இலக்கிய நோக்கில் திருப்பாவை – Thirupaavai – Ilakiyam – Sri Andal
– திருச்சித்ரக்கூடம். ஸ்ரீ.உ. வே. ஏ. வி. ரங்காச்சாரியார் சுவாமி.
– Thiruchitrakoodam Dr. A.V. Rengachari Swami.
திருப்பாவை “பாவை” என்ற இலக்கிய வகையைச் சேர்ந்தது. பழங்காலத்தில் மகளிர் கடற்கரையில் மணலால் பாவை செய்து, விளையாடுவது பாவை ஆடல் எனப்படும். இதனை நீர்த்துறையில் இட்டு, குரவை ஆடிய செய்தியை அகநானூறு விரிவாகக் கூறுகிறது. நேரிழை மகளிர் வண்டல் மண்ணிலே செய்த பாவை என்றும், அப்பாவையை நெய்தல் மண்ணிலே கிடத்துவர் என்றும் தொகை நூல்கள் கூறுகின்றன.
புறநானூற்றுப் பாடல் மகளிரின் பாவை விளையாட்டுடன் நீராடலையும் இணைத்துக் கூறுகிறது. நீர் நிலைகளை ஒட்டிய இடத்திலே பெண்கள் இப்பாவைப் பாடலை மேற்கொண்டதாக அகநானூறு தெரிவிக்கிறது. இந்நீராடல் வைகரைப் பொழுதில் நிகழ்ந்தது என்பதை “பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து” என்று நற்றிணை அறிவிக்கிறது.
காலப்போக்கில் இந்நீராடல் சமயச்சடங்காக நோன்பாக மாறி, சமயச் சாயம் பெற்றதை கலித்தொகையும் பரிபாடலும் விளக்கமாகக் கூறுகின்றன.
1) கன்னியர் நோன்பு நோற்றல்.
2) கன்னியர் பனிபெய்யும் விடியலில் நீராடுவது.
3) பூமி வளம் பெற்றுக் குளிர வாழ்த்தி நோன்பு தொடங்குவது.
4) அந்தணர்களுக்குத் தானம் செய்வது.
5) மார்கழி பௌர்ணமியில் தொடங்குவது என்பதை 17 அடி கொண்ட பரிபாடல் தெரிவிக்கிறது. ஆண்டாளும் “மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” “மேலையார் செய்வனகள்” “நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள்” “நம்பாவைக்குச் சாற்று நீராடினால்” “பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்” என்று அருளிச் செய்துள்ளது இங்கு சிந்திக்கத்தக்கது.
திருப்பாவையின் அமைப்பு :
- நோன்பு பற்றிய விபரங்கள்
- திருப்பள்ளி எழுச்சி – துயில் எழுப்புதல்
- கதவைத் திறக்கச் சொல்லுதல்
- பல்லாண்டு பாடுவது – (போற்றுவது)
- நோன்பு நோற்பது
நோன்பு நோற்பதைப் பற்றி ஐந்து பாசுரங்கள் உள்ளன. இதற்கு அடிப்படை நம்மாழ்வாரே ஆவர். நம்மாழ்வார் வீற்றிருந்து ஏழுலகும் என்ற திருவாய்மொழியில் “வண்தமிழ் நூற்க நோற்றேன்” என்று கைங்கர்ய பர்யந்தமான பயன்களைத் தரவல்ல திருவாய்மொழியை அருளிச் செய்ய என்று தெரிவித்துள்ளார். அதன் வழியிலேயே ஆண்டாளும் செல்வத்திருமாலால் திருவருள் பெற்று எங்கும் இன்புற்று வாழ சங்கத்தமிழ் மாலையான திருப்பாவை கொண்டு பாவை நோன்பை அனுஷ்டித்தாள்.
திருப்பள்ளிஎழுச்சி: துயில் எழுப்புதல்
மன்னர்களைத் துயில் எழ சூதர்கள் பாடுவது பழந்தமிழர் வழக்கம். எழும்போது பாடுவதைத் தொல்காப்பியம் “துயிலெடை நிலை” என்று தெரிவிக்கும். திருப்பாவையில் ஆண்டாள் அடியார்களையும் கண்ணனையும் துயில் எழப்பாடுகிறாள். எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய், எம்பெருமாட்டி! அசோதா அறிவுறாய், உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய், செல்வா! பலதேவா உம்பியும் நீயும் உறங்கேல் விமலா துயிலெழாய், கலியே துயிலெழாய், திருவே துயிலெழாய், ஆற்றல் படைத்தான் மகனே அறிவுறாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய், ஆகிய இவை யாவும் துயிலெடை நிலை ஆகும்.
இதற்கும் வழிகாட்டி நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் ஆவர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கிடந்த நாள் கிடந்தால் எத்தனை காலம் கிடத்தி” என்று பாடியுள்ளார். இவ்விடத்தில் ஈடு “உணர்த்தி எழுப்பி அடிமை செய்ய பாரித்தாரிரே” என்று தெரிவிக்கிறது. ஆண்டாளும் சிற்றஞ்சிறுகாலே வந்து உன்னை ஸேவித்து, உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று பாடியுள்ளார்.
பெரியாழ்வார் “அரவணையாய் ஆயரேறே அம்ம உண்ணத் துயிலெழாயே” என்று பாடியுள்ளார். இவர்கள் வழியிலேயே ஆண்டாளும் திருப்பள்ளிஎழுச்சி பாடியுள்ளார். ஆனால் இதன் சிறப்பு ஆண்டாள் முதலில் அடியார்களை எழுப்பி, அதன்பின் கண்ணனை எழுப்பியதாகும்.
கடைத்திறப்பு – கதவைத்திறக்க வேண்டுவது :
கலிங்கத்துப்பரணியில் கடை திறப்புப் பகுதி உண்டு. பரணி நூல்களில் கடவுள் வாழ்த்தை அடுத்து கடை திறப்புப் பகுதி உள்ளது. இதற்கு ஆதாரம் ஆண்டாளின் தேசமுடையாய் திற, மாமான் மகளே மணிக்கதவம் தாள் திறவாய், தேற்றமாய் வந்து திற குழலீ! கடை திறவாய், “சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்” என்பனவாகும்.
மங்களாசாஸனம் – போற்றி பாடுதல் :
பெரியாழ்வார் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடிய வழியில் ஆண்டாளும் “அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்ற பாசுரத்தில் பல்லாண்டு பாடுகிறாள்.
வைணவ நெறிகளை அறிவித்தல் :
அடியார்களை எழுப்பும் பத்துப்பாசுரங்களிலும் பத்து நெறிகளை ஆண்டாள் அறிவிக்கிறாள். ஆறாம் பாசுரத்தில் பிள்ளாய் எழுந்திராய் என்று அடியாரை முன்னிட்டே பகவதனுபவம் செய்ய வேண்டும். ஏழாம் பாசுரத்திலும் பகவத் விஷயத்தில் ஞாதமான அர்த்தத்தை மறந்தவர்களுக்கு அதனை அறிவிப்பது. ஸ்ரீவைஷ்ணவ லட்சணம் என்பதை நாயகப் பெண்பிள்ளாய் – பேய்ப் பெண்ணே என்பதாய் உணர்த்துகிறாள். எட்டாம் பாசுரத்தில் “கோதுகலமுடைய பாவாய்” என்பதால் பகவத் விஷயத்தில் அருகில் உள்ளவர்களிடத்தில் அபேக்க்ஷை அவர்களை முன்னிட்டுக்கொண்டு எம்பெருமானைப் பற்றுவதும் ஸ்ரீவைஷ்ணவ லட்சணம் என்பது உணர்த்தப்படுகிறது.
ஒன்பதாம் பாசுரத்தில் – “மாமான் மகளே” என்பதால் எம்பெருமானே அடைவிப்பவனும், அடைய வேண்டியவனும் என்று இருக்க வேண்டும்.
பத்தாம் பாசுரத்தில் – “அருங்கலமே” என்று எம்பெருமானிடத்து ஆளானார் திறத்தில் விருப்பத்தோடே இருப்பதே ஸ்ரீவைஷ்ணவ நெறி.
பதினோராம் பாசுரத்தில் – “கோவலர் தம் பொற்கொடியே” என்று பகவத் ஸம்பந்தத்தை விடாது தொடர்ந்துள்ளவர் மரியாதைக்குரியவர் அவர்களடியாகவே பகவானைப் பற்றவேணும்.
பன்னிரண்டாம் பாசுரத்தில் – “நற்செல்வன் தங்காய்” என்றதில் பகவானை விட்டுப் பொருக்க முடியாதவர்களுக்கு பகவத் ஸம்பந்த பெற்ற அடியார் அடியார்களும் உத்தேச்வர்.
பதிமூன்றாம் பாசுரத்தில் – “போதரிக்கண்ணினாய்” இறை அனுபவத்திற்கு உறுப்பான ஞானபக்தி, வைராக்யம் ஆகியவற்றில் சிறந்தவர்களுடனே இருக்க வேண்டும்.
பதினான்காவது பாசுரம் – பகவத் விஷயத்தில் ஈடுபடுத்துபவர்களை முன்னிட்டுக் கொண்டு பகவானை அனுபவிக்க வேண்டும்.
பதினைந்தாம் பாசுரத்தில் – ஆசார்ய நிஷ்டை போல பாகவத நிஷ்டையும் உத்தேச்யம் ஆகிய நெறிகள் காட்டப்பட்டுள்ளன.
பாசுரங்கள் அமைப்பில் புதுமை :
ஏல் ஓர் எம்பாவாய் என்று இருபத்தெட்டு பாசுரங்களும், பதினேழாம் பாசுரம் உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய் என்றும், முப்பதாம் பாசுரம் “எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்” என்றும் அமைந்துள்ளன.
இவற்றை நீக்கிப் பார்த்தால், வினை எச்சமாக முடியும் பாசுரங்கள் பதிமூன்றும், வினைமுற்றாக முடியும் பாசுரங்கள் பதினாலும் அமைந்துள்ளன. அவற்றின் விபரம்:
வினை எச்சமாக முடியும் பாசுரங்கள் :
1.பாரோர் புகழப்படிந்து 2. உய்யுமாறு எண்ணி உகந்து 3. நீங்காத செல்வம் நிறைந்து 4. மார்கழி நீராட மகிழ்ந்து 5. உள்ளம் புகுந்து குளிர்ந்து
6. நாமம் பலவும் நவின்று 7. அனைத்தில்லத்தாரும்அறிந்து 8. கள்ளம் தவிர்ந்து கலந்து 9. வந்து திறவாய் மகிழ்ந்து 10. போற்றியாம் வந்தோம் புகழ்ந்து
11. எங்கள் மேல் சாபம் இழிந்து 12.வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து 13. கூடி இருந்து குளிர்ந்து.

வினைமுற்றுடன் முடியும் பாசுரங்கள் :
1.தீயினில் தூசாகும் செப்பு 2. தேசமுடையாய் திற 3. ஆவா வென்றாராய்ந்தருள் 4. தேசமுடையாய் வந்து திற 5. பங்கயக் கண்ணானைப் பாடு 6. மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடு 7. நேச நிலைக்கதவம் நீக்கு 8. உம்பியும் நீயும் உறங்கேல் 9.தத்துவமன்று தகவு 10. இப்போதே எம்மை நீராட்டு 11. வந்த காரியம் ஆராய்ந்தருள் 12. இன்று யாம் வந்தோம் இரங்கு 13. ஆலினிலையாய் அருள் 14. இறைவா நீ தாராய் பறை 15. மற்ற நற்காமங்கள் மாற்று 16. எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.
ஒவ்வொரு பாசுரத்தின் இறுதியில் வரும் வினை எச்சத்தை அடுத்த பாசுரத்தோடு பொருத்திப் பார்த்தால் சிறப்பான பொருளைக் காணலாம்.
1. பாரோர் புகழப் படிந்து நீராடப் போதுவீர் போது மினோ
2. உய்யுமாறெண்ணி உகந்து ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடு
3. மகிழ்ந்து மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தி
4. குளிர்ந்து ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்.
5. நாமம் பலவும் நவின்று நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
6. மகிழ்ந்து குத்து விளக்கெரிய வைத்துக் கிடந்த மலர் மார்பா.
7. மகிழ்ந்து மாலே மணிவண்ணா – கேட்டியேல்
8. கூடியிருந்து குளிர்ந்து கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்.
9. அடியார்களை எழுப்பும் அடிப்படையும் சுவாரஸ்யமானது
10. ஊரில் ஈடுபாடு – சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்.
11. உறவிலே ஈடுபாடு – மாமான் மகளே – செல்வப் பெண்டாட்டி – நற்செல்வன் தங்காய்
12. உறுதியிலே ஈடுபாடு – நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
13. அழகிலே ஈடுபாடு – இளங்கிளியே – புனமயிலே – போதரிக் கண்ணினாய்
விடிவிற்கான அடையாளங்கள் உருக்காட்சிகள் அடிப்படையில் அமைந்துள்ளன.
அவையாவன:
- செவிப்புலன் உருக்காட்டு – (ஓசைகளைக் காட்டுதல்)
புள்ளும் சிலம்பின காண் – வெள்ளை விரிசிங்கின் பேரரவம்
முனிவர்களும் யோகிகளும் அரியென்ற பேரரவம்
கீசு கீசு என்று ஆனைச்சாத்தன் பேசின பேச்சரவம்
காசும் பிறப்பும் கலகலப்ப
மத்தினால் ஓசைபடுத்தத் தயிரரவம்
கேசவனை பாடவும்
கோழி அழைத்தன காண்
கீர்த்திமை பாடி
எங்கும் கோழி அழைத்தன
குயிலினங்கள் பலகால் கூவின.
ஆகப் பறவைகள் மற்றும் மனிதர்கள் ஒலி அடிப்படை.
- ஊற்றுப்புல உருக்காட்சிகள் – காட்சி கண்ணால் பார்ப்பது.
எருமை சிறுவீடு மேய்ந்தன;
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று;
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் கூம்பின;
- மன உணர்வுப் புலக்காட்சி
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய –
பேய்முலை நஞ்சுண்டு. கள்ளச் சகடம் கலக்கழியக்
காலோச்சி. சினத்தினால் தென்னிலங்கைக்
கோமானைச் செற்ற மனத்துக்கினியான்
- முகர்வுப்பல உருக்காட்சி (வாசனை)
வாச நறுங்குழல் ஆய்ச்சியர், தூபம் கமழ்தல் – நாற்றத்துழாய் முடி நாராயணன்.
வழிபடும் முறை – திருாமத்தைச் சொல்லி திருவடிகளைப் பற்றுதல்
பரமன் அடிபாடி – உத்தமன் பேர் பாடி – கேசவனைப் பாட – முகில்வண்ணார் பேர் பாட, மனத்துக்கினியானைப் பாட – மாயனைப் பாட – நாமம் பலவும் நவின்று – பொற்றாமரை அடியே போற்றுதல்.
வேண்டுகோள்
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
உந்தன்னோடு உற்றோமேயாவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம்.
பயன்
திங்கள் மும்மாரி பெய்து – நீங்காத செல்வம் நிறைந்து – எங்கும் திருவருள் பெற்று இன்புறுதல்.
ஆண்டாள் திருப்பாவைக்கு அடி பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டே – பட்டர்பிரான் கோதை என்பதாம்
பெரியாழ்வார் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா என்பதை ஆண்டாள் மாலே மணிவண்ணா
பல்லாண்டு என்மினே என்பதை – பல்லாண்டிசைப்பாறே
அப்பாஞ்சஜன்னியமும் என்பதை உன் பாஞ்சஜன்னியமே
வாழாட்டுபட்டு நின்றீர் என்பதை வையத்து வாழ்வீர்காள்
நாடு நகரமும் நன்கறிய – அனைத்து இல்லத்தாரும் அறிந்து
தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி – சக்கரம் ஏந்தும்தடக்கையன்
நெய்யிடை நல்லதோர் சோறு – மூட நெய் பெய்து
உடுத்துக்களைந்த நின் பீதகவாடை உடுத்த – ஆடை உடுப்போம்
காதுக்குக் குண்டலமும் – தோடே செவிப்பூவே
துழாய்மலர் சூடிக்களைந்த சூடும் தொண்டர் – மலரிட்டு நாம் முடியோம்
ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவன் – வெள்ளத்தரவின் துயில் அமர்ந்த வித்து
அபிமான துங்கன் செல்வன் – செல்வப் பெண்டாட்டி
சார்ங்கமென்னும் வில்லாண்டான் – தாழாதே சார்ங்கம் உதைத்த
பல்லாண்டு என்று உரைப்பர் – இங்கு இப்பரிசுரைப்பார்
திருவள்ளுவர் தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யனப் பெய்யும் மழை என்றார்.
ஆனால் ஆண்டாள் ஐந்து வயதில் ஆய்ப்பாடி செல்வச் சிறுமியரோடு சென்று கண்ணனைத் தொழுது தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி “வாழ உலகினிற் பெய்திடச் செய்து” எம்பெருமானையே கணவனாக அடைந்து எல்லா திருக்கோயில்களிலும் கூடியிருந்து காட்சி அளித்து, மனிதனும் தெய்வமாக உயரலாம் என்பதை அறிவித்துக் கொண்டு சேர்த்தியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறாள்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
