மேல திருமாளிகை ஸ்வாமியின் நிர்வாகங்கள் -1
பரகால நாயகி வீணையில் எட்டு தந்திகள் – Mela Thirumaaligai
நமது ஆச்சாரியர் மேல திருமாளிகை. ஸ்ரீ உ.வே .சடகோபாச்சாரியார் சுவாமி . (Mela Thirumalaigai Embar Sadagopachariar Swamigal)
“உண்ணும் சோறு, பருகும் நீர் தின்னும் வெற்றிலை, எல்லாம் எனக்குக் கண்ணனே” என்ற நிலை சடகோபருக்கு (நம்மாழ்வாருக்கு) உண்டு.
அதை நேரில் கண்ட அனுபவம் அடியேனுக்கு.
அந்த சடகோபருக்கு எல்லாம் கண்ணன்.
நம் ஆச்சாரியருக்கு எல்லாம் கலியன்.
கண்ணனின்அழகில் மயங்கினார் அந்த சடகோபர்.
அந்தக் கண்ணனின் அழகைக் காட்டிய கலியனின் கனித்தமிழில் மயங்கினார் நம் சடகோபர்.( சடகோபாச்சாரியார் சுவாமி)
அடியேன் பலவருடங்களுக்கு முன்னால், மாசிமகக் கருத்தரங்கில் சுவாமியைத் தலைமை தாங்கச் செய்து நடத்தியது இன்னும் நினைவில் நிற்கிறது.
அதில் அப்போது சிறு குழந்தையாக இருந்த அடியேன் குமாரத்தி விஷ்ணு பிரியா சில பாசுரங்களைப் பாடியதும் திருச்சித்திரக்கூடம் சுவாமி போன்ற மகான்களின் ஆசி பெற்றதும் நினைவுக்கு வருகிறது.

ஒரு முறை கார்த்திகை நண்பகல் அடியேன் ஒரு காரியமாக திருநகரி சென்றிருந்தேன். ஆச்சாரியர் ஸ்வாமி ஆழ்வார் திருமஞ்சனத்தில் இருக்கிறார் என்று தகவல் சொன்னார்கள்.
உடனே கோயிலுக்கு ஓடினேன்.
திருமணம் முடிந்திருந்தது.
ஈர ஆடையில், திருமங்கையாழ்வார் தனக்கே உரிய கம்பீரத்தில் காட்சி தந்து கொண்டிருந்தார்.
ஆச்சார்ய சுவாமி, அடியேனை அழைத்து, இப்போது ஆழ்வாரின் முன்னழகும் பின்னழகும் கண்குளிரப் பார் என்று காட்டித் தந்தார்.
மணவாள மாமுனிகள், இந்த வடிவழகைப் பார்த்து அன்றோ ஆழ்வாரின் திருமேனி வண்ணத்தை அணுஅணுவாக வர்ணித்தார்.
சுவாமியின் பாசுர நிர்ணய நிர்வாகங்கள் என்று சில சுவாரஸ்யங்கள் உண்டு .
அதில் யாரும் நினைக்க முடியாத அளவுக்கு உயர்த்திக் காட்டி நிர்வாகம் செய்வார்.கவனமாக கேட்க வேண்டும்.
வயது முதிர்ந்தாலும் வற்றாத நினைவுத்திறன்.
தேனில் ஊறிய பதார்த்தம் தினம் தினம் சுவை ஏறியிருக்கும்.
சுவாமி சில அர்த்த விசேஷங்களைச் சாதிக்கும் போது , பெரும்பாலும் இப்போது தனது தமையனாருடன் கைங்கர்ய ஸ்ரீமானான ஆலிநாடன் சுவாமி உடனிருப்பார்.
பெரியசுவாமி ஒன்று சொல்ல,ஆலி நாடன் சுவாமி அடுத்த அடி எடுத்துக் கொடுக்க பெரிய “வித்வத் சதஸ்” நடக்கும்.
அதில் சுவாமி சாதித்த பல விஷயங்களின் குறிப்பை, நமக்கு அனுப்பித் தந்திருக்கிறார்கள்.
அவைகள் ஆலய தரிசனத்தின் தொடர்ந்து வெளிவரும்.
அதில் ஒரு நயமான பாசுரம். திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம். இது நெடுந்தாண்டகம். எண்சீர் கொண்டது.
இப்பிரபந்தத்தில் முப்பது பாசுரங்கள் உள்ளன.
30 முத்துக்கள். தமிழின் சொத்துக்கள்.

முதல் பத்துப் பாட்டுகள் எம்பெருமான் எல்லாம் தாமேயான தன்மையில் அமைந்தவை. இரண்டாம் பத்துப் பாட்டுகள் திருததாயார் வார்த்தையாக அமைந்தவை.
மூன்றாம் பத்துப் பாட்டுகள் தோழியோடு பேசும் தலைமகள் வார்த்தையாக அமைந்தவை.
அதில் ஒரு பாட்டு இது.
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும்
கடல் கிடந்த கனியே! என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே
மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே.
இது தாய்ப் பாசுரம்.
எம்பெருமான் மீது மயங்கிய தன் பெண்ணின் நிலையைச் சொல்லும் பாசுரம்.
அதற்கு முன் பாட்டில், திருமாலைப் பாடக் கேட்டு, “வளர்ந்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக்கிளியை கைகூப்பி வணங்கினாள்” பரகால நாயகி.
தன் உயிருக்கு உயிரான, உயிரின் உறுதியான திருநாமங்களை கிளிப்பிள்ளை சொல்லக்கேட்டு,” இதற்காகவன்றோ உன்னை வளர்த்தேன். என் செவி இனித்தது. சிந்தை குளிர்ந்து .”என்று இரு கரம் கூப்பி வணங்கினாள்.
இப்போது ஒருபடி மேலே போய், திருமாலின் திருநாமத்தை தன் அழகான திருவாயால் பாட ஆரம்பித்தாள்.
பரகால நாயகி வீணை வாசிப்பதில் வல்லவர்.
வாயால் பாடிக் கொண்டே தன் மெல்லிய விரல்களால் வீணையை மார்பில் சாய்த்து வாசித்தாள் .
அதன் இனிமையான ரீங்காரம் மயக்கியது.
இந்தக் காட்சியை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது பாசுரம்.
இனி பாசுரத்தை அனுபவிப்போம்.
கல்லால் செய்யப்பட்டு, வானளவு உயர்ந்த பாதுகாப்பான மதில் சூழ்ந்த காஞ்சி மாநகர். அங்கே திருப்பாற்கடலில் கண்வளரும் கனி போன்ற பெருமாள்.
அவன் யார் தெரியுமா ?
மிகுந்த பூக்களை உடைய தடாகம் சூழ்ந்த திருவழுந்தூரிலே நின்றருளும் தேவாதி தேவன்.
அவன் பெருமைகளைச் சொல்லிச் சொல்லி,பரகால நாயகி, வீணையை நெஞ்சில் அணைத்துக்கொண்டு, அழகான பல்வரிசையும் புன்சிரிப்பும் தோன்ற, அந்த வீணையை தடவித்தடவி, கிளிப்பிள்ளை போல எம்பெருமான் திருநாமத்தைப் பாடத் தொடங்கினாள் .
இதில் எம்பெருமான் மீது திருமங்கையாழ்வார் மீது கொண்ட ஈடுபாடும் கற்பனையும் பின்னிப் பிணைந்திருக்கும் அற்புதத்தைக் காணமுடியும்.
இந்த வீணை விஷயம் உரையாசிரியர்களை மிகவும் மயக்கியது.
அது வீணை அல்ல.எம்பெருமானே.அதன் நாதம் என்ன தெரியுமா?
இதோ உரையாசிரியர்களின் சில வரிகள்.
அவனை ஸம்ச்லேஷதசையிலே தன்மார்பில் ஏறிட்டுக்கொள்ளுமாபோலே வீணையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பார்த்து; கரவிபூஷணம் – பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்“ (ஸ்ரீராமாயணம், ஸுந்தரகாண்டம் 3-4.) என்னுங் கணக்கிலேயாருற்று இதுவும்.
திருவடி தந்த திருவாழி மோதிரத்தைக் கைநீட்டி வாங்கிக் கண்ட ஸ்ரீராமபிரானையே கண்டதாக மகிழ்ந்தது போல.
தூமுறுவல் நகை இறையே தோன்ற நக்கு = வீணையை முலைமேல் தாங்கினவாறே அவனையே ஸ்பர்சித்ததாக நினைக்கையாலுண்டான மகிழ்ச்சியால் பல்வரிசைகள் சிறிதே பிரகாசிக்கும்படி புன்முறுவல் செய்து, ஸுருமாரமாய் இயற்கையாகவே சிவந்துள்ள விரல்கள் இன்னமும் சிவப்புமல்கும்படி தந்திக்கம்பிகளை வெருடி அதுக்குமேலே கிளிபோலவும் மிக மிழற்றத் தொடங்கினாள் என்றாளாயிற்று.
என்பேதையே = என்வயிற்றிற்பிறந்த சிறுபெண் இவையெல்லாம் எங்கே கற்றாள்! என்றவாறு.
இந்த வீணை விஷயத்தில் தான் மேலாதிருமாளிகை சுவாமி அற்புதமான நயம் சொல்வார்.
“சொல்லுயர்ந்த நெடுவீணை” என்கிற இடத்தில் பெரியவாச்சான்பிள்ளை வீணைகளிலே உயர்ந்தவகையான வீணை என்றே காட்டியுள்ளார்.
ஆனால் இவ்விடத்திலே நம் பெரியஸ்வாமியின் அனுபவம் மிகவும் ஆச்சர்யம்.
நாட்டிலுள்ள வீணைகளுக்கெல்லாம் ஏழு தந்தி. அதனை மீட்டினால், ச, ரி, க, ம, ப,த, நி என்ற ஸ்வரங்கள் தான் வெளிப்படும்.
ஆனால் பரகாலநாயகியின் வீணைக்கு எட்டு தந்திகள். அதனை மீட்டினால்உயர்ந்த சொல்லாகிய திருமந்திரம் வெளிப்படும்.
ஆழ்வாருக்கு மூச்சே . “நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே” என்ற அஷ்டாக்ஷர மந்திரம் தானே.
சரி, பரகால நாயகி திருமந்திரத்தை தான் சொல்லியிருப்பாள் என்பதற்குச் சான்று வேண்டுமே.
அதுவும் ஆழ்வார் பாசுரத்தில் உண்டு.
பெரிய திருமொழியில் எட்டெழுத்து மந்திரத்தின் ரகசியத்தைத் தானே, தம் இதயம் நெகிழ்ந்து சொல்லி, நம் இதயத்தையும் நெகிழ வைக்கிறார் ஆழ்வார்.
“உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன் உடம்பெலாம்கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் நாராயணாவென்னும்நாமம்.”என்றும்
“துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்”என்றும் பாடியிருக்கிறார்.
பொதுவாக வீணையில் ஏழு தந்திகள்.(ஏழு ஸ்வரங்கள்)
பரகால நாயகி வீணையில் எட்டு தந்திகள்.
எட்டு அக்ஷரங்கள் பேசும் தந்திகள் என்பது பெரிய ஸ்வாமியின் நிர்வாகம்.
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்
- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan
- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?
- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?
- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi
- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை






