வைணவ திவ்ய தேசங்களில் திருக்கண்ணபுரம் மிகச்சிறந்த திருத்தலம். இங்கு தான் எட்டெழுத்து மந்திரத்தின் தத்துவத்தை திருமங்கை ஆழ் வாருக்கு பெருமாள் எடுத்துச் சொன்னார். ஏழு புண்ணிய திருத்தலங்களில் ஒன்று. ஐந்து கிருஷ்ண ஆரண்ய தலங்களில் ஒன்று. நீலமேகப் பெருமாள், சௌரிராஜ பெருமாள் என்ற திருநாமத்தோடு பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன் உள்ளார்.
கண்ணபுரத்து நாயகி என்று தாயாருக்கு பெயர். பத்மினி என்றும் இவருக்கு பெயர் உண்டு. இந்த விமானத்திற்கு உத்பலா பதேகே விமானம் என்று பெயர். திருக்கோயிலை வலம் வரும் போது இத்திருக்கோயிலின் விமானம் கண்ணில் படுவதில்லை என்பது இதன் சிறப்பு.
வீகடாஷனை அழித்த பிரயோக சக்கரத்துடன் காட்சி தருவது இந்த தலத் தில் தான். மாசி மாதம் பௌர்ணமியின் போது கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி நடைபெறும்.. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன் பட்டினத்திலுள்ள கடற்கரை கிராமமான பட்டினச்சேரிக்கு வரும் சௌரிராஜ பெருமாளுக்கு அங்குள்ள வெள்ளை மண்டபம் என்ற பகுதியில் அலங்காரம் செய்யப்படுகிறது. மீனவர்கள் அலங்கரிக்கும் நெற்கதிர்கள் தோரணமாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் பவளக்கால் சப்பரத்தில் தங்க கருடவாகனத்தின் மீதமர்ந்திருப்பார். மீனவர்கள் குலத்தில் பிறந்த பத்மாவதித் தாயாரை பெருமாள் திருமணம் செய்து கொண்டார் என்பதினால் திருக்கண்ண புரத்திற்கு கிழக்கே உள்ள மீனவர் கிராமங்களில் இவரை “எங்கள் மாப்பிள்ளை சாமி” என்று அழைப்பார்கள்.
பெருமாளுக்கு சவுரிராஜப் பெருமாள் என்று ஏன் பெயர் வந்தது என்பதற்கு ஒரு கதை உண்டு.இக்கோவில் அர்ச்சகர் சுவாமி, ஒருநாள், கோவிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமியின் மாலையைத் தந்தார். அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசன் காரணம் கேட்டான்.அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன் தான் நாளை வந்து பார்க்கும் போது பெருமாளுக்கு முடி இல்லை யெனில் மரண தண்டனை என்று சொல்லி சென்று விட்டான்.அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம் கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜ பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார். உற்சவர் திருவீதி உலாவில் அமாவாசையன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாம்.
காளமேகப்புலவர் நிந்தாஸ்துதியாக பாடல் பாடுவதில் வல்லவர். அவர் ஒருநாள் பெருமாளை தரிசிக்க வந்தார். அப்பொழுது நடை சாற்றப்பட்டு இருந்தது.பெருமாளை தரிசிக்க முடியவில்லை. உடனே பொய்க் கோபம் கொண்ட காளமேகப் புலவர்,” பெருமானே நீ தான் பெரியவன் என்று நினைத்துக் கொண்டு கதவை மூடிவிட்டாய். ஒன்று சொல்கிறேன் கேள். உன்னை விட நான் தான் பெரியவன் .எப்படி என்று கேட்கிறாயா? நீ 10 அவதாரங்கள் தான் எடுத்திருக்கிறாய். நான் எத்தனை பிறவி என்கிற கணக்குப் பார்த்தால் உன்னை விட என் பிறவிகள் தான் அதிகம். அதனால் நான் தான் பெரியவன் என்று பொருள் படும்படியாக ஒரு பாடலைப் பாடினார். அந்தப் பாடல் இது.
கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது
விபீஷணனுக்கு நடை அழகு காட்டிய கீழை திருப்பதி இந்தத் திருப்பதி. முனியோதரன் என்ற பக்த சிகாமணி தினசரி பொங்கல் நிவேதனம் வைத்து படைப்பான். ஒரு நாள் அவன் ஆசையோடு தயாரித்து வந்த பொங்கலைப் படைப்பதற்கு அர்த்த ஜாம பூஜை முடிந்து நடை சாத்தப் பட்டு விட்டது. ஐயோ பெருமாளுக்கு படைக்க முடியவில்லை என்று துடி துடித்துப் போனான். அவனுடைய ஏக்கத்தைக் கண்ட பெருமாள் அவனு டைய நிவேதனத்தை ஏற்றுக் கொண்டார். மறுநாள் காலையில் பெரு மாளுடைய திருவாயிலே இந்த பொங்கல் பிரசாதமும் மீதமும் இருந் ததைக் கண்டவர்கள் முனியோதரன் பக்தியை மெச்சினார்கள். அன்று முதல் அர்த்த ஜாமத்தில் படைக்கப்படும் பொங்கலுக்கு முனியோதரன் பொங்கல் என்று பெயர். திருக்கண்ணபுரத்தில் பெருமாளுக்கு மாசி மகத்தை ஒட்டி பிரம்மாண்டமான பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் மிகச் சிறப்பான உற்சவம் தெப்ப உற்சவம். விடிய விடிய பெருமாள் உபய நாச்சிமாரோடு தெப்பத்தில் வலம் வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மிகப்பெரிய புஷ்கரணி இது. நித்ய புஷ்கரணி என்ற இந்த புஷ்கரணியின் கரையில் நின்று தெப்ப உற்சவத்தைப் பார்ப்பது கண்களுக்கு பெரு விருந்தாக இருக்கும். பெருமாளின் திருவருளும் கிடைக்கும். அன்றைய தினம் அலை கடலென மக்கள் வெள்ளத்தில் திருக்கண்ணபுரம் மூழ்கி இருக்கும். அவசியம் பார்க்க வேண்டிய உற்சவம்.