ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்
எளிய தமிழ் விளக்கங்களுடன் தொகுப்பு : ஸ்ரீ .எஸ். கோகுலாச்சாரி
Sri Periyavachan Pillai’s Pasurappadi Ramayanam – Prabandha Ramayanam – with Meaning
பாசுரப்படி ராமாயணம் / பிரபந்த ராமாயணம் Compiled by : Sri. S. Gokulachari
வேதத்தின் அர்த்தத்தை எதைக்கொண்டு தீர்மானம் செய்ய வேண்டும் என்றால் , ஸ்மிருதி இதிகாச புராணங்களைக் கொண்டு அர்த்தத்தை நிர்ணயிக்க வேண்டும். இதிகாசங்கள் இரண்டு. ஒன்று இராமாயணம். இன்னொன்று மகாபாரதம்.
மகாபாரதத்தை(Mahabharatha) ஐந்தாவது வேதம் என்று சொல்வார்கள்.
இராமாயணத்தை வேதத்தின் சாரம் என்று சொல்வார்கள். ஆதி கவியான வால்மீகி பகவான் 24 ஆயிரம் சுலோகங்களோடு இராமாயணத்தைச் செய்தார். இருபத்தி நான்கு அட்சரங்கள் கொண்ட காயத்ரி மந்திரத்தின் விரிவே இராமாயணம் என்று சொல்வார்கள்.
இந்த இராமாயணத்தில் இல்லாத பாத்திரங்களே கிடையாது. அதனால் தான் நம்மாழ்வார், “கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று பாடினார்
இராமாயணத்தை அபய பிரதான சாரம் என்று சொல்வார்கள். சுவாமி இராமானுஜர் இராமாயணத்தின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள, ஒரு வருட காலம் திருப்பதிக்குச் சென்று, தன்னுடைய தாய்மாமனும் குருவுமாகிய பெரிய திருமலை நம்பிகளிடம் பாடம் கேட்டார்.
இராமாயணத்தின் பல்வேறு நிகழ்வுகளை ஆழ்வார்கள் தங்கள் பிரபந்தங்களில் பாடி இருக்கின்றார்கள்.
இராமாயணத்தைப் பாடாத ஆழ்வார்களே இல்லை. குறிப்பாக குலசேகர ஆழ்வார் இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இராமாயணத்தின் பால காண்டம் நிகழ்வுகளில் ஆரம்பித்து, உத்தரகாண்ட நிகழ்வு வரை பூரணமாக ஒரு பதிகத்தில் அருளிச் செய்திருக்கிறார். அந்தப் பதிகம் தில்லைத் திருச்சித்திர கூடத்தில் அருளிச்செய்த பதிகமாகும்.
ஆழ்வார்கள் அனைவரும் பாடிய இராமாயணம் நிகழ்வுகளிலிருந்து இராமாயணத்தை நிரல் நிறையாகத் தொகுத்து நமக்கு தந்திருப்பவர் பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை.
பாசுரங்களில் இருந்து இந்த இராமாயணம் தொகுக்கப்பட்டதால் இதற்கு “பாசுரப்படி ராமாயணம்” (Pasurapadi Ramayanam)என்று பெயர்
இந்த இராமாயணத்தை தினசரி பாராயணம் செய்கின்ற பொழுது நமக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று: இராமாயணத்தை விரைவாகவும் எளிதாகவும் பாராயணம் செய்வதால் கிடைக்கும் நன்மை. இரண்டாவதாக ஆழ்வார்களின் அருளிச் செயலை பாராயணம் செய்வதால் கிடைக்கும் நன்மை. இது வேறு எந்த இராமாயண பாராயணத்திற்கும் கிடையாது.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்
பாசுரப்படி ராமாயணம் – தனியன்
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே|
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா
ஸ்ரீமத் க்ருஷ்ணன் என்னும் பெயரை உடையவரும், – யாமுநாசார்யரின் திருமகனாரும், எவருடைய கடாக்ஷத்திற்கு இலக்கானவர்களுக்கு ஸ்ரீதரன்
எப்போதும் கிடைப்பதற்கு எளியவனோ, அத்தகையவராய் விளங்குகின்றவருமான… பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.
பால காண்டம் – Bala Gaandam
பாலகாண்டத்தில் பகவான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாகவும், பரமபதத்தில் இருந்து தேவர்கள் குறைதீர்க்கவும், மக்களின் குறை தீர்க்கவும், அரக்கர்களால் பாழ்பட்ட இலங்கையை வெல்லவும், ,தசரதனுக்கும் கோசலைக்கும் பிள்ளையாய்த் தோன்றி குணக்குன்றாக வாழ்ந்தான். .விசுவாமித்திரர் வேள்வி காத்தான். தாடகையை வதம் செய்தான். அகலிகைக்கு சாப விமோசனம் வழங்கினான். சீதையை மணம் புரிந்து , பரசுராமனை வென்றான். போன்ற நிகழ்ச்சிகளை அழகாகப் பாடி இருக்கிறார்
திருமடந்தைமண்மடந்தைஇருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம்இல்பேரின்பத்துஅடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல விற்றுஇருக்கும்
அயர்வறும்அமரர்கள் அதிபதி யான
அணியார் பொழில்சூழ்அரங்கநகரப்பன்
அலைநீர்க்கடலுள்அழுந்தும்நாவாய்போல்
ஆவார் ஆர்துணை என்று துளங்கும்
நல அமரர் துயர்தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி
மண்உய்ய மண்ணுலகில் மனிசர்உய்ய
அயோத்தி என்னும் அணிநகரத்து
வெங்கதிரோன்குலத்துக்குஓர்விளக்காய்க்
கௌசலைதன்குலமதலையாய்த்
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்
குணம்திகழ்கொண்டலாய்
மந்திரம்கொள்மறைமுனிவன்வேள்விகாக்க நடந்து,
வந்து எதிர்த்த தாடகைதன்உரத்தைக் கீறி
வல்அரக்கர்உயிர்உண்டுகல்லைப்பெண்ணாக்கிக்
காரார்திண்சிலைஇறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத்தொருகால் அரசு களைகட்ட
மழுவாளேந்திவெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று,
அம்பொன்நெடுமணிமாடஅயோத்திஎய்தி
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க;
அயோத்தியா காண்டம் Ayodhya Gaandam
அயோத்தியா காண்டத்தில் இராமன் பட்டம் சூட இருக்கும்பொழுது கொடிய கூனியின் சொற்கேட்டு கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் வேண்டினாள். ஒரு வரத்தால் பரதன் நாடாள வேண்டும். இரண்டாவது வரத்தால் ராமன் காடு ஆளவேண்டும். ராமன் தந்தையின் சொல்லைக் காப்பதற்காக சீதையோடும் லட்சுமண
னோடும் கானகம் சென்றான். தசரதன் இராமனைப் பிரிந்த துயரினால் வானகம் சென்றான்.
கொங்கைவன் கூனி சொற்கொண்டு
கொடிய கைகேயி வரம் வேண்ட
கொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு
மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும்மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போஎன்று விடை கொடுப்ப
இருநிலத்தைவேண்டாது
ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும்ஆங்கொழிந்து
மைவாய களிறொழிந்து மாஓழிந்துதேர்ஒழிந்து
கலன்அணியாதேகாமர்எழில்விழல் உடுத்து
அங்கங்கள்அழகுமாறி
மான்அமரும்மெல் நோக்கி வைதேகி இன்துணையா
இளங்கோவும்வாளும் வில்லும்கொண்டுபின் செல்லக்
கலையும்கரியும்பரிமாவும்
திரியும் கானம் நடந்து போய்ப்
பக்தியுடைக்குகன்கடத்தக்கங்கைதன்னைக் கடந்து
வனம்போய்ப்புக்குகாய்யோடுநீடுகனிஉண்டு
வியன்கானம் மரத்தின் நீழல்
கல்லணைமேல்கண்துயின்று
சித்திரக்கூடத்துஇருப்ப, தயரதன் தான்
நின் மகன்மேல்பழிவிளைத்திட்டு
என்னையும் நீள் வானில்போக்க
என் பெற்றாய்கைகேசீ!
நானும் வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்
என்று வான்எறத்
தேன் அமரும்பொழில்சாரல்சித்திரக்ககூடத்து
ஆனை புரவி தேரோடுகாலாள்
அணிகொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன்பரதநம்பிபணியத்
தம்பிக்குமரவடியைவான்பணையம் வைத்துக் குவலயமும்
துங்கக்கரியும்பரியும்இராச்சியமும்
எங்கும் பரதற்குஅருளிவிடைகொடுத்துத்
திருவுடைதிசைக்கருமம்திருந்தப் போய்த்
தண்டகாரண்யம் புகுந்து
ஆரண்ய காண்டம் Aaranya Gaandam
மூன்றாவது காண்டமாகிய ஆரண்ய காண்டத்தில் முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தான். விராத வதம் நடந்தது. சூர்ப்பனகை பங்கம் நடந்தது .கர தூடண வதம் நடந்தது. சூர்ப்பனகை மூலம் நடந்த நிகழ்வுகளைக் கேள்விப்பட்ட இராவணன் மாயமானான மாரிசனை அனுப்பி ராம லஷ்மணர்களைப் பிரித்து ,சீதையைத் கவர்ந்து .தன்னுடைய இலங்கையில் அசோகவனத்தில் மறைத்து வைத்தான். சீதையைப் பிரிந்த ராமன் துன்பப்பட்டுத் துடித்தான்.
தயங்குமறைமுனிவர்க்கு
‘அஞ்சேன்மின் !’என்று அருள் கொடுத்திட்டு
வெங்கண்விறல்விராதன்உகவில்குனித்து
வண்தமிழ்மாமுனிகொடுத்தவரிவில் வாங்கி
புலர்ந்து எழுந்த காமத்தால்
சுடுசினத்துச் சூர்ப்பணகா பொன்னிறம் கொண்ட
சீதைக்குநேராவன்என்றுவரக் கொடிமூக்கும் காது இரண்டும்
கூரார்ந்தவாளால்ஈராவிடுத்துக்
கரனொடு தூடணன்தன்உயிரை வாங்க
அவள்கதறித் தலையில் அங்கை வைத்து
மலைஇலங்கைஓடிப்புக,
கொடுமையில்கடுவீசை அரக்கன்
அலைமலிவேற்கண்ணாளைஅகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக்குரம்பையில் தனி இருப்பில்
கனிவாய்த்திருவினைப் பிரித்து
நீள்கடல்சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்குநஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா வைக்க
அயோத்தியர் கோன் மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வைய்தி
சடாயுவை வைகுந்தத்து எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,
கிஷ்கிந்தா காண்டம் Kishkintha Gaandam
அடுத்து கிஷ்கிந்தா காண்டத்தில்,சுக்ரீவனோடு தோழமை கொண்டு, வாலியைக் கொன்றான். சுக்ரீவ பட்டாபிஷேகம் நடந்தது. வானரங்களை சீதையைத் தேடும் பணியாக பல திசைகளுக்கும் அனுப்பினார்.
வனமருவுகவிஅரசன் தன்னோடு காதல் கொண்டு
மராமரங்கள்ஏழும் எய்து
உருத்து ஏழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத்தம்பிக்கு
இன்பக்கதிர்முடி அரசு அளித்து
வானரக்கோன்உடன்இருந்து வைதேகி தனைத்தேட
விடுத்ததிசைக்கருமம்திருத்திக்
திறல்விளங்குமாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செய்ய
அறிவு தெளிவிலாது போகும்படி செய்வது எவை ? – Bhagavath Geetha Answers படிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுந்தர காண்டம் Sundara Gaandam
அடுத்து சுந்தரகாண்டத்தில் அனுமனுடைய பிரபாவம் பேசப்படுகிறது. கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்ற அனுமன், மிகுந்த துன்பங்களுக்கு இடையில் சீதையைக் கண்டு பிடித்தான். அவனிடத்திலே இராமன் சொன்ன செய்தியையும், இராமன் கொடுத்த மோதிரத்தையும் கொடுத்தான். அதற்குப் பிறகு அசோகவனத்தை முற்றிலுமாக அழித்தான். அனுமனை வெல்வதற்காக இராவணனால் அனுப்பப்பட்ட அத்தனை அரக்கர்களையும் கொன்றான். இராவணனைச் சந்தித்து வந்த காரியத்தையும் தெரிவித்தான். சீதையை விட்டு விட்டால் உயிர் வாழலாம் என்றான். அவனோ அனுமனை அவமானப்படுத்த வாலில் தீ வைத்தான். சீதையின் வரத்தால் அனுமனை நெருப்பு சுடவில்லை. அநுமன் தன் வாலில் உள்ள நெருப்பைக் கொண்டு இலங்கை நகரைச் சுட்டான்.திரும்ப இராமரிடம் வந்து “கண்டேன் சீதையை” என்றான்.
சீராரும் திறல் அனுமன் மாகடலைக்கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்குக்கடிகாவில்,
வாராரும் முலைமடவாள் வைதேகி தனைக்கண்டு
‘நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்!
அயோத்தி தன்னில் ஓர்,
இடவகையில் எல்லிஅம்போதுஇனிதுஇருக்க
மல்லிகைமாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;
கலக்கியமாமனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும் மறாதொழியக்
‘குலக்குமரா! காடு உறையப்போ என்று விடைகொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்
கூர் அணிந்த வேல்வலவன்குகனோடு
சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்;
சித்திரகூடத்துஇருப்பப்பரதநம்பிபணிந்ததுவும்;
சிறுகாக்கைமுலைதீண்டஅனைத்துலகம்திரிந்துஓடி
‘வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன
அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;
பொன்ஒத்த மான்ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின்வழிநின்றுசிலைபிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
‘அயோத்தியர் கோன்உரைத்த அடையாளம்;
‘ஈது அவன்கைமோதிரமே’என்று
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க்குழளால்சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சிமேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர்கோன்மாக்கடிகாவை இறுத்துக்
காதல் மக்களுமசுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன் சினம் அழித்து, மீண்டு, அன்பினால்,
அயோத்தியர்கோன்தளிர்புரையும்அடிஇணை பணிய;
யுத்த காண்டம் Yutha Gaandam
அடுத்து யுத்தகாண்டத்தில், இராமன் வானரப் படையோடு இலங்கை நோக்கி சென்றான். இராவணனிடம் இருந்து பிரிந்து வந்த வேடனுக்கு பட்டாபிஷேகம் செய்து, அணைகட்டி, அக்கரை சேர்ந்து, போர் புரிந்தான்.
கும்பகர்ணன், இந்திரஜித் இவர்களோடு மிகப்பெரிய அரக்கர் சேனையை அழித்து இராவணனின் பத்துத் தலைகளையும் தரையில் வீழ்த்தினான். தேவர்கள் தங்கள் குறை தீர்ந்ததாக மலர் மழை பொழிந்தனர்.
பின் புஷ்பக விமானம் ஏறி அயோத்தி திரும்பும் வழியிலே குகனையும் சந்தித்து, அயோத்திக்கு வந்து சேர்ந்தான். பட்டாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. சீதையோடு சிங்காசனத்தின் மீது வீற்றிருந்து எல்லாவுலகும் வாழும்படியாக அருள் ஆட்சி செய்தான்.
காண எண்கும்குரங்கும்முசுவும்
படையாக் கொடியோன் இலங்கை புகலுற்று
அலையார் கடற்கரை வீற்றிருந்து
செல்வவீடணற்கு நல்லவனாய்
விரிநீர் இலங்கை அருளிச்
சரண்புககுரைகடலைஅடலம்பால் மறுக எய்து,
கொல்லை விலங்கு பணிசெய்ய
மலையதனால்அணைகட்டிமறுகரையை ஏறி
இலங்கை பொடிபொடியாகச்
சிலைமலி நெஞ்சரங்கள் செலஉய்த்துக்
கும்பனோடுநிகும்பனும் பட
இந்திரசித்தழியக்கும்பகர்ணன்பட
அரக்கர் ஆவி மாள, அரக்கர்
கூத்தர்போலக்குழமணிதூரம்ஆட,
இலங்கை மன்னன்முடிஒருபதும்
தோள்இருபதும் போய் உதிரச்
சிலை வளைத்துச்சரமழை பொழிந்து
வென்றிகொண்டசெருக்களத்துக்
கடிக்கமலநான்முகனும் கண் மூன்றத்தானும்
எண்மர் பதினொருவர்ஈரறுவர்ஓரிருவர்
மற்றுமுள்ளவானவர்மலர்மழை பொழிந்து
மணிமுடிபணிதரஅடியினைவணங்கக்
கோலத், திருமாமகளோடு
செல்வ வீடணன் வானரக் கோனுடன்
இலகுமணிநெடுந்தேர்ஏறிச்
சீரணிந்தகுகன்னோடு கூடி
அங்கண்நெடு மதிள்புடை சூழ் அயோத்தி எய்தி
நன்னீராடிப் பொங்கிள ஆடை அரையில்சாத்தித்
திருச்செய்ய முடியும் ஆரமும்குழையும்
முதலா மேதகுபல்கலன் அணிந்து
சூட்டுநன்மாலைகள் அணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமனனோடு இரவும் நண்பகலும்
வடிவினைஇல்லாச் சங்குதங்குமுன்கைநங்கை
மலர்க்குழலாள் சீதையும்தானும்
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகம்
தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார்.”
பலச் சுருதி
இந்த இராமாயணத்தை தினசரி பாராயணம் செய்வதன் மூலமாக, திருமகளின் அருளும், திருமாலின் அருளும் பெறலாம். பதினாறு பேறுகளும் அவர்கள் வாழ்க்கையில் சித்திக்கும்.
ஆலிலை கண்ணனை பற்றி சுவையான செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
— ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் ——-
——————————————————————————————————————————–
