ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியின் ஆறாவது பதிகம்.
வைணவக் கோயில்களிலும் சரி, வைணவர்கள் இல்லத் திருமணங்களிலும் சரி, திருமணம்(வைதிகம் ) முடிந்த கையோடு, சீர் பாடல் என்று இந்தப் பாடல்கள் செவி குளிர ஒலிக்கும். ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகையில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் கல்யாணம் என்று சொல்வார்கள்.
அதில் வாரணமாயிரம் பாடல் ஒலிக்கா விட்டால் அந்தத் திருமணம் முழுமையாக நிறைவடையவில்லை என்று பொருள். “பகவானுக்கு இடாத அன்னமும், வாரணம் ஆயிரம் அனுசந்திக்காத திருமணமும்” பயனற்றவை என்பது வைணவ நம்பிக்கை.இப்பொழுது காலதேச வர்த்தமானத்தில் இதை அந்த அளவுக்குக் கேட்க முடியவில்லை.
திருப்பதியில் கூட கல்யாண உற்சவத்தின்போது அரை நிமிடத்தில், பேருக்கு ஒரே ஒரு பாசுரம் பாடி விட்டு, தேங்காயை உருட்டி விட்டு எழுந்து விடுகிறார்கள்.
இதன் மகத்துவத்தை அறிந்தால் இதைப் பாடாமல் இருக்க மாட்டோம்; போற்றாமல் இருக்க மாட்டோம்.
கண்ணனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்தாள் ஆண்டாள்.அவனைத் திருமணம் செய்து கொள்வது குறித்து கனவு காண்கிறாள். அந்தக் கனவுப் பாடல் தான் நனவுப் பாடலாக நம் நெஞ்சில் நிற்கிறது .
திருமண நிகழ்வு எந்த வரிசையில்(order), எத்தனை குதூகலத்தோடு கொண்டாடப்பட வேண்டும் என்பதை இந்த நாச்சியார் திருமொழி நயமாகச் சொல்கிறது.
திருமண நிகழ்வுகளையும் சடங்குகளையும் பெரும்பாலும் வைதிக முறையில் செய்பவர்கள் ஆபஸ்தம்ப சூத்திரத்தை அனுசரித்து நடத்துகிறார்கள் .கிருஷ்ண யஜுர் வேதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது இந்த ஆபஸ்தம்ப க்ருஹ சூத்திரங்கள்.
திருமண நிகழ்வுகளில், சடங்குகளின் அமைப்பை, வரிசையாக, ஒரு அழகான தமிழ்ப் பதிகத்தில் பாடி கொடுத்தவள் ஆண்டாள் நாச்சியார்.
இந்தப் பதிகத்தில் வைதிக மரபையும் விடவில்லை; தமிழ் மரபையும் விடவில்லை.
வைணவ ஆலயங்களில், எத்தனை வேத மந்திரங்கள் ஒலித்தாலும், இரண்டு திருப்பாவை பாசுரங்கள் (சிற்றம் சிறுகாலே, வங்ககடல்) பாடாமல் வழிபாடு நிறைவு அடையாது.இதனை சாற்றுமுறை பாசுரங்கள் என்பார்கள்.
அதைப்போலவே, நாச்சியார் திருமொழியில், ஆண்டாள் அருளிச் செய்த ஆறாவது திருமொழியான, “வாரணமாயிரம்” பதிகத்தைப் பாராயணம் செய்யாமல், திருமணச் சடங்குகளை நிறைவேற்ற மாட்டார்கள்.
இந்தப் பதிகத்தின் பதினோரு பாடல்களையும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் சேவிப்பார்கள்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ்
கோள் அரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான்
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி
சதிர் இளமங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான்
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ! நான்
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய்சினமா களிறு அன்னான் என் கைப் பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ! நான்
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ! நான்
வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரி முகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
பதினொன்றாம் பாசுரம். பலச் ச்ருதி
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே
இந்த பாடல்களை ராகத்தோடு ஓதும் நிகழ்ச்சியை “தேங்காய் உருட்டுதல்” என்றும் சொல்லுவார்கள்.
மணமகனும் மணமகளும் ஒரு பட்டுப் பாயில் எதிரெதிராக அமர்ந்து, இந்தப் பாசுரங்கள் சேவிக்கப்படும் பொழுது, மஞ்சள் தடவிய நான்கு தேங்காய்களை ஆளுக்கு இரண்டிரண்டு காய்களாக எதிரெதிராக உருட்டி விடுவார்கள்.
அப்பொழுது, இரண்டு பக்கத்திலும் இருக்கக்கூடிய உறவினர்களின் பெயர்கள் சொல்லி அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி சீர் பாடி களிமின், களிப்போமே என்று ராகமாகப் பாடுவார்கள்.
நாச்சியார் திருமொழியின் கடைசிப் பாசுரத்தை ஆசாரியனும், ஸ்ரீவைஷ்ணவர்களும் பாடுவதற்கு முன்னால் “நாச்சியார் சம்பாவனை” என்று செய்வார்கள்.
வெற்றிலை, பாக்கு பழங்களுடன் ஆசாரியனுக்கும் மற்றைய ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் சம அளவில் சம்பாவனை செய்வார்கள்.
அதைப்போலவே திவ்ய தேச மரியாதை என்று ஒரு மரபும் வைணவத்தில் உண்டு. ஒரு திருக்கல்யா ணத்தை ஆசீர்வதிக்கும் விதமாக பல்வேறு திவ்ய தேசத்து எம்பெருமான்களின் திருமாலை, பரிவட்ட பிரசாதங்கள், அந்தந்த திவ்யதேசத்தைச் சேர்ந்தவர்களால் கொண்டுவரப்படும். இது பெருமாளும் பிராட்டியும் சூடிக்களைந்த மாலையாக இருக்கவேண்டும்.
காரணம், “சூடிக் களைந்த மாலை சூடும் தொண்டர்கள்” என்று பகவானுடைய பிரசாதத்தை அல்லாது, மற்றவற்றை வைணவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை, ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்தில் சொன்னார் பெரியாழ்வார்.
எனவே, அந்தந்த திவ்யதேசத்து மாலையை பிரசாதமாக மணமக்களுக்கு சூட்டி, அந்தந்த திவ்யதேசத்து பாசுரத்தை வாழ்த்துப்பாவாகப் பாடி வாழ்த்துவார்கள்.
அப்படி திவ்ய தேசத்து மரியாதை செய்பவர்களுக்கு எதிர் மரியாதை (சம்பாவனை) செய்ய வேண்டும்.
