BY முனைவர் ஸ்ரீராம்
ஸ்ரீ ராமானுஜருடைய பெருமைகளில் ஒன்று அவருக்கு அமைந்த ஆசாரியர்களும் சீடர்களும்.
சுவாமி ராமானுஜருக்கு அருமையான ஆசாரியர்களும் அமைந்தனர்.
அற்புதமான சீடர்களும் அமைந்தனர்.
இவர்கள் இருவருக்கும் நடுநாயகமாக விளங்கினார் ஸ்ரீராமானுஜர்.
ராமானுஜரின் உன்னதச் சீடர்களில் ஒருவர் திருக்குருகைப்பிரான் பிள் ளான்.
ராமாயணத்தினால் கிடைத்த சீடன்
சுவாமி ராமானுஜருக்கு ஐந்து ஆசாரியர்கள் .
அவர்கள் மூலம் 5 விசயங்களைப் பெற்றார்.
அதில் ஒரு ஆசாரியர் பெரிய திருமலை நம்பிகள்.
இவர் ஆசாரியர் மட்டுமல்ல, ராமானுஜருக்கு தாய்மாமன் கூட.
அவரிடம் ராமாயணம் கற்பதற்காகத் திருமலைக்குச் சென்றார்.
ராமாயணம் என்றால் வெறும் கதையல்ல. சாஸ்திரம்.
ராமாயணத்தில் உள்ள தத்துவங்களையும் சாஸ்திரங்களையும் நுட்பமாக தெரிந்துகொள்ள ஒரு வருடகாலம் அங்கு மாணவனாகச் செலவழித்தார்.
ராமாயண காலட்சேபம் முடிந்தவுடன் ராமானுஜருக்கு, தன்னுடைய பிள்ளையையே சீடனாகப் பரிசளித்து அனுப்பினார் பெரிய திருமலை நம்பிகள் . அந்த சீடர் தான் பிள்ளான்.
இவருக்கு எப்படி திருக்குருகைப்பிரான் பிள்ளான்
என்று பெயர் வந்தது?
இதற்கான நிகழ்ச்சி சுவாரஸ்யமானது.
ராமானுஜருக்கு நம்மாழ்வாரின் மீது அதிகமான ஈடுபாடு. நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் கொண்டு தான் அவர் ஸ்ரீ பாஷ்யத்தில் பல விளக்கங் களைச் செய்தார். புரியாத வேதப் பகுதிகளையெல்லாம், தமிழ் வேதமான திருவாய்மொழியைக் கொண்டு விளக்கினார் என்பதை,” பாஷ்யக்காரர் இது கொண்டு வேதவாக்கியங்களை ஒருங்க விடுவார்” என்கின்ற ஆசாரிய ஹிருதய சூத்திரம் கூறும்.
ஒருமுறை அவர் திருநாராயணபுரம் சென்றிருந்த பொழுது, ஒரு சலவைத் தொழிலாளி, ராமானுஜரை வரவேற்க , தன்னுடைய குழந்தைகளைப் பெயர் சொல்லி அழைத்தார்.
அத்தனைக் குழந்தைகளின் பெயரும் ஆழ்வாரின் பெயர்களாகவே இருந்தன.
“வகுளாபரணா , சடகோபா, குருகேசா,காரிமாறா” என்று, அவர் ஒவ்வொரு குழந்தைக்கும் நம்மாழ்வாரின் பெயரைச் சொல்லி, அழைத்ததைக்கண்டு கண்டு ராமானுஜர் உருகி விட்டார்.
இந்த சலவைத் தொழிலாளிக்குத்தான் நம்மாழ்வார் மீது எப்படிப்பட்ட ஈடுபாடு? என்று வியந்து போனார்.
அப்போது அவருக்குச் சிறிது வருத்தம் வந்தது.
நமக்கு ஒரு குழந்தை இருந்திருந்தால் நம்மாழ்வாரின் பெயரை வைத்து இருக்கலாமே என்கின்ற ஆதங்கம் வந்தது.
அப்பொழுது அருகிலிருந்த தம்முடைய சீடர் பிள்ளானை , வளர்ப்பு மகனாகக் கருதி, நம்மாழ்வாரின் பெயரான “திருக்குருகைப்பிரான்” என்ற பெயரை முன்னொட்டாகச் சேர்த்து “திருக்குருகைப்பிரான் பிள்ளான்” என்று அழைத்து மகிழ்ந்தார்.
“திருக்குருகை” என்பது நம்மாழ்வாரின் அவதாரத் தலமான ஆழ்வார் திருநகரி.
“பிரான்” என்றால் உதவி செய்தவன் உபகாரம் செய்தவன் என்று பொருள்.
இந்த கலியுகத்தில், பாரத பூமியில் அவதரித்து, வேதத் தமிழ்பாடி, எல்லோரையும் உய்விக்கச் செய்பவர் என்பதால் அவருக்கு பிரான் என்று பெயர்.
நம்மாழ்வாரின் பேரருளை முழுமையாகப் பெற்றவர்
திருக்குருகைப்பிரான் பிள்ளான் மீது ராமானுஜருக்கு மிகவும் பிரியம். அவரை தனது மானஸ புத்திரராகவே கருதினார்.
ஒரு நாள் ராமானுஜர் பாசுரம் ஒன்றுக்குப் பொருள் ஆராய்ந்துகொண்டு இருந்தார்.
பிள்ளான் அப்போது “தேவரீர் ஆராய்ந்த பொருள் இதுவன்றோ ? என்று ஓர் பொருளைச் சொன்னார்.
தாம் நினைத்திருந்த பொருளும், பிள்ளான் சொன்ன பொருளும் ஒன்றாக இருப்பதைக் கண்டு வியந்தார்.
நம்மாழ்வாரின் பேரருளை முழுமையாகப் பெற்றவர் என்று கருதி, ’ஞான புத்திரனே’ என்று அவரை அணைத்துக்கொண்டார்.
திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு அவர் அர்த்தம் சொல்லுகின்ற முறையைக் கண்டு சிலிர்த்துப் போனார். நம்மாழ்வாரே இவருடைய திரு வுள்ளத்தில் இருந்து பேசுவதைப் போல எண்ணினார்.
திருவாய்மொழிக்கு முதல் உரை
திருவாய்மொழிக்கு உரை எழுதுகின்ற பணியைத் தொடங்கலாம் என்று ராமானுஜர் நினைத்தபோது, அதற்கான உரை எழுதும் தகுதி படைத்தவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்தான் என்று நிச்சயித்து, அவரை திருவாய்மொழிக்கு உரை செய்யுமாறு தூண்டினார்.
ராமானுஜர் காலம் வரையில் திருவாய் மொழி உள்ளிட்ட ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஏடுகளில் உரை எழுதப்படவில்லை.
ஆனால், வைணவ மரபுப்படி, நாதமுனிகளுக்கு அருளிச் செயலோடு (அதாவது ஆழ்வார்களின் 4000 பாசுரங்களோடு ) அதற்கான விளக்கங் களையும் சேர்த்தே நம்மாழ்வார் அருளினார் என்பது மரபு .
அது வழி வழியாக, செவி வழியாகவே அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லப்பட்டு வந்தது.
ராமானுஜர் கூட திருமாலை ஆண்டான் என்கின்ற ஆசாரியரிடம் திருவாய் மொழி உரையைக் கேட்டார். அப்பொழுதும் அது ஏடுபடுத்தப் படவில்லை.
எனவே, பகவத் விஷயமான திருவாய்மொழிக்கு ஒரு உரை எழுதப்பட வேண்டும் என்று நிச்சயித்த போது, திருக்குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு செய்தார்.
ராமானுஜர் ஏன் உரை செய்யவில்லை?
இங்கு ராமானுஜர் ஏன் திருவாய்மொழிக்கு உரை செய்யவில்லை என்ற ஒரு கேள்வியும் வரும். அதற்கு ராமானுஜர் விளக்கம் அளித்தார்.
“நாம் இதற்கான ஒரு உரையைச் செய்தால், அதற்குப் பிறகு வேறு யாரும் உரையைச் செய்ய துணிய மாட்டார்கள். அதனால் வரம்பு கட்டியது போலாகிவிடும்” என்றார்.
அவருடைய ஆசார்ய பக்தியும், ஞானமும், ராமானுஜருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தன.
எம்பெருமானார் திருநாட்டை அலங்கரிப்பதற்கு முன், தமக்குப் பிறகு பிள்ளானை பாஷ்யத்துடன், பகவத் விஷய சிம்மாசநாதிபதியாகவும் நியமித்தார். உடையவரின் சரம கைங்கர்யத்தையும் திருக்குருகைப் பிரான் பிள்ளான் முன்னின்று நடத்தினார்.
ஆறாயிரப்படி
திருக்குருகைப்பிரான் பிள்ளான் மிகவும் சுருக்கமாகவும், அதே சமயத்தில் தெளிவாகவும், திருவாய்மொழிக்கான முதல் வியாக்கியானத்தைச் செய் தருளினார்.
அதற்கு “ஆறாயிரப்படி” என்று பெயர் .
“படி” என்பது அளவு.குறித்தது .
தமிழில் ஒற்றெழுத்துக்கள் நீக்கி, 32 எழுத்துக்கள் கொண்டது ஒரு படி, அதைப்போல் 6000 படிகளால் ஆனது இந்த திருவாய்மொழி உரை.
அதற்கடுத்து நான்கு அற்புதமான உரைகள் திருவாய்மொழிக்கு வந்தாலும், முதல் உரையை ஏட்டில் கொண்டு வந்தது, திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்ற பெருமை அவருக்கு உண்டு.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் பிள்ளான் திருவாய்மொழிக்கு உரை செய்த சங்கதியை தன் உபதேசரத்தினமாலையில் பாடுகிறார். பாசுரம் இது :
தெள்ளாரும் ஞானத் திருக்குரு கைப்பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் – உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப்பொருளை அன்றுரைத்தது
இன்பமிகும் ஆறாயிரம்.
ஆசார்ய பக்தி இல்லாவிட்டால் தெய்வம் அருள்வதில்லை
வைணவத்தில் குரு தான் எல்லாம் .ஆசாரியன் தான் எல்லாம். ஆசார்ய பக்தி இல்லாவிட்டால் தெய்வம் அவர்களுக்கு அருள்வதில்லை என்பது வைணவத்தின் திட்டமான கொள்கை.
வைணவத்தில், பக்தியின் எல்லை நிலமாக ஆசார்ய பக்தியைத் தான் சொல்வார்கள்,
ஜீவாத்மா உய்வு பெறவேண்டும் என்றால் அதற்குத் துணை புரிவது ஆசாரிய பக்தி தான் என்பதைக் குறிக்கும் வகையில் “ஆசாரிய அபி மானமே உத்தாரகம்” என்றொரு சொற்றொடர் உண்டு.
ஒரு முறை திருக்குருகைப்பிரான் பிள்ளான், கொங்கு நாட்டுக்குச் சென்றி ருந்தார். அங்கே ஒரு அடியவரின் திருமாளிகைக்கு சென்று இருந்த பொழுது எல்லோரும் இறைவனுடைய திருநாமத்தைப் பாடிக் கொண்டிருந் தார்கள்.
இவர் வெகுநேரம் கவனித்துப் பார்த்தார்.
அவர்கள் இறைவனின் திருநாமத்தை மட்டும் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள் .
“இவர்களுக்கு வைணவ மரபு தெரியவில்லையே” என்று அந்த இடத்தை விட்டு, உணவு கொள்ளாமல் சென்று விட்டார்.
அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களாக இருந்தாலும் , ஆசாரியர்களுடைய திரு நாமங்களைச் சொல்லாமல் எம்பெருமான் திருநாமங்களை மட்டுமே கூறி யதால், “ஆசாரிய அபிமானம் இல்லாதவர்கள் இல்லத்தில் அமுது செய் வது தகாது” என்று அங்கிருந்து புறப்பட்டார்.
“வைணவ மரபுப்படி,ஆசாரியன் திருநாமத்தைச் சொல்லிவிட்டுத்தான், இறைவனுடைய திருநாமத்தைச் சொல்ல வேண்டும். வெறுமனே இறை வனுடைய திருநாமத்தை மட்டும் சொல்லக்கூடாது. இப்படி இருந்தால் தான் அவன் வைணவ மரபு தெரி யாதவன் என்று பொருள்.”
அதனால்தான் வைணவத்தில் இறைவனைத் துதிக்க கூடிய எந்த பிரபந்தத்தைப் பாடினாலும், அதற்கு முன்னால், அந்தப் பிரபந்தத்தை இயற்றிய ஆழ்வாரின் பெருமையைப் பாடிவிட்டுத் தான் பகவான் பெருமையைப் பாடுவார்கள்.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் சிந்தனைகள், மிகச் சீரியதாகவும், புதுமை எண்ணங்கள் கொண்டவையாகவும் புதுமையான கோணத்தில் அலசுப வையாகவும் இருக்கும் என்பது அவருக்கே உரிய தனிச் சிறப்பு.
பிள்ளானுடைய தனியன் இது :
த்ராவிடாகம ஸாரக்யம் ராமானுஜ பதாச்ரிதம் |
ஸுதீயம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||
இதன் பொருள் :
திராவிட வேதத்தின் சாரத்தை அறிந்தவரும், எம்பெருமானாரின் திருவடிகளை ஆச்ரயித்தவரும் ஞானவானுமாகிய திருக்குருகைப் பிரான் பிள்ளானைத் தினந்தோறும் என் தலையால் போற்றுகிறேன்.
