இப்பொழுது சமூகத்தில் ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது. உதாரணமாக நான் திருமண் அணிந்திருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் நீங்கள் பிஜேபியா என்று கேட்டார். இன்னொரு நண்பர் நீங்கள் பிஜேபியில் சேர விருப்பமா? என்று கேட்டார்.
ஒரு முறை நான் ஒரு பெரியவரோடு நம்முடைய சமயத்தில் உள்ள சில குறைபாடுகளை குறித்து உரையாற்றிய போது நீங்கள் என்ன திராவிடர் கழகத்தர்கள் போல் பேசுகிறீர்கள் என்றார். எனக்கு இதன் அர்த்தம் தெரியவில்லை.
ஆனால் இது ஒரு விபரீதமான சிந்தனை என்பது மட்டும் புரிகிறது .
ஒருவன் நம்மிடத்தில் இருந்த குறைபாடுகளையும், மற்றவர்களிடம் இருக்கக்கூடிய நிறைகளையும் ஒரு பேச்சுக்கு கூட சுட்டிக்காட்ட முடியவில்லை.
ஆனால் சில காலத்திற்கு முன் அப்படி இல்லை. நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் சேரலாம். யாரையும் நண்பர்களாக வைத்துக் கொள்ளலாம். உங்கள் நண்பருடைய கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை .அதற்கு எதிரான கொள்கையை நீங்கள் வைத்திருந்தாலும் கூட நண்பர்களாகவே இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது.
சமீப காலத்தில் அப்படிப்பட்ட வாய்ப்புகள் இல்லை என்பது போல ஒரு தோற்றம் தெரிகிறது .ஏதேனும் ஒரு ஒரு கட்சியையோ ஒரு சமயக் கொள்கையையோ சார்ந்து தான் இருக்க முடியும் அல்லது இருந்தாக வேண்டும் என்பது போல இருக்கிறது.
சில புது விஷயங்களைப் பேசினாலும் கூட அதில் உள்ள நியாயங்களை யாரும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரிடத்தில் இருக்கக்கூடிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டியவன் எல்லோருக்கும் பொல்லாதவனாக ஆகி விடுகின்றான்.
அதே சமயம் ஒவ்வொருவரிடத்திலே இருக்கக்கூடிய நல்லவைகளைச் சுட்டிக் காட்டினால் அவனையும் யாரும் தனக்கு உரியவர்களாகக் கருதுவதில்லை. அவன் எல்லோராலும் சந்தேகத்திற்குரியவனாகவே பார்க்கப்படுகின்றான் என்பது தான் இன்றைய சமூகத்தின் பரிதாபமான நிலை.
நடுநிலை என்று சொல்வார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. நீங்கள் ஏதேனும் ஒரு பக்கம் சார்ந்து இருக்கவே வேண்டி இருக்கிறது. அப்படி சார்ந்து இருக்கும் போது ,சார்ந்திருக்கும் பக்கத்தின் எந்தக் குறையையும் வாயைத் திறந்து பேசாமல் இருக்கும் கட்டுப்பாடு நம் மேல் விதிக்கப்படுகிறது.
ஒரு முறை ஒரு நண்பரிடம் வேடிக்கையாக இதைச் சொன்னேன். அதற்கு அந்த நண்பர் சொன்னார். “உண்மைதான் சாலையின் இரண்டு பக்கங்களிலும் இருப்பவர்கள் போல எல்லோரும் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து கிடக்கிறார்கள். நீங்கள் ஏதேனும் ஒரு பக்கத்தில் இருக்க வேண்டும். நடுநிலைமை என்று சொல்லி சாலையின் நடுவே போய்விட்டால் வருகின்ற வண்டியில் அடிபடுவதைத் தவிர வேறு இல்லை “என்றார்..
அதேபோல இன்னொரு விஷயமும் பார்க்கின்றேன்.
நான் திருமண் அணிந்து கொண்டிருப்பதைப் பார்த்து, ஒரு நண்பர், சமீபத்தில் காஞ்சிபுரத்தில் இரண்டு கலையார்களும் அடித்துக் கொண்ட வீடியோவை அனுப்பி இருந்தார் . அனுப்பியதோடு அவர் நின்று இருக்கலாம். ஆனால் அவர் ஒரு கேள்வியும் அனுப்பி இருந்தார்.
” என்ன சார், உங்க ஆட்கள் இந்த மாதிரி இருக்கிறாங்க?” என்றார். எனக்கு இதன் அர்த்தமும் புரியவில்லை. ஏதோ என்னிடம் கேட்டுக் கொண்டுதான் இத்தனை விஷயங்களும் அங்கே நடக்கின்றன என்பது போல அவர் விசாரித்தார்.
நான்”ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்” என்று கேட்ட பொழுது,” நீங்கள் வைஷ்ணவர் தானே, அதில் என்ன பிரச்சனை(காஞ்சீபுரம் பிரச்சினை) என்பது உங்களுக்குத் தானே தெரியும். என்பதற்காக கேட்டேன்” என்றார். அப்படியானால் ஒரு வைணவன், இம்மாதிரியான பிரச்சனைகளையும் தெரிந்து வைத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்பது போலச் சொன்னார்.
சரி என்று இம்மாதிரியான பிரச்சினையை விமர்சித்தால் அப்படியும் கஷ்டம் வந்து சேருகிறது.” காட்டிக் கொடுக்கிறீர்களே.. வைணணத்தை எதிர்க்கிறீர்களே” என்கிறார்கள் .
இவையெல்லாம் சமீப காலத்திலே நம்முடைய மனநிலையின் மாற்றத்தைக் காண்பிக்கின்றன. இது எதனால் வந்தது என்று தெரியவில்லை .ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிகிறது .இது நல்லதுக்கல்ல என்பது மட்டும் புரிகிறது.
எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன அலங்கோலங்களோ ? பாவம் எதிர்கால சந்ததியினர் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகத்தின் மீது நம்பிக்கையும் இழக்க கூடிய அபாயமும் இதிலே இருக்கிறது