கொல்லிப்பாவை
திருமதி .பிரேமா வரதன்
திவளும் வெண்மதி போல் திருமகத் தரிவை
செழுங்க டலமுதினிற் பிறந்த அவளும்,
நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசை விடாளால்
குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லு
நின்தாள் நயந்திருந்த இவளை
உன் மணத்தா லென் நினைந்திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே. (திருவாய்மொழி 2.7.1)
திருவிடவெந்தை எம்பெருமானை அனுபவிப்பதில் திருமங்கை ஆழ்வாருக்கு உண்டான அளவற்ற அபி நிவேசம் இத்திருமொழியாகப் பரிணமித்து உள்ளதைப் பார்ப்போம்.

திருவிடவெந்தை Thiruvidanthai
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வராகப் பெருமான், தனது தேவியை இடப்பக்கத்தில் கொண்டு இருத்தலால், இத்தலத்திற்கு திருவிடவெந்தை என்ற திருநாமம் உண்டாயிற்று. திருக்கடல்மல்லை ஞான பிரான் சன்னதியில் எழுந்தருளியுள்ள வராகப்பெருமாள் தேவியை வலப்பக்கத்தில் கொண்டிருப்பர். வலவெந்தை என்று கூறுவது உண்டு.
ஆக இப்பாட்டால் எம்பெருமானை நோக்கி ஆழ்வார் தாமே, வேற்று வாயாலே, (தாய்ப் பாசுரமாக பேசி இருந்தாலும்) தம்முடைய காதல் நிலையை தாமே பேசிக் கொண்டதாகவே நினைவில் கொள்க.
“குவளையங் கண்ணி ” என்றும் கொல்லியம்பாவை என்றும் ஆழ்வார் தம்மைத்தாமே சிறப்பித்துக் கூறிக் கொள்ளலாமா எனில், ஆம், குற்றம் ஒன்றுமில்லை, ஆழ்வார் தனது அவயவ சௌந்தர்யத்தை கூறி வருணித்துக் கொள்வதாக பொருள் கொள்ள வேண்டாம்.
எம்பெருமான் மேல் விழுந்து தம்மை திருவுள்ளம் பற்றுகைக்கு உறுப்பான வைலட்சண்யம் தம்மிடத்தில் உண்டு என்று விண்ணப்பம் செய்வதாகக் கொள்க .
குவளையங் கண்ணி என்று சொன்னது கண்ணின் அழகை சொன்னது அல்ல,உட் கண்ணாகிய ஞானத்தின் சிறப்பைச் சொன்னபடி.
” ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு” என்றபடியே, விஷயாந்தரங்களை விட்டு பகவத் விஷய ஞானம் ஒன்றையே பற்றுவதான ஞானம் தமக்கு உள்ளபடியைச் சொல்லிக் கொண்டார் என்று கொள்க.
கொல்லியம் பாவை என்றதும் மாமிச பிண்டச் சரீரத்தின் அழகை சொல்லிக்கொண்டது அன்று. ஆத்மாவின் வைலட்க்ஷன்யத்தை சொல்லிக் கொண்டது.
வல்வில் ஓரி என்னும் சிற்றரசனுக்கு உரியதாய், கொல்லி எனும் பெயர்கொண்டதான மலையின் கண்ணுள்ள ஒரு பெண்பால் பிரதிமை.
இது தேவசிற்பியால் அமைக்கப்பட்ட அழகில் சிறந்த பதுமையாம்.

மலையிலுள்ள தேவரையும் முனிவரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் இப்பதுமையின் சிரிப்பைக் கண்டு மயங்கி, உயிர் விடுவார்களாம்.
அசுரரும் அரக்கரும் அங்கு அணுகும்போது அவர்களது வாடை பட்டவுடன் பாவை நகைப்புச் செய்யுமாறு வைக்கப்பட்டது.
இது நகைத்துக் கொல்லும் என்பது ,திரிபுரத்தை பெற்றவனும் கொல்லி செழும் பாவையும் எனும் சித்திர மடல் பாடலினால் விளங்கும்.
இப்பாவை கண்டார் உள்ளமும் விழியும் கவர்ந்து, பெரும் காமவேட்கை உறுவித்து, இறுதியில் கொல்லும் என்றும் கூறுவர்.
ஒரு காலத்தில் திருமகள், தன்முன் போருக்கு எழுந்த அவுணர் மோகித்து விழும்படி கொல்லிப்பாவை உருக்கொண்டு ஆடினாள் என்று சிலப்பதிகாரம் கூறும்.
செறுவெங் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்யோளோடிய பாவையும் (கடலாடு காதை 60 61)
இக் கொல்லிப்பாவை, கொல்லிமலையில் உள்ளது என்பதும், தெய்வத்தால் செய்து வைக்கப்பட்டது என்பதும், அழகில் மிக்கது என்பதும், காற்றினாலும் மழையினாலும் மற்றும்ஊறுபாடுகளாலும் தன் அழகியல் வடிவம் கெடாது என்பதும் நற்றிணை முதலிய நூல்களில் காணலாம்.(பாடல்கள் 185,192,201)
இப்பாவையின் அழகை தலைவியின் நலத்திற்கு உவமை கூறுதல் அகநானூறு புறநானூறு முதலிய நூல்களிலும் உண்டு.(அகநானூறு 62,209 புறநானூறு 251)
சீவக சிந்தாமணி 196, 667 ம் பாடல்களிலும், குறுந்தொகை 89, நூறாம் பாடல்களிலும் கொல்லிப் பாவை பற்றிய குறிப்புகள் காணத்தக்கது.
ஆகவே தமிழ்க் கவிகள் கொல்லிப் பாவையை, ஓர் ஒப்புயர்வற்ற, அழகில் சிறந்த மாதர்க்கு உவமை கூறுதல் மரபு என்று உணர்க.
இப்பாசுரத்தில் கொல்லிப்பாவை போன்றவள் என்று சொல்லாமல் கொல்லிப்பாவை என்று சொல்லி வைத்தது முற்றும்மை.
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே (திருவாய்மொழி 6.9.4) என்பது போல.
( நன்றி குறிப்பு ஸ்ரீ காஞ்சி சுவாமிகள்).

- ஹிந்து மதம் முரண்பாடுகள் உள்ள மதமா?

- ஸ்வாமி தேசிகன் உபதேசங்கள் Desikan Upadesangal – Sri.D.K.Srinivasan

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- ஸ்ரீமஹாவீர வைபவம் (vedantha Desikan’s Sri Raghuveera kathyam)

- ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி விழா 2020 -2021

- ஸ்ரீ ரங்கநாதர் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும்விழா(4.2.2023 – சனிக்கிழமை

