வைணவத்தில் பகவானை “ஜகத்குரு” என்று சொல்லுவார்கள்.
வசுதேவ சுதம் கம்ச சாணூர மர்த்தனம்
தேவகி பரம்மானந்தம் வந்தே க்ருஷ்ணம் ஜகத்குரும்
vasudeva-sutaḿ devaḿ kaḿsa-cāṇūra-mardanam
devakī-paramānandaḿ kṛṣṇaḿ vande jagadgurum
அதற்குப் பிறகு லோககுரு என்று அழைக்கப்பட்டவர் சுவாமி ராமானுஜர்(Swami Ramanujar). அனைத்துலகும் வாழப்பிறந்த எதிராஜ மாமுனிவர் என்பார்கள்.
அவருக்குப் பிறகு லோககுரு என்று அழைக்கப்பட்டவர் சுவாமி நம்பிள்ளை.
நம்பிள்ளையின் பணிவு தனித்துவம் வாய்ந்தது.

ஒருமுறை முதலியாண்டான் திருப்பேரர் கந்தாடை தோழப்பர் ,நம் பிள்ளையின் மீது பொறாமை கொண்டு கோயிலிலே,பலர் முன்னிலையில் கடும் சொற்களால் திட்டுவிட்டார் .
இதனைக் கண்டு , நம்பிள்ளை ஒன்றும் சொல்லாமல் தனது திரு மாளிகைக்கு எழுந்தருளி விட்டார்.
நடந்தவற்றை பிறர் வாயிலாகக் கேட்டறிந்தார் நம்பிள்ளையின் மீது மதிப்பு கொண்ட கந்தாடை தோழப்பர் தேவிகள்.
வீட்டுக்கு வந்ததும் அவரிடம் நம்பிள்ளையின் பெருமைகளைக் கூறி, இது மஹாபஅபசாரம், இதற்கு உடனே பிராயசித்தம் செய்து கொள்ளுங்கள் என்று உணர்த்த, தம் குற்றத்தை உணர்ந்த கந்தாடை தோழப்பர் நம் பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்கப் புறப்பட்டார்.
வாயிற்கதவுகளைத் திறந்த பொழுது அங்கே யாரோ ஒருவர் காத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவர், அது நம்பிள்ளை என்றும் உணர்ந்தார்.
நம்பிள்ளை தோழப்பர் திருவுள்ளம் வருந்தும் வண்ணம் தாம் அபசாரம் செய்து விட்டதாகக் கூறினார்.
தம்மீது குற்றம் இல்லாதிருந்தபோதிலும் (நானே தான் ஆயிடுக “என்றபடி) நம்பிள்ளை என்கிற மஹா ஆச்சாரியர் ,கந்தாடை தோழப்பரின் வம்ஸ பெருமையை எண்ணி, பெருந்தன்மையோடு மன்னிப்பு கோரியதைக் கண்ட தோழப்பர் பதறி விட்டார்.
தோழப்பர் தானும் நம்பிள்ளைக்கு தெண்டன் ஸமர்ப்பித்து நம்பிள்ளைக்கு “உலகாரியன்” என்னும் திருநாமத்தைச் சாற்றினார். இத்தனைப் பணிவோடு இருக்கக் கூடிய ஒருத்தரே உலகாரியன் என்று போற்றப்படவேண்டியவர் என்றும், அந்தப் பணிவு நம்பிள்ளையிடத்தே இருப்பதால், அவரே உலகாரியன் என்று போற்றப்பட வேண்டியவர் என்று தோழப்பர் ஸாதித்தார்.
அதன் பின் தோழப்பர் தனது தேவிகளோடு நம்பிள்ளையிடம் பல சத் விஷயங்களை தெரிந்து கொண்டு ,பகவத் பாகவத கைங்கர்யத்தில் ஈடுபட்டார்.
இந்த வைபவத்தை மணவாளமாமுநிகள் தனது உபதேச ரத்தினமாலையில் பாடுகின்றார்.
துன்னுபுகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் – பின்னை
உலகாரியன் என்னும் பெயர் நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்று மேல்
நம்பிள்ளையின் சீடரான வடக்குத் திருவீதிப்பிள்ளை தம் திருக்குமாரருக்கு இந்தத் திருநாமம் சூட்டினார்.
பின்னை வடக்குத் திருவீதிப்பிள்ளை அன்பால்
அன்ன திருநாமத்தை ஆதரித்து – மன்னுபுகழ்
மைந்தர்க்குச் சாத்துகையால் வந்து பரந்தது எங்கும்
இந்தத் திருநாமம் இங்கு
எனவே இந்தப் பெயரோடு சுமார் 118 ஆண்டுகள் வாழ்ந்த பிள்ளை லோகாச்சார்யார் pillai logachariyar. பற்பல நூல்களை எழுதி வைணவத்தை வையமுழுதும் பரப்பினார்.

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.
என்ற வாழித் திருநாமம் இவர் வாழ்க்கையைக் குறித்து விளக்கும்.
மணவாளமாமுனிகளின் குருவான திருவாய்மொழிப் பிள்ளைக்கு குருவாக அமைந்தவர்.
அற்புதமான சீடர்களை அடைந்தவர் லோகாச்சார்யார்.
கூரகுலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய் மொழிப் பிள்ளை, மணப்பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர் இவர் சீடராக இருந்தனர்.
நம்பிள்ளையின் திருவருளால் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும் ஸ்ரீ ரெங்கநாச்சியாருக்கும் திருவரங்கத்திலே ஐப்பசி திருவோணத்திலே காஞ்சி வரதராஜ பெருமாளின் அம்சமாகத் தோன்றியவர் பிள்ளை லோகாசாரியர்.
துலாயாம் ச்ரவணே ஜாதம் லோகார்யஹம் ஆச்ரயே
ஸ்ரீ கிருஷ்ண பாத தநயம் தத் பதாம்புஜ ஸம்ஸ்ரிதம்
இவர் தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் நைஷ்டிக பிரம்மச்சாரிகளாக வாழ்ந்து வைணவத்தை வளர்த்தனர்.
நித்ய பகவத் கைங்கர்யமாகிற மோக்ஷத்திலேயே கண்ணுடையவர்களான முமுக்ஷுக்கள் உஜ்ஜீவனம் செய்யும் பொருட்டு பிள்ளை லோகாசாரியர் பல க்ரந்தங்களை எழுதி உபகரித்திருக்கிறார்.

ரஹஸ்ய த்ரயம் , தத்வத்ரயம் , திருவாய்மொழியின் ஆழ் பொருள்கள் போன்ற ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான அர்த்தங்களை எடுத்துரைக்கும் பதினெட்டு க்ரந்தங்களை (அஷ்ட தசா ரகஸ்யம்)பிள்ளை லோகாசாரியர் ஸாதித்துள்ளார்..
அடுத்து பிள்ளை லோகாச்சார்யார் அருளிய ஸ்ரீ வசன பூஷணம் அற் புதமான நூல்.
ஆழ்வார் ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே ஸாதிக்கப்பட்டது இந்த க்ரந்தம்.
ஸத் ஸம்ப்ர தாயத்தின் ஆழ் பொருளெல்லாம் விளக்கும் பிள்ளை உலகாரியரின் மிக உயர்ந்த கிரந்தம் இதுவேயாம். மணவாளமாமுநிகள் வியாக்யானம் ஸாதித்துள்ளார். திருநாராயணபுரத்து ஆய் என்னும் ஆசார்யரும் இதற்கு வியாக்யானம் ஸாதித்துள்ளார் .
சீர் வசன பூஷணத்தின் சிறப்பை ஏழு பாசுரங்களால் மாமுனிகள் பாடுகின்றார்.
உபதேசரத்தினமாலையில் மிக அதிக பாசுரங்களைப் பெற்றவர் பிள்ளை லோகாச்சாரியார்.
அன்னபுகழ் முடும்பை யண்ணல் உலகாசிரியன்
இன்னருளால் செய்தகலை யாவையிலும் – உன்னில்
திகழ் வசநபூடணத்தின் சீர்மை யொன்றுகில்லை
புகழலவிவ் வார்த்தை மெய்யிப்போது
ஆர்வசந பூடணத்தின் ஆழ்பொரு ளெல்லாமறிவார்?
ஆரதுசொன்னேரி லநுட்டிப்பார் – ஓரொருவர்
உண்டாகில் அத்தனைகா ணுள்ளமே யெல்லார்க்கும்
அண்டாத தன்றோ வது
இந்த ஒரு நூலைப் படித்து விட்டாலே வைணவத்தின் சிறப்பையும், வைணவத் தத்துவங்களையும் முழுமையாகத் தெரிந்து கொண்டு கொள் ளலாம்.
இவர் செய்த மற்றொரு திருப்பணி மற்றொருவரால் செய்ய முடியாதது.
நம்பெருமாளை காலத்தின் ஒரு நிர்ப்பந்தமான சூழ்நிலையில் ஸ்ரீரங்கத் திலிருந்து மதுரைக்கு எடுத்துச்சென்று காப்பாற்றியது இன்றும் வைணவம் நினைத்துப் போற்ற வேண்டியது.
1323 ல் திருவரங்கத்தில் படையெடுப்பு.மிகப்பெரிய கலவரம். திருவரங் கத்தை நோக்கி அந்நியர் படையெடுத்து வந்த பொழுது மூலவர் ரங்கநாதப் பெருமாளுக்கு, கல் திரையிட்டு மூடி , அதற்கு முன்னால் பின்னமான ஒரு பெருமாளை வைத்துவிட்டு , உற்சவ மூர்த்தியான நம்பெருமாளையும் உபய நாச்சிமார்களையும் ஒரு மூடு பல்லக்கில் எழுந்தருளச் செய்தார்.
தள்ளாத வயதில்(118 வயது) தம்முடைய அந்தரங்க சீடர்களுடன், முக்கியமான பொருட்களையெல்லாம் ஒரு பாதாள அறையில் வைத்து விட்டு, காடு மேடுகள் எல்லாம் நடையாய் நடந்து, மணப்பாறை, மேலூர் அழகர் மலை வரை பெருமாளை கொண்டு சென்றார்.
காடுகள் வழியாக நம்பெருமாளை எழுந்தருளிச்செல்லும் போது சில திருடர்கள் நம்பெருமாளின் திருவாபரணங்களைத் திருடினர். சற்றே முன்னே சென்றுகொண்டிருந்த பிள்ளை லோகாசாரியர் இதனைச் செவி யுற்று வந்தார் திருடர்களுக்கு நன்மையை போதித்து அவர்களைத் திருத்திப் பணிகொள்ள, அவர்களும் சரணடைந்து பெருமாளின் திருவாபர ணங்களை மீளவும் ஸமர்ப்பித்தனர்.
கடைசியில் யானைமலை அடிவாரம் ஜோதிஷ்குடி என்று சொல்லப்படுகின்ற கொடிக் குளத்தில் ஒரு குகையில் வைத்து பெரு மாளுக்கு திருவாராதனம் செய்தார். வயோதிகத்தின் காரணமாக அங்கேயே அவர் பரமபதம் அடைந்தார் .

கூர குலோத்தமதாசர் முதலிய சீடர்களால் அவருக்கு அந்திம சம்ஸ் காரம் செய்யப்பட்டு திருவரசு அமைக்கப்பட்டது. அதை இன்றும் சேவிக்கலாம்.
ஆனால் நம்பெருமாளை அங்கு வைத்தும் அதிக நாள் வழிபட முடிய வில்லை.
கேரள தேசம் கோழிக்கோடு, மேல்கோட்டை, திருமலை என்ற பல திவ்ய தேசங்கள் சென்ற நம் பெருமாள் 48 ஆண்டுகள் கழித்து 1371 ல் திருவரங்கம் வந்து சேர்ந்தார் என்றால், அன்றைய அரசியல் சூழ்நிலைகள், கோயில்களை காப்பாற்றவேண்டும் ,உற்சவ மூர்த்திகளைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற அக்கறை, அதன் காரணமாக அவர்கள் செய்த தியாகம் முதலியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
திருவரசுக்கு ஒரு ஏற்றம் உண்டு.
”வேர் சூடுமவர்கள் மண் பற்றுக் கழற்றார்போலே ஞானியை விக்ரத்தோட ஆதரிக்கும்” – ஸ்ரீவசனபூஷணத்தின் வாக்யப்படி திருவரசில் பகவானே இருக்கிறான். அந்த திருவரசை ஒரு முறை சென்று சேவித்து வருவோம்.
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan

- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?

- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi

- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை

