கேள்வி:எப்போதோ செய்த செயலுக்கு பின்னால் தண்டனை பெறுவது நியாயமாக இருக்குமா?
பதில்:இந்த கதை உங்கள் கேள்விக்கு பதில் தரும்.
ஒரு பலே திருடன். வயது முதிர்ச்சியால் திருட்டுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டான். அமைதியாக தனது வீட்டில் நாட்களை நகர்த்தத் தொடங்கினான். தான் திருடி வைத்திருக்கும் பொற்காசுகளை வீட்டுக் கொல்லைப்புறத்தில் புதைத்து வைத்திருந்தான். தேவைப்படும் போது சிறிது சிறிதாக வெளியே எடுத்து செலவு செய்வான். இந்த விஷயம் அரசனுக்குத் தெரியவந்தது. திருடன் கைது செய்யப்பட்டான். புதைக்கப்பட்டிருந்த பொற்காசுகளும் மீட்கப்பட்டது. திருடன் பேசினான்.
“அரசே! மூன்று தலைமுறைக்கு முன்பே திருட்டுத் தொழிலை நிறுத்தி விட்டேன். இப்போது மீட்டெடுத்த பொற்காசுகள் எல்லாமே என் இளமைக் காலத்தில் திருடியவை. இவை அனைத்தையும் செய்தது என் இளமைப் பருவம் இந்தத் திருட்டுகளைச் செய்தது நான் அல்ல. என் இளமை. இப்போது முதுமையில் இருக்கிறேன். எந்த தவறும் செய்யாத முதுமையை எப்படி தண்டிப்பீர்கள்?”
“நீ என்ன சொல்கிறாய்? எனக்குப் புரியவில்லையே! “ என்றான் அரசன்.
“அரசே! உங்களுக்கு புரியம்படி சொல்கிறேன். நான் சிறு குழந்தையாக இருக்கும் போது என்னை எல்லோரும் கொஞ்சுவார்கள். இப்போது முதுமைப் பருவத்தில் இருக்கிறேன். இப்போது என்னை யாரும் கொஞ்சுவதில்லை. குழந்தையாக இருந்தபோது என்னைக் கொஞ்சியவர்கள் இப்போதும் என்னை கொஞ்சுவார்களேயானால், இளமையில் செய்த குற்றத்திற்கு இப்போதும் தண்டனை கொடுக்கலாம். குழந்தைப் பருவத்தில் செய்ததை இப்போது யாரும் செய்வதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அப்படித்தான் இளமையில் செய்த குற்றத்துக்கு, முதுமையில் தண்டிக்கப்படுவதில்லை.”
அரசனுக்கு எதுவும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த சாதுவிடம் ரகசியமாகப் பேசினார்.சாது பேசத் தொடங்கினார்.
“அரசே! நீங்கள் தினமும் இளநீர் குடிக்கிறீர்கள். இளமையில் நீங்கள் விதைத்த தென்னை இன்று அதற்கான பலனைக் கொடுக்கிறது. விதைக்கப்பட்டது இளமையில். அனுபவிப்பது முதுமையில். இதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள், இளமையில் செய்த குற்றத்துக்கு, முதுமையில் தண்டனை அளிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்! இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் அடுத்த பிறவிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது என்று நம்பப்படும் போது, இளமையில் செய்த தவறுக்கு முதுமையில் தண்டனை அளிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அநீதி வேகமாக ஓடும் போது, தர்மம் பின் தொடர்வதை அது கவனிப்பதில்லை. ஆய்ந்து ஓய்ந்து அமரும் போது, கட்டுப்பாட்டை தர்மம் எடுத்துக்கொள்ளும். உலகத்தில் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும். அதை செய்வதற்கு யாரவது ஒருவர் கருவியாக வேண்டும். இப்போது நீங்கள் கருவியாக இருக்கிறீர்கள். அதர்மத்தின்படி எல்லா தவறுகளையும் செய்த வனை, தர்மத்தின்படி மட்டுமே தண்டிப்பேன் என்று ஒரு அரசன் காத்திருப்பான் என்றால், அந்த காத்திருத்தல் அந்த அதர்மவாதிக்கு சாதகமாகத்தன் முடியும்” என்று சொல்லிவிட்டு அமைதியானார்.
தெளிவுபெற்ற அரசன் திருடனுக்கு தண்டனை அளித்தான்.