– எஸ்.கோகுலாச்சாரி, ஆசிரியர்,ஆலய தரிசனம்
– sri S.Gokulachari, Editor, Aalayadharisanam
மார்கழி மாதத்தை மிகச் சிறந்த மாதமாக நாம் கருதுகின்றோம். கண்ணன் பகவத்கீதையில் மார்கழி மாதத்தின் பெருமையைச் . “மாஸானம் மார்க சீரஷோஹம்” சொல்லியிருக்கின்றான். ‘
மார்கழி மாதம் அதிகாலை வழிபாட்டுக்கு என்று ஏற்படுத்தப்பட்ட மாதம். தேவர்களின் பூஜை நேரம் என்று சொல்வார்கள். தேவர்களின் அதிகாலை நேரம் என்றும் சொல்வார்கள்.
திருமலை அப்பனுக்கும்,மார்கழி மாதத்துக்கும் என்ன தொடர்பு? ஆண்டாளுக்கும் அவள் பாடிய திருப்பாவைக்கும் திருமலைக்கும் என்ன தொடர்பு? என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
ஆண்டாள் முதலில் பாடிய பிரபந்தம் திருப்பாவை .அது மார்கழி மாதத் தின் பெயரோடு தொடங்குகின்றது.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

மார்கழி மாதத்தை திருப்பாவை மாதம் என்றும் சொல்வார்கள். அந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையைப் பாடி வீதி வலம் வருவது பல ஊர்களிலும் நடக்கும்.
திருப்பாவை காலையில் பாடப்படும் திருப்பள்ளி எழுச்சிதான். திருப்பள்ளி எழுச்சியைப் வடமொழியில் சுப்ரபாதம் என்பார்கள். திருமலையில் பாடப்படும் சுப்ரபாதம் மிக விசேஷம் .
சகஸ்ர நாமம் என்றால் விஷ்ணுசஹஸ்ரநாமம் நினைவுக்கு வருவதைப் போல, சுப்ரபாதம் என்றால் ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் தான் முதலில் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட திருமலையில் மார்கழி மாதம் மட்டும் தமிழ் சுப்ரபாதமான திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை முப்பது நாளும் பாடுவார்கள்.
ஆண்டாள் திருப்பாவையைப் பாடியது வேங்கடவனுக்கே என்றொரு கருத்தும் உண்டு. காரணம் திருப்பாவைக்கு உய்யக்கொண்டார் அருளிய தனியனில் உள்ள கருத்து.
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல்பாவை,
பாடி அருளவல்ல பல் வளையாய் – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு
“வேங்கடவற்கு என்னை விதி” என்கின்ற சங்கல்பம் தான் ஆண்டாள் திருப்பாவை. இதை நாச்சியார் திருமொழியிலும் அவள் அழுத்தமாகப் பாடி பதிவு செய்திருக்கின்றாள் .
“குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி” என்றும் ,”வேங்கடத்து செங்கண்மால் சேவடிக்கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்” என்றும் “தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திருமால்” என்றும் பலப் பல வாறு திருவேங்கடவனைப் போற்றி, தான் அவனிடம் கொண்ட காதலை வெளிப்படுத்துகிறாள்.
திருப்பாவையில் ஆண்டாள் கண்ணனைப் பாடியிருந்தாலும் அந்தக் கண்ணன்தான் திருமலையப்பன். இந்த தொடர்பு நமக்கு வியப்பைத் தரும்.
கண்ணனையும் திருமலையப்பனையும் இணைத்துப் காண்போமே.
- கண்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தவன்.
திருமலை அப்பன் வேங்கடகிரி என்மீது வேதாந்த விளக்காய் நிற்பவன்.
2. கண்ணனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் நடந்து கோவிந்த நாமம் கிடைத்த பிறகு மற்ற பெயர் எல்லாம் சிறு பெயர் ஆயிற்று. இதை ஆண் டாள் “குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா, உன்னை சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே” என்று பாடுகின்றாள் . அந்த கோவிந்த நாமம் தான் திருமலையில் ஒவ்வொருவர் வாயிலும் கோவிந்தா கோவிந்தா என்று எதிரொலிக்கிறது.
3. கண்ணனை இடையன் என்று சொல்வார்கள். திருமலையப்பன் விண் ணுக்கும் மண்ணுக்கும் இடையில் நின்றவன் என்பதால் அவனும் இடையன்தான்.(விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு)
4. திரௌபதியின் கடன் தாங்க முடியவில்லையே “ருணம் ப்ரவிருத்தாம் என்ற வருத்தத்தோடு கண்ணன் வைகுந்தம் சென்றான் என்று ஸ்ரீ பாகவதம் கூறும். அதைப் போலவே குபேரனுடைய கடனை அடைக்க முடியாமல் திருமலையில் பெருமாள் நின்று கொண்டிருக்கிறார் என்று புராண வரலாறுகள் கூறும்.
5 .ஏழு என்ற எண் ஏழுமலையைக் குறிப்பது. அதைப்போலவே 7 என்ற எண் சப்தாஹம் எனும் ஸ்ரீ பாகவதம் 7 நாள் சொல்வதைக் குறிப்பது. பாகவதம் கண்ணன் கதைதானே.
6. ஒரு மலையை(கோவர்த்தனம்) ஏழு நாட்கள் தூக்கிக்கொண்டு கண்ணன் நின்றான். கலியுகத்தில் ஏழுமலையும் சேர்ந்து கண்ணனாகிய திருவேங்கடவனை தூக்கிக் கொண்டு நிற்கிறது.
7 .திருப்பாவையில் கண்ணனை நினைத்து பாடினாலும் எல்லா அவ தாரங்களையும் பாடுகிறாள் ஆண்டாள். அதைப்போலவே திரு மலையப் பனை நரசிம்ம மூர்த்தியாக, வாமனனாக, கண்ணனாக, ராமனாக என்று சகல அவதாரங்களையும் இணைத்து ஆழ்வார்கள் சொல்லுகின்றார்கள்.
8.ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டவன் கண்ணன் . அந்த கண்ணனைப் போலவே சூடிக்கொடுத்த ஆண்டாள் மாலையை பிரம் மோற்சவத்தில் கருட சேவை அன்று அணிந்துகொண்டு காட்சி தருகின்றான் திருமலையப்பன். நம்மாழ்வாரின் ஒரு பாசுரம் இது.
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை,
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.
“குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்” என்று நம்மாழ்வார் பாடும் செய்தியை, “குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி” என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கின்றார்.
“அன்று ஞாலம் அளந்த பிரான்” என்பதை ,திருப்பாவையில் ஆண்டாள் மூன்று முறை பாடுகிறாள்.ஓங்கி உலகளந்த உத்தமன் என்றும், அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் என்றும், அன்று இவ்வுலகம் அளந்தாய் என்றும் பாடுகின்றாள் .
பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை என்று நம்மாழ்வார் பாடியதை, நாராயணனே நமக்கே பறை தருவான் என்று ஆண்டாள் பரத்துவத்தைப் பாடுகின்றார்.
“குல தொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே” என்று நம்மாழ்வார் திருமலையப்பனிடம் வைக்கும் வேண்டுதலை, ஆண்டாளும் கண்ணனிடம் வைக்கிறாள்.” ஏழேழு பிறவிக்கும் உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று ஆண்டாள் பாடுகின்றாள் .
திருமங்கையாழ்வார் ” சிந்தாமணியே திருவேங்கடம் மேய எந்தாய் “ என்று பாடுவதை ஆண்டாள் “மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந் தான்” என்றும் “மாலே மணிவண்ணா” என்றும் திருப்பாவையில் காட்டு கின்றாள்.
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்று நம்மாழ்வார் பாடிய விஷயத்தை “குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது” என்று திருப்பாவையில் கைங்கர்யமே சேதனர்களுக்கு பிரதானம் என்பதை காட்டுவதோடு பறை என்ற சொல்லால் திருப்பாவை முழுக்க கைங்கர்யத்தைப் பிரார்திக்கிறாள்.
எண்ணிப் பார்க்கின்றபோது திருப்பாவையில் சொல்லப்பட்ட செய்திகள் மற்ற ஆழ்வார்கள் திருவேங்கடவனைப் பாடிய செய்திகளோடு அற்புதமாக பொருந்துவதால் திருப்பாவை வேங்கடவனுக்கு என்று பாடி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

கண்ணனையே கை பிடிக்க உறுதி கொண்டவள் ஆண்டாள். மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று உறுதியாக இருந்த அவளுக்கு கல்யாண மஹோத்சவம் மற்ற திவ்யதேசங்களில் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிறப்புற நடந்தாலும் ஆண்டாளின் ஆசையை உடனே தீர்த்து வைத்தவர் திருமலையப்பன். திருமலையில் தை மாதம் 1ஆம் தேதி ஆண்டாளுக்கு மாலையிட்டு(கோதா பரிணயம்) அவள் ஆசையை நிறைவேற்றி வைக் கிறான்.
இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவையைப் படிப்போம்.ஆண்டாளை நினைப்போம் . வேங்கடவனைத் துதிப்போம்.
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan

- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?

- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi

- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை

