மாதா பிதா செய்தது மக்களுக்கு….. சரியா?
அடியேனிடம் அடிக்கடி ஒரு கேள்வியைச் சிலர் கேட்பதுண்டு.“மாதா பிதா செய்தது மக்களுக்கு” என்று சொல்லுகிறார்களே, அது உண்மைதானா?
பலநேரங்களில் (நடைமுறையில்) உண்மை போலவே தெரிகிறது. இது குறித்து ஒரு விளக்கம் தர வேண்டும் என்று கேட்பதுண்டு.
அடியேன் எழுதிய “ஜோதிடமும் பரிகாரமும்” என்ற நூலில் இதுகுறித்துச் சில விளக்கங்களைத் தந்திருக்கிறேன். சிலர் இதனை ஏற்றனர். சிலர் இன்னும் விளக்கம் கேட்டனர்.
அவரவர் செய்த வினை அவர்களுக்குத்தான் சேரும். இதில் பெற்றோர் செய்த வினை பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் செய்தது பெற்றோர்களுக்கும் சேருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதற்காக, 15 காரணங்களைச் சொல்லுகிறேன்.
இந்த காரணங்களைப் பரிசீலித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம். இது சாஸ்திர ரீதியானது என்பதனால் இதனை இவ்விடத்தில் விளக்கப் போகிறேன்.

காரணம் : 1
ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கு ஜாதகம் கணிப்பார்கள். அப்படி ஒரு பழக்கம் உண்டு. அந்த ஜாதகத்தை எழுதுவதற்கு முன்னால் ஒரு சின்ன சுலோகம் எழுதுவார்கள். அந்தச் சுலோகம் இது.
ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்த்தனி குல ஸம்பதாம்
பதவி பூர்ய புண்யாணாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா
பதவி பூர்வ புண்ணியம் – இதனுடைய பொருள் என்ன என்றால், இந்தக் குழந்தை அடைகின்ற மேன் மையும், புகழும், பொருளும் ,இதன் முன் வினைப்பயனால் அடைகிறது, இந்தக் குழந்தை எப்படி வாழும் என் பதை, பிரம்மன் இதனைப் படைக்கும் பொழுதே தலையெழுத்தாக எழுதியிருக்கிறான். அந்தத் தலை யெழுத்தே இந்த ஜாதகம்.
இதனடிப்படையில் பார்த்தால் ஒவ்வொருவருடைய பாவ புண்யங்களும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். எனவே அவரவர் கர்ம பலனைத்தான் அவரவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். மற்றவர் கர்மாவைவும் அவர் ஏன் அனுபவிக்க வேண்டும்?
காரணம் : 2
நம்முடைய பிறப்பு எப்படி ஏற்பட்டது. செய்த வினைகளால் ஏற்பட்டது. நல்வினையோ தீவினையோ எதுவாக இருந்தாலும் அதை அனுபவிக்க ஒரு பிறவி எடுக்கவேண்டும். ஜடபரதர் கதை இதைத்தான் சொல்கின்றது. மகா ஞானியாக இருந்த பொழுதும், அவர் தனது இறுதிக் காலத்தில் ஒரு மானை நினைத்த
தால் மானாகவே பிறக்க வேண்டி இருந்தது.எனவே, முன் செய்த வினையை அனுபவிக்க அவரவர்களும் பிறக் கின்றோம். அவரவர் வினைகள் தனித்தனியாகத் தான் இருக்குமே தவிர, ஒன்றையொன்று குறுக் கிடாது. வினையை மாற்ற முடியாது. நீக்க முடியாது. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும்.
காரணம் : 3
மகாபலி இறைவனுக்கே தானம் கொடுக்கும் பொழுது அவருடைய மகன் நமுசி தடுக்கிறான். தண்டனை அடைகின்றான். இறைவனுக்கே தானம் வழங்கும் நிலை இருந்தும், அவன் தன் பிள்ளையின் செயலை தடுக்கமுடியவில்லை. இரணியன் கொடூரமான பாவம் செய்தவன். அவன் செய்த பாவம் அவன் பிள்ளை யான பிரகலாதனுக்குச் சேரவில்லை. மாறாக தனது பக்தியினால் விஷ்ணுவின் அன்பை பெற்றான்.
வீடணன் அரக்கர் குலத்திலே தர்மமாக பிறந்தான். இதை சூர்ப்பணகை சொல்கின்ற பொழுது எங்கள் குலத்தில் தவறி உதித்த தர்மாத்மா என்று சொல்கின்றாள். எனவே ஒரு குலத்திலே ஒருவன் செய்கின்ற பாவம் அந்த குலத்தில் உள்ள எல்லாரையும் சேருவது கிடையாது. அந்தப் பாவத்துக்கு துணை நின்ற அளவுக்கு அவரவர்க்குச் சேருகின்றது.
இதைக் கூட நாம் நடைமுறையில் இப்படி எடுத்துக்கொள்ளலாம். ஒரு குற்றத்தை நேரடியாகச் செய்த வருக்கு ஆயுள் தண்டனை என்று சொன்னால், ஏதோ ஒரு விதத்தில் அதற்கு உதவியவருக்கு 5 வருடமோ நான்கு வருடமோ தண்டனை கிடைக்கிறது அல்லவா?.
காரணம் : 4
தாய் தந்தை என்பது அந்தந்த பிறவிக்கான ஒரு உடல் சம்பந்தமே. இந்த உடல் சம்பந்தமானது அவரவர் வினையை அனுபவித்த அந்தந்தப் பிறவியின் முடிவில் போய்விடும். (ஒரு குடம் நீரோடு ஒழியும் உறவு என்பார்கள்). அடுத்த பிறவியில் இதே தாய் தந்தை அமைவது கிடையாது. இதைத்தான் பட்டினத்து அடி களும் அன்னை எத்தனை எத்தனை அன்னையோ, அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ, என்று முற்பிற வியில் பலப்பல பெற்றோர்களை பெற்றிருக்கிறேன் என்று பாடுகின்றார்.
காரணம் : 5
திருமங்கையாழ்வார் (ThirumangaiAlwar) தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் என்று, உத்பாதிக (இப்பிறவிக்குக் காரணமான) உறவுகளை கூடவே இருந்து துன்புறுத்தும் நோய் என்று சொல்வதற்கு காரணம் இந்த தாய் தந்தை உறவுகள் எல்லாம் உடலினால் வந்த உறவுகள் என்பதைக் காட்டுவதற்கு ஆகும்.
காரணம் : 6
நம்முடைய பிறப்பு என்பது நம்முடைய விருப்பத்தின் அடிப்படையில் அல்ல. அப்படி இருந்தால் நாம் நம்முடைய மகிழ்ச்சிக்காக நம்முடைய விருப்பத்தின்படி பிறப்பைத் தேர்வு செய்திருப்போம். நம் பிறப்பு நம் கையில் இல்லை. நாம் நமக்குரிய பெற்றோர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாது.நம்முடைய பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது.நம்மாழ்வார் இதனை “அவரவர் விதிவழி அடைய நின்றனரே” என்று பாடுகிறார். இதில் அவரவர் என்பது அந்தந்த ஜீவனையே குறிக்கும்.
காரணம் : 7
நம் பெற்றோர்கள், குழந்தைப் பிறப்புக்கு ஒரு காரணம் அல்லது கருவியே தவிர, வேறொன்றும் இல்லை. நம் வினை அனுபவிக்கவே அவர்கள் மூலம் நாம் பிறந்திருக்கிறோம். அவர்களும் தங்கள் வினையை அனுப விக்கவே நம்மைப் பெற்றெடுத்து இருக்கிறார்கள் என்பதே உண்மை. இதை நடைமுறை வாழ்க்கையிலும் காணலாம்.
காரணம் : 8
ஒரு குழந்தையின் பெற்றோர்கள் அனைவரும் அந்தந்த குழந்தைகளுக்கு நல்லபடியாகவே அமைந்து விடுவது இல்லை என்பது உலகியலில் காணக்கூடிய ஒன்று. அதைப்போல பிறக்கின்ற எல்லாக் குழந் தைகளும் அந்தந்தப் பெற்றோர்களுக்கு பெயரும் புகழும் வாங்கித்தரும்படியாக அமைந்து விடுவதில்லை என்பதும் நாம் பார்க்கின்ற ஒன்று.
பல அயோக்கியத்தனங்களைச் செய்த மோசமானவனுக்கு அற்புதமான பிள்ளைகள் பிறப்பார்கள். ஊர் மெச்சும் படியாக அந்தக் குழந்தைகள் இருப்பார்கள். அதே நேரத்திலே ஊரெல்லாம் மெச்சும்படியாக தானதர்மம் செய்பவர்களுக்கு, சில நேரங்களில் மோசமான பிள்ளைகளும் பிறப்பதுண்டு. அதனால்தான் பட்டினத்து அடிகள் என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை தெய்வமே எல்லாம் உன் செயல் என்று உணரப் பெற்றேன் இப்பிறவியில் நான் செய்த தீவினை எதுவும் எனக்கு கண்களில் தெரியவில்லை. எனக்கு இப்படி ஒரு துன்பம் வருவதற்கு என் முன்பிறவி செய்த தீவினையே என்று பாடுவதைப் பார்க்கலாம்.
காரணம் : 9
ஒரு வினையானது தனக்குரிய அடையாளத்தைத் தேடி அதற்குரிய ஜீவனை சென்று அடையும். இதை ஒரு கன்றுக்குட்டி தனக்குரிய தாய்ப் பசுவை தேடி அடைவது போல என்று சாஸ்திரம் சொல்கின்றது. எனவே அவரவர்களின் வினையானது அவர்கள் பிறந்தவுடன் அதனை அனுபவிக்கச் செய்வதற்காக அவர்களிடம் இனம் கண்டு சேருகிறது.

இதையே அனுபவித்து மாளாது என்று சொல்லும்பொழுது மற்றவர்கள் வினையையும் சேர்த்து அந்த ஆன்மா எப்படி அனுபவிக்கும்? எனவே, மற்றவர் வினை அவரை அணுகுவதற்கு வாய்ப்பு இல்லை.
காரணம் : 10
நடைமுறையில் “மாதா பிதா செய்வது மக்களுக்கு” என்பதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டு ஆராய்வோம்.ஒரு குடும்பத்தில் பாசமான பெற்றோர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். ஒன்று நன்றாக இருக்கும். ஒன்று சுமாராக இருக்கும். ஒன்று மிக மோசமாக இருக்கும்.நாம் மோசமான குழந்தையைப் பார்த்து அப்பா செய்தது உனக்கு வந்து இருக்கிறது என்று சொன்னால், அது சரியாக இருக்குமா? அவர் செய்தது மற்ற இரண்டு குழந்தைகளுக்கும் போய்ச் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டுமே? ஏன் ஏற்படுத்தவில்லை? ஒரு குழந்தை நன்றாக இருக்க, இன்னொரு குழந்தை ஏன் நன்றாக இல்லை என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
துரோணர் – பற்றிய சுவையான செய்திகளை படிக்க படிக்க இங்கு கிளிக் செய்யவும்
காரணம் :11
ஒரு பெற்றோருக்கு 8 குழந்தைகள். எட்டில் இரண்டு இறந்துவிட்டது. நான்கு குழந்தைகள்(Children’s) நல்ல நிலையில் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகள் படாதபாடு படுகிறார்கள். இரண்டு குழந்தைகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் தற்கொலை செய்து கொண்டனர். ஏன் பெற்றோர் செய்த வினை ஒரே மாதிரியாக எல்லாக் குழந்தைகளையும் சேரவில்லை என்பதையும் பார்க்கவேண்டும்.
காரணம் : 12
ஒரு குடும்பத்தில் சில குழந்தைகள் பிறக்கின்றன. சில குழந்தைகள் இறந்துவிடுகின்றன. மாதா பிதா செய்தது மக்களுக்கு என்று சொன்னால், எல்லா குழந்தைகளும் இறக்க வேண்டும் அல்லது எல்லா குழந்தைகளும் இறக்காமல் இருக்க வேண்டும்.
காரணம் : 13
இராமாயணத்தை எழுதிய வால்மீகி வாழ்க்கைச் சம்பவத்தை பார்த்தால், சில உண்மைகள் விளங்கும். அவர் ஒரு திருடனாக – கொள்ளைக்காரனாக இருந்தார். அவரை மாற்றுவதற்காக நாரதர் நீ செய்கின்ற செயலின் விளைவில் உன்னுடைய குடும்பத்தார் பங்கு கொள்வார்களா என்று கேட்டு வரச் செய்கின்றார். அதைக் கேட்பதற்காக தன்னுடைய தாய் தந்தை மனைவி முதலியவர்களைப் போய்ப் பார்க்கிறார். ஆனால் அவர்
கள் அனைவருமே“நீ செய்த பாவம் உன்னைச் சேருமே தவிர, உன்பொருளால் வாழ்ந்தாலும் எங்க ளுக்குச் சேராது” என்று திட்டமாகச் சொல்லிவிடுகின்றனர். ஒருவன் செய்த பாவமானது அவர்களையே சேரும்; பங்கு பிரிக்க முடியாது என்பது இந்த வான்மீகி கதை மூலம் தெரிய வரும்.
காரணம் : 14
குலசேகரர்(Kulasekhara Alvar),“தருதுயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்று ஒரு பாசுரத்தில் ஒரு அருமையான விளக்கத்தைக் கொடுக்கின்றார்.
இதிலே தருதுயரம் என்பதற்கு யார் தரும் துயரம் என்கிற ஆய்வு நடக்கிறது. இது பெற்றோர்கள் மற்றும் அடுத்தவர்கள், சூழ்நிலைகள், தந்த துயரமா அல்லது அவனே ஏற்படுத்திக்கொண்ட துயரமா என்று ஒரு பெரிய ஆய்வு நடக்கிறது.
ஒரு ஜீவனுக்கு பகவான் தன் விருப்பப்படி துன்பத்தைத் தருவதற்கு விரும்பமாட்டார். காரணம், அவன் கருணைக்கடல். பெற்றோர்களும் அவருக்குத் துன்பத்தைத் தருவதற்கு விரும்ப மாட்டார்கள். மற்றவர்களும் அவனுக்குத் துன்பத்தைத் தந்து என்ன பலனைப் பெறப்போகிறார்கள்?.
அப்படியானால், அவருக்கு எதனால் இந்த துன்பம் வந்தது என்றால், அவனுடைய வினைகள் தந்த துன்பம். அதாவது முன்வினை தந்த துன்பமே தவிர, வேறு ஒருவரால் வந்த துன்பம் அல்ல என்று அருமையான விளக்கத்தை இங்கே ஆராய்ந்து கொடுத்திருக்கிறார்கள். இதையும் மனதில் கொள்ள வேண்டும்.
அப்படியானல், ஏன் இந்த பழமொழி என்கிற சிந்தனைக்கு நாம் விடைகாண வேண்டும். சில நேரங்களில் இது சரியாக இருப்பது போல் தோன்றுகிறது என்ற காரணத்தையும் நான் கொஞ்சம் ஆராய வேண்டும்.
இப்பொழுது, பழமொழிக்கு விளக்கமாக நாம் சிலவற்றைச் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவருக்கு தண்டனை அவன் செய்த வினைகளின் படி இப்படி அமைகிறது.
அதாவது, அவன் ஒரு குழந்தையைப் பெற வேண்டும். அதை பாசத்தோடு வளர்க்க வேண்டும். நாலு வயதில் அந்தக் குழந்தை இறந்து துன்புற வேண்டும். தீர்ப்பு முடிவாகிவிட்டது .
இன்னொருவன் செய்த தவறுக்கு பிறந்து நாலே வயதிலே மரணத்தை அடைய வேண்டும்.
இந்தத் தண்டனையை இவர்கள் இருவரும் எப்படித் தனித்தனியே அனுபவிக்க முடியும்?
முதலாமவன் ஒரு பிள்ளை பெற்றால்தான் அதனை இழந்து வாடி, தண்டனையை அனுபவிக்க முடியும்.
அதைப்போலவே, இரண்டாமவன் யாரோ ஒருவருக்கு பிள்ளையாப் பிறந்தால்தான், நாலு வயது வரை வாழ்ந்து சாக முடியும்.
இப்பொழுது இந்த இரண்டு பேர் தண்டனையையும் நிறைவேற்ற விதி முடிவு செகின்றது.
இருவரையும் தந்தை பிள்ளை என்கிற உறவு கொடுத்து கட்டுகின்றது. இந்த கட்டுக்கு பந்தம் என்று பெயர். இதற்காக ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு உடம்பு கொடுக்கப்படுகிறது. இதற்கு தேகம் என்று பெயர்.தேகத்தால் இருவருக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.(தேக பந்தம்).
இந்த தேகத்திற்கு எழுதப்பட்டதே ஜன்மப்பத்திரிக்கை. பிரம லிபி. நான்முகன் எழுதிய எழுத்து.
இந்த எழுத்தின் பிரகாரம் இருவரும் வந்து, ஒரே நேரத்தில் தந்தை பிள்ளை உறவாகி, தண்டனையை அனுபவிக்கிறார்கள்.
இதைப் பார்த்துவிட்டுத் தான் மாதா பிதா செய்தது மக்களுக்கு என்று உலகம் சொல்லுகின்றது.
ஆனால், இது முன்பிறவியில் அவர்கள் இருவரும் செய்த வினையால் வந்த விளைவு என்பதை நாம் காரண காரியங்களோடும் சாஸ்திர உண்மைகளோடும் சிந்திப்பது இல்லை.
சிந்தித்தால் இது மட்டுமல்ல இன்னும் பல உண்மைகளும் நமக்கு விளங்கும்.
