
கேள்வி: தானம் தர்மம் எளிய விளக்கம் தேவை?
பதில்: இதற்கு பல விளக்கங்கள் உண்டு.இருப்பினும் அதில் சிலவற்றைச் சொல்கிறேன். கேட்கும்போது ஒருவருக்கு வழங்குவது தர்மம். கேட்காத போது அவரின் தேவை அறிந்து வழங்குவது தானம். நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம். உதாரணமாக நல்ல காரியங்களுக்கு நாம் தரு வதை ‘தானம்’ என்று சொல்லலாம். நம்மைவிட வசதி குறைந்தவர் களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் நாம் தருவதை ‘தர்மம்’ என்று சொல் லலாம். இன்னொரு கோணத்தில் ‘தானம்’ என்ற சொல் பொதுவாகவே நாம் பிறருக்குச் செய்யும் பொருளுதவியைக் குறிக்கவே உபயோகிக்கப்படுகிறது. தர்மம் என்றால் நல்லொழுக்கம், ஆன்மிக வழியைப் பின்பற்றுதல், பெரியோர் காட்டிய நல்வழியில் வாழ்தல், நியாயமான வழியில் வாழ்க்கை நடத்துதல்; தானம் தர்மத்தில் அடங்கும் என்றும் கொள்ளலாம்.சில குறிப்பிட்ட சமயங்களில் , விரதமோ யாகமோ பூர்த்தி யடைய தானம் செய்வது விதிக்கப்பட்டிருக்கிறது.தர்மம் என்பது எப்போதும் செய்ய வேண்டியது.
கேள்வி: இறைவனை அடைய அடியார்கள் துணை வேண்டுமா? நாமாக நேரடியாக சென்று அடைய முடியாதா?
பதில்: பசுமாடு நம்முடையதாக இருந்தாலும், அது தானாகப் பால் கறப்ப தில்லை. கன்றுக் குட்டி அருகில் இருந்தால்தான் கறக்கும். அதுபோல சில அடியார்களின் துணையில்லாமல் இறையருளைப் பெறுவது கடினம்.
இராமாயணத்தில் அசோகவனத்தில் சீதை, ராமானுஜம் லக்ஷ்மண பூர்வஜா என்று சொல்லுகின்றாள் . ராமனும் லக்ஷ்மணனும் என்று சொல் லலாம்.காட்டில் இருவரையும் பிரிந்த சீதைக்கு அவர்கள் இரண்டு பேரும் மானைத்தேடி போனபின் சந்தித்து கொண்டார்களா என்பதும் தெரியாது. ஆனாலும் லஷ்மணனைச் சொல்லி லக்ஷ்மணனுக்கு முன்பிருந்த ராமன் என்று சொல்கிறாள். என்ன காரணம் என்றால் அடியாரை முன்னிட்டுச் சொல்ல வேண்டும்,பலிக்கும்..
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து, என்பது பாசுரம். யானையின் மீது ஏறவிரும்புமவர்கள் யானைப் பாகனுடைய அநுமதி கொண்டு புகவேண்டுமாபோலே அடியார்களின் துணை கொண்டே எம்பெருமானைப்பணிதல் வேண்டுமென்பது மரபு.
கேள்வி: அவதாரத்தை எப்படிப் புரிந்து கொள்வது?
பதில்: அவதாரம் என்றால் மேலே இருந்து கீழே இறங்கி வருவது என்று ஒரு பொருள். இதை இன்னொரு கோணத்திலும் நாம் விளங்கிக் கொள்ளலாம். இயற்கையின் ஒழுங்குக்கு இடையூறு நேரிடும் பொழுது இயற்கை தன் உள்ளிருந்து ஒரு பேராற்றலை தோற்றுவித்து இடையூறு செய்யும் அம்சத்தை நீக்கிவிடும். இதுவும் அவதாரத்தின் வெளிப்பாடு தான்.