கேள்வி:எதிலும் வெற்றி பெற சிறந்த ஒரு பாசுரம் சொல்லுங்கள் ?
பதில்:ஆழ்வார்களும் நாயன்மார்களும் தங்கள் பாடல்களில் கடைசிப் பாடலில் பலன் என்ன என்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.அந்த அடைப்படையில்,
ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்
மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே
என்ற பாசுரத்தை பாராயணம் செய்ய, எதிலும் வெற்றி கிடைக்கும்.இதை ஆழ்வார் உறுதிப்படுத்துகிறார்.
குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,
ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,
நன்றி புனைந்தஒ ராயிரத் துள்ளிவை,
வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே
இப்பாசுரங்களை மனம் ஒன்றி ஓதுபவர்களுக்கு “வென்றி தரும்பத்து ” என் கிறார்.
கேள்வி:கலக்கம் என்பது ?கலங்காதிருக்க என்ன செய்ய வேண்டும்?கலக்கம் இல்லாதவர் எப்படி இருப்பார்கள் ?
பதில்:மனம் குழம்பினால், நேர் சிந்தனை இல்லாவிட்டால், கலக்கம் வருகிறது. சிந்தனை குழம்பி விட்டால் நமக்கு பகுத்தறியும் ஆற்றல் போய்விடுகிறது. அச்சம் வந்து விடுகிறது .இந்த கலக்கம் போக வேண்டும் என்றால்,
மனம் இறைவனை நம்ப வேண்டும். அப்படி நம்பியவர்கள்,அச்சமின்றி இருப் பார்கள். தெளிவோடு இருப்பார்கள். மன நிம்மதியோடு இருப்பார்கள்.
என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை
இனித் தெய்வமே உன் செயலே என்று உணரப்பெற்றேன்,
இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை,
பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே.
என்ற பாடலை நினைத்துக்கொள்ளுங்கள்.கவலையோ அச்சமோ வராது.
