Dhivya Desa Yatra வடநாட்டு திவ்ய தேச யாத்திரை
மு. வே. ரெங்கராஜன் சுவாமி. மதுரை – Sri Rengarajan Swamy, Madurai
Mysterious facts of Nidhivan
நிதிவனம் (Nidhivan) :

நிதிவன் என்றும் மதுவன் என்றும் கூறுகிறார்கள். அதாவது நிதிவன் என்றால் செல்வக் காடு என்று பொருள். மதுவன் என்றால் மதுவாகிய தேன் சிந்தும் பூக்கள் பூத்துக்குலுங்கும் வனம் என்று பொருள். ஆம். நம் ஸ்ரீகிருஷ்ணாமிர்தம் என்ற செல்வமும் தேனும் அந்தக் காட்டில்தானே விளையாடுகிறது. தமிழில் நிதிவனம் என்ற சொல்லுக்கு ஆனந்த விளையாட்டு என்று பொருள். இங்கு யாருக்கும் புலப்படாத சில இகசியங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த வளாகத்தில் பல வகையான குட்டை மரங்கள் இரட்டை இரட்டையாக வளர்ந்துள்ளன. எல்லா கிளைகளும் மேல்நோக்கிச் சென்று மறுபடியும் கீழ்நோக்கி வளைந்து காணப்படுவது அதிசயமான ஒன்று. இவ்வகையான மரங்கள் தென்னாட்டில் காணப்படவில்லை. ஆனால் வந்தவாசி அருகிலுள்ள தென்னாங்கூரில் (Thennangur) ஸ்ரீபாண்டுரங்கன் திருக்கோயிலில் இதுபோன்ற ஒருமரம் உள்ளது. அதற்கு தமால மரம் என்று பெயர்.

நிதி வனத்தில் ரங்க் மஹால்(Rang Mahal in Nidhivan):
நிதிவனத்திலுள்ள ஒரு தனி அறையை ரங்க் மஹால் என்று சொல்கிறார்கள். இங்கு ஒரு சந்தனக் கட்டில் உள்ளது. தினமும் மாலை ஆரத்தி முடிந்தவுடன் நடை சாற்றி வெளியேறும்போது, இக்கட்டிலில் ஒரு குவளை யில் நீர், பல் துலக்க வேப்பங்குச்சி, சில இனிப்புப் பண்டங்கள் மற்றும் தாம்பூலம் வைக்கப்படுகின்றன. இரவில் இராதையுடன் ஸ்ரீகிருஷ்ணன் விளையாட வருவதாகவும், அப்பொழுது இங்குள்ள மரங்கள் கோபிகைகளாக மாறி ஸ்ரீகிருஷ்ணனுடன் இராசலீலை புரிவதாகச் சொல்கிறார்கள். காலையில் நடை திறக்கும் போது பார்த்தால் எல்லாப் பொருள்களும் பயன்படுத்தப்பட்டுச் சிதறிக் கிடக்கும் என்று சொல்கிறார்கள். இரவில் பக்கத்தில் இருப்பவர்கள் சிலருக்கு ஒரு ஓசை கேட்பதாகச் சொல்கிறார்கள். எனவே, மாலை ஆரத்தி முடிந்தவுடன் நடை சாற்றி அனைவரும் வெளியேறுகின்றனர். மாலையில் அங்கிருக்கும் பறவைகள் கூட வெளியேறி விடுமாம்.
இந்த அறையை ஸிருங் மஹால் அல்லது ஸிருங்கார் மஹால் என்று அழைத்தால்தான் சரியான பொருளைக் குறிக்கும். ஸிருங்காரம் என்றால் கொஞ்சுதல் என்று பொருள். இவ்வறையில் ராதையும் ஸ்ரீகிருஷ்ணனும் தினமும் ஸிருங்காரம் செய்து விளையாடுவதால் இந்த அறையை ஸிருங்கார் மஹால் என்று பொருத்தமாக அழைக்கிறார்கள்.
நிதிவனத்தில் ராஜவிளையாட்டு(Raja Krishna Leela in Nidhivan):
இந்த நிதிவனத்தில் ஸ்ரீகிருஷ்ணனும் கோபியர்களும் ஆனந்தமாகக் கைகோர்த்து விளையாடும் விளையாட்டு ராஸலீலை எனப்படுகிறது. இதன் உட்பொருள் என்னவென்றால், பரமபுருஷனான ஸ்ரீகிருஷ்ணன் மற்ற அனைத்து ஸ்திரிகள் என்ற ஜீவாத்மாக்களை ஆட்கொள்ளுதல் என்று பொருள். அதாவது ஸ்ரீமந் நாராயணன் ஒருவன்தான் புருஷன் (ஆண்) மற்ற அனைத்து ஜீவராசிகளும் உலக வாழ்க்கைக்காக உருவில் புருஷர்களாக தோன்றினாலும் அனைவரும் ஸ்திரிகளே (பெண்களே) என்பதையே நமது வேதங்கள் விளக்குகின்றன. எனவே ஸ்ரீகிருஷ்ணன் கோபியரோடு கொஞ்சி விளையாடும் கிருஷ்ண லீலையை நம் போன்றோரின் மானிடக் காதலாக எண்ணி கொச்சையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் ஸ்ரீஜெயதேவர் ஸ்வாமி பாடிய அஷ்டபதியில் ஸிருங்கார ரஸம் பக்தி சொரூபம் என்கிறார்.

இந்த நிதிவனத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்க முயற்சி செய்தவர்களில் சிலர் ஊமையானதாகவும், சிலர் பித்தர்களாகப் போனதாகவும் சொல்கிறார்கள். இந்த நிகழ்வுகளை நாம் ஆராயும்போது, இது ஸ்ரீகிருஷ்ணன் கொடுத்த தண்டனை என்று கொள்வது பொருத்தமானதல்ல. ஸ்ரீகிருஷ்ண லீலைகளை அனுபவிப்பவருக்கு தண்டனையா கொடுப்பான் ஸ்ரீகிருஷ்ணன்?. அவ்வாறு நிச்சயம் கொடுக்கமாட்டான். அதாவது எப்படி திருப்பாணாழ்வார் ஸ்ரீரங்கநாதனைத் தரிசித்தவுடன் பிரமிப்பால் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று பாடினாரோ, அதுபோல ஸ்ரீகிருஷ்ண லீலைகளை நிதிவனத்தில் நேரில் கண்டவர்கள் மிக்க பிரமிப்பால் இதற்குமேல் உலக வாழ்க்கையில் அனுபவிப்பதற்கு மற்றொன்றில்லை என்ற வகையிலே அடைந்த மேன்மையான நிலைப்பாடே பித்தராக திரிதல். மேலும் இந்த லீலா ஆராய்ச்சியில் இறங்கிய வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் இதில் தோல்வி கண்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே இந் நிதிவனத்திற்கு பக்கத்து வீடுகளில்கூட இந்த வனத்தை நோக்கி ஜன்னல்கள் கிடையாது என்பதிலிருந்து அவர்கள் சொல்வதை யூகிக்க முடிகிறது.
அடுத்த பகுதியில் யாத்திரை தொடரும். இணைந்திருங்கள் எங்களோடு….
இந்த வடநாட்டு திவ்ய தேச யாத்திரையின் முந்தைய பகுதியை படித்து மகிழ இங்கு கிளிக் செய்யவும்.

- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- அலகிலா விளையாட்டு – Alagila Vilayattu

- வடநாட்டு திவ்ய தேச புனிதப் பயண அனுபவம்

- வராக அவதாரம் ஏன் சிறப்புடையது? ஸத்ஸங்கம் கேள்வி – பதில்

- ஸ்வாமி தேசிகன் உபதேசங்கள் Desikan Upadesangal – Sri.D.K.Srinivasan

- சிறுநீரகங்களை பாதுகாப்போம்! Protect your Kidney – Dr K Sampathkumar

