By S.Gokulachari
பகவான் பல்வேறு அவதாரங்களை எடுத்திருப்பதாக புராணங்கள் கூறு கின்றன. அதில் மிகச் சிறப்பாக பத்து அவதாரங்களைச் சொல்வார்கள்.
தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அறியாய்க் குறளாய்
மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்
சேவலொடு பெடையன்னம் செங்கமல மலரேறி ஊசடிலாப்
பூவணைமேல் துதைந்தெழு
செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.
என்று இந்த அவதாரங்களை ஆழ்வார்கள் வரிசை இடுகின்றார்கள். பொதுவாக தசாவதாரங்கள் என்றாலும் பாஞ்சராத்ர ஆகமத்தில் அஹிர்புதந்யை சம்ஹிதையில், மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் 39 என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த அவதாரங்களை பூரண அவதாரம் என்றும் அம்ச அவதாரம் என்றும் ஆவேச அவதாரம் என்றும் வகைப்படுத்துவர்.
அதிலே ஆவேச அவதாரம் தான் பரசுராம அவதாரம். விஷ்ணு பகவானின் ஆறாவது அவதாரம். திரேதாயுகத்தில் ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் குமாரனாக அவதரித்தவர்.
ராம பத்ரா என்றும் இவருக்கு பெயர் .கையில் எப்போதும் ஒரு கோடாரி வைத்திருப்பதால் பரசுராமர் என்று பெயர் .பரசு என்றால் கோடாலி கேரளப் பகுதியை கடல் ஆக்கிரமித்த போது ,கடலின் பிடியிலிருந்து இருந்து பூமியைக் காத்தார் என்று ஒரு வரலாறு உண்டு. அதனால் கேரள தேசத்தை பரசுராம தேசம் என்று சொல்வார்கள். வில் வித்தையில் வல்லவர் .இவரை ஜெயிப்பதற்கு ஆண் மகனே இல்லை என்று சொல்லும் படியாக வாழ்ந்தவர். நேர்மையற்ற அரச பரம்பரையினர் 21 தலைமுறை வென்றவர்.
கோக்குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால்-
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்-
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் என்
வாக்கு உரையாது, என் மனம் நினையாது இனி மற்றறொன்றையே.
என்று இந்த நிகழ்ச்சி ராமானுஜ நூற்றந்தாதியில் சொல்லப்பட்டுள்ளது.
இராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களிலும் பரசுராமர் கதை வருகின்றது . இராமாயணத்தில் ராமரிடம் தோற்று தன்னுடைய சக்தியையும் வில்லையும் இழந்த பரசுராமர், மகாபாரதத்தில் தம்முடைய வில்வித்தையை பீஷ்மருக்கும் துரோணருக்கும் கர்ணனுக்கும் சொல்லித் தருகின்றார்.
உபாசனைக்கு உரிய அவதாரம் இல்லை .எனவே, வைணவர்கள் பரசுராம ஜெயந்தியை மிக விரிவாகக் கொண்டாடுவது இல்லை என்றாலும்கூட பரசுராம அவதாரத்தைக் குறித்து ஆழ்வார்கள் பாசுரங்களில் பல இடங்களில் பாடி இருக்கின்றார்கள்.
தெளித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன்
சினத் தோள் அவை ஆயிரமும் மழுவால்
அழித்திட்டவன் என்றும் அடல் புரை
எழில் திகழ் திரள் தோள் ஆயிரம் துணிய
அடல் மழுப் பற்றி மற்று அவன் அகல் விசும்பு அனைய –
என்று பரசுராம அவதாரத்தை திருமங்கை ஆழ்வார் அருளி இருக்கிறார்..
பார்க்கவ:கில பவந் பவாந் புரா
குந்த சுந்தர வநாசலேச்வர ,
அர்ஜுநச்ய பல தர்ப்பிதச்ய து
ச்செத்ச்யதி ஸ்மாரதி பாஹுகாந்ந்ம்
என்று சுந்தரபாஹு ஸ்தவத்தில் (99)கூரத்தாழ்வான் அருளுகிறார்.
இவருடைய தாய் ரேணுகா தேவியின் பெயரில் பல கோயில்கள் இருக்கின்றன.பலருக்கு ரேணுகா தேவி குல தெய்வம்.
தந்தையின் வாக்கினை காத்தவர்கள் ராமரும் பரசுராமரும்
சப்த சிரஞ்சீவிகள் ஒருவர் (சப்த சிரஞ்சீவிகள்: ஆஞ்சநேயர் விபீஷணன் வியாசர் அஸ்வத்தாமன் பரசுராமர் மகாபலி சக்கரவர்த்தி மார்க்கண்டேயர்) என்றும் இவரைச் சொல்வார்கள்.
யாராலும் வெல்ல முடியாத கார்த்தவீர்யார்ஜுனன், ஒரு முறை, தன் படையினரோடு வேட்டையாடிவிட்டு ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான். அப்போது ஜமதக்கினி முனிவர் தன்னிடமிருந்த காமதேனு பசுவின் மூலம் கார்த்தவீர்யார்ஜுனனுக்கு பெரிய விருந்து அளித்தார். (காமதேனு எதைக்கேட்டாலும் தருகின்ற பசு)
இப்படிப்பட்ட ஒரு பசு முனிவரிடம் இருப்பதை அறிந்த கார்த்தவீர்யார் ஜுனனுக்கு, பசுவின் மீது ஆசை ஏற்பட்டது. இப்படிப்பட்ட பசு , ஒரு முனி வரிடம் இருப்பதை விட ,தன்னைப் போன்ற அரசனிடம் அல்லவா இருக்க வேண்டும் என்ற ஆணவத்தில் அதைக் கவர்ந்து சென்றான்.
இதை அறிந்த பரசுராமர், தன்னுடைய தந்தையின் பசுவைக் கவர்ந்து சென்ற கார்த்தவீர்யார்ஜுனனைத் தேடிப்போய் அவரிடம் போரிட்டு அவனைக் கொன்று பசுவை மீட்டு வந்தான்.
தவ வலிமை மிக்க கார்த்தவீர்யார்ஜுனனைக் கொன்ற பாவம் தீர்ப்ப தற்காக தீர்த்த யாத்திரை கிளம்பியசமயத்தில் ஜமதக்னி முனிவரை கார்த்தவீர்யார்ஜுனன் குமாரன் மறைமுகமாக வந்து தவ நிலையில் இருந்த ஜமதக்னி முனிவரின் தலையைக் கொய்தான்.
இதை பின்னால் தெரிந்துகொண்ட பரசுராமர், வெகுண்டு அரச பரம்பரை இருபத்தொரு தலைமுறையை அழித்தார்.
பொதுவாக பரசுராமருக்கு என்று தனி கோயில்கள் தமிழகத்தில் இருப் பதாகத் தெரியவில்லை. ஆனால் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டம் திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்கு கோயில் உள்ளது. வல்லம் என்றால் தலை என்று பொருள். திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் திருமுடி இந்த தலம் வரை நீண்டதால், இத்தலத்திற்கு திருவல்லம் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்த அவதாரங்களில் எந்த ஆயுதங்களையும் எடுக்காத மகாவிஷ்ணு பரசு ராமர் அவதாரத்தில் தான் முதன்முதலில் கோடலி என்ற ஆயுதத்தை எடுக்கிறார்.
இன்றைக்கும் இவர் கன்னியாகுமரிக்கு அருகில் மகேந்திரகிரியில் தவம் இருப்பதாகச் சொல்கிறார்கள் எங்கெல்லாம் தர்மம் அழிந்து போகின்றதோ அதர்மம் தலை தூக்கி ஆட்டம் காண்கின்றதோ அந்த இடத்தில் பரசுராமர் அவதாரம் நிகழும் என்பார்கள்.
