By பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி
வயது ஆகிவிட்டாலே நம் மனது தளர்கிறது.தன்னம்பிக்கை குறை கிறது.உடல் தளர்ந்து விடுகிறது.உள்ளத்தில் உற்சாகம் வற்றி விடுகிறது.
நாம் ஒரு விஷயத்தில் உறுதியோடு இருக்க வேண்டும்.வயதில் குறைந் தவர்களோ, அதிகமானவர்களோ உற்சாகம் குறையாத மனிதர்களிடம் பழக வேண்டும்.
அவர்களையே அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.தங்களுடைய சோகங் களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு முன்னேறுவதற்கு முயலும் மனிதர் களை நாம் கவனிக்க வேண்டும்.
அப்போது தான் நம்மாலே ஒரு துடிப்பான வாழ்க்கையை வாழ முடியும்.அறுபது வயது ஆகிவிட்டாலே எல்லாம் முடித்து விட்டதாக நினைத்துக் கொள்ளக்கூடாது.
60 வயதுக்கு மேலே தான் நமக்கு சில அனுபவங்கள் கிடைக்கப் போகின்றன.மகிழ்ச்சியான வித்தியாசமான தருணங்கள் கிடைக்கப் போகின்றன.
இத்தனை வயது போனாலும் இனியாவது புதிய முறையில் வாழ வேண்டும் என நினைக்க வேண்டும் . விரும்பியவற்றை செய்து பார்க்க வேண்டும்.விரும்பிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.நண்பர்களை இணைத்துக்கொள்ள வேண்டும். விரும்பியவற்றை இயன்ற அளவு கட்டுப் பாடோடு சாப்பிடத் தெரிய வேண்டும்.
நம் வாழ்க்கையை நல்ல முறையிலே, நமக்கும், நம்மால் மற்றவர் களுக்கும் சந்தோஷம் வரும்படி வாழத் திட்டமிட வேண்டும்.இப்படி திட்ட மிட்டு வாழத் தொடங்கினால் இந்த 60 வயது என்பது ஒரு பெரிய ஒரு விஷயமாகவே இருக்காது.
60 வயதைக் கடந்தவர்கள் இன்று புதிதாய் பிறந்தோம் என்று பாரதி சொன்னது போல, பழய வாழ்க்கையை நினைந்து கஷ்டப்படாமலும், பிறரைக் கஷ்டப்படுத்தாமலும் புதிய சிந்தனைகளோடு, அதே சமயம் பழைய வாழ்வின் அனுபவங்களோடு பெற்ற பாடங்களோடு, வாழத் தொடங்க வேண்டும்.
வயதானவர்கள் மறுபடியும் தங்களுடைய வாழ்க்கையை உற்சாகத்தோடும் இளைமையான துடிப்பான எண்ணங் களோடும் இன்னொரு குழந்தைப் பருவத்தில் இருந்து ஆரம்பிப்பது போல ஆரம்பிக்க வேண்டும்
.அதே ஆட்டம், அதே பாட்டம், அதே உற்சாகம் என்று இருந்தால் நம்முடைய செல்கள் கூட தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்.
நம்மில் சில பேர் வயதாகியும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும்இருப்பவர் களைக் கண்டால் “ என்ன இளமை திரும்புகிறதா?” என்று கேட்பதைப் பார்த்திருக்கலாம்.
அப்படிச் சொல்லப்பட்டவர்களை நீங்கள் கவனித்தால் தெரியும்.
எப்போதும் புன்னகையோடு, உற்சாகமாய் இருப்பார்கள்.காரணம்,. உடல் மூப்படைந்தாலும் மனம் இளமையோடு இருக்கும்.
இன்னும் சிலருக்கு உடல் மூப்படைந்து இருக்காது .ஆனால் மனது மூப்படைந்து இருக்கும்.
சிலர் 35 வயசு நாற்பது வயசுக்குள் இருப்பார்கள் . அவர்களைப் பார்த் தீர்கள் என்றால், பேச்சு, உட்காரும் தோரணை, சொல்லும் வார்த்தைகள், உட்காருவது, எழுந்திருப்பது, நடப்பது, எல்லா வற்றிலும், வயோதிகம் உடலில் வந்து அமர்ந்திருக்கும்.
மனம் தளர்ந்து விட்டால் உடல் கட்டு தளர்ந்து விடும். அது தளர்ச்சிக்கும் விரக்திக்கும் காரணமாக இருக்கும்.
இவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள மாட்டார்கள். “இதுதான் எனக்கு தெரியுமே” “நாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டோமே ” என்றே நினைப்பார்கள்.
இது அவர்களுக்கு ஒரு பெரிய சுமையைத் தரும். கொஞ்சம் கொஞ்சமாக மனச் சிதைவை உண்டாக்கும்.
உடலில் சோர்வை கொடுத்து தன் மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கெடுத்து, மொத்தத்தில் ஆளையே முடக்கிப் போட்டுவிடும்.
அவர்கள் எளிதாக தங்கள் மதிப்பை இழந்து விடுவார்கள்.
தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி விடுவார்கள்.
யாரையாவது சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று அவர்களாகவே நினைத்து தங்களைத் தாங்களே நொந்து கொள்வார்கள்.
புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள நினைக்க மாட்டார்கள் . ஒரு துடிப்பான வாழ்வு வாழ்வதில் ஆசை இருக்காது.எல்லாம் முடிந்து புறப்படும் மன நிலைக்கு வந்து விடுவார்கள்.
வாழ்க்கையை குதூகலமாக வாழ வேண்டும் என்று சொன்னால் நீங்கள் புதுமையான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
கவிஞர் வாலி ஒரு பேட்டியில் சொன்னார்.
நான்காவது தலைமுறைக்கு பாட்டு எழுதும் அவரிடம், “அது எப்படி சாத்தியம்?” என்று கேட்ட போது அபார விஷயத்தைச் சொன்னார்.
“நான் எப்பொழுதும் என் சிந்தனையை இளமையாக வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு உள்ள இளைஞர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை நான் அப் டேட் பண்ணி வைத்திருக்கிறேன். அவனுக்குப் பிடித்ததை எல்லாம் எனக்கு பிடிப்பது போல் என்னை நான் தகவமைத்துக் கொண்டிருக்கிறேன்.”
அதனால் தான் எத்தனை கவிஞர்கள் இருந்தாலும் கூட வாலி சாகும்வரை பாடல் எழுத முடிந்தது.
.நம் நண்பர் ஒருவர் கப்பல் விற்பனை பிரதிநிதியாக பணி புரிந்தவர்.
தற்சமயம் நங்கநல்லூரில் க்ரிஷ்ணார்ப்பணம் என்ற அமைப்பில் பல ஆன்மீகப் பணிகளைச் செய்து வருகிறார்.அவருக்கு வயது 82.
இன்றைக்கு முகநூல் வாட்சப் போன்ற இணைய வெளியில் வெளுத்து வாங்குகிறார்.
எல்லாம் நல்ல விஷயங்கள் அக்கால அனுபவங்கள்,.இசை பற்றிய குறிப்புக்கள் எழுதுகிறார்..
நையாண்டி கலந்த நடை.ஆங்கிலத்திலும் தமிழும் அற்புதம்.
அவருக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.
சந்தோஷமாக வாழ்வதற்கு ஒருவருடைய வயது ஒரு பொருட்டல்ல என்று சொல்வதற்கான இவர் ஒரு உதாரணம்
.அதே இன்னொரு பேராசிரியர்.சிதம்பரத்தில் இருக்கிறார்.86 வயது ஆகிறது.எத்தனையோ உடல் உபாதைகள்.இன்னும் வைணவ நூலகளை எழுதி கொண்டே இருக்கிறார்.
சமீபத்தில் இலக்கிய நோக்கில் திருமங்கையாழ்வார் பிரபந்தங்கள் என்னும் ஆய்வு நூலை வெளியிட்டிருக்கிறார்.அவர் இல்லத்திற்ற்கு யார் சென்றாலும் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் அவர் சுவையாகப் பேசிக்கொண்டே இருப்பார்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்.
அதெல்லாம் நல்ல வருமானம் நல்ல முறையில் குடும்பம் குழந்தைகள் எல்லாம் அமைந்து இருந்தால் சாத்தியமாகும்.அவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்பார்கள்.
அறுபது வயதுக்கு மேல் உற்சாகமாக இயங்கக்கூடிய எல்லோரையும் வரம் பெற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் என்று நீங்கள் நீங்க ரொம்ப எளிதாக நினைத்துவிடக்கூடாது.
சிலருக்கு அந்த மாதிரியான வாழ்க்கை அமைந்து இருக்கலாம்.
ஆனால் அதில் பலர் , சாதாரணமாக இருப்பவர்களைவிட, பல மடங்கு சங்கடங்களை சமாளித்து வாழ்கிறர்கள் என்பதை அவர்கள் கதையை கேட்டால் தான் தெரியும்.
இத்தனை கஷ்டங்களோடு இவர் எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று வியப்பு அதிகரிக்கும்.
சனிக்கிழமை கோயிலுக்கு வரக்கூடிய ஒரு நண்பர். 85 வயதுக்கு மேல் இருக்கும்.
அவருக்கு நடத்த சோகங்களை பார்த்தால் எப்படி இத்தனையும் தாங்கிக்கொண்டு கோயிலுக்கு வருகிறார் என்று தோன்றும்.
அவருடைய ஆண் குழந்தைகள் இரண்டு பேர் விபத்திலும் வியாதியும் இறந்து விட்டார்கள். பேரக்குழந்தைகள் சிலர் விபத்தில் இறந்துவிட்டார்கள்.(பல நாட்களுக்கு முன் கொடைக்கானலில் பேருந்து உருண்ட விபத்து).
மனைவி இல்லை.மருமகனும் மாரடைப்பால் இறந்து விட்டார். வயதும் ஆகிவிட்டது.
ஆயினும் கோயிலுக்குச் செல்வது, உட்கார்ந்து உற்சவங்களை கண்டு களிப்பது, தேவையான உதவிகளை எல்லாம் செய்வது என்று தன்னுடைய வாழ்க்கையை தகவமைத்துக் கொண்டு இருக்கிறார்.
ஜோபி டனின் அரசியல் குறித்து நாம் பேச வேண்டியதில்லை .ஆனால் அவருக்கு 80 வயது ஆகிறது. பலமுறை அரசியலில் தோல்வியைச் சந்தித்தவர்.ஆனாலும் உற்சாகம் குன்றாது தொடர்ந்து முயன்றவர். இன்று அமெரிக்க அதிபராக இருக்கிறார்.
அவர் அமெரிக்க அதிபர் ஆனதும் அவ்வளவு எளிமையான விஷயமாக அவருக்கு இல்லை.அவ்வளவு எளிதாக ரொனால்ட் டிரம்ப் தன தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.
பற்பலச் சங்கடங்களை மீறித்தான் அவரால் இந்த உச்சத்திற்குப் போக முடிந்திருக்கிறது.
அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பல இடர்பாடுகள் உடையது.அவருடைய மகன் ஒருவன் விபத்தில் இறந்து விட்டார் . ஒரு மகன் போதை பொருளுக்கு அடிமையாகி கப்பல் படையில் இருந்த உத்தியோகத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கும் உடல்நலம் சரியில்லாமல் முகவாதம் வந்து மிகவும் சங்கடப்பட்டார்.
இத்தனை சொந்தத் தொல்லைகளும், வந்த தொல்லைகளும், அரசியல் தொல்லைகளும் இருந்தாலும், இவற்றையெல்லாம் மீறி 80 வயதில் அவருடைய அரசியல் பணிகளில் அவர் காட்டிய உற்சாகம் நாம் பலரும் பின் பற்ற வேண்டிய நல்ல உதாரணம்.
நீங்கள் ஒரு செயலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தால் உங்கள் மனமும் உடலும் மிக நன்றாகவே வேலை செய்யும்.
உங்கள் உடலில் உள்ள சிறு சிறு குறைகள் கூட தானாக நீங்கிவிடும்.நீங்கள் இப்படி தொடர்ந்து பணிகள் செய்வதற்கு உங்கள் வயது ஒருபோதும் தடையாக இருக்காது.
சாக்ரடீஸ் ஏதென்ஸ் நாட்டுச் சிறையில் அடைபட்டு மரண தண்டனையை எதிர் நோக்கி இருந்த காலம்.
ஒரு நாள் பக்கத்து அறையில் அடைபட்டு இருந்த கைதி ஒருவர் நரம்பு இசைக்கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்.
அந்த இசை யை வெகுவாக ரசித்தார் சாக்ரடீஸ், அந்த கைதி யிடம் சென்று “இந்த வாத்தியத்தை எப்படி இசைப்பது? என எனக்கும் சொல்லிக் கொடு ங்கள்” என்று கேட்டார்.
அந்த கைதிக்கு பயங்கர வியப்பு.
“நீங்களோ மரண தண்டனை பெற்றவர். விரைவில் உயிரி ழக்கப் போகும் நீங்கள் இதைக் கற்றுக் கொள்வதால் என்ன பயன்?’ என்று கேட்டார்.
அதற்கு சாக்ரடீஸ், `மேலும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டேன் என்ற திருப்தியுடன் சாகலாம் அல்லவா? அதனால்தான்’ என்றார்.
இதைக் கேட்ட கைதி மீண்டும் வியப்பில் அசந்துபோனார்.
இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்களை சாவோ சங்கடமோ நெருங்குவதே இல்லை
கவியரசு கண்ணதாசன் சொல்லுவார்.
ஒன்று நடந்து தான் தீரும் என்றால் அதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது?
கவலைப்படுவதை விட்டு விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கின்ற பொழுது நம்முடைய மனது தெளிவு பெறும்.
மனது தெளிவு பெறும் பொழுது உடல் வலிமை பெறும்.
உடல் வலிமை பெறுகின்ற பொழுது உற்சாகம் பிறக்கும்.
உற்சாகம் பிறக்கும் போது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த மகிழ்ச்சி தானே வாழ்க்கையில் நோக்கம்.
அந்த நோக்கத்தை நோக்கி நாம் நடைபோடுவோம்.உற்சாகத்திற்கு வயது ஒரு தடையல்ல என்பதை உணர்வோம்
