திருக்குறள் ஆய்வரங்கம் – Prof.S. Gokulachari
– பேராசிரியர். எஸ் கோகுலாச்சாரி
வெற்று ஆராய்ச்சியால் விளையும் பயன் என்ன?
சமீபகாலமாக ஆராய்ச்சி என்கின்ற பெயரில் தேவையற்ற சில விஷயங்கள் அல்லது இப்போதைக்கு பயனற்ற சில விஷயங்கள் நடந்து வருகின்றன.
அதில் சமீபத்தில் மாட்டிக்கொண்டு விழிப்பது திருவள்ளுவரும் திருக்குறளும்.

திருக்குறளை ஆராய்ந்தால் கூட பரவாயில்லை. ஆனால் திருவள்ளுவரை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர், எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் இந்த ஆராய்ச்சி நீள்கிறது.
இந்த ஆராய்ச்சியின் நோக்கம் நிச்சயம் திருவள்ளுவருக்கும் திருக்குற ளுக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.
ஒரு உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்த நூலாகவே திருக்குறள் இருக்கட்டும், திருவள்ளுவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவராகவே இருக்கட்டும், அதனால் அந்த ஜாதிகளும், அந்த சமயமும் அல்லது அந்த ஜாதியைச் சார்ந்தவர்களும் அந்தச் சமயத்தைச் சார்ந்தவர்களும் நிச்சயமாக பெற்று விடக் கூடிய நன்மைகள் என்ன?
அதுதான் புரியவில்லை.
திருவள்ளுவருக்கு சிலர் திருமண் இடுகிறார்கள். சிலர் திருநீறு அணிவிக்கிறார்கள். வெள்ளாடை அணிவிக்கிறார்கள். காவி ஆடை அணிவிக்கிறார்கள். சிலர் சிலுவை வைக்கிறார்கள்.
திருவள்ளுவர் இப்போது நம்மிடையே பதில் சொல்வதற்கு இல்லை என்பதைத்தவிர இதில் வேறு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.
திரும்பத் திரும்ப நாம் சொல்லுகின்ற விஷயம், ஒரே விஷயம் தான்.
ஒரு விஷயம் எனக்கு பிடிக்கிறது என்பதும், ஒரு விஷயம் எனக்குப் பிடிக்கவில்லை என்பதும் சரி.
இதில் ஒரு நியாயம் இருக்கிறது.
எல்லோருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதனால்தான் இத்தனை மதங்கள், நெறிகள், வழிபாட்டு முறைகள், உணவு உண்ணும் முறைகள், உடை உடுத்தும் முறைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், வேறு வேறுபாடுகள், எல்லாம் இருக்கின்றன.
ஆனால், உனக்கு பிடிக்காது என்பதாலேயே எனக்கு பிடிக்கிறது என்பதும் , உனக்கு பிடிக்கிறது என்பதனால் எனக்கு பிடிக்கவில்லை என்பது விதண்டாவாதம்.
இந்த விதண்டாவாதம் தான் உலகம் முழுக்க நடந்து, ஆராய்ச்சி, அது, இது என்று சென்று கொண்டிருக்கிறது.

இதனுடைய விளைவு தான் ஒவ்வொருவர் வாழ்வும் அமைதியின்றி பதட்டத்தோடு இருக்கிறது.
ஆனால், யாரோ சில புத்திசாலிகள் இந்த பதட்டத்தையும் அமைதியின்மையும் பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொருவர் சமயம் குறித்த குறிப்புகள் திருக்குறளில் இருக்கத்தான் செய்கின்றன .
அதிலே திருமாலைப் பற்றியும், திருமால் உலகளந்த விஷயத்தைப் பற்றியும், மகாலட்சுமி பற்றியும் பல குறட்பாக்களில் வருகிறது.
சைவ சமய தத்துவ கருத்துக்கள் திருக்குறளில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.
திருக்குறள் ஊழ்வினையை வலியுறுத்துகின்றது.
ஊழ்வினையை மறுக்கும் குறட்பாக்கள் திருக்குறளில் இருக்கத்தான் செய்கின்றன.
விவிலியம் வினையை மறுக்கக் கூடிய நூல். அதற்கும் சில குறட்பாக்கள் திருக்குறளில் உண்டு. திருக்குறள் புலால் உணவை வெறுக்கக்கூடிய நூலா.
ஆம்.
நிச்சயமாக புலால் உண்ணாமை என்கின்ற ஒரு அதிகாரமே அதிலே கொடுக்கப்பட்டிருக்கிறது.
திருக்குறள் சூது, களவு, கள்ளுண்ணாமை முதலிய சமூக விரோதச் செயல்களுக்கு எதிரான கண்டனங்களை கூறும் நூல்.
ஆம்.
நிச்சயமாக அப்படிக் கூறலாம்.
இந்து சமய வழிபாடுகளை குறித்த குறிப்புகள் திருக்குறளில் உண்டா?
உண்டு.
முன்வினை குறித்த தகவல்கள் திருக்குறளில் உண்டா?
உண்டு.
மறு பிறப்பு குறித்த சிந்தனை திருக்குறளில் உண்டா?
உண்டு.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
திருக்குறளில் இல்லாத கருத்துக்கள் எதுவுமே இல்லை.
எல்லா மதத்திற்கும் பொருந்தக்கூடிய சில கருத்துக்கள் திருக்குறளில் இருப்பதால் திருக்குறளை தங்களுக்கு உரிய நூலாக பலரும் கருதுகின்றனர்.
அதில் கூட தவறு இல்லை. நல்ல விஷயத்தை எங்கிருந்து எடுத்துக் கொண்டால் என்ன?
ஆனால், தங்களுக்கு மட்டுமே உரிய நூலாக திருக்குறளைக் கொள்வதாலும், தங்களைத் தவிர வேறு யாருக்கும் பாத்தியதை இல்லை என்று கருதுவதாலும் வருகின்ற சங்கடங்கள் தான் இப்பொழுது விதண்டாவாத ஆராய்ச்சிகளாக வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு முடிவே இல்லை.
வெகுகாலத்திற்கு முன் ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய பிறந்த கிராமத்தில் அவர்களுக்கு ஒரு மரபு இருந்தது. இறந்தவரின் நெற்றியில் திருமண் போடுவதா? திருநீரு போடுவதா? என்ற சர்ச்சை வந்து விட்டது.
அடக்கம் செய்யும் வரை அங்கிருந்த பலர் இரண்டு பிரிவாகப் பிரிந்து வாதம் செய்து கொண்டே இருந்தனர்.
கடைசியில் இரண்டையும் போட்டு அவரை அடக்கம் செய்தனர்.
ஆம் அவரை அடக்கம் செய்துவிட்டனர்.
திருக்குறளைப் பின்பற்றுவதில் யாருக்கும் எந்த பெரிய அபிப்பிராயம் இல்லை.ஆனால் திருக்குறள் எந்த சமயத்தைச் சார்ந்த நூல் என்பதில் மட்டும்தான் இப்பொழுது அக்கறையும் வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நான் கேட்பது இந்த கேள்விதான்.
வாழ்வில் பின்பற்றப்படாத நூல், பின்பற்ற முயற்சி கூட செய்யப்படாத நூல், அது குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததாக மட்டும் இருப்பதால் என்ன பயன் கிடைத்து விடப்போகிறது?
தந்தைக்கு பயன் படாத பிள்ளை தலைப்பெழுத்தைப் போட்டுக்கொண்டு திரிவது போலத்தான்.
திருக்குறளை பின்பற்றுகின்றவர், திருக்குறளின் வாழ்வியல் கருத்துக்களை, வாழ்க்கையில் பயன்படுத்தி வாழ்க்கையை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வதில்தான் கவனம் செலுத்துவர்.
அதைத்தான் அறிவுடைமை என்று சொல்லுகின்றது திருக்குறள்.
நம்முடைய நாட்டிலே இது குறித்த ஒரு பழமொழி கூட உண்டு.
நதிமூலம் ரிஷிமூலம் ஆராய்ச்சி செய்யாதே என்று.
ரிஷியின் உயர்ந்த வாக்கியத்தையும், நதியின் உயர்ந்த பயன்களையும் நீ பயன்படுத்திக் கொள்.ஆராய்ச்சி செய்யாதே.
தட்டில் வைத்த உணவை உண்ணாமல் ஆராய்ச்சி செய்பவனுக்கு அந்த உணவு பயன்படப் போவதில்லை. பசி ஆறப் போவதில்லை.
உண்மையில் பசியோடு இருக்கின்றவன் ஆராய்ச்சி செய்ய மாட்டான். திருக்குறள் நம்முடைய அறிவு பசியை தீர்க்க கூடிய நூல். நம்முடைய அறிவு பசிக்கு உணவாகக் கூடிய நூல்.
அதில் இருக்கக்கூடிய 1330 குறட்பாக்களும் நமக்கு விருந்தாக எதிரே இருக்கிறது.
அதை பயன்படுத்துவதை விடுத்து ஆராய்ச்சியால் என்ன பயன் நிகழ்ந்து விடப் போகிறது?
- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)

- தெளிவு பெறுவோம் (1.6.2025)


