By S.Gokulachari
மனிதன் இறந்த பின் எங்கு செல்லுவான் அதாவது அவன் உயிர் எங்கு செல்லும் என்ற கேள்விக்கு பதில் சொல்வது என்பது எப்போதுமே சிக்கலான விஷயமாகவே இருக்கிறது. அது பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்கள் கருட புராணம் சொல்கிறது .
கருட புராணத்தில் மனிதன் இறந்த பிறகு, அவர்களுடைய உடலில் இருந்து பிரிந்த உயிரானது, எங்கு செல்கிறது, என்ன செய்கின்றது, சொர்க்கம் நரகம் போன்ற விஷயங்களும், சொர்க்கத்துக்கு யாரெல்லாம் போவார்கள், நரகத்துக்கு யார் செல்வார்கள் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.
பொதுவாக மனிதன் இறந்த பிறகு, உடலை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற ஆன்மாவானது, வேறு உலகத்திற்குச் செல்லும். அப்படிப் பிரிந்து செல்லுகின்ற சில உயிர்கள் வேறு உலகத்துக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும். அதாவது சாந்தியடைய முடியாமல், கடவுளையும் அடைய முடியாமல் சபிக்கப்பட்ட ஆவியாக மாறி உலாவிக் கொண்டிருக்கும்.
உடலில் இருந்து பிரிந்து செல்கின்ற உயிரானது அடுத்த பிறவியில் எங்கு செல்லும்? என்னவாகப் பிறக்கும், எங்கு பிறக்கும் என்பவை எல்லாமே அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தான் தீர்மானிக்கப்படும்.
இதைத்தான் பட்டினத்தார்
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கு ஏது துணை
தினையாம் அளவு எள் அளவாகிலும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பர லோகம் சித்திக்கும் சத்தியமே
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அம்பு பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே
(அத்தம் ,அர்த்தம் = செல்வம், விழி அம்பு = கண்ணீர்)
அப்படியானால், நம்முடைய வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும்? நாளை ஒருநாள் நமக்கும் முடிவு உண்டு என்று நினைத்து எந்தத் தவறும் செய்யாமல் வாழ வேண்டும்.
இன்று நான் நாளை நீ
என்றும் நாம் என்று இரு
நன்று செய் நன்று சொல்
நடத்து உன் வாழ்வினை
நெஞ்சம் உன் சன்னதி
நித்தமும் நிம்மதி
என்பது கவியரசு கண்ணதாசனின் பாடல்.
இந்த வைராக்கியத்தோடு வாழ்ந்தால் நாம் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை.
