ஞானவேள்வி மறுபடியும்! -தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம்.
சென்ற மாத தலையங்கத்தில் ஆலய தரிசனத்தைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து எழுதியிருந்தேன்.வெளியீட்டில் இருக்கக்கூடிய சிக்கல்களையும் அடியேன் விரிவாகத் தெரிவித்திருந்தேன்.
நம் வாசகர்களில் பெரும்பாலோர், எக்காரணத்தை முன்னிட்டும் ஆலய தரிசனத்தை நிறுத்திவிட வேண்டாம், அது தொடர்ந்து வெளி வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ , அதைச் செய்யுங்கள், அதற்கு எங்களால் ஆன ஒத்துழைப்பையும் தருகின்றோம் என்று உறுதியோடு கூறினர்.
சென்னையில் பல வாசகர்கள், தாங்கள் இத்தனை ஆண்டு காலமாக, ஆலய தரிசனத்தை எப்படி நேசிக்கின்றோம் என்பதை எடுத்துரைத்த போது, நாம் சாதாரணமாக நடத்துகின்ற பிரபலமில்லாத ஒரு இதழுக்கு இத்தனை மதிப்பா என்று தோன்றியது.
எத்தனையோ இதழ்கள் இருந்தாலும் கூட, நம்முடைய நேயர்களுக்கு , ஆலய தரிசனம் (Aalayadharisanam) ஏதோ ஒரு விதமான ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்பதை அறிந்த பொழுது எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.
எத்தனைக் குறைவான பிரதிகளாக இருந்தாலும் கூட, கவலைப்பட வேண்டாம், தொடர்ந்து நடத்துங்கள் என்று பலரும் பல்வேறு விதமான ஆலோசனைகளைக் கூறினார்கள்.
வாசகர்களுக்கு தெரியாதது அல்ல.
ஒரு சிற்றிதழானது பேரிதழ் போலவே , அதாவது மிக அதிகமான பிரதிகள் வெளியிடும் இதழ்களைப் போலவே, வேலை வாங்கும்.

இரண்டிலும், தயாரிப்பு வேலைகளில் எந்த வேறுபாடும் இல்லை.
முதல் பிரதி தயாரித்து விட்டால், பெரிய இதழ்கள் லட்சம் பிரதிகள் அச்சடிக்கின்றன என்றால், சிறிய இதழ்கள் இரண்டாயிரம் பிரதிகள் அச்சாகும்.
அச்சு வேகம் ஓடுகின்ற நேரம் தான் வித்தியாசமே தவிர, அடிப்படைத் தயாரிப்பு நேரம் என்பது எந்த விதத்திலும் வித்தியாசப்படாது.
இன்னும் சொல்லப்போனால் பெரிய இதழ்களை, ஒரு ஆசிரியர் குழுவினர், இணைந்து தயாரிக்க முடியும். ஆனால் சிற்றிதழ்களை , அந்த ஆசிரியர் மட்டுமே தான் தயாரிக்க முடியும். அவரேதான் எல்லா வேலையையும் செய்ய வேண்டும் என்பதால், பெரிய இதழ்களை நடத்துவதை விட, சிறிய இதழ்களை நடத்துவது மிகச் சிரமமானது .
ஆனால், நம்முடைய நாட்டில் சிரமப்பட்டு நடத்தும் சிற்றிதழ்களை கொண்டாடுவோர் குறைவு.விளம்பரதாரர் கூட எத்தனை பிரதிகள் என்று கேட்பாரே தவிர இதற்கு உதவுவோம் என்று நினைக்க மாட்டார்கள்.
நாமே பல பெரிய இதழாசிரியர்களுக்கு அனுப்புவோம்.இதன் அத்தனை சிக்கல்களும் தெரிந்த அவர்கள் ஒரு சிறு வார்த்தை கூட பாராட்ட மாட்டார்கள். வந்து சேர்ந்தது என்று கூட ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள்.
நாம் பல செயல்களை தொடர்ந்து செய்வதன் மூலம் இந்த உலகத்தின் இயல்புகளை மிக எளிதாக அறிய முடியும்.
அப்புறம் ஏன் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்கலாம்.செய்யாமல் இருக்க முடியாது;அதனால் செய்ய வேண்டியிருக்கிறது.
ஆழ்வார் பாடவில்லையா?
“சொன்னால் விரோதம் இது; ஆகினும் சொல்லுவன்”என்றாரே.ஆயினும் அது போலிகளிடையே சில அசல்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
சிற்றிதழ்களைப் பொறுத்தவரை,அதைத் தொண்டாக மட்டுமே செய்ய முடியும்.
அதற்கு சரியான மங்களாசாசனம், பலமும், ஓரளவாவது பொருளாதார ரீதியாக ஆதரவும் இருந்தால் தவிர இதழ்களை நடத்துவது கடினம்.

நான் சென்ற இதழில் ,சந்தாதாரர்களுக்கு(Aalayadharisanam Subscribers) சொல்லியிருந்தேன்.
சந்தாவை முறையாகச் செலுத்தாவிட்டால் புத்தகம் தொடந்து அனுப்புவதற்கு இல்லை என்று.
இப்படிச் சொன்ன பிறகு பலரும் சந்தாவை செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அதைப்போலவே 25 வருடத்திற்கு முன்னால், 500 ரூபாய் கொடுத்து, ஆயுள் சந்தா என்று செலுத்தியவர்களுக்கு ,நாளது தேதி வரை இதழ் போய்க்கொண்டிருக்கிறது.
இனி தொடர்ந்து ஆயுள் சந்தா ரத்து செய்யப்படுகிறது என்று சொன்னபிறகு, இதழின் பொருளாதார உண்மைத் தன்மையை உணர்ந்து, பல வாசகர்கள், இனி தொடர்ந்து ஆண்டு சந்தா அனுப்புகிறோம் என்று உதவி இருக்கிறார்கள்.
அவர்கள் அத்தனை பேருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதன் விளைவாக இனி இதனை நிறுத்த முடியாத வழிக்கு இதழ் பணி நம்மை இழுத்துச் செல்கின்றது. அதோடு நாம் காலத்திற்கு ஏற்றவகையில் ஆலய தரிசனத்திற்கு என்று பல மாற்றங்களைச் செய்து வருகிறோம்.
தனி இணையதளத்தை உருவாக்கி இதில் உள்ள பல கட்டுரைகளை அதிலே வெளியிட்டு வருவதோடு, இன்னும் கூடுதலான பல விஷயங்களையும், ஆலய தரிசனத்தில் வெளியிட முடியாத, சொல்ல முடியாத , சில விஷயங்களையும் வெளியிட்டு வருகின்றோம்.
அது ஒரு பொதுவான தளத்தில் இயங்குகின்றது.
அதைப்போலவே நூல் வெளியீட்டிலும் கவனம் செலுத்த இருக்கின்றோம் . எல்லாவற்றையும் படிப்படியாக சரி செய்து கொண்டு வருகின்றோம். இது ஒரு ஞான வேள்வி.
இதனுடைய நோக்கம் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான்.
நம்முடைய வாசகர்கள் மிகப்பெரிய ஆதரவினையும் உற்சாகத்தையும் மனரீதியாகத் தந்ததற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்தடுத்த இதழ்கள் , இன்னும் பொலிவோடு சிறப்பாகவே வெளிவரும் .அதற்கு எம் பெருமானின் திருவருள் துணை நிற்கும்.
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan

- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?

- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi

- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை

