பதில்: நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்களை எழுதினார். அந்த நான்கு பிரபந்தங்களும் தமிழ் பற்று ஆன்மீக பற்று உடைய ஒவ்வொருவருக்கும் ஒரு அற்புதம் என்று சொல்லலாம். கடவுள் மறுப்பு கொள்கையை உடைய பாரதிதாசன், தமிழ் நன்றாகக் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் நம்மாழ்வாரின் பாசுரங்களைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். அவர் தன் மாணாக்கர்களுக்கு திருவாய்மொழியின் முதல் திருவாய்மொழியான “உயர்வற உயர்நலம் உடையவன்” என்கின்ற பாடல்களைச் சொல்லி அற்புதமான இலக்கண குறிப்புகளைக் கொடுப் பாரம்.
மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே
என்கிற பாசுரத்தின் நயத்தை அவர் மிக ரசிப்பாராம்.(குறிப்பு உதவி:திரு சித்தன்,புதுவை) அதைப்போலவே பிரபலமான திரைப்பட பாடல் ஆசிரியர் வாலி ஒருமுறை சொன்னார். “என்னைக் கவர்ந்த ஆழ்வார் நம்மாழ்வார். என் தமிழ் துருப்பிடிக்கும் போதெல்லாம் நம்மாழ்வார் திருவாய்மொழியில் சாணைப் பிடித்துக் கொள்கிறேன்” என்றார்.,
கேள்வி: மனிதர்களில் எத்தனை வகை உண்டு ?
பதில்:ஆண்டாள் திருப்பாவையிலே ஓங்கி உலகளந்த உத்தமன் என்று ஒரு பாசுரம் பாடி இருக்கிறார். இதற்கு உரையாசிரியர்கள் உரை எழுதுகின்ற பொழுது மனிதர்களை பல்வேறு விதமாக வகைப்படுத்திச் சொல் கிறார்கள்.1.உத்தமன் 2.மத்திமன் 3.அதமன் 4.அதமாஅதமன்
பிறருக்காக தன்னை அழிய விடுபவன் உத்தமன். தன் பெருமைகளைக் கூட பிறர் வாழ்வுக்காக விட்டுத் தருபவன் உத்தவன் அதாவது பிறருக் காகவே வாழ்பவன் உத்தமன் .
தனக்காகவும் வாழ்ந்து, பிறருக்காகவும் உதவுபவன் மத்திமன்.
தனக்காக மட்டுமே, பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்பவன் அதமன் .
தன்னுடைய வாழ்வுக்காக பிறரை அழிக்கவும் தயங்காதவன் அதமா அதமன்.
கேள்வி:ஏன் கோயில் மூல மூர்த்தி சிலைகள் கருங்கல்லில் செய்யப் படுகின்றன?
பதில்:உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகம். குறிப்பாக, கருங்கல் எந்த சக்தியையும் தன்வசப்படுத்திக் கொள்ளும் தன்மை உடையது. கருங்கல்லானது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து வகையான பஞ்சபூதத்தின் தன்மைகளைக் கொண்டுள்ளது. கருங்கல்லில் தண்ணீர் உள்ளதால் அது குளிர்ச்சியான நிலையிலேயே இருக் கிறது. நிலம் என்பது கல்லுக்குள் இருக்கிறது.கருங்கல்லில் நெருப்பும் உண்டு. அதனால்தான் ஒன்றுடன் ஒன்று உரசும்போது தீ பற்றுகிறது.கல்லில் காற்று உள்ளதால் தான் கருங்கல் பாறைகளுக்கு இடையில் தேரைகள் வாழ் கின்றன.”கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் தயாபரன் “என்பார்கள். ஆகாயத்தைப் போலவே வெளியில் உள்ள சத்தங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் திறன் கல்லுக்குள் உண்டு. கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட கோவிலில் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கிறது. அத்தகைய மூர்த்தியை நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகுவதுடன், நம் வாழ்வில் நல்ல பலன்களும் கிடைக்கிறது.நம் பிரார்த்தனைகளுக்குப் பலன் கிடைக்கிறது.
