நவ கிரகங்கள் அருளும் இணைப்பு பெற்ற புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை (25.9.21)
நாளைய தினம் புரட்டாசி சனிக்கிழமை.
இரண்டாவது சனிக்கிழமை.
திருமலை அப்பன் வேங்கடவனை நினைத்து புரட்டாசி மாதம் முழுக்க வழிபாடு நடத்துகின்றோம்.
ஆனால் நாளைய தினம் மிக அற்புதமான பல சிறப்புகள் இருக்கின்றன.
இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வருகின்றன.
“5” என்கின்ற எண் வைணவத்தில் மிக உயர்ந்த எண்.
பகவான் ஐந்து நிலைகளில் அருள் புரிகிறார்.
பரமபதத்தில் இருக்கின்றார்.
பாற்கடலில் இருக்கின்றார். ராமனாக கிருஷ்ணனாக அவதாரங்களை எடுக்கின்றார்.
“பின்னானார் வணங்கும் ஜோதியாக” பல திவ்ய தேசங்களில் இருக்கின்றார்.
கடைசியாக நம்முடைய மனதுக்குள்ளும் வந்து அந்தர்யா மியாக இருக் கின்றார்.
அப்படிப்பட்ட எம்பெருமானை நினைத்து வழிபடவேண்டிய தினம் நாளை.
நாளை பல சிறப்புகள் இருக்கின்றன.
நாளை கிருத்திகை நட்சத்திரம்.
கிருத்திகை விரதம் பல பேர் இருப்பார்கள்.
கிருத்திகை முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரம் என்று சொல்லி கிருத்திகை விரதம் இருப்பவர்கள் உண்டு.
இங்கே பெருமாளும் முருகனும் ஒன்றாகச் சேர கூடிய நாளாக நாளையதினம் விளங்குகின்றது.
கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய ராசி மேஷ ராசி .
அங்கேதான் நாளை சந்திரன் இருக்கிறார். அது செவ்வாயின் வீடு.
சந்திரனுக்கு 10 வது வீட்டில் அற்புதமான தசம கேந்திரத்தில் குருவும் சந்திரனும் இணைந்து இருக்கின்றார்கள்.

சந்திரன் ஏழாம் பார்வையாக புதனையும் சுக்கிரனையும் பார்க்கின்றார்.
புரட்டாசி மாதத்திற்குரிய கன்னி ராசியின் அதிபதி புதன். அந்த ராசியில் சூரியனும் செவ்வாயும் இருக்கின்றார்கள் .
அந்த நாளுக்குரிய சனியும் குருவும் இணைந்து பார்க்கிறார்கள். ராகு கேது இணைப் புக்கு உரிய அமைப்பும் இதிலே இருப்பதைக் கவனிக்கலாம்.
குரு 5-ஆம் பார்வையாக ராகுவை பார்க்க அவர் பார்வையை வாங்கிய ராகு கேதுவை பார்க்க இப்பொழுது அனைத்து கிரகங்களும் நாளைய தினத்திலே ஒன்றை ஒன்று இணைந்து பார்த்து நமக்கு அருள் தரும் நிலையில் இருக்கின்றன.
நாளைய தினம் அவசியம் “விண்ணுக்கும் மண்ணுக்கும் வைப்பாக” விளங்குகின்ற புரட்டாசி மாதத்தில் அவதரித்த திருவேங்கடமுடையானை நினைத்து சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
அதிலேயே கிருத்திகை விரதமும் சேர்ந்துவிடுகிறது
உங்களால் பெரிய அளவில் தளிகை போட முடியாவிட்டாலும் நீங்கள் மதியம் உண்ணுகின்ற பிரசாதத்தை ஒரே இலையில் வைத்து, படைத்து, இயன்றால் கொஞ்சம் சர்க்கரைப் பொங்கல் செய்து ,மாவிளக்கு போட்டு வணங்க வேண்டும்.
பெருமானுடைய பேரருளும் நவக்கிரகங்களால் வரக்கூடிய அருளும் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த அமைப்பு மற்ற நாட்களில் கிடைக்காது.
மாவிளக்கு என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். நம்முடைய எண்ணங்கள் நிறைவேற வேண்டும்; நம்முடைய கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று சொன்னால் மாவிளக்கு போட்டு, அந்த மாவிளக்கால் பெருமானை ஆராதனை செய்தால் கட்டாயம் நம்முடைய கோரிக்கை நிறைவேறி நமக்கு வளமான வாழ்க்கை கிடைக்கும்.
அதனால்தான் தேவதைகளுக்கு பொங்கல் போட்டு மாவிளக்கு ஏற்றும் பழக்கம் இங்கே மரபாக இருக்கிறது. பச்சரிசி மாவை உருண்டையாக கலந்து அதில் குழியாக்கி பசு நெய்யை ஊற்றி தீபத்தை ஏற்றி அந்த தீபத்தால் ஆராதனை செய்ய வேண்டும்.

மா என்றால் மகா லக்ஷ்மி. மகாலக்ஷ்மியின் பேரருள் மாவிளக்கு போடுவதால் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை.
ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தால் வணங்கவேண்டும்.
அவனை வணங்குகின்ற பொழுது இந்தப் பாசுரத்தைச் சொல்லி வணங்கலாம்.
பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தமை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்
வாசமாமலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக்கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே
– திருமங்கையாழ்வார்
pEsumin thirunAmam ettezhuththum solli ninRu, pinnarum
pEsuvAr thammai uyya vAngip piRappaRukkum pirAn idam
vAsa mA malar nARuvAr pozhil sUzh tharum ulagukkellAm
thEsamAyth thigazhum malaith thiruvEngadam adai nenjamE! – Thirumangai Azhwar
அவன் திருநாமம் சொல்லி தன்னைத் தேடி வருபவர்களுக்கு இவ்வுலகத்தில் வாழ்வாங்கு வாழும் வரத்தைத் தந்து இன்னொரு பிறவி வராத ஒரு நிலையையும் ஏற்படுத்துகின்றான்.

பேரின்ப பெருவாழ்வை தருகின்றான்.
அதைத்தான் திருமங்கையாழ்வார் “பிறப்பு அறுக்கும் இடம்” என்று இப்பாசுரத்தில் குறிப்பிடுகின்றார்.
அற்புதமான சோலைகள் நிறைந்த அந்த திருவேங்கடத்துக்கு நம்மாலே நேரில் சென்று தரிசிக்க முடியாவிட்டாலும் நம்முடைய நெஞ்சமாவது நாளைய தினம் விரதமிருந்து, தரிசித்தால் நமக்கு எல்லையற்ற நலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
- வாலாஜாபேட்டை ஸ்ரீமத். வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் 245 வது ஜெயந்தி இசை விழா

- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)

