இராமானுஜ நூற்றந்தாதி 108 – Ramanuja Nootrandhi 108 – Part 2
சென்ற கட்டுரையின் தொடர்ச்சி……..
பிரணவப் பொருள் ஆகிய ஓம்காரம் மூன்று அட்சரங்கள் ஆக இருக்கிறது. அதில் அ என்கிற அட்சரம் பெருமானையும் உ என்கிற அட்சரம் ஆசாரியனையும் ம என்னும் எழுத்து சேதனாகிய ஜீவாத்மாவையும் குறி க்கும். இராமானுஜருக்குப் பல பெயர்கள் இருந்தாலும் கூட மூன்று பெயர்கள் மிக முக்கியமான பெயர்கள்
1. ராமானுஜன்
2 எதிராஜன்
3.எம்பெருமானார்
இதில் இராமானுஜன் என்பது தொண்டு செய்கின்ற லட்சுமணனைக் குறிக்கும். அதாவது சேதனனாகிய ம காரத்தைக் குறிக்கும்.
எதிராஜன் என்பது உ காரம் ஆகிய ஆச்சாரியனைக் குறிக்கும். மூன்றாவதாக எம்பெருமானார் என்பது அ அட்சரமாகிய எம்பெருமானை குறிக்கும் . இவர் உடையவர் என்கிற நிலையை ஒரு பங்குனி உத்திர திருநாளில் சரணாகதி.
சுவாமி என்கிற பதத்தை குறிப்பதால் அது அதிகரிக்கும் எனவே, இராமானுஜனுடைய பெயரிலேயே இந்த மூன்று எழுத்துக்களும் இருக்கின்றன.
இந்த 108 என்கிற எண்ணிலே சில சூட்சுமமான விஷயங்கள் இருக்கின்றன.
இந்த 108 என்கிற எழுத்தை நாம் எப்படி எழுதுகின்றோம். இடையிலே பூஜ்ஜியம். இந்தப் பக்கத்திலே ஒன்று .அந்தப் பக்கத்தில் 8.
பூஜ்ஜியம் என்கிற எண் மகாரம் ஆகிய ஜீவாத்மாவைக் காட்டுகின்றது.
இந்தப்பக்கம் இருக்கக்கூடிய ஒன்று என்பது எம்பெருமானைக் காண்பிக்கிறது.அதாவது அ காரத்தைக் காண்பிக்கிறது. இடது பக்கம் உள்ள 8 என்கிற எழுத்து அஷ்டாக்ஷர மந்திரத்தைக் காட்டி , அந்த அஷ்டாக்ஷர மந்திரம் யாரால் சொல்லப்படுகிறதோ அந்த ஆசாரியனைக் காட்டி நிற்கிறது.
இதில் பூஜ்யம் ஒன்றுக்கும் எட்டுக்கும் இடையில் பத்திரமாக மதிப்போடு இருக்கிறது.ஒரு ஜீவாத்மா எம்பெருமானாலும் ஆச்சாரியனாலும் காப்பாற்றப்படுகிறது.
வெறும் பூஜ்ஜியமாக இருக்கின்ற பொழுது அதற்கு எந்தவிதமான மதிப்பும் நன்மையும் இல்லை.அது உத்தாரணம் பெற முடியாது.
ஆனால் அதே பூஜ்ஜியம் ஒரு எண்ணோடு சேருகின்ற போது அதற்கான மதிப்பு கூடுகிறது.
எம்பெருமானாகிய 1 ரோடு பூஜ்யம் சேருகின்ற பொழுது உயர்ந்த நிலை ஆகிய பத்து (10) என்கிற மதிப்பு கிடைக்கிறது.ஆசாரியனாகிய எட்டு என்கிற எண்ணோடு சேருகின்ற பொழுது ஒரு நிலையை அடைகிறது. எட்டு என்கிற எண்ணெய் 08 என்று எழுதுகின்ற வழக்கமும் உண்டு
இன்னொரு விதத்தில் வைணவ தத்துவத்தில் இரண்டு விஷயங்களைச் சொல்லுவார்கள்.
ஒவ்வொரு ஜீவாத்மாவும் அறிய வேண்டிய இரண்டு விஷயங்கள். ஒன்று பிரமாணம். இன்னொன்று பிரமேயம்.
பிரமேயத்தை(பெருமாள்) அறிய வேண்டும் என்றால் அதற்கு பிரமாணம் (வேதம் அல்லது அதன் சுருக்கமான அஷ்டாஷரம் ) தேவை.
அது எம்பெருமானை காட்டுகின்றது. எம்பெருமானின் தன்மையையும், பரமாத்மாவுக்கும் – ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பையும், அந்த ஜீவாத்மா, எம்பெருமானை அண்டி நிற்பதால் கிடைக்கக்கூடிய பெருமையையும், ஜீவாத்மாவுக்கு உரித்தான தூய தொண்டினையும், தொலையா அடிமையையும் சுட்டிக்காட்டுவது இந்த எட்டு எழுத்து மந்திரம்.
இது ஜீவாத்மாவுக்கு எல்லா விதமான நன்மையும் செய்யக்கூடியது. இதற்கு பிரமாணம் என்று பொருள். எம்பெருமானாகிய பிரமேயத்தைக் காட்டுகின்ற அஷ்டாக்ஷர மந்திரம் பிரமாணம்.
ஜீவாத்மாவாகிய 0 ஒரு பக்கம், ஒன்று என்கிற எம்பெருமானையும் இன்னொரு பக்கம் எட்டு என்கிற அஷ்டாக்ஷரத்தையும் அது காட்டும் ஆச்சரியனையும் பற்றிக் கொண்டு நிற்கிறது. அதனாலே அது பெருமை பெறுகிறது. இந்த மூன்று அட்ஷர கூட்டை யாராலும் சிதைக்க முடியாது.அழிவற்றது. அழிவில்லாத நிலையை தரக்கூடியது என்பதுதான் 108 என்ற எண்ணின் பெருமை.
ஜீவாத்மாவாகிய பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை.பூஜ்ஜியம் என்று ஜீவாத்மாவை சொல்வதற்கு இன்னுமொரு காரணம் அதன் மதிப்பை அது உணரவில்லை. அதன் மதிப்பினை உணர்த்தும் ஆச்சாரியன் என்கிற எட்டோடு சேரும்போதும் ஆச்சாரியன் காட்டும் ஈஸ்வர தத்துவமாகிய ஒன்று என்கிற தத்துவத்தோடு சேரும் பொழுதும் ஜீவாத்மாவின் மதிப்பு ஏறுகிறது. பாதுகாப்பு உடையதாகிறது.
ஒன்றுக்கும் 8க்கும் நடுவிலே இந்த பூஜ்ஜியம் ஆகிய ஜீவாத்மா இருப்பதால் ,ஒருபக்கம் ஜீவாத்மாவை திருமந்திரமும், திருமந்திரத்தை சொன்ன ஆசாரியனும் காப்பாற்றுகிறார்கள். அந்த திருமந்திரம் காட்டுகின்ற எம்பெருமான் இன்னொரு பக்கத்திலே காப்பாற்றுகின்றான்.இதற்கு ரட்சக பாவம் என்று பெயர்.உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் என்று கம்பன் பாடுவதும் இந்த ரட்ஷக பாவத்தைத்தான்.
ஒரு ஜீவாத்மாவை காப்பாற்றுகின்ற கடமை எம்பெருமானுக்கு உண்டு.அதனால்தான் அவன் சுவாமி ஆகிறான்.
சுவாமி என்றால் சொத்தை உடையவன். ஸ்வம் என்கிற சொத்துதான் ஜீவாத்மா. அதைப் போலவே ஒரு ஜீவாத்மாவை உத்தாரணம் பண்ண வேண்டிய கடமை ஆச்சரியனுக்கு இருக்கிறது.ஆசார்யன் யார் என்பதை அம்பொன் அரங்கற்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தம் காட்டுபவன் ஆசாரியன்.அது 8 என்கிற அஷ்டாக்ஷர மந்திரத்தில் இருக்கிறது.இதை இன்னும் அழுத்தமாக ஞான சாரத்திலே சொல்லுகின்றார்.
மந்திரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்
சிந்தனை செய்கின்ற திருமாலும்- நந்தலிலா
தென்று மருள் புரிவர் யாவர் அவரிடரை
வென்று கடித டைவர் வீடு (பாட்டு 29 )
இதில் ஒரு ஜீவாத்மாவை உஜ்ஜீவனம் செய்ய வேண்டிய கடமை ஆச்சாரியனுக்கு உரியது.
ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்கும் அவன் என்னும் நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந் நேர் நிற்கை அரிதாம் (65வது பாட்டு உபதேசரத்தினமாலை)
ஒரு ஜீவாத்மாவை அடைதல் என்பது பரமாத்மாவுக்கு உரியது. இதனை சேதன லாபம் ஈஸ்வரனுக்கு என்பார்கள்.அந்த லாபத்தை அவன் அடைய ஆசாரியன் தேவை.அதனால் தான் பகவன் நாமாவை விட ஆசாரியன் நாமம் என்பது ஒரு ஆருயிர்க்கு உச்சி பலம் தரக்கூடியது.
இதைத்தான் ராமானுஜ நூற்றந்தாதி தனியனிலே
இனியென் குறை நமக்கு எம்பெருமானார் திருநாமத்தால்
முனி தந்த நூற்றெட்டு சாவித்திரி என்னும் நுண் பொருளை
கனி தந்த செஞ்சொல் கலித்துறை அந்தாதி பாடித் தந்தான்
புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே
என்றும்
சொல்லின் தொகை கொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம இராமனுசா இது என் விண்ணப்பமே
என்றும் பாடுகின்றார்.
அந்த எதிராஜன் நாமமே நமக்கு தாரகம். போஷகம். போக்கியம். அந்த நாமத்தை 108 முறை சொல்லக்கூடிய ராமானுஜ நூற்றந்தாதி நம்முடைய காயத்திரி மந்திரம். அந்த காயத்திரி மந்திரத்தை தினமும் போற்றி பாடுவோம். எக்குறையும் இன்றி வாழ்வோம்.
ஒருவனை தூக்கிவிட ஒன்றுக்கு மூன்றாக கயிறுகள் இருக்கின்றன.முதலில் பகவான்.அடுத்து நம்மாழ்வார். அடுத்து நம்மாழ்வாரின் அடிபணிந்த ராமானுஜர்.
பகவான் ஆழ்வார் மனத்திலே இருக்கின்றார். அந்த பகவானைப் பாடிய நம்மாழ்வாரும் இவர் மனதிலே இருக்கின்றார் என்பதை
பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த ராமானுஜன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
பகவான் நம்மாழ்வார் மனதின் புகுந்ததை
புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவிவழி உள்புகுந்து என்னுள்ளாய் அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை ஆர் அறிவார்
ஊன்பருகு நேமியாய் உள்ளு.”
என்ற பெரிய திருவந்தாதி பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
பகவான் நேரடியாகவும் இவர் மனதில் வந்து புகுந்ததை ராமானுஜ நூற்றந்தாதியில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர், அவை தன்னொடு வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து* இன்று அவன்வந்து
இருப்பிடம் என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே.
ஆராவமுதன் என்று பகவானை நம்மாழ்வார் அழைக்கிறார். அன்றைக்கு ஆரமுதம் என்கின்றார்.
அதனாலேயே குடந்தை பிரானுக்கு ஆராவமுத ஆழ்வார் என்றே பெயர்.
ஆக. பகவான் நாமம் நம்மாழ்வாருக்கு இனித்தது. அந்த நம்மாழ்வார் நாமம் மதுரகவியாழ்வாருக்கு இனித்தது.
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ண பண்ணிய பெருமாயன் என் அப்பனில் நண்ணித் தென்குரு கூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே என்று பகவானுடைய திருநாமத்தை சொல்லியவர் திருநாமம் என்பதால் இரட்டிப்பு இனிப்பை தந்தது.ஆழ்வாரை பலபடியாக போற்றிய ராமானுஜரின் திருநாமம் மூன்று தித்திப்பாக விளங்கியது.அதை வாரி வாரி பெருகியதால் இவரே அமுதனார் ஆகிவிட்டான்.அதைத்தான் தனியனில் குறிப்பிடுகின்றார்.இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திருநாமத்தால்.
எம்பெருமான் திருநாமத்தைச் சொன்னபோது சில குறை வரலாம். அந்த குறை கூட எம்பெருமானார் திருநாமத்தைச் சொல்லும்போது நீங்கியது என்பது இதனுடைய பொருள்.
108 முறை இந்த திருநாமத்தைச் சொல்லச் சொல்லு என்றார் .
ஒரு மனிதனுக்கு ஆபத்து நேரும் பொழுது நாம் கூப்பிடுகின்ற எண் 108. அதற்கு எமர்ஜென்சி எண் என்று சுகாதாரத்துறையில் சொல்லுகின்றார்கள் .அந்த எமர்ஜென்சி எண் 108. அது தான் ஒரு மனிதனை ஆபத்திலிருந்து உடனே காப்பாற்றுவது. அது ராமானுஜ நூற்றந்தாதி.
அதற்கப்புறம் போய் சிகிச்சைகளை செய்து கொள்கிறோம்.அங்கே ஒரு மாத்திரை தரப்படுகிறது. அதான் விஷ்ணு சஹஸ்ரநாமம் 1000 .
வைணவத்தில் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான்.
இருந்தான். நின்றான். கிடந்தான். கிடந்த கோலம் அற்புதமான கோலம்.
வைணவத்தில் 2 முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.
ஒன்று பகவான் பிறப்பில் பல் பிறவி பெருமான்.
இதை அஜாயமானோ பகுதா வி ஜாயதே என்று புருஷ சூக்தம் சொல்லுகின்றது. அதைப் போலவே அவருடைய கிடந்த கோலத்தைப் பற்றியும் ஒரு விஷயம் வருகிறது. உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமாள்.
இந்த மூன்று கோலங்களிலும் அவன் 108 திருத்தலங்களில் காட்சி தருகின்றான்.
இதன் கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இங்கு கிளிக் செய்யவும் :
Click here to Read Part 1 of this Article :
—————————————————————————————————————
ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி முழுவதும் சொல்ல முடியாத பக்தர்கள் இந்த நான்கு பாசுரங்களையாவது தினமும் சொல்லுங்கள் மஹான் ஸ்ரீ ராமானுஜரின் அருளுக்கு ஆளாகுங்கள்.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ராமானுஜ நூற்றந்தாதி (Ramanuja Nootrandhadhi) சாற்று பாசுரங்கள் :
பூமன்னு மாது பொருந்திய மார்பன்* புகழ் மலிந்த-
பாமன்னு மாறன்* அடிபணிந்து உய்ந்தவன்* பல் கலையோர்-
தாம்மன்ன வந்த இராமானுசன்* சரணாரவிந்தம்-
நாம்மன்னி வாழ* நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே.
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ் சோலையென்னும்-
பொருப்பிடம்* மாயனுக்கு என்பர் நல்லோர்,* அவை தன்னொடு வந்து-
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து* இன்று அவன்வந்து-
இருப்பிடம்* என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே.
இன்புற்ற சீலத்து இராமானுச,* என்றும் எவ்விடத்தும்-
என்புற்ற நோய்* உடல் தோறும் பிறந்து இறந்து* எண்ணரிய-
துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு* உன் தொண்டர்கட்கே-
அன்புற்று இருக்கும்படி,* என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே.
அங்கயல்பாய் வயல் தென் அரங்கன்,* அணி ஆகமன்னும்-
பங்கய மாமலர்* பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்-
தங்கியது தென்னத் தழைத்து நெஞ்சே! நம் தலைமிசையே *
பொங்கிய கீர்த்தி * இராமாநுசன் அடிப் பூ மன்னவே.
