேல் தூக்கிவைக்கவே கூப்பிட்டேன்”
மரணம் என்பதை எந்த வயதிலும் யாரும் விரும்புவதில்லை என்பதற்கு இப்படி அழகான உதாரணத்தைச் சொல்லுவார் வாரியார். அவருடைய நினைவு தினத்தில் அவருடைய சிந்தனைகளைச் சிந்திப்போம்.
தொகுப்பு :முனைவர் ஸ்ரீராம்
